Skip to Content

அன்பர் அனுபவம்

என் வாழ்க்கையில் அன்னையின் அருளாட்சி

நான் அன்னையை சுமார் 10 வருடமாக அறிவேன்.நான் முதன்முதலில் அமுதசுரபி என்ற பத்திரிகையில் ஸ்ரீ அன்னையைப் பற்றியும் ஸ்ரீ அரவிந்தரைப்பற்றியும் திரு.கர்மயோகி அவர்கள் எழுதியிருந்த கட்டுரை மூலம் தெரிந்துகொண்டேன்.ஸ்ரீ அன்னையின் அருளால் என் வாழ்க்கையில் மன நிம்மதியும் சந்தோசத்தையும் அடைந்தேன்.என்னுடைய மனைவியும், மகனும் சேர்ந்து ஸ்ரீ அன்னையை வழிபட வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்.அவர்களும் அன்னை பக்தர்கள் ஆனார்கள்.

நான் ஒரு சமயம் பாண்டிச்சேரி வந்து ஸ்ரீ அன்னையைத் தரிசனம் செய்துவிட்டு வரும்போது நாங்கள் வரும் பஸ்ஸில் ராணிப்பேட்டை அன்னை அன்பர்களும் வந்திருந்தார்கள்.எங்களைப் பற்றியும் அவர்களுக்குத் தெரியாது.அவர்களை பற்றியும் எங்களுக்குத் தெரியாது.நாங்கள் பக்கத்துச் சீட்டில் உட்கார்ந்திருந்தோம்.அவர்கள் எங்களை விசாரித்தார்கள்.நாங்கள் பாண்டியில் இருக்கும் ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசனம் செய்துவிட்டு வருகிறோம் என்று கூறினோம்.அவர்களும் மகிழ்ச்சி அடைந்தார்கள்.அப்போது அவர்கள், என்னுடைய வீட்டில் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் காலை 9 மணிக்குத் தியானம் நடைபெறுகிறது.அதில் நீங்களும் கலந்து கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.இதன் பிறகு ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் வேலூரில் இருந்து ராணிப்பேட்டை பெல் டவுன்ஷிப்பில் இருக்கும் அன்பர் வீட்டிற்குச் சென்று வந்தேன்.சில ஞாயிற்றுக்கிழமை தவிர்க்க முடியாத காரணத்தால் போக முடியாமல் போகும்.

தியானம் என்றால் என்ன என்று அப்போது தெரியாது.தியானம் செய்வதுபற்றி நான் எல்லோரிடமும் கேட்டுச் சிறிதளவு அறிந்தேன்.

 அன்பர் வீட்டிற்குப் போகும்போது எல்லாம் எனக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருக்கும்.எப்போது ஞாயிற்றுக்கிழமை வரும் என்று காத்திருப்பேன்.ஏனென்றால் அங்கு ஸ்ரீ அன்னையின் பக்தர்களைப் பார்க்கும்போது மகிழ்ச்சியாகவும், சந்தோஷமாகவுமிருக்கும்.

நான் private கம்பெனியில் Accountant-ஆகப் பணி புரிந்து வருகிறேன்.பாண்டிச்சேரி சொசைட்டிக்கு என்னுடைய வாழ்க்கை நிலையைப் பற்றி Dec "85-இல் எழுதினேன்.அங்கிருந்து 04.12.85-இல் எனக்குப் பதில் லெட்டர் வந்தது.அதில் அமுதசுரபியில்

கட்டுரைகளான நம்பிக்கை, பக்தி, தெய்வசிந்தனை ஆகிய கட்டுரையில் கண்டுள்ளபடி வாழ்க்கையை அமைத்துக் கொண்டால் சகல செல்வங்களும், நலன்களும் தடையில்லாமல் பெருகும் என்று பதில் இருந்தது.இந்த மூன்று கட்டுரைகளையும் படித்து அதன்படி நடக்க ஆரம்பித்தேன்.இப்போது அன்னையின் ஆசியால் முன்பை விட அதிக முன்னேற்றம் அடைந்திருக்கிறேன்.

