Skip to Content

12 - "அன்னை இலக்கியம்" - அற்புத குழந்தை

அற்புத குழந்தை

இல. சுந்தரி

 

     நம்மால் முடியாத வேலையைப் பூர்த்தி செய்து தரும்படி இறைவனை வேண்டிக்கொள்கிறோம்.  நம்மால் முடிந்த வேலையைச் செய்யும்போது இறைவனை அழைப்பதில்லை. சமர்ப்பணம் செய்பவர்கள் அதையும் இறைவனுக்குச் சமர்ப்பணம் செய்வார்கள்.  இருந்தாலும் செயல் நம்பிக்கை நம் திறமையிருக்கும். இந்த நிலை மனிதனுக்கு மட்டுமில்லை, தெய்வங்களுக்கும் உண்டு என்பதை ஓர் உபநிஷதக் கதை கூறுகிறது.

     காபி சாப்பிட, கடிதம் எழுத, ஸ்விட்ச் போட இறைவனை அழைத்தால், "இது என்ன சிறுபிள்ளைத்தனம்?" என நினைக்கிறோம். வெளியில் சொல்ல வெட்கப்படுகிறோம்.  காப்பி சாப்பிடுவதும் இறைவனருள் மட்டுமே என்பது (அவ்வாறு உணரும் நம்பிக்கை), பெரிய நம்பிக்கை. என்னால் இறைவன் அருளின்றி அணுவளவும் அசைய முடியாது என்றுணர்ந்தவர் நாயன்மார் நிலையை எட்டியவர். அது பெரிய பக்தி. என்னைவிட இறைவனுக்கு அதிகம் தெரியும் என்பது ஆன்மீகத் தன்னடக்கம்.

- கர்மயோகி

     நீ கையாளும் முறை யாதாயினும், அதில் விசேடத் திறமையும், சக்தியும் அடைய நேரிடினும், முடிவு இறைவனது அருளையே பொருத்துள்ளது என்பதை நீ உணர வேண்டும்.

- அன்னை

     எந்த நாட்டில் சுபிட்சம் அதிகமாக இருக்கிறதோ, அங்குக் கோயிலுக்குப் போகிறவர்கள் குறைவு. தெய்வ பக்திஎன்பது உண்மையானாலும், சௌக்கியமாக வாழ தெய்வம் உதவும்என்பது ஓரெண்ணம்.  வாழ்க்கையில் வசதியும், நிம்மதியும் உள்ளவர்கள் ஆண்டவனை அதிகமாகக் கருதுவதில்லை.  என்றும் பிரச்சினையுள்ள வாழ்விருப்பவர்கள் இடைவிடாது இறைவனை அழைப்பார்கள்.  இது தவிர, இறைவனுக்காக இறைவனை பக்தி செய்பவர் அரிது.  எனினும் இல்லாமல்லை.

     அத்தகு இரண்டு கதாநாயகிகளே இங்கு இக்கதையில் இடம் பெறுகின்றனர்.  அதாவது, கடமையைச் செய்தாலே போதும், அதுவே கடவுள் வழிபாடுஎன்பவள் ஒருத்தி.  கடமையைச் செய்தாலும், நலமுடனிருந்தாலும் கடவுளின்றி எதுவுமில்லை என்றொருத்தி.
 

******

     "வசந்தீ! மணி 9.30. தேர்விற்கு இன்னும் அரை மணி நேரமே இருக்கிறது.  இனி ஆட்டோ பிடித்து, பரீட்சை ஹாலுக்குப் போக வேண்டும்.  இப்போது நாம் 'பப்ளிக் எக்ஸாம்' எழுதப் போகிறோம். இன்று முதல் நாள் வேறு.  டென்ஷனில்லாமல் போய் இடத்தைக் கண்டுபிடித்து உட்காரவேண்டாமா?" என்று படபடத்தாள் சாந்தினி.

     சிறிதும் சலனமின்றி சிரித்த முகத்துடன் அன்னை அறையிலிருந்து வெளியே வந்த வசந்தி, "ஒன்றும் கவலைப்படாதே.  அன்னையிடம் சொல்விட்டு வரவேண்டாமா" என்றவாறு தேர்வு எழுதத் தேவையானவை உள்ள பையைத் தோளில் மாட்டியவாறு அம்மா, அப்பாவை நமஸ்கரித்து விடைபெற்றுக் கிளம்பினாள் வசந்தி.

     "இன்னும் ஏதேனும் பாக்கியிருக்கிறதா?" என்று சற்றுக் கோபமாகக் கேட்டாள்.

     அதற்கும் சிரிப்பு மாறா முகத்துடன் பதிலளிக்கிறாள் வசந்தி. "எதற்குமே முடிவு என்பதில்லை.  நாம் முடிக்கும் இடம்தான் முடிவு" என்றாள்.

