Skip to Content

"அன்னை இலக்கியம்''

பொற்பாதங்கள்

எஸ்.  அன்னபூரணி

ஜனசந்தடி மிக்க கல்கத்தா நகரம். அங்கு வாழும் நடுத்தர வர்க்கத்தினரின் குடும்பத்தில் நரேனின் குடும்பமும் ஒன்று.

"என்னப்பா நரேன் உணவுப் பொட்டலங்களையெல்லாம் எடுத்துக் கொண்டாயா? பெரிய வாட்டர் பேக்கில் தண்ணீர் எடுத்து வைத்திருக்கிறேன். இரண்டு நாள் பயணத்திற்குத் தேவையான உணவு வைத்திருக்கிறேன். இதோ இந்த டப்பாவில் ரொட்டி இருக்கிறது. இந்த பாத்திரத்தில் "சப்ஜி'' இருக்கிறது. முடிந்தவரையில் வெளியில் எதுவும் வாங்கிச் சாப்பிடாதே, வேண்டுமானால் பழங்கள் வாங்கிச் சாப்பிடு'' - இது நரேனின் அன்புமிகுந்த அம்மா ஸ்வர்ணா தேவி.

"டிரெயின் டிக்கெட்டெல்லாம் பத்திரமாக எடுத்து வைத்துக் கொண்டாயா? சூட்கேஸை நன்றாகப் பூட்டினாயா? வழியில் செலவுக்குத் தேவையான பணம், சில்லறை எல்லாம் இருக்கிறதா என்று பார்த்துக்கொள். வழிச்செலவுக்குத் தேவையான பணத்தை எடுத்து பர்ஸில் வைத்துக்கொள். மீதியை எடுத்து சூட்கேஸில் வைத்துப் பூட்டியிருக்கிறேன் ஜாக்கிரதை'' - இது பொறுப்பான தந்தை.

"அண்ணா பாண்டியிலிருந்து வரும்போது எங்களுக்கு என்ன வாங்கி வரப் போறீங்க?'' ஆளுக்கு ஒரு கையை பிடித்துக் கொண்டு அன்புக் குரலில் கெஞ்சும் தங்கை அபர்ணா, தம்பி வருண் எல்லோருக்கும் ஒரே சமயத்தில் பதிலளித்தான் நரேன்.

"அம்மா ஏனம்மா கவலைப்படுகிறீர்கள்? நான் யாரைக் காணப் போகிறேன்? ஸ்ரீ அரவிந்த பாபுவையல்லவா? அவரைப் பார்க்கப் போகையில் ஏதாவது துன்பம் நேருமா? பாபுவின் நினைவு ஒன்றே என்னைப் பாதுகாக்கும். வருண், அபர்ணா உங்களுக்குப் பாண்டியிலிருந்து என்ன வாங்கி வரப் போகிறேன் என்றா கேட்கிறீர்கள்? பகவானின் ஆசீர்வாதங்கள் - விலைமதிக்க முடியாத ஒன்றையல்லவா நான் வாங்கி வரப் போகிறேன்.''

உடனே குடும்பத்தினர் அனைவரும் ஒருமித்த குரலில் "ஆமாம் நரேன் நீ சொல்வது சரிதான். அந்தத் தெய்வத்தின் கருணை இருந்தால் எதுதான் நம்மைப் பாதிக்கும். இறைவனின் அன்பு அளவில்லாதது நம் நம்பிக்கைதான் குறைவு என்ற கருத்துள்ள வாசகம் ஒரு புத்தகத்தில் படித்ததாக எனக்கு ஞாபகம். இது தெரிந்திருந்தாலும் இந்த அஞ்ஞானம் விடவில்லை. நீ பகவானை நமஸ்கரித்து ஆசீர்வாதம் வாங்கும்போது மறக்காமல் எங்களையெல்லாம் நினைத்துக் கொள். மானஸீகமாக நாங்களும் உன்னுடன் சேர்ந்து நமஸ்கரிப்பதுபோல் கற்பனை செய்து கொள். எங்களுக்கும் சேர்த்து அவரது ஆசிகளைப் பெற்று வா" என்றனர். அனைவரும் ஸ்டேஷனுக்குப் போய் அன்புடன் அவனை வழியனுப்பினர். உடல் வீடு திரும்பியதே தவிர அவர்கள் உள்ளமெல்லாம் நரேனுடன் பயணித்தது.