ஒரு சமயம் Feb "88-இல் என்னுடைய பெரியம்மா பேரன் காணாமல் போய்விட்டான்.நாங்கள் எங்குத் தேடியும் பையன் கிடைக்கவில்லை.அன்று என்னுடைய தாயார் சொசைட்டிக்கு எழுதி கேட்கச் சொன்னார்கள்.பிறகு நான் பையன் காணாமல் போய்விட்டான் என்பதை லெட்டரில் எழுதி கேட்டிருந்தேன்.அதற்கு எனக்கு 23.02.88-இல் சொசைட்டியிலிருந்து பதில் வந்தது.அந்த லெட்டரில் தாய் தந்தையர் அன்னையிடம் தீவிரமாகப் பிரார்த்தனை செய்தால் பிள்ளை தானே திரும்பி வருவான் என்று எழுதியிருந்தார். என்ன ஆச்சரியம்!லெட்டர் வந்த இரண்டு நாளில் பையன் திரும்பி வந்துவிட்டான்.ஸ்ரீ அன்னைக்கு நன்றிக் காணிக்கையாகச் சிறுதொகையொன்றை ஆசிரமத்திற்கு அனுப்பி வைத்தேன்.

ஒரு சமயம் நான் வேலை செய்யுமிடத்தில் ஒரு பைல் காணாமல் போய்விட்டது.அதற்கு அவர்கள், நான்தான் எடுத்தேன் என்று என்மேல் பழி சுமத்தினார்கள்.நான் பாண்டிக்கு ஜனவரி மாதம் 87-ஆம் வருடம் எழுதிக் கேட்டிருந்தேன்.அதற்கு அவர், காணாமல் போன பைல் கிடைத்துவிடும்.அன்னை அருளில் முழு நம்பிக்கை வைத்து தினமும் அது திரும்பவும் கிடைக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்து ஒரு காணிக்கையை அனுப்பி வைக்குமாறு எழுதியிருந்தார்.ஒரு நாள் அந்த நிறுவனத்தில் நான் கணக்கு எழுதும்போது இடத்தைச் சுத்தம் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது காணாமல் போன பைல் மேல் அலமாரியில் இருப்பதாக அங்கு வேலை செய்யும் பையன் கூறினான்.எனக்கு உடம்பு சிலிர்த்துவிட்டது.ஸ்ரீ அன்னைக்கு அந்த இடத்திலேயே நன்றி கூறினேன்.

நான் என்னுடைய மனைவி, மகன் மூவரும் ஒவ்வொரு தரிசன நாளுக்கும் பாண்டிச்சேரி சென்று ஸ்ரீ அன்னையின் சமாதியைத் தரிசனம் செய்துவிட்டு ஆசீர்வாதம் பெற்று வருவோம்.

என்னுடைய தாயார் வினாயகர், முருகர், சத்யநாராயணன் முதலிய கடவுள்களை வணங்குவார்.சித்ரா பௌர்ணமிக்கு சத்யநாராயண பூஜையை ரொம்ப விமரிசையாக என்னுடைய தாயார் கொண்டாடுவார்.

நான் ஸ்ரீ அன்னையின் படத்தை பிரேம் போட்டு மாட்டி வைத்து தினமும் ஊதுவத்தி காண்பித்து வந்தேன்.இதற்கு என்னுடைய தாயாரிடம் இருந்து கொஞ்சம் எதிர்ப்பு வந்தது.சில நாள் கழித்து அமைதியாகி விட்டார்கள்.பிறகு, அவர்களும் நான் அன்னையின் முன் அமர்ந்து தியானம் செய்யும் போது தானும் என் பக்கத்தில் வந்து அமர்ந்து அமைதியாக ஸ்ரீ அன்னையை வணங்குவார்கள். ஒரு நாள் அன்பர் ஒருவர் இன்னொரு அன்பர் கல்யாணத்திற்காக வேலூர் வந்திருந்தார்.நானும் அந்தக் கல்யாணத்திற்குச் சென்று இருந்தேன்.அங்கு அந்த அன்பரைச் சந்தித்தேன்.பிறகு என்னுடைய வீட்டிற்கு வர வேண்டும் என்று கூறி அழைத்து வந்தேன். என்னுடைய தாயாருக்கு அவர்களை மிகவும் பிடித்திருந்தது. அன்றிலிருந்து என்னுடைய தாயார் ஸ்ரீ அன்னையை இன்னும் அதிகமாக வணங்க ஆரம்பித்தார்கள்.