     "அம்மா! தாயே! போதும் உன் வியாக்கியானம். பரீட்சை எழுதிய பிறகு வைத்துக்கொள்வோம்" என்றாள் சாந்தினி சீரியஸ்ஸாக.

     வசந்தியின் பெற்றோர் அவர்கள் உரையாடல்களை ரசித்துத் தமக்குள் சிரித்துக்கொண்டனர்.

     வாசலில் ஆட்டோக்காரக் கண்ணன் தயாராய் வண்டியுடன் நின்று இருந்தார்.

    வசந்தி அர்த்தபுஷ்டியுடன் சாந்தினியைப் பார்க்க, "ஓ, உன் அன்னை வண்டியனுப்பியிருக்கிறாரா?" என்றாள் கிண்டலாக.

     "ஆமாம்" என்பதுபோல் பார்த்தாள் வசந்தி.

     "பாவம் அன்னை.  இப்படி எதற்கெடுத்தாலும் பிரார்த்தனை, சமர்ப்பணம் என்று ஓயாது அவருக்குத் தொல்லை தருகிறாய். மிகவும் திணறிப்போகப் போகிறார் அன்னை".

     "ஏன் அப்படிச் சொல்கிறாய்?"

     "பிறகென்ன? உன் கடமையை நீ ஒழுங்காகச் செய்துவிட்டால் இப்படிப் பயந்து, பயந்து சாமி கும்பிடத் தேவையில்லையல்லவா?"

     "நீ தவறாகவே புரிந்துகொள்கிறாய்.  கடமைகளைச் சரியாகச் செய்யாமல் பிரார்த்திப்பது வேண்டுமானால் பலன் கருதிய பிரார்த்தனை ஆகலாம்; பயபக்தியாய் இருக்கலாம்.  ஆனால், கடமையை ஒழுங்காய்ச் செய்தாலும் எதுவும் நம் கையில்லை. கடவுளுக்கு நாம் எப்போதுமே கடமைப்பட்டவர்கள்.  கடவுள் நம் நன்றிக்குரியவர். எல்லாவற்றையும் தெரிவிப்பது, அவரை மறவாதிருப்பது என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக என்னுள் பதிந்திருக்கிறது.  என்னால் இதை மாற்றிக்கொள்ள முடியாது" என்றாள் வசந்தி.

(இங்கு நன்றி என அன்னை குறிப்பிட்டுள்ள ஒரு கருத்தினை நினைவுகூறுவது பொருந்தும்.

நன்றி: இறைவனிடமிருந்து வரும் அருளைப் பெற்றதற்கான அறிகுறி.  இறைவன் உனக்காகச் செய்தவற்றையெல்லாம், செய்து கொண்டிருப்பவற்றையெல்லாம், பெற்றுக்கொண்டதை எளிமையுடன் அங்கீகரிக்கும் பாவனை.  இறைவனுக்காக உள்ளார்ந்து கடன்பட்ட உணர்ச்சி எழுவது.  இறைவன் உனக்காகச் செய்தவற்றிற்கெல்லாம் பொருத்தமானவனாக ஆவதற்குச் செய்யும் முயற்சி).

     "உனக்கு எல்லாம் நல்லதாக நடக்கிறது. அதற்குக் கடவுள்தான் காரணம் என்பாய். நான் கடவுளை மறுக்கவுமில்லை. உன்போல் ஒரேயடியாய், அதே வேலையாக என் கடமைகளை மறக்கவுமில்லை.  எனக்கு மட்டும் எதுவும் நல்லதே நடக்கவில்லையா?" என்கிறாள் சாந்தினி.

     "கடவுளை நினைக்கவில்லை என்றால் நடக்காது; நினைத்தால் நடக்கும் என்று நான் சொல்லவில்லை. மனிதர்கள்தாம் அப்படி இருப்பார்கள்.  தன்னைப் புகழ்ந்தால் ஒன்று; இகழ்ந்தால் ஒன்று என்பது மனித குணம். கடவுளுக்கு எதுவும் பொருட்டில்லை. தன்னைக் காட்டிக்கொள்ளும் தேவையோ, அவசியமோகூட இல்லை.  நாமாகக் கற்பித்துக்கொள்வதுதான் எல்லாம்".

     "பிறகு ஏன் கடவுள், கடவுள் என்று உருகுகிறாய்?"

     "தெரியவில்லை சாந்தி. எனக்கு உள்ளூரப் பிடிக்கிறது, அவ்வளவு தான்".

     "சரி, சரி. இப்போது இந்த சப்ஜெக்ட் எடுத்தால் எனக்குப் பாடம் மறந்துபோகும்" என்று கூறி, ஏதோ புராதனப் பொருளைப் பார்ப்பதுபோல் அவளை ஏறிட்டு நமட்டுச்சிரிப்பு சிரித்தாள் சாந்தி.

