Skip to Content

பகுதி 4

These are finer ranges behind the gross body as there are behind the subliminal, the subconscient behind mind

மனத்திற்குப் பின்னால் அடிமனமும் ஆழ்மனமும் இருப்பதைப்போல் உடலுக்குப் பின்னாலும் பல நுண்ணிய நிலைகள் உள்ளன

பொதுவாக நாம் அறியும் சில நிகழ்ச்சிகள்:-

 1. நாம் ஒருவரை நினைத்தால் அவரிடமிருந்து செய்திவருவது,
 2. மாட்டின் முதுகில் உள்ள புண்ணை நோக்கி வரும் பூச்சியை வாலால் மாடு விரட்டுவது,
 3. எதிர்காலத்தில் - ஓரிரு நாளில் - வரப்போகும் செய்திகள் நமக்குச் சூசகமாகத் தெரிவது,
 4. உறவினர் உடல்நிலை மோசமானால் அதைச் சுட்டிக் காட்டும் நிகழ்ச்சிகள் தெரிவது,
 5. நம்மையறியாமல் வரப்போகும் நிகழ்ச்சிகள் சம்பந்தமாக மனம் பேசுவது,
 6. பூர்வஜென்ம ஞானம்,
 7. சகுனங்கள்.  

உடல், உணர்வு, மனம், ஆன்மா ஆகிய நான்கு பகுதிகட்கும் சூட்சுமத் தேகம் உண்டு. முதுகின் மேல் பறக்கும் வண்டு மாட்டின் பார்வைக்குத் தெரியாது. ஆனால் உடலுக்குத் தெரிந்து வாலால் ஓட்டுகிறது. இது உடலின் சூட்சுமப்பகுதி. காலில் ஒருவருக்குக் காயம் பட்டுவிட்டது, ஆறி வருகிறது. ஆறும்வரை அவர் தம் கையைக் காலுக்கு 3'' தூரத்தில் கொண்டுவந்தால் காலைத் தொடுவது போன்ற உணர்வு அவருக்கு ஏற்பட்டு வலிக்கிறதாகச் சொன்னார்.

நெடுநாளைய பக்தர். அன்னைக்கு நெருக்கமானவர். அன்னை சமாதியானபின் அவருக்கு மனம் மாறிவிட்டது கடுமையான கட்டுப்பாட்டை உயர்ந்த முறையில் ஏற்றவர் எனப் பெயர் வாங்கியவர். ஏனோ அவருக்கு அதுவரை பாராட்டாத ஆசைகளை அனுபவிக்க மனம் துடித்தது. வயதாகிவிட்டதாலும், அவர் வாழ்வுக்குப் பணமே தேவையில்லை என்பதாலும், பிரம்மச்சாரி என்பதாலும், அவருக்குப் பணமோ, பதவியோ, பெண்ணோ பிரச்சினையில்லை. செயலால் அவரால் எந்தத் தவறும் செய்ய முடியவில்லை. பழைய நெடுநாளையக் கட்டுப்பாடு தடுத்தது. ஆனால் மனத்தால், செயலால் விலக்கிய அத்தனை ஆசைகளையும் அனுபவித்தார். யாரைப் பார்த்தாலும் பணத்தைப் பற்றிப் பேசுவார். "பணம், பணம், பணம்" என்பார். அவருடைய அறைக்கு வெளியேயும், உள்ளேயும் துர்நாற்றம் எழுந்தது. சூட்சுமமானவர்கட்கு ஆசை துர்நாற்றமுடையது, கட்டுப்பாடு நறுமணமுடையதுஎனத் தெரியும். இது உணர்வின் சூட்சுமம் subtle vital.

ஐன்ஸ்டீனுக்கு மனதில் E=MC² என்ற சூத்திரம் தெரிந்தது. அது மனத்தின் சூட்சுமம். அன்னைக்கு Mantra of Life வாழ்வின் மந்திரம் சமஸ்கிருதத்தில் தெரிந்தது ஆன்மீகச் சூட்சுமம்.

