Skip to Content

11 - அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் மதர் ஸ்ரீ அன்னை!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

ஓம் ஆனந்தமயி சைதன்யமயி சத்தியமயி பரமே!

 

     ஸ்ரீ அரவிந்தர் அன்னையை என் வாழ்வில் ஏற்றுக்கொண்டபின் எனக்கேற்பட்ட பலன்களும், அனுபவங்களும் ஏராளம், ஏராளம். அவற்றில் முக்கியமானவைகளை உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

     நான் 2001ஆம் ஆண்டு அரவிந்த் கண் மருத்துவமனையில் அறிவியல் எழுத்தாளராக வேலையில் அமர்ந்தேன்.  அரவிந்த் மையத்தில் எங்கு பார்த்தாலும் ஸ்ரீ அரவிந்தர், அன்னை படம் இருக்கும்.  அப்பொழுது எனக்கோ அவர்களைப் பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால், இயற்கையிலே எனக்குக் கடவுள் பக்தி அதிகம்.

     2003ஆம் ஆண்டு என் பெற்றோர்கள் எனக்குத் திருமணம் செய்து வைத்தனர்.  எல்லோரையும் போலவே என் திருமண வாழ்க்கையை ஆரம்பக் காலக்கட்டத்தில் மகிழ்ச்சியோடும், கனவுகளோடும் ஆரம்பித்தேன்.  ஒரு சராசரி மாமியார்போலவே என் அத்தை நடந்துகொள்வார்.  என் கணவரோ குணத்தில் நல்லவர்.  இருப்பினும் தாய் சொல்லைத் தட்டாதவர்.  எப்பொழுதும் பிரச்சினையாய் இருந்தது வாழ்க்கை.  என் வாழ்க்கையே இருண்டு விட்டதாக நினைத்து அழுதுகொண்டே இருந்தேன்.  நான் அப்பொழுது வணங்கிய தெய்வத்திடம் முறையிட்டு அழுவேன். தற்காலிக முடிவே கிடைத்தது.

    கல்யாணமாகிய இரண்டாவது மாதம் குழந்தை உண்டாயிற்று. குழந்தையைச் சுமந்த நான், ஒரு நாளும் சிரித்து மகிழ்ந்திருக்கவில்லை.  எப்பொழுதும் வேதனைதான் மிஞ்சும். ஒவ்வொரு பிரச்சினையையும் உங்களுக்கு விவரித்தால் பக்கம் போதாது.  மற்றும் அவை மிகச் சாதாரண விஷயங்கள்தாம்என உங்களுக்கே தோன்றும்.  இருப்பினும் என் அத்தை அவைகளை பூகம்பமாய் கிளப்புவார்.  வேதனையை கருவிருக்கும் என் குழந்தையிடம் மனம் விட்டுப் பேசி ஆற்றிக்கொள்வேன்.  எனக்காகப் பரிந்து பேச வந்த என் பெற்றோர்களும் அவமானப்பட்டுச் சென்றார்கள்.  இப்படி ஒரு வாழ்க்கை வாழ்ந்த நான், தற்செயலாக என் அலுவலகத்தில் புதிதாகச் சேர்ந்த என் சகதோழியிடம் என் குடும்பப் பிரச்சினையைச் சொல்லி அழுதேவிட்டேன்.

     அப்பொழுது அவள் சற்று தயங்கி, எனக்கு அன்னையைப் பற்றிச் சொன்னாள். அவள் சொல்ல, சொல்ல எனக்குள் ஒரு சந்தோஷம், ஓர் ஆர்வம் எழுந்தது. நானாக நிறைய விஷயங்கள் அன்னையைப் பற்றிக் கேட்டுத் தெரிந்துகொண்டேன்.  அந்த ஆர்வம் இன்றளவும் எனக்கு இம்மிகூடக் குறையவில்லை. ஆர்வத்தால் உடனே இணையதளத்தில் ஸ்ரீ அரவிந்தர், அன்னையைப் பற்றித் தேடினேன். அன்னையின் வரலாற்றைப் படித்துத் தெரிந்துகொண்டேன்.  ஆர்வம் மிகுதியால் அன்னை பற்றிய பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன்.

     மெதுவாக அன்னையை நாட ஆரம்பித்தவுடனே எனக்கு வீட்டில் பிரச்சினை குறையத் தொடங்கியது.  எப்படியெனில், என் கணவர் அத்தை கிளப்பும் எந்த பிரச்சினையையும் என்னிடம் கொண்டு வரவில்லை.  அதனால் எங்களுக்குள் ஒருவித சந்தோஷம், அமைதி நிலவியது. அன்னையைத் தெரிந்துகொண்ட க்ஷணத்திலிருந்து எனக்கிருந்த குழப்பம் நாளாக, நாளாக விலகியது.