     "இவற்றிற்கெல்லாம் நான் மசியமாட்டேன்" என்பதுபோல் இயல்பாயிருந்தாள் வசந்தி.


*******

     சாந்தினியும், வசந்தியும் ஒரே தெருவில் வசிப்பவர்கள். ஒரே பள்ளியில் பயில்பவர்கள்.  படிப்பிலும் இருவரும் ஆர்வமுள்ள மாணவியர். சாந்தினியின் தந்தை பணிமாற்றல் பெற்று 3 ஆண்டுகளுக்கு முன்புதான் அவர்கள் இவ்வூருக்கு வந்தார்கள். இவர்கள் நட்பு மூன்று வயதைப் பெற்றிருந்தாலும் முன்னூறு ஆண்டு பழகியவர்களைப்போல் அவர்களுக்கு அன்பிருந்தது. நேர்மை, உழைப்பு, திறமை இருவருக்கும் இருந்தன. அதே நேரம் இருவருக்கும் எதிரெதிரான குணங்களும் உண்டு.  சாந்தினி குறும்புத்தனமான பெண்.  வசந்தி மிகவும் சாதுவான பெண்.  சாந்தினி சில நேரங்களில் படபடப்பாய்ப் பேசுவாள்.  வசந்தியோ எல்லா நேரங்களிலும் அமைதியாய்ப் பேசுவாள்.  எல்லாவற்றையும் கடந்து ஒருவரை ஒருவர் நேசித்தனர்.  இந்த அன்பு காரணமாய் அவர்களுக்குள் சண்டை என்பதே எழாது.

     வசந்திக்குக் காலை முதல் இரவு வரை ஒவ்வொன்றிற்கும் கடவுளிடம் சொல்வது, கடவுளை வணங்குவது போன்ற பழக்கமுண்டு.  தன் திறமை மீதோ, உழைப்பின் மீதோ அவளுக்கு நம்பிக்கையில்லை. "எல்லாமே இறைவனால் மட்டுமே" என்ற எண்ணம் ஆழமாக இருந்தது.  சாந்தி இதற்கு மாறாக, "கடவுள் தனக்குக் கொடுத்துள்ள திறமை, உழைப்பு இவற்றை நேர்மையாய்ப் பயன்படுத்த வேண்டும்.  அதுவே தான் இறைவனுக்குச் செய்யும் வழிபாடு" என்று நம்புகிறவள்.  அது தவிர, கடவுளை எண்ணி, பக்திஎன்ற பெயரால் நீண்ட நேரத்தை உழைக்காமல் செலவிடுவது சரியில்லைஎன்ற கோட்பாடுடையவள்.


*****

     தேர்வு முடித்து, ஒருவரை ஒருவர் மிகுந்த மகிழ்வுடன் பார்த்துச் சிரித்தவண்ணம் வெளியே வந்தனர்.  தேர்வைச் சிறப்பாக எழுதியதன் அடையாளம் இது.

     "வசந்தி, இனிமேல் ரிசல்ட் வந்து, கல்லூரியில் சேரும்வரை ஏறக்குறைய இரண்டு மாதங்கள் விடுமுறைதான்.  எனவே, அடுத்த கோர்ஸ் சேர்வதற்கான பயிற்சியில் சேர வேண்டியதுதான்.  நீ என்ன சொல்கிறாய்?"

     "நான் அன்னையிடம் சொல்லிவிட்டால், அடுத்தது தன்னால் நிகழும்" என்றாள் வசந்தி.

     "நீ உனக்குப் பிடித்த கோர்ஸில் சேர்வதற்குக்கூட அன்னையிடம் சொல்ல வேண்டுமா? அதற்குத் தேவையான தகுதியைத்தான் அன்னை உனக்கு முன்பே கொடுத்திருக்கிறாரே.  நாம் வேறு அவரை அழைத்துச் சொல்ல வேண்டுமா? அவர் நம்மைக் கவனித்துக்கொண்டுதானே இருக்கிறார்?"

     "அவரே பார்த்துக்கொள்ளட்டும்என்பது அகங்காரமில்லையா? உரியவர்க்குத் தெரிவிப்பது அடக்கமில்லையா? என்னைக் கேட்டால் கடவுளைவிட எதுவும் முக்கியமில்லை என்பேன்".

     "அப்படியென்றால், கண்ணை மூடிக்கொண்டு காட்டில் போய் தவம் செய்.  நாங்கள் இதையெல்லாம் பார்த்துக்கொள்வோம்".