ஜடம், சூட்சுமம், காரண தேகம் gross, subtle, causal bodies என்ற 3 பிரிவுகளுண்டு, காரண தேகம் சத்தியஜீவியத்திற்குரியது.

கனவு வருவது ஆழ்மனம், அடிமனத்திலிருந்து எழுகின்றது. ஆழ்மனத்திலிருந்து வரும் கனவுகள் அர்த்தமற்றவை. அடிமனத்திலிருந்து எழுபவை நடக்க இருப்பவைகளைக் காட்டும்.

இரட்டைப்பிள்ளைகள் சூட்சும உடலால் பிணைக்கப்பட்டிருப்பார்கள். ஒருவருக்கு நேர்வது அடுத்தவருக்கு உடனே தெரியும். Corsican Brothers என்ற பிரெஞ்சு நாவல் இரட்டையரின் ஒரே உணர்வை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டது.

நாத்திகனின் அத்துவைதம் பிரச்சினையைத் தீர்க்காது

நமக்கு உடல்நலம், வியாதி என்பவற்றைப் பற்றி நம்மைவிட டாக்டருக்கும், வைத்தியருக்கும் தெரியும். உடல் என்னுடையது என்பதால் எனக்கே அதிகம் தெரியும் என்று கூறமுடியாது. தலைவலி எந்த மருந்துக்கும் 10 நாளாகக் கட்டுப்படவில்லை என்றால் தலை என்னுடையதானாலும், ஏன் தலைவலி வந்தது என்பது எனக்குத் தெரியவில்லை. உடனே டாக்டர் கண்ணாடி போடவேண்டும் என்பார். கண் பார்வை சரியாயில்லை என்றால் தலைவலி வரும் என்பது டாக்டருக்குத் தெரியும். நமக்குத் தெரியாது. 

 • உடல் என்னுடையதானாலும் physiology உடற்கூறு அறிந்த டாக்டருக்கே என்னைவிட என்னுடலைப் பற்றித் தெரிய முடியும்.
 • டெல்லியிலிருந்து, சர்க்கார் விஷயங்கள் அனைத்தும் தெரிவதால் நாட்டுப் பிரச்சினைக்கு தீர்வு தெரியும்என்று அர்த்தமாகாது. அது தெரிய அரசியல் தெரியவேண்டும். 

நாத்திகன் உலகமே ஜட சக்தியால் ஆனது எனவும், எல்லாம் சக்தி எனவும் கூறுவது நம் பிரச்சினைக்கு உதவாது. எல்லாம் சக்தி, ஜடமான சக்தியெனில் நமக்கும், தாவரத்திற்கும், விலங்குக்கும் உயிர் உள்ளதே, அதை எப்படி விளக்குவது என்பதற்கு நாத்திகவாதத்தில் பதிலில்லை. அதற்குரிய பதிலை 10ஆம் அத்தியாயத்தில் Force is anterior, instrument comes later. சக்தி முந்தையது, கருவி பிந்தையது என்று நீண்ட விளக்கம் தருகிறார்.

சுயநலம் சில சமயம் முழுச் சுயநலமாகி, அவனுக்குத் தன்னைத் தவிர வேறு எதுவும் தெரியாது என்ற நிலை ஏற்படும். நமக்கு அதுபோன்ற ஒருவரைத் தெரியுமானால் அவர் பழக்கம் கண்ணில் படும். 