இரண்டு நாள் பயணத்தின் முடிவில் ஏற்பட்ட களைப்பைக் கூடப் பொருட்படுத்தாமல் விரைவாகக் காலைக்கடன்களை முடித்துவிட்டுக் குளித்து சுத்தமாக உடையணிந்து ஆசிரம வாயிலை அடைந்தான் நரேன். மனமெல்லாம் பிரபுவை எப்போது தரிசிப்போம், அவரது தீக்ஷண்யம் மிக்க கருணைப் பார்வையைக் கண்டு அதில் உருகி ஒழுகும் அன்பில் எப்படித் திளைப்போம், அவரது கமலப் பாதங்களில் விழுந்து வணங்கி எப்பொழுது ஆசி பெறுவோம் என்பதிலேயே குறியாக இருந்தது. வழக்கம்போல் விடுவிடென்று அவர் தங்கியிருந்த அறையை நோக்கி ஆர்வமுடன் விரைந்தான். சட்டென்று பொங்கி வரும் வெள்ளத்திற்கு அணை கட்டுவதுபோல் ஒரு சாதகரின் கை அவனைத் தடுத்து நிறுத்தியது. "எங்கே போகிறீர்கள்?''  

"நான் பிரபுவின் தரிசனத்திற்காகக் கல்கத்தாவிலிருந்து வந்திருக்கிறேன். அவரைப் பார்க்க மிகவும் ஆவலாயிருக்கிறேன்.''

"முதலில் நீங்கள் அம்மாவைத் தரிசித்துவிட்டு வந்தால்தான் இங்கு நுழைய அனுமதி கிடைக்கும்." நரேனுக்கு லேசாகக் கோபம் தலை தூக்கியது. "அம்மாவா? யார் அது? எனக்குத் தெரியாது. அரவிந்த பாபுவை மட்டும்தான் எனக்குத் தெரியும். நான் அவரை மட்டும்தான் பார்க்க விரும்புகிறேன்'.

"இல்லையில்லை, அம்மாவைத் தரிசித்து ஆசீர்வாதம் வாங்கியவர்கள் மட்டும்தான் பகவானைப் பார்க்கலாம் என்று அவரே உத்தரவிட்டிருக்கிறார்.''

"எனக்கு பாபுவை நன்றாகத் தெரியும், நான் கல்கத்தாவில் அவரிடம் பழகியிருக்கிறேன். அவர் என் தெய்வம் மட்டுமல்ல நண்பரும் கூட. நரேன் வந்திருக்கிறேன் என்று சொல்லுங்கள் அவர் உடனே அனுமதித்து விடுவார்,'' என்றான் சிறிது எரிச்சல் மண்டிய குரலில். ஆனால் சாதகரோ சிறிதும் பொறுமை இழக்காமல், "இல்லை அவர் உத்தரவை மீற இங்கு யாருக்கும் அனுமதி கிடையாது. நான் உங்களுக்கு உதவ முடியாமலிருப்பதற்கு வருந்துகிறேன்" என்றார், கனிவான குரலில். "நீங்கள் சொல்லும் அந்த "அம்மா'' யார் என்றே எனக்குத் தெரியாது, எனக்கு முன்பின் தெரியாத ஒருவரைத் தரிசிக்க வேண்டும் என்று எப்படி நீங்கள் என்னைக் கட்டாயப்படுத்தலாம்", என்றான் சிறிது உரத்த குரலில். உடனே சாதகர் அவனைச் சிறிது நேரம் காத்திருக்கும்படிச் சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.  "அப்பாடா'' நரேனுக்கு ஜெயித்துவிட்ட மாதிரி ஒரு பெருமிதம் தோன்றியது. வந்தோமா பகவானைப் பார்த்தோமா என்றில்லாமல் இதென்ன வற்புறுத்தல்? நிச்சயம் பிரபு எனக்கு விலக்கு அளித்து என்னை வரச் சொல்லுவார் என்று நிம்மதிப் பெருமூச்சு விட்டபோது சாதகர் திரும்பி வந்தார்.  

"என்ன சொன்னார்? என்னை வரச் சொன்னாரா?'' பார்த்தீர்களா நான் சொன்னது பலித்துவிட்டது என்கிற மாதிரி குரல் தொனித்தது.