     "கண்ணை மூடிக் காட்டில் தவம் செய்ததெல்லாம் பழைய கதை. இன்று நம் வாழ்விற்குள் வந்து அதிர்ஷ்டம் தர அன்னை வந்துவிட்டார்.  கண்ணை மூடிக் காட்டில் தவம் செய்வதைவிட, உன் போன்றவர் நடுவில் இருந்துகொண்டு கடவுளை நினைப்பது சிறப்பல்லவா?"

     "என்போன்றவர் என்று என்னை ஏன் குறை சொல்கிறாய்?"

     "குறை சொல்லவில்லை. அடிக்கடி இப்படிப் பேசி என் இலட்சியத்தை நான் மறவாதிருக்கவும், மேன்மேலும் சிறப்பாகச் செய்யவும் உன்போல் என்னைத் தூண்டிவிட காட்டில் யாரிருக்கப் போகிறார்கள்?"

     "ஆக, என் தூண்டுதலால்தான் உன் இலட்சியம் தொடர்கிறது என்று சொல்".

     "ஆம், அதற்குரிய கருவியாக உன்னைத்தான் அன்னை அனுப்பி இருக்கிறார்கள்".

     "சரி, சரி. ஆளை விடு. நாளைக்குக் கம்ப்யூட்டர் சென்டருக்குப் போய், சேர்வதற்குப் பணம் கட்டவேண்டும். அன்னையிடம் இப்பொழுதே சொல்லிவிடு" என்று கூறிச் சென்றுவிட்டாள் சாந்தினி.

     மறுநாள், விடுமுறையின் முதல்நாள்என்று அதை அன்னைக்கு அர்ப்பணிக்க மனதில் முடிவு செய்திருந்ததால் வேறு எங்கும் செல்லாமல், அன்னை பற்றிய நூல் படிப்பதிலும், அன்னை அறை சுத்தம் அதிகப்படுத்துவதிலும், தன் புத்தக அலமாரி, மேஜை இவற்றைச் சீர் செய்வதிலும் ஈடுபட்டாள் வசந்தி.  அவள் பெற்றோர் அன்னை அன்பர்கள் என்பதால் யாரும், யாரிடமும் எதுவும் கேட்பதில்லை. அன்னை கோட்பாடுகளின் அடிப்படையில் வாழ்வை அமைத்துக்கொள்ளும் முயற்சியில் மூவருமே ஆர்வம் கொண்டிருப்பதால் பிணக்கின்றி சுமுகமாக யாவும் நடக்கும்.

     சாந்தினி அன்னை முறைஎன்று எதையும் ஏற்காதபோதிலும், இயல்பாகவே அன்னைக்கு உகந்த இயல்பு (உண்மை பேசுவது, சுத்தம், ஒழுங்கு, கட்டுப்பாடு) யாவும் இருந்ததால் இக்குடும்பத்தில் அவளிடம் ஈடுபாடிருந்தது.  சாந்தியும், வசந்தியும் எது பேசினாலும் பெரியவர்கள் ரசிப்பார்களே தவிர தலையிடமாட்டார்கள்.

     காலை 10 மணிக்கு சாந்தினி வந்தாள்.

     "வசந்தீ" என்று அழைத்தாள். "வா, சாந்தி" என்று பொறுமையாக வரவேற்றாள் வசந்தி.  "உன் வரவேற்பு இருக்கட்டும். நேற்றே, காலையில் கம்ப்யூட்டர் சென்டர் போகவேண்டும் என்று சொன்னேனல்லவா? இன்னுமா நீ புறப்படவில்லை" என்றாள் சாந்தினி.

     "இல்லை சாந்தி. இன்று முதல் நாளல்லவா? இதை அன்னைக்குச் சமர்ப்பிக்கத் தோன்றியது. நாளைக்குப் போகலாமே".

     "உன்னைத் திருத்தவே முடியாது வசந்தி.  நான் கடவுள் வேண்டாம் என்று சொல்லவில்லை. கடமையைச் செய்வோம் என்றுதானே சொல்கிறேன்".

     "கடமையைவிட கடவுள் பெரியவர் அல்லவா?"

     "சரி, சரி. நீ எப்படியாவது போ. நான் கம்ப்யூட்டர் சென்டர் போய் நேரம் தெரிந்து வருகிறேன்; எனக்கு மட்டும்தான். உனக்கு உன் அன்னையே சொல்வார்" என்று கேலி செய்தாள்.

     "அன்னை எதைச் செய்தாலும் நான் சந்தோஷமாய் ஏற்றுக்கொள்வேன்".

     அவள் முதுகில் தோழமையுடன் தட்டிவிட்டு புறப்பட்டாள் சாந்தினி.

     கம்ப்யூட்டர் சென்டர் பிரின்ஸிபால் இவர்களை நன்கு அறிந்தவர்.