 • உடன் பிறந்தவருக்கு உயிர் போனபொழுது, தான் எதிர்பார்க்கும் காபி வரவில்லை என்பதே மனதிலிருக்கும்.
 • தனக்குத் தெரிந்த மிகப் பயனுள்ள செய்தியைப் பிறருக்குச் சொல்லவும் தோன்றாது.
 • வருஷக்கணக்காகத் தனக்குப் பல உதவிகள் தொடர்ந்து செய்பவருக்கு உதவி செய்யும் நேரம் வந்தால் எரிச்சல் வரும்.
 • இவர்களில் சிறப்பானவர்கள் வீட்டிற்குவரும் தம்பியை வருமுன் சாப்பிட்டுவிட்டு வா என்பார்! 

உலகத்தையே மறந்து தன் சுயநலத்தை மட்டும் கருதும் மனிதன், சுயநலம் சரியான கொள்கை என்று கூற முடியாது. குடும்பமும், பெற்றோரும், சமூகமுமில்லாமல் ஒரு மனிதன் உயிர் வாழமுடியாது என்று அனைவரும் அறிவார்கள். "அவர்கள் அனைவரும் என் சௌகரியத்திற்காக இருக்கிறார்கள்" எனச் சுயநலமி நினைப்பது முடிவாகாது. 

 • நாத்திகன் ஆண்டவன் இல்லை எனக் கூறலாம்.
 • உலகில் உயிரில்லை எனக் கூறமுடியாது.
 • உயிர் ஜடத்திலிருந்து வருகிறது என விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
 • கூறுபவர் அறிவாலோ, நடைமுறையாலோ அதை நிரூபிக்க முடியாது.
 • நாத்திகவாதம் பூனை கண்ணை மூடிக் கொண்டது போலாகும். 

Being, Becoming, Being of the Becoming

"எங்கள் சித்தியை வீட்டில் சிறியவர், பெரியவர் அனைவருக்கும் பிடிக்கும். திருமணம் போன்ற நேரங்களில் சித்தியைச் சுற்றி ஒரு கூட்டமேயிருக்கும். நாங்கள் கேலியாகக் கூறும் சொல் ஒன்றுண்டு. சித்தியை ஒரு கட்சியாகவும், மற்றவரை ஒரு கட்சியாகவும் வீட்டைப் பிரித்தால், அனைவரும் அவர் கட்சியில் இருப்பார்கள் என்போம்".

ஆன்ம விழிப்புள்ள அன்புடையவர் சித்தி.

அய்யர் கையால் காப்பி சாப்பிட்டபின் வேறு காப்பி பிடிக்கவில்லை என்று பேர் வாங்கியவர் அய்யர். சிதம்பரம் கோவிலுக்கு அன்னை வந்துபொழுது காரிலிருந்து இறங்கியவரை அய்யர் பார்த்ததாகக் கூறினார்.

சக்தி - ஆசை - அன்பு - அனைவரின் அன்புடன் கலப்பது என்ற நான்கு நிலை வாழ்வுக்குண்டு. சைத்தியப்புருஷன் விழிப்பாக இருந்தால் பிறர் இனிக்கச் செயல்படும். அய்யர் ஒருவரைக் கண்டு காப்பிப் போட நினைத்தால் காப்பி சாப்பிடுபவருடைய இனிமை அய்யர் மனத்தைத் தொடுகிறது. போடும் காப்பி இனிக்கிறது. இனிக்கிறது எனில் ஆத்மாவில் இனிக்கிறது. வேறு காப்பி பிடிக்கவில்லை.

சைத்தியப்புருஷன் விழிப்பாக இருப்பதால் அன்பு வெளிப்படும் செய்கை போட்டுக் கொடுக்கும் காப்பியில் தெரிகிறது.

The Life Divineஇல் 360 முதல் 364 வரை காலம், காலத்தைக் கடந்த நிலை, கடந்ததையும் கடந்தநிலை விளக்கப்படுகிறது. ஆறு வகையாக மீண்டும் மீண்டும் இக்கருத்தை பகவான் கூறுகிறார். இதைப் படித்த அன்பர் எதுவுமே புரியவில்லை என்றார். விளக்கங்களைக் கேட்டபின் முதற்பகுதி ஓர் அளவுக்கு விளங்குகிறது என்றார்.