 என்னுடைய தாயார் 14.12.92-இல் காலமாகி விட்டார்கள். எனக்கு மிகவும் கவலையாக இருந்தது.மனதில் நிம்மதி இல்லை. பிறகு ஜனவரி 93-இல் பாண்டி வந்து ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்துவிட்டு ஆசீர்வாதம் பெற்று அன்னை அன்பர் வீட்டிற்கும் சென்றோம்.அவரிடமும் எங்களுக்கு மனதில் நிம்மதியும் சந்தோஷமும் இல்லை என்று கூறினோம்.அதற்கு அவர், ஒவ்வொரு மாதம் 1-ஆம் தேதி பாண்டிச்சேரி வந்து சமாதி தரிசனம் செய்யுங்கள் என்று கூறினார்.அதன் பிறகு 01.03.93 முதல் இன்று வரை சென்று வருகிறேன்.இதனால் மனதில் மகிழ்ச்சியும் ஆர்வமும் உண்டாகிறது.

ஒரு சமயம் ஒரு அன்பர் ராணிபேட்டை தியான மையத்திற்கு வந்திருந்தார்கள்.வேலூரில் இருக்கும் என் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு போக வந்திருந்தேன்.அவரும் வருவதாக ஒப்புக் கொண்டார்.நான் என்னுடைய மனதில் கார் அல்லது ஆட்டோ கிடைத்தால் அதில் அமர்த்தி அழைத்து செல்லலாம் என்று இருந்தேன்.ஆனால் அங்கு எதுவும் கிடைக்கவில்லை.நானும் அவரும் பஸ்சுக்காக காத்திருந்தோம்.ஆனால் என்ன அதிசயம் பாருங்கள்!திடீர் என்று ஒரு வேன் எங்கள் அருகில் வந்து நின்றது. அதில் உள்ள டிரைவர் எங்களைப் பார்த்து வேன் வேலூர்வரை போகிறது.வருகிறீர்களா?என்று கேட்டார்.நாங்களும் வேனில் ஏறி வேலூர் வந்து சேர்ந்தோம்.

நான் தினந்தோறும் காலை 6.30 மணியிலிருந்து 7.00 மணி வரை ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி நினைத்து தியானம் செய்வேன்.ஒவ்வொரு மாதமும் ஒருநாள் நானும் என் மனைவியும் காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தரைப் பற்றி நினைத்துத் தியானம் செய்வோம்.அந்தச் சமயம் காலை 6.00 மணியிலிருந்து மாலை 6.00 மணி வரை எந்தவிதமான ஆகாரமோ தண்ணீரோ எதுவும் அருந்தாமல் மௌன விரதம் இருப்போம்.மாலை 6 மணிக்குப் பிறகுதான் உணவு அருந்துவோம்.

9.2.96 முதல்11.2.96 வரை காலை 6மணி முதல் மாலை 6மணி வரை எதுவும் சாப்பிடாமல் மௌன விரதம் இருந்தோம். தினமும் எங்கள் வீட்டில் காலையில் 6 மணிக்கு விஜய் டிவியில் வரும் ஸ்ரீ அன்னையின் பாட்டை கேட்போம்.இப்பொழுது 3 மாதமாக காலை 6.00 மணி முதல் 7.00 மணி வரை கரண்ட் கிடையாது. என் மனதில் இந்த மூன்று நாட்களிலும் டிவியில் வரும் அன்னையை தரிசனம் பார்க்க வேண்டும் என்று நினைத்தேன்.பிறகு இந்த நாட்களிலும் முழுவதும் கரண்ட் கட் இல்லை.எனக்கு மிகவும் சந்தோஷமாக இருந்தது.இந்த மூன்று நாட்களுக்கு பிறகு வழக்கம்போல் காலை 6.00 மணி முதல் கரண்ட் கட் ஆகி விட்டது. இதனால் ஸ்ரீ அன்னை என்னுடைய விருப்பத்தை அறிந்து நிறைவேற்றினார் என்று புரிந்து கொண்டேன்.நாங்கள் அன்னை பக்தர்களாகிய பிறகு எங்கள் வாழ்க்கையில் அந்த அளவிற்கு நல்ல சுமுகமும் சந்தோஷமும் நிலவுகிறது.