     "வாம்மா. எங்கே உன் தோழி?'' என்றார்.

     "அவளுக்கு ஏதோ முக்கிய வேலையிருப்பதால் வரமுடியவில்லை" என்று தோழியை விட்டுக்கொடுக்காமல் பேசினாள்.

     "சரி, சரி. உங்களிருவர்க்கும் ஒரே டைம்மில் ஏற்பாடு செய்துவிட்டேன்.   நாளை வசந்தியையும் அழைத்து வந்துவிடு. காலை 10 - 11 உங்கள் டைம்" என்றார்.

     இருவருக்கும் உரிய முறையில் படிவம் நிரப்பி, பணம் கட்டி, இரசீது பெற்றுக்கொண்டாள்.

     நேரே வீட்டிற்குப் போகாமல் வசந்தியிடம் வந்தாள்.

     "வா சாந்தி. குளிர்ச்சியாக ஏதேனும் குடிக்கிறாயா? வெயில் வந்திருக்கிறாய்" என்று பரிவுடன் கேட்டாள் வசந்தி.

     "எனக்கொன்றும் 'ஐஸ்' வைக்க வேண்டாம். இந்தா அன்னை இதை உன்னிடம் கொடுக்கச் சொன்னார்" என்று ரசீதை அவளிடம் கொடுத்தாள்.

     அதைப் பெற்றுக்கொண்டு 'தாங்க்யூ மதர்' என்று அன்னையின் பாதத்தில் வைத்துவிட்டு வந்தாள்.

     "ரொம்பச் சந்தோஷப்படாதே.  நான் உன் தோழிஎன்பதால் பிரின்ஸிபால் இதை என்னிடம் கொடுத்தனுப்பினார்.  வேறு யாரேனும் சென்றால் கொடுத்திருப்பாரா? நடப்பனவெல்லாம் அன்னைச் செயல்என்று பொருத்திக் கொள்கிறாய்".

     "எப்படிப் பார்த்தாலும் அதுதான் உண்மை. She knows everything. She will arrange everything".

     "நீ திருந்தவே போவதில்லை போ" என்று அவளைச் செல்லமாய்க் கடிந்துகொண்டு போய்விட்டாள்.

     இவைபோன்ற பல்வேறு நிகழ்ச்சிகள்.  இருவரும் கல்லூரியில் பயின்று பட்டம் பெற்றாயிற்று.  திருமணத்திற்குப் பிறகும் வேலைக்குப் போகலாம் என்ற சலுகையுடன் இரண்டு பெண்களுக்கும் இரண்டு வேறு திசைகளில் திருமண வாழ்வும் தொடங்கிற்று.

     வசந்தியின் மெல்லிய இயல்புகளுக்காக அவளை விரும்பும் பிரபுவிற்கு அவளை அவள் பெற்றோர் மனம் விரும்பி திருமணம் செய்வித்தனர்.  குடும்பம், அலுவலகம் யாவற்றையும் இயல்பான தன் பக்தியோடு  இணைத்து நலமாக வாழ்கிறாள்.

     சாந்தினியை அவள் பெற்றோர் அவள் திறமைக்கும், படிப்பிற்கும் குறையில்லாமல் நல்ல மாப்பிள்ளையைத் தேர்வுசெய்து மணமுடித்தனர்.

    நம்மை ஈர்க்கும் நிகழ்ச்சி சாந்தினியின் வாழ்விலிருப்பதால் இப்போது அவளைச் சிறிது கவனிப்போம்.

     சாந்தினி தன்னியல்புக்கு ஏற்ப, வீட்டு வேலையிலும் சரி, அலுவலகப் பொறுப்பிலும் சரி, திறமையாகவும், பொறுப்பாகவும் நடந்துகொண்டாள்.  அவளுடைய ஒழுங்கு, சுத்தம், திறமை, உழைப்பு இவற்றால் அலுவலகத்தில் நல்ல பெயர் அவளுக்கு. அவள் கணவன் வாசுவுக்கு அவளைப் பற்றிப் பெருமிதம்.  ஆனால் சாந்தினியின் மாமியார்க்குத்தான் அவள்மீது சிறிது குறை.  அவள் கடவுளையே மதிக்காமல் கர்வமாய் இருப்பதாய்த் தோன்றியது.

     "ஏண்டா வாசு! உன் மனைவிக்குக் கொஞ்சம்கூட கடவுள் நம்பிக்கையே இல்லையா? பக்தி இல்லாமல் ஒரு பெண்ணா? அதிசயமாயிருக்கிறது" என்றாள் மாமியார்.

     "என்னம்மா? எதனால் நீ அப்படி நினைக்கிறாய்?"