புரிந்தாலும், புரியாவிட்டாலும், ஆத்மானுபவம் தரவல்லது The Life Divine என அறிவார்.

இக்கருத்தை மனதில் ஏற்று தியானம் செய்தார். ஆறு மணி நேரம் சிட்டிகை போட்டதுபோல் போய்விட்டது. உடல் தியானத்தில் ‘கரைந்தது’. மறுநாள் மீண்டும் அப்பகுதியைப் படித்தபொழுது மேலும் சற்று புரிவது போலிருந்தது. முக்கியமான கருத்து. 

 1. Becoming என்பது பிரகிருதி, வாழ்வு என்கிறோம் - இல்லறம் என நாம் அறிந்தது. இது காலத்திற்குரியது.
 2. Being என்பது புருஷன், தவத்திற்குரியது – துறவறம் எனப்படும், இது காலத்தைக் கடந்தது.
 3. Being of the Becoming என்பது சத்தியவாழ்வு - இல்லறத்தில் துறவறம், இது காலத்தைக் கடந்ததையும் கடந்த ஆண்டவன் வாழ்வில் வெளிப்படுவது. சித்தியும், அய்யரும் இதற்குரியவர்கள்.

   

  Being                                - துறவறம் - புருஷன் - காலத்தைக் கடந்த நிலை.

  Becoming - இல்லறம்  - பிரகிருதி, இயற்கை - காலம்.

  Being of the Becoming    - துறவறத்தின் தூய்மையுள்ள இல்லறம் - அன்னை வாழ்வு - கடந்ததைக் கடந்தது (அய்யர், சித்தி).

மாயை என்பது அனந்தனான பிரம்மத்தின் ஜீவியம்

சிந்தனைக்குச் சிறப்புண்டு, சிருஷ்டித் திறனில்லை. நாம் ஒரு பெரிய கட்டிடம் கட்ட நினைப்பதால் கட்டிடம் தானே எழாது. பெரிய கட்டிடத்தை கட்டத் தேவையான கல், மண், சிமெண்ட், ஆட்கள், முயற்சி, பணம் உள்ள பொழுது கட்டிடத்தைக் கவினுறக் கட்ட அச்சிந்தனை உதவும். மனித அறிவு செயலைச் சிறப்புறச் செய்யும். செயலைத் தானே செய்யவல்லதன்று. இறைவனின் எண்ணம் இயற்கையின் திறனைத் தன்னுட்கொண்டது. சிந்தனையின் சிறப்பு சிருஷ்டித் திறனையுடையது. மனிதனுக்கில்லாத மகிமை இறைவனின் இதயத்திற்குரியது.

இறைவன் உலகை மாயையால் சிருஷ்டித்தான் என்றால் பிரம்ம சத்தியம் மாயாவாதியின் மனக்கண்ணில் உலகம் மாயை எனத் தெரிந்தது. உலகம் மாயையில்லை. மாயை உலகை சிருஷ்டித்தது. அறிவில் இம்மாற்றம் திருவுருமாற்றம். செயலில் இம்மாற்றம் அதிர்ஷ்டம்.