C.ஜெயபால், வேலூர்

********

என் வாழ்க்கையில் அன்னை அருüன் செயல்பாடுகள்

முதலில் என் கணவர் அமுதசுரபி புத்தகத்தில் அன்னையைப் பற்றிப் படித்துவிட்டு என்னிடம் வந்து கூறினார்.நான் அப்பொழுது அன்னையைப் பற்றி ஓரளவுதான் தெரிந்து கொண்டேன்.என்னுடைய மகன் சின்ன வயதில் எப்பொழுது பார்த்தாலும் அழுது கொண்டு இருப்பான்.இதற்காக வேண்டி, பாண்டி சென்று என் கணவரை வேண்டிக்கொண்டு வருமாறு கூறினேன்.அவரும் பாண்டி சென்று ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் சமாதியைத் தரிசனம் செய்துவிட்டு என் மகனுக்காக வேண்டி வந்தார்.என்ன அதிசயம் பாருங்கள்! அன்றுமுதல் என் மகன் அழுகையை விட்டுவிட்டான்.மேலும் எங்கள் குடும்பத்தில் சந்தோஷமும் நிம்மதியும் ஏற்பட்டன.பிறகு ஒவ்வொரு தரிசன நாளுக்கும் சென்று ஸ்ரீ அன்னையை வழிபட்டு வந்தோம்.

 என்னுடைய மகன் நான்காம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தான். அப்பொழுது final exam வந்ததில் அவன் அதில் தவறிவிட்டான். நான் அன்னையிடம் வந்து முறையிட்டேன்.பிறகு இரண்டு நாள் கழித்து என்னுடைய மகனுக்கும் வேறு சில பிள்ளைகளுக்கு மட்டும் re-test வைத்தார்கள்.அதில் என்னுடைய மகன் தேறிவிட்டான் என்று பதில் வந்தது.நானும், என் கணவரும், மகனும் ஸ்ரீ அன்னைக்கு நன்றி செலுத்தினோம்.

இன்னொரு சமயம் என்னுடைய மகன் விஜய்க்கு 11-ஆம் ஆண்டு பிறந்தநாள்.அன்று ஆசிரமம் வரவேண்டும் என்று நானும் என் மகனும் விரும்பினோம்.ஆனால் சில தவிர்க்க முடியாத காரணங்களால் ஆசிரமம் வரமுடியவில்லை.நாங்கள் அன்னையிடம் வேண்டினோம்.நாங்கள் ஒவ்வொரு மாதமும் காணிக்கையை என் கணவர் மூலம் 1-ஆம் தேதி அன்று செலுத்திவிட்டு வருவோம். ஆசிரமத்தலிருந்து என் கணவர் பெயருக்குத்தான் பிரசாத பாக்கெட் வரும்.ஆனால் என் மகன் பிறந்தநாளுக்கு என் மகனுடைய பெயருக்கு வந்தது.என்ன அதிசயம்!ஸ்ரீ அன்னையின் ஆசியும் ஸ்ரீ அரவிந்தர் ஆசியும் எங்கள் வீடு தேடி வந்தது நாங்கள் மறக்க முடியாத சம்பவம்.

என்னுடைய நெருங்கிய தோழியின் மகளுக்கு உடல் நிலை சரியில்லை.ஆபரேஷன் செய்தால் தான் குணமாகும் என்று C.M.C ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் கூறிவிட்டார்கள்.நான் அன்று என் தோழியின் வீட்டிற்குச் சென்று இருந்தேன்.என்னுடைய தோழி மிகவும் கவலையாக இருந்தாள்.அவள் மகளைப் பற்றி என்னிடம் கூறினாள்.தோழியின் கணவரும் இவ்விஷயமாக என்னிடம் கவலை தெரிவித்தார்.நான் "அதற்கு கவலைப்படவேண்டாம்' என்று சொல்லி அன்னையின் டாலரைக் கொடுத்து கழுத்தில் மாட்டிக் கொள்ளும்படிச் சொல்லிவிட்டு ஸ்ரீ அன்னைக்காக, காணிக்கையும் அனுப்புமாறு கூறி வந்தேன்.என்னுடைய வீட்டிற்கு என் தோழியையும் அவளுடைய மகளையும் அழைத்து வந்து மூன்று நாள் தியானம் பண்ணச் சொன்னேன்.என்னுடைய தோழியும் மகளும் வந்து ஸ்ரீ அன்னையிடம் அப்பிரார்த்தனையைச் செய்தார்கள்.ஒருவாரம் கழித்து தோழியின் மகளை டாக்டரிடம் காண்பித்தார்கள்.அவர் குழந்தைக்கு ஆபரேஷன் தேவை இல்லை என்றும் இது மாத்திரையின் மூலமே சரியாகிவிடும் என்றும் கூறிவிட்டார்.நோய் குணமாகி விட்டது.என் தோழியின் குடும்பமே ஆசிரமத்திற்குச் சென்று ஸ்ரீ அன்னையின் சமாதியில் நன்றி செலுத்தினார்கள்.