     "காலையில் எழுந்தால் சுவாமி படத்திற்கு விளக்கேற்றுவது, கோலம் போட்டுப் பூ வைப்பது என்று எதுவும் செய்வதில்லை".

     "அதெல்லாம் நீ செய்துவிடுவதால் பெரியவர் செய்யட்டும் என்று இருப்பாள்".

     "இல்லையே. ஒரு நாள் அவளிடம், "இன்று நீ கோலம் போட்டு, பூ வைத்துவிடு" என்றேன். "இல்லை அத்தை. என்றும் போல் நீங்களே செய்து விடுங்கள்" என்று சொல்லிவிட்டாள்".

     "அதனால் பக்தியில்லைஎன்று முடிவு செய்துவிட்டாயா? இதெல்லாம் வெறும் புற அடையாளம்தான்.  நான் என்ன தினமும் சுவாமி கும்பிடுகிறேனா? என் கடமையை ஒழுங்காய்ச் செய்கிறேன். அதுவே எனக்கு நிறைவளிக்கிறது. அவளும் அதுபோலிருக்கிறாள்".

      "நீ ஆண்பிள்ளை.  உனக்கும் சேர்த்து உன் மனைவி இதைச் செய்ய வேண்டாமா?"

     "அம்மா, சுத்தமும், சத்தியமும் பெரிய வழிபாடு. உண்மையில் அதுவே சாரமும் கூட. சம்பிரதாயங்கள், சடங்குகள் காலப்போக்கில் ஜீவனற்றுப் போகும். அதனால் எனக்கு அது பெருங்குறையாகத் தோன்றவில்லை. அவளிடம் பொய்யில்லை, பேராசையில்லை. சரி, அவள் வீட்டில் என்ன வேலை செய்கிறாள்?"

     "காலையில் டிபன் தயாரிக்கிறாள்.  இரவிலும் அவள்தான் சமையல்.  மதியம் சமைப்பது நான்.  மற்ற வேலைகளை வேலைக்காரி செய்துவிடுவாள்.  வேலைக்காரி வரவில்லையெனில் எனக்குச் சிரமம் தாராமல் அவளே சமாளித்துவிடுவாள்.  அவளால் மிகவும் முடியாதபோது என்னிடம் பொறுப்பை விடுவாள்".

     "சரி, நீ, அவள் சமையலறையில் வேலை செய்யும்போது கவனித்து இருக்கிறாயா?"

    "இல்லை. வேலை செய்யும்போது குறுக்கே போனால் தொல்லையாய் இருக்கும் என்று போகமாட்டேன்".

     "நாளைக்கு ஜாடையாய் மறைந்திருந்து கவனி".

     பிள்ளை சொல்கிறானே என்று கவனித்தாள்.

     சுத்தமாகத் தலைவாரி முடித்திருக்கிறாள்.  குளித்துச் சுத்தமான உடை அணிந்திருக்கிறாள்.  சமைக்கப் போகும் உணவிற்கு ஏற்ற பொருட்களை ஒழுங்கு செய்துகொண்டு, தடுமாற்றமோ, பரபரப்போயின்றி மின்னல் வேகத்தில் செய்து முடிக்கிறாள்.  ஒரு பொருளைக் கீழே சிந்தவில்லை, சிதறவில்லை. காய்களைச் சீவிய தோல், மிளகாய்க் காம்பு எல்லாவற்றையும் கையோடு டஸ்பினில் போட்டு, எத்தனை அழகாய்ச் செய்கிறாள். அவள் உணவு தயாரித்து முடித்த பிறகு சமையலறைச் சுத்தம் பார்த்திருக்கிறாள்.  ஆனால், அவள் ஒவ்வொன்றையும் வரிசைப்படுத்திச் செய்யும் அழகை இன்றுதான் கவனித்திருக்கிறாள்.  இத்தனை வருட தன் சமையல் அனுபவத்தில் இன்னமும் தனக்கு இந்தத் தெளிவு வாராததையும், அவள் திறமையையும் ஒப்பிட்டு வெட்கப்பட்டாள்.  ஆரம்ப நாட்களில் தன் மாமியாரிடம் திட்டு வாங்கியதெல்லாம் நினைத்தாள்.  பயத்தினால் ஒன்று கிடக்க ஒன்று செய்துவிடுவாள். அப்போது மாமியார் வந்து, "இது என்ன எருமை மாடு கன்று போட்ட இடம்போல?' என்று திட்டுவார். நினைத்தவுடன் தன்னையறியாமல் சிரித்துவிட்டாள்.

     அடிக்கடி உள்ளே வந்து எட்டிப் பார்த்துத் திடீரெனச் சிரிக்கும் மாமியாரைக் கவனித்த சாந்தினி, "என்ன அத்தை சிரிக்கிறீர்கள்?" என்று இயல்பாகக் கேட்டாள்.