நாம் காலத்துள்ளிருப்பதால் நாம் காலத்திற்குக் கட்டுப்பட்டுள்ளோம். ஒரு காரியத்தை முடிக்க அதற்குரிய காலம் தேவை. காலம் வரும் வரை நாம் காத்திருக்கிறோம். காலத்துள் உள்ள நாம் காலத்தைக் கடந்து செல்லலாம். கடந்த நிலை முனிவர் பெற்ற தவநிலை. உயர்ந்த நிலை உலகத்திற்குப் புறம்பான நிலை. உலகைப் புறக்கணிக்கும் மனப்பான்மை. உயர்ந்ததும் உலகுக்குரியது என்பதை அறிவது நம்மை உத்தமனாக்கும். உயர்ந்தது உலகத்துள் வர இயலும். வந்தது உடனுறையும். உடனுறையும் பாங்கு உலகை உயர்த்தும் பாங்கு. உலகம் காலத்துள் உள்ளது. ஆனால் காலத்திற்குரியதன்று. உயர்ந்தது உலகைவிட்டுப் போனாலும் உலகத்திற்குரியது. உயர்ந்தது உலகின் உள்ளேவர, வந்து உலகுடன் உடனுறைய, உலகம் தன்னை உயர்த்திக் கொள்ள வேண்டும். உயர்த்தப்பட்ட நிலையில் உயர்ந்தது உலகில் செயல்படும். அது நிகழ்த்துவது அற்புதம். காலத்தைக் கணமென சுருக்கும் ஆச்சரியம்.

மனிதன் மனத்தால் வாழ்கிறான். மனம் காலத்தால் செயல்படுகிறது. மனமும் காலமும் அகந்தையால் இயங்குகின்றன. அகந்தையின் அடிப்படை அனந்தமான பொய். அதை நாடி நாம் போய் ரசிக்கும் வரை நாம் காலத்திற்கும், மனத்திற்கும், அகந்தைக்கும் உரியவர். நாம் பொய்யை விட்டகன்று மெய் பேசினால், மெய்யை மனம் நாடினால், காலம் தன்னைக் கடந்து கடந்த நிலையையடையும். மெய் பேசும் வாய், மெய்யை நாடும் மனம் ஆழ்ந்து சென்று ஜீவனில் லயித்தால், லயம் சத்திய வேட்கை கொண்டால், சத்தியத்தை அடைந்தபின் சத்தியம் ருசித்தால், மனம் காலத்தைக் கடந்த நிலையைக் கடந்து காலத்துள் வரும். வந்தது காலத்தை விலக்காது, உயர்த்தும். திருவுருமாற்றி உயர்த்தும். காலமும், கடந்ததும் உடன் உறையும். அது,

 • அகம் புறமாகும் நிலை; புறம் நகர்ந்து அகத்துள் பொதியும் நிலை.
 • யுகம் க்ஷணமாகும்நிலை.
 • அவதி மாறி அற்புதமாகும் ஆச்சரியமான ஆனந்தம்.
 • மனித மாற்றம் திருவுருமாற்றமாகும்.
 • செயல் செயலினின்று மாறி சரணாகதியாகும்.
 • செயலைச் சரணம் செய்யும் மனிதனின் செயல் சரணாகதியன்றி வேறில்லை என மாறும்.
 • மாயை மாயையில்லை, மகேசனின் மகிமை எனப் புரியும். 

ஜடத்தில் அறியாமை என்பது இல்லை

ஜடத்தில் அறியாமையில்லை, வாழ்வில் அறியாமையில்லை, மனத்தில் அறியாமையில்லை. சத்முதல் ஜடம்வரை எந்த லோகத்திலும் அறியாமையில்லை என்பது ஜடம் அறியாமை என நம்பும் நமக்கு ஆச்சரியமானது.

வாழ்வில் சூது, வாது, கபடு, திருடு, பொய் மலிந்துள்ளது. சீட்டாட்டத்தில் சூதுண்டு, சட்டமன்றத்தில் வாதுண்டு, பேரம் பேசுவதில் கபடுண்டு, பணப்பழக்கத்தில் திருடுண்டு, எங்கும் பொய்யுண்டு என நாம் கூறுவது பொய்யில்லை என்றாலும் மெய்யில்லை. 