ஒரு சமயம் என்னுடைய தங்கை வேலூர் வந்துவிட்டு மீண்டும் அவள் வீட்டிற்குத் தனியாகவே சென்றாள்.அவளுடைய வீடு திருவள்ளூர் பக்கத்தில் ஒரு கிராமத்தில் இருந்தது.பஸ்ஸில் இருந்து இறங்கி 3 கிலோ மீட்டர் நடந்து செல்ல வேண்டும்.அன்று நிறைய மழை வேறு பெய்துகொண்டிருந்தது.கரண்டும் இல்லை.ஒரே இருட்டாக இருந்தது.வழித் துணைக்கு யாராவது வருவார்களா என்று பார்த்திருந்தாள்.அப்போது நான் கொடுத்த அன்னையின் படம் கையில் இருந்தது.அந்தப் படத்தை பார்த்து "அன்னையே நீ தான் வழித் துணைக்கு வர வேண்டும்'' என்று அங்கேயே பிரார்த்தனை செய்தாள்.அப்போது அந்த வழியாகத் தூரத்து உறவினர்கள் மாட்டு வண்டியில் வந்து கொண்டு இருந்தார்கள். அவர்கள் அந்த வழியாக வரவேண்டிய அவசியமே இல்லை.அவர்கள் இவளிடம் மாட்டு வண்டியில் ஏறிக் கொள்ளுங்கள் என்று கூறி அவள் வீட்டிற்கு அழைத்துச் சென்று விட்டார்கள்.அன்னையே தனக்கு வழித் துணைக்கு வந்தார் என்று அவள் மிகவும் சந்தோஷம் அடைந்தாள்.

நாங்கள் 29.02.96-ஆம் தேதி ஆசிரமம் சென்று ஸ்ரீ அன்னையையும் ஸ்ரீ அரவிந்தரையும் தரிசனம் செய்ய இருந்தோம். ஆனால் என்னுடைய மகனுக்கு monthly-test இருப்பதாகத் திடீர் என்று கூறினான்.நாங்கள் எப்படிச் சென்று ஆசிரமத் தரிசனம் செய்வோம் என்று நினைத்தோம்.கணவர் மட்டும் முதல் நாள் இரவு 11.00 மணிக்கு வேலூரிலிருந்து புறப்பட்டுச் சென்று விட்டார். மறுநாள் எங்கள் உறவினர்கள் காரில் செல்வதாகக் கூறினார்கள். "நீங்களும் வருகிறீர்களா?'' என்றும் அழைத்தார்கள்.நான் செய்வது ஒன்றும் புரியாமல் இருந்தேன்."அன்னை அழைக்கிறார், அன்னை விட்டவழி'' என்று நினைத்து நானும், என் மகனும் உறவினர்கள் மூலம் ஆசிரமம் வந்து அடைந்தோம்.எனக்கு மகிழ்ச்சியாகவும் சந்தோஷமாகவும் இருந்தது.அங்கு என் கணவரும் நானும் மகனும் ஸ்ரீ அரவிந்தர் அறையையும் ஸ்ரீ அன்னையின் அறையையும் பார்த்து தரிசனம் செய்து நிம்மதியாக வீடு வந்து சேர்ந்தோம்.அடுத்த நான் என்னுடைய மகன் பள்ளிக்குச் சென்றான்.முதல் நாள் நடக்க இருந்த டெஸ்ட் நடக்கவில்லை என்றும் அவன் பள்ளிக்குச் சென்ற மறுநாள் தான் டெஸ்ட் நடக்க போவதாக ஆசிரியர் சொல்லி எழுதச் சொன்னாராம்.

என்னுடைய மகனுக்கு ஆச்சரியம் தாங்க முடியவில்லை. அங்கேயே ஸ்ரீ அன்னைக்கு நன்றி செலுத்தினான்.இப்படி எங்களுடைய குடும்பத்தில் ஸ்ரீ அன்னை அருளால் மன அமைதியும் சந்தோஷமும் நிறைந்துள்ளது.

J.மாலா ஜெயபால், வேலூர்

********

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதையும் நினைக்காமல் நம்முள் இருக்கும் நம்பிக்கையை பூமாதேவி ஏற்றுக் கொள்கிறாள். தெளிவுள்ள நம்பிக்கைக்கு வாழ்வு பரிசளிக்கிறது.

ஆன்மீக நம்பிக்கைக்கு அதுவே பரிசு.



book | by Dr. Radut