"இல்லையில்லை, நான் சொன்ன விதியில் எந்த மாற்றமுமில்லை. நீங்கள் யார் அந்த அம்மா என்று கேட்டீர்களே அந்தக் கேள்விக்குப் பதிலளிக்கும் வகையில் பகவான் ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். உங்களை மாதிரி கேள்வி கேட்பவர்களுக்கு இந்தப் புத்தகம் விளக்கம் கொடுக்கும். '' நரேனின் முகம் அவமானத்தால் கறுத்தது. வேண்டாவெறுப்பாக அவர் கொடுத்த சிறிய புத்தகத்தை வாங்கிப் பார்த்தான். "The Mother'' என்று எழுதியிருந்தது. இனிமேல் நம் பிடிவாதம் இங்கு செல்லாது என்று புரிந்து கொண்ட நரேன் சிறிது தளர்ந்த மனதுடன் திரும்பி நடக்கத் தொடங்கினான். அவனுக்கு அப்பொழுதிருந்த விரக்தியிலும், ஏமாற்றத்திலும் உடனேயே ரயிலேறி கல்கத்தாவிற்குப் போய் விடலாமா என்று தோன்றியது. ஆனால் ஸ்ரீ அரவிந்த பாபுவின் கருணை சொட்டும் கண்கள், மலர்ப்பாதங்கள் அவன் கண்ணெதிரே தோன்றி, இதோ இங்கே கைக்கெட்டும் தூரத்தில் என் பிரபு இருக்கிறார். அவரைப் பார்க்காமல் போவதாவது என்று மனம் சொல்லவே, சரி அந்த அம்மாவும்தான் யார் என்று பார்க்கலாமே என்று நினைத்து அருகிலிருந்தவரைப் பார்த்து "இங்கு அம்மாவைப் பார்க்க எந்த வழியாகப் போக வேண்டும்?'' என்று கேட்டான். அவர் கை காட்டிய திசையில் இருந்த அறைக்குள் நுழைந்தான். வரிசையாக அமைதியாக "க்யூ'' நகர்ந்து கொண்டிருந்தது. நரேனும் கடைசி ஆளாகப் போய் அதில் சேர்ந்து கொண்டான். முதலில் அம்மா இருக்கும் திசையைப் பார்க்கவே சுவாரஸ்யமில்லாமல் இருந்தான். இருந்தாலும் சும்மா வரிசையில் நிற்பதற்குப் பதிலாக அவர்களையாவது வேடிக்கை பார்க்கலாமே என்று நினைத்துத் திரும்பிய அவனுக்கு ஒரே திகைப்பு. அம்மா என்றால் வங்காள பாணியில் உடையணிந்து, நகைகளணிந்து ஒரு பெண்மணி இருப்பார் என்று அவன் மனம் தன்னையறியாமலேயே கணித்து விட்டிருந்தது. அதற்கு நேர் எதிராக ஓர் அயல் நாட்டுப் பெண்மணி அங்கிருந்த அத்தனை பேர்களினின்றும் தனித்து நின்று பளிச்சென்று ஒரு முகம். கனிவு, காருண்யம் பொங்கும் கண்கள், மெலிந்த நீண்ட வெண்ணிற மேனியில் ஆங்காங்கே பச்சை நரம்போடிய அவயவங்கள், வெள்ளை நிறப்புடவையில் பூக்கள் "டிசைன்'' போட்ட புடவை. குனிந்து நமஸ்காரம் செய்த ஒவ்வொருவருக்கும், சிறிது கூட லயம் தவறாது வாசிக்கும் இசை போல வேகமாக "blessing packet'' களை எடுத்துக் கொடுத்த பாங்கு "இந்த அயல் நாட்டுப் பெண்மணி அம்மாவா?'' சிறிது திகைப்பும் குழப்பமும் கலந்து அவன் நினைத்துக் கொண்டிருக்கும்போதே கியூ நகர்ந்தது. அவனுக்கும் அம்மாவுக்கும் இடையே இன்னும் பத்து பேர்கள்தான் இருந்திருப்பார்கள். சட்டென்று அவன் பார்வை அம்மாவின் பாதத்தில் பட்டது ஓ......! பரவசம்! பரவசம்! இவை மனிதப் பாதங்களில்லை. தெய்வீகம் நிறைந்த பொற்பாதங்கள்! மஞ்சள் வெயில்பட்டுப் பிரகாசிக்கும் தங்கத்தைப்போல பாதங்கள் பளபளவென்று ஜொலிக்க, பார்த்த அவன் கண்கள் கூசின. அதற்குள் எப்படி நகர்ந்து வந்து அம்மாவின் அருகில் வந்தான், அந்த தெய்வத்தின் பாதத்தில் விழுந்து சரணடைந்தான் என்பது எதுவும் அவனுக்குத் தெரியாது. பொற்பாதத்தை இறுகப் பற்றின அவன் கைகள்."அம்மா, அம்மா'' கண்கள் அருவியாகக் கண்ணீரைப் பொழிந்தன. அம்மா, அம்மா உங்களையா தரிசிக்க முடியாது என்று சொன்னேன்? எப்பேர்ப்பட்ட மகாபாவி நான்? இந்தப் பாவிக்கும் இத்தகைய வரத்தைக் கொடுத்தாயா? என்னை ஆட்கொள்ள வந்தாயா? என்று நெகிழ்ந்து நெக்குருகி கண்ணீர் மல்கி நின்ற அவனை மௌன மொழியில் பேசாமல் பேசி சமாதானம் செய்தது அந்தக் கருணை தெய்வம். அவனையறியாமல் அவனுக்குள் கவிதை வரிகள் ஊற்றெடுத்தன.