 • சீட்டாட்டம் நம்மைச் சூதாக நடக்கச் சொல்லிவற்புறுத்த வில்லை.
 • சட்டமன்றத்தில் வாதம் செய்யவேண்டும் என்ற அவசியமில்லை.
 • கபடில்லாமல் பேரமில்லை என்பதில்லை.
 • திருடியாக வேண்டும் என்ற நிர்ப்பந்தம் பணப்புழக்கத்திற்கு இல்லை.
 • பொய் சொல்லியாக வேண்டும் என வாழ்வு நம்மை வலியுறுத்தவில்லை.
  • சீட்டாட்டம், சட்டமன்றம், பேரம், பணப்புழக்கம், வாழ்வு ஆகியவை சூது, வாது, பொய், கபடு, திருட்டுக்கு இன்று ஏற்ற அரங்கங்களாக அமைகின்றன.
  • இவற்றை எல்லாம் செய்வது மனிதன்.
  • மனிதனுக்குச் Choice உண்டு. நேராகவும் போகலாம், எதிராகவும் நடக்கலாம்.
  • இன்று மனிதன் தன் சௌகரியத்திற்காக எப்படியும் போகிறான்.
  • இவ்வரங்கங்களில் முழுவதும் நேர்மையாக மனிதனால் இருக்க முடியும். ஆனால் செய்வதில்லை, 

என்பதுபோல் சத்முதல் ஜடம் வரை எல்லா லோகங்களும் அறியாமையின்றிப் படைக்கப்பட்டுள்ளன. மனித மனம் இரு வகைகளாகவும் செயல்படக் கூடியது. அதன் ஆதி சத்தியஜீவியம். தன் ஆதியை மனம் மறக்காதவரை அறியாமை எழுவதில்லை. மனம் அதை மறப்பதால் அறியாமை எழுகிறது. எழுந்த அறியாமை வாழ்வில் வலுப்பட்டு, ஜடத்தில் பூர்த்தியாகிறது.

நாம் ஜடம் முழுவதும் அறியாமையால் நிரப்பப்பட்டதாக அறிவோம். ஜடம் அறியாமையிலிருந்து விடுபட்ட நேரம் ஆனந்தமயமாகும். அதுவே பரிணாமத்தின் சிகரம். பிம்பம் கண்ணாடியில்லை. நாம் கண்ணாடி முன் நிற்பதால் பிம்பம் ஏற்படுகிறது. கண்ணாடிக்குப் பிம்பம் வேண்டும் என்ற அவசியமில்லை. சொத்துரிமையோ, திருமணமோ வாழ்விற்கு அவசியமில்லை. நாம் திருமணத்தை நாடினால், சொத்துரிமையை ஏற்படுத்தினால் சமூகம் அவற்றை ஏற்கிறது. வாழ்விற்கோ, சமூகத்திற்கோ சொத்துரிமை தேவையில்லை.

உடலின் இருளைத் திருவுருமாற்ற மனித யத்தனம் போதாது, பரமாத்மாவின் ஒளி கீழே வரவேண்டும்

கோபக்காரன், ஆசைபிடித்தவன், அநியாயக்காரன் ஆகியவரை எளிதில் மாற்ற முடியாது. ஆனால் மாற்றும் சக்தி உலகில் உண்டு. அது அறிவு. அதுவும் அவனுடைய சொந்த அறிவானால் நிச்சயமாக அவை அடங்கும், மாறும், திருவுருமாறவும் முடியும்.