     இப்பொழுது நான் அன்னையை மட்டுமே நம்புகிறேன்; முழுமனதுடன் பிரார்த்திக்கிறேன்.  அன்னையின் திருவுருவப் படத்தை வீட்டில் வைத்து இருக்கிறேன். அன்னையைப் பற்றி நினைக்கும்போதே மனதில் ஓர் அமைதி, சந்தோஷம். அன்னையிடம், தனி வீடு பார்த்து சீக்கிரத்தில் எங்களைக் குடி வையுங்கள்என வேண்டிக்கொண்டேன்.  தனி வீட்டுக்குப் போக வேண்டும் என்பதை கனவில்கூடக் காணாதேஎனக் கூறிய என் கணவர், தானே வீடு பார்த்து அத்தை, மாமா ஆதரவுடன் என்னைத் தனி வீட்டில் குடித்தனம் வைத்தார்.  இப்போது ஒரு விசேஷம்என்றால் நாங்கள் அங்குச் சென்று கொண்டாடுவோம். அடிக்கடி போன் பண்ணி விசாரிப்பதன் மூலம் எங்களுக்குள்ளும் பாசம் கூடி வருகிறது.  இதற்கு எல்லாம் அன்னையே காரணம்.  தனி வீட்டுக்குப் போகும் ஒரு மாதத்திற்கு முன், அன்னை என் சம்பளம் கூடும்வண்ணம், எனக்கு வேலையை அமைத்துக் கொடுத்தார்கள். அதுவும் அரவிந்த் ஆராய்ச்சி மையத்திலேயே Ph.D. பண்ணக்கூடிய சூழலோடு research fellowவாக வேலையில் சேர்ந்தேன். எல்லாம் அன்னையின் அருள்தான் காரணம்.  ஏனென்றால் தற்செயலாக வேலை நிமித்தம் ஆராய்ச்சி மையத்தின் தலைவரைச் சந்தித்தேன். அப்போது ஒரு நேர்முகத்தேர்வு நடைபெற இருப்பதை அறிந்த நான், அதற்கு நான் தகுதியாக இருப்பதைத் தெரிந்துகொண்டு, ஆராய்ச்சி மையத் தலைவரிடம் கூறினேன். அவர் மிக அருமையாகப் பேசினார். என்னை ஊக்குவிக்கும் வண்ணமாக இருந்த அவருடைய பேச்சு, Ph.D. பண்ணக்கூடிய வாய்ப்பைப் பற்றியும் தெளிவாக்கியது. எவ்வளவோ பிரச்சினைகளைச் சந்தித்து, அன்னையின் உதவியால் பழைய பணியில் இருந்து இதற்கு இடம் பெயர்ந்தேன்.  இன்று பலவாறு அன்னையின் அருளைக் காண்கிறேன். என் பணியில் எனக்குக் கிடைத்த project, அன்னை எனக்காகத் தேர்ந்தெடுத்த project எனலாம்.  ஏனெனில், என் சகதோழிகள் அனைவருக்கும் வெகுகடினமான பணி, அதிக நேரம் labஇல் இருந்து வேலை செய்ய வேண்டிய கட்டாயம்.  ஆனால், அன்னை எனக்குத் தேர்ந்தெடுத்துக் கொடுத்த project என் போன்ற குடும்பஸ்தருக்குத் தகுந்த project. என் வேலை நேரத்திலேயே project பணிகளை நன்றாக, எளிதாக முடிக்கக்கூடிய, என் குடும்பச் சூழலுக்கு ஒத்துப்போகும் project.

     எடுத்த ஒவ்வொரு வேலையிலும், காரியங்களிலும் நான் அன்னையைப் பார்க்கிறேன். அவர்களுடைய உதவியின்றி என் வாழ்வில் எதுவும் நடக்கவில்லை.

     என் கணவரும் மிக அன்பாகப் பழகுகிறார். அவர் அன்னையிடத்தில் முழுமையாக வரவில்லையெனினும், அன்னையைப் பற்றிச் சொன்னால், முன்பைவிட அமைதியாகக் கேட்டுக்கொள்கிறார். கண்டிப்பாக அவரும் அன்னையிடம் வருவார்என முழுமையாக நம்புகிறேன்.  என் குழந்தையை அன்னையிடம் முழுமையாகச் சமர்ப்பணம் பண்ணிவிட்டேன். அவன் வளர்ச்சியிலும், அறிவிலும் அன்னை இருக்கிறார். அவனும் நன்றாக அன்னையிடம் பேசுவான்; பிரார்த்திப்பான். என் தாய், தந்தை, தங்கைகள்,தம்பி அனைவரும் என் வாழ்வில் நடந்த அற்புதங்களைக் கண்டு அன்னையை முழுமையாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.

     அன்னை என் வாழ்வில் வந்தவுடன் வாழ்க்கைப் பாதையே சீராக அமைந்துள்ளது. எதிலும் ஒருவித அமைதி, சந்தோஷம் தெரிகிறது.

     "மரிக்க நினைத்த என்னையும் வாழ வைத்த அன்னைக்கு என் கோடான கோடி நன்றிகள்".

ஸ்ரீ அரவிந்த சுடர்

 

மனத்தின் தலையாய செயல், சிந்தனையில்லை; புரிந்து கொள்வது. சிந்தனையின்றிப் புரிந்தால் மனம் உடலை நிர்ணயிக்கும்.

சிந்திக்காதே; புரிந்துகொள்.



book | by Dr. Radut