    "என் மாமியார் வீட்டு அனுபவம் நினைத்துச் சிரித்தேன்" என்றாள்.

    "என்ன அனுபவம் அது?" என்றாள் சாந்தினி.

    "இந்தச் சின்ன வயதில் இத்தனை அழகாய் நீ சமைப்பது, சமையல் அறையைச் சுத்தமாய் வைப்பது, இதெல்லாம் அந்த நாளில் எனக்குத் தெரியாது. சமையலறை ஒரே அமர்க்களமாயிருக்கும். மாமியாரிடம் திட்டு வாங்குவேன். அதையெண்ணிச் சிரித்தேன்" என்றாள்.

     "நீங்கள் எனக்குப் பூரணச் சுதந்திரம் கொடுத்திருக்கிறீர்கள். நான் அச்சமில்லாமல் என் வேலைகளைச் செய்வதால் நன்றாகச் செய்ய முடிகிறது" என்கிறாள் சாந்தினி.

      "அது மட்டுமில்லை சாந்தி. உனக்கு இயற்கையாகவே ஒழுங்குபடுத்திச் செய்யும் திறமையிருக்கிறது" என்று மனம்விட்டுப் பாராட்டினாள்.

    "தாங்ஸ் அத்தை" என்று கூறி, அடுத்த வேலைக்குப் போய்விட்டாள்.

     மரியாதை, சுத்தம், நாகரிகம், ஒழுங்கு எல்லாம் உள்ள இவளிடம் கடவுள் என்ற பேச்சேயில்லை.  இதுவே போதும் என்று நினைப்பதுபோல் இருந்தது.

    அவள் (சாந்தினி) அலுவலகம் சென்றபின், வாசு அவளிடம் (தன் தாயிடம்), "என்னம்மா கவனித்தாயா?" என்று கேட்டான்.

    "கவனித்தேன் வாசு.  அவள் வேலை செய்யும் அழகே தனி.  என் மருமகள் திறமைசாலி என்று நினைக்கப் பெருமையாகத்தானிருக்கிறது.  ஆனால் இதனாலெல்லாம் கடவுள் பக்திக்கு ஈடாகிவிட முடியுமா?" என்று ஏக்கத்துடன் கூறினாள்.

     "பொய், பணத்தாசை இருக்கிறதா என்பதையும் பார்த்துவிடுவோம்" என்றான் வாசு.

     அவள் அலுவலகத்திலிருந்து வந்தவுடன் தன் கைப்பையை அவர்கள் படுக்கையறையில் வழக்கமாக மாட்டும் இடத்தில் மாட்டி வைத்துவிட்டு மற்றவற்றைக் கவனிக்கப் போய்விட்டாள்.

     அவளறியாமல் அவள் கைப்பையைத் திறந்து ஒரு பத்து ரூபாய்க் கட்டை வைத்துவிட்டான்.

     மறுநாள் அவள் அலுவலகம் புறப்படுமுன் தன் கைப்பையில் வண்டி சாவி, பேனா, பெட்ரோல் போட மற்றும் இன்றியமையாத தேவை ஏதேனும் ஏற்பட்டால் அதற்குஎன்று சிறிது பணம், டேபிள்சாவி என்று எல்லாவற்றையும் ஒரு முறை சரி பார்க்கும் தன் வழக்கப்படி சரி பார்த்தாள். ஒரு பத்து ரூபாய்க் கட்டு அதிகமாயிருந்தது.  ஒருவேளை தன் கணவன் எதன் பொருட்டேனும் வைத்திருக்கக்கூடும்என்று நினைத்து, "என்னங்க, எதற்கு என் பையில் பணம் வைத்திருக்கிறீர்கள்.  ஏதாவது வாங்கி வர வேண்டுமா? தவணை ஏதும் கட்டுவதற்கா? ரசீது ஒன்றுமில்லை.  பாங்க் கணக்கு என்றால் பாஸ்புக் இல்லை" என்று கேட்டாள்.  எப்போதேனும் இப்படி அவள் உதவியை அவன் நாடுவதுண்டு.  அவள் ஆபீஸ் போகும் வழியில் கடை, பேங்க், எல்லாமிருப்பதால் பல நேரம் அவள்தான் இதை எல்லாம் செய்ய நேரும்.

     அவர்கள் அறையிலிருந்து அவள் இதைக் கேட்டதால் ஹாலிலிருந்து உள்ளே வந்த கணவன், "நான் ஏதும் பணம் வைக்கவில்லையே.  நான் ஏன் உன் பையைத் திறக்கப்போகிறேன்?" என்றான்.

    அவள் சிந்திக்கவில்லை, பதறவில்லை, குழம்பவில்லை.