"அருள்மழை பொழிகின்ற அன்னை உன் நெஞ்சம்

அணை போட முடியாத அன்பு வெள்ளம்

கருணைக் கடலலைகள் கரை தாண்டித் துள்ளும்

கட்டுக்கடங்காமல் கனிவுதான் பொங்கும்.''  

அடுத்தது பகவானின் அறைக்குள் நுழைந்தபோது முற்றிலும் மாறிய ஒரு பிறவியாக ஆகியிருந்தான். அவரை சாதாரணமாகத் தரிசித்துவிட்டு, நமஸ்காரம் செய்துவிட்டு அவர் கண்களில் தொனித்த அர்த்தத்தைப் புரிந்துகொண்டது அந்த ஆன்மா.

"நீ என்னை அந்தத் தாயின் பாதத்திலேயே தரிசித்து விட்டாயா? நான் வேறு, அந்த அன்னை வேறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டாயா குழந்தை?'' என்று கேட்காமல் கேட்பது போலிருந்தது. அதற்கு நரேன் மௌனமாகத் தலையசைத்துவிட்டு உணர்ச்சிப் பிழம்பாகி, நிறைவான மனத்துடன் வெளியே வந்தான். அவர்களிருவருக்குள் அங்கு நடந்த மௌன சம்பாஷனை வேறு எவருக்கும் தெரிய வாய்ப்பில்லை.

திரும்பி ரயிலில் பயணம் செய்தபோது அந்தச் சாதகர் கொடுத்த "The Mother'' என்ற புத்தகத்தைத் திரும்பத் திரும்பப் படித்தாலும் திகட்டவில்லை. தாய்மைப் பரிவு கொண்ட மகேஸ்வரி, வீரம் செறிந்த மகாகாளி, அமைதியும் சுமுகமும் ஆட்சி செய்யும், எவரையும் எளிதில் கவரும் மஹாலஷ்மி, திறமைகள் அனைத்தும் பூரணம் பெறும் மகாசரஸ்வதி யாவுமே இந்தத் தாய் என்பதைப் புரிந்து கொண்டான்.

ஊருக்குத் திரும்பிய நரேனைப் பார்த்த அவன் குடும்பத்தினர் அதிசயப்பட்டுப் போனார்கள். போகும் போது ஸ்ரீ அரவிந்த பிரபுவைப் பற்றியே பேசிக் குதூகலப்பட்டவன், இப்பொழுது என்னவோ புதிதாக "அம்மா, அம்மா'' என்று உருகுகிறான். இவனுக்கு என்ன ஆயிற்று? என்று புரியாமல் திகைத்தனர். அவர்கள் எல்லோரையும் உட்கார வைத்து நிதானமாக நடந்தவற்றையெல்லாம் விவரிக்க ஆரம்பித்தவுடன் அவன் குடும்பத்தினருக்கு உடலெல்லாம் சிலிர்த்துப் புளகாங்கிதமடைந்தனர். அடுத்த விடுமுறை எப்பொழுது வரும், நாமும் அந்த தெய்வத்தாயை எப்பொழுது தரிசிக்கப் போகிறோம் என்ற ஆவல் மண்டியது அவர்கள் முகத்தில். நரேனுக்குக் கிடைத்த பாக்கியத்தை எண்ணிப் பெருமிதத்தில் பூரித்தது அவர்கள் மனம்.

********



book | by Dr. Radut