    "வேறு யார் வைக்கக்கூடும்? மாமா நம் அறைக்குள் தேவையில்லாமல் வரவேமாட்டார். அத்தை எதுவானாலும் என்னிடம் சொல்லுவார்" என்றாள்.

    "ஆபீஸில் யாராவது உன் சிநேகிதியின் வேலையாயிருக்குமோ?" என்றான்.

    "அந்த அளவிற்கு எனக்குச் சிநேகிதிகள் இல்லை.  ஏன் என்றால், ஏன் என்பதோடு சரி.  வசந்தியைப்போல் எனக்கு சிநேகிதி அமையவில்லை" என்றாள்.

    "யாரேனும் இலஞ்சம் கொடுக்க முயன்றிருப்பார்களோ?" என்றான்.

    "நோ சான்ஸ். என் டேபிளில் அதற்கெல்லாம் இடமில்லை. மேலதிகாரியே இரண்டடி தள்ளி நின்றுதான் பேசுவார்" என்று உறுதியாய்க் கூறினாள்.

    "சரி, சரி. நீங்கள்தான் தவறுதலாய் வைத்திருப்பீர்கள்.  யோசித்துப் பாருங்கள். இந்தாருங்கள்" என்று பணத்தை அவன் கையில் திணித்து விட்டு, எல்லோரிடமும் சொல்லிக்கொண்டு புறப்பட்டுவிட்டாள்.

     "என்னம்மா? எப்படி என் மனைவி?" என்று பெருமை பொங்கக்கேட்டான் வாசு.

     "அவள் எந்தத் தேர்விலும் தோற்பதில்லை.  என் மருமகளைப் பற்றி மகிழ்ச்சியாய்த்தானிருக்கிறது.  தெய்வ பக்தி இல்லையே என்ற ஒரு குறைதான்" என்றாள் அம்மா.

    "கவலைப்படாதேயம்மா. வழிபாடு செய்தால்தான் பக்தி என்றில்லை.

     அவளுக்குப் பக்தி வேறு ரூபத்திலிருக்கும்" என்று கூறிவிட்டான்.

    இப்படியே பிள்ளைப் பேறில்லாமல் 5 ஆண்டுகள் ஓடிவிட்டன. வீட்டினர்க்கு அது ஒரு குறையாயிருந்தது.

     ஒரு நாள் அவள் கணவன் தனிமையில் அவளிடம், "சாந்தி! நாமொரு நல்ல மகப்பேறு மருத்துவரைப் பார்க்கலாமா?" என்று தயங்கியவாறு கேட்டான்.

     கடமை, கட்டுப்பாடு, ஒழுங்கு, சுத்தம் எல்லாம் நிறைவாக இருந்தாலும், ஒரு சராசரிப் பெண்ணாய் பிள்ளைச் செல்வம் பற்றிய ஏக்கம் உள்ளூர இருக்கத்தான் செய்தது.  அவள் சோர்ந்து போகவில்லையே தவிர உள்ளூர ஏக்கமிருந்தது.

     அவன் கேள்விக்குப் பதிலாக, "உம். முறையான எதுவும் செய்வதில் எனக்குத் தடையில்லை" என்றாள்.

     மருத்துவப் பரிசோதனை நடந்து ரிஸல்ட்டும் வந்தது. சாந்திக்கு மகப்பேற்றினுக்குச் சொற்ப வாய்ப்பேயுள்ளது என்றும், அப்படியே வாய்த்தாலும் அவள் உயிருக்கு உத்திரவாதமில்லை என்றும் எல்லா மருத்துவர்களும் கூறிவிட்டனர்.

     "சாந்தி, நான் இதைக் குறையாக எண்ணவில்லை.  நீ இது பற்றி வருந்த வேண்டாம்.  நீ எப்போதும்போல் உற்சாகமாய் உன் வேலைகளைக் கவனி.  தேவைப்பட்டால், அனாதை விடுதியிலிருந்து உனக்குப் பிடித்த குழந்தையை எடுத்து வளர்ப்போம்" என்றான் கணவன்.

     அவன் பெருந்தன்மை அவளை நெகிழவைத்தது. தொட்டதற்கெல்லாம் மனைவியைக் குறை சொல்லும் கணவன்மார்களை நிறையப் பார்த்து இருக்கிறாள்.

     தனக்கு நிகரில்லை எனக் கர்வப்படவில்லை என்றாலும், இதுவரை வாழ்வில் அறிந்திராத சோகம் லேசாய்த் தலையெடுத்தது. வசந்தியுடனான தன் இளமைப்பருவ நாட்களில், ஒவ்வொரு செயலும் அவளுக்கும் தனக்குமிடையே இருந்த வித்தியாசங்களை நினைவுகூர்ந்தாள்.

தொடரும்.....

******



book | by Dr. Radut