இந்து முஸ்லீம் கலவரம் ஆரம்பித்தபொழுது போலீஸ் கலவரத்தை அடக்கியது. கலவரம் களேபரமான பொழுது ரிஸர்வ் போலீஸ் வந்து சமாளித்தது. அதுவும் முடியாதபொழுது ஸ்பெஷல் ரிசர்வ் போலீஸ் வரும். கலவரம், களேபரமாகி, மனிதன் நிலையிழந்து செயல்படும் நேரங்களில் போலீஸ், ரிசர்வ் போலீஸ் பயன்படா, இராணுவம் வரும். வடநாட்டில் நிலைமை அதையும் கடந்தது. இராணுவம் வந்தால் இந்து சிப்பாய்கள் முஸ்லீம்களைச் சுடுகிறார்கள், முஸ்லீம் சிப்பாய்கள் இந்து மக்களைச் சுடுகின்றனர். இராணுவம் கலவரத்தை அடக்குவதற்கு பதிலாக கலவரத்தில் பங்குகொள்கிறது. இனி ஆயுதம் பயன்படாதுஎன்பது நிலை. அந்த நேரம் காந்திஜீ வந்தார். உண்ணாவிரதமிருந்தார். மக்களை ஆத்ம சுத்தியை நாடச்சொன்னார். நாட்கள் பல கடந்தன. குண்டர்கள் அடங்கினர், கலவரம் அடங்கியது. நாட்டு வரலாற்றில் இது ஒரு பெரிய திருப்பம். பொதுவாக இது நம் அனுபவம். பிரச்சினை வலுக்கும்பொழுது அடுத்த பெரிய சக்தி தேவை. அவையெல்லாம் தவறும் நிலையில் முடிவான சக்தியே செயல்படும்.

சிறப்பாக மனப்பாடம் செய்பவன் முதல் மார்க் வாங்குகிறான். ஜில்லாவில் முதல் மார்க் வாங்க மனப்பாடம் மட்டும் போதாது. பாடம் புரிந்து மனப்பாடம் செய்பவன் தேவை. மாநிலத்தில் முதல்வனாக வர மனப்பாடம் உதவாது. சொந்த அறிவு தேவை. அகில இந்தியாவில் முதல்வனாக நிற்க சொந்த புத்திசாலித்தனமும், பரம்பரையாக வந்ததாக இருக்கவேண்டும். இவையெல்லாம் ஒருவன் மேதையாக மலரப் பயன்படாது. அதற்கு புத்தி போதாது. ஆத்ம ஞானம் வேண்டும். 

 • The Life Divineஇல் கடைசி அத்தியாயம் Divine Life தெய்வீகவாழ்வு. அதில், 
  • தெய்வீகவாழ்வுபெற நாம் சத்தியஜீவியம் என்றறிந்து உள்ளே சென்று, முழுமை பெற்று, பிரபஞ்சம் முழுவதும் பரவி, ஜடத்தை ஆன்மா ஆட்சி செய்ய வேண்டும்.
  • அதைச் செய்வது திருவுருமாற்றம்.
  • திருவுருமாற்றத்தைச் சாதிப்பது சரணாகதி. என்று எழுதுகிறார்.
 • மேற்சொன்னது 28ஆம் அத்தியாயம்.

அதற்கு முந்தைய அத்தியாயம் No.27 சத்தியஜீவன்.

 • No.25ஆம் அத்தியாயம் திருவுருமாற்றம்.

இங்கு 3 திருவுருமாற்றங்களைக் கூறுகிறார்.

 • No.26ஆம் அத்தியாயம் சத்தியாரோகணம். மூன்று திருவுருமாற்றம் பெற்றபின் சத்தியஜீவன் பிறக்க நம் உலகினின்று சத்தியஜீவியம் செல்வது சத்தியாரோகணம். இவ்வத்தியாயத்தின் இரு முக்கியக் கருத்துகளில் மேற்சொல்லப்பட்டது ஒன்று. அடுத்தது,
  • புறம் அகமானால் யுகம் க்ஷணமாகும். மேற் சொல்லியதை
  • பாதாளத்தின் இருளை பரமாத்மாவின் ஒளியே திருவுருமாற்ற வல்லது என்று கூறுகிறார்.

ஆன்மீகவாழ்வு எளிமையாகவோ, வளம் நிறைந்ததாகவோ இருக்கலாம்

பரம்பரையாக உலகெங்கும் ஆன்மீகம் என்றால் விரதம் எனப் பெயரெடுத்துள்ளது. ஆன்மீகம் எனில்,

 • பேசக்கூடாது.
 • ரசித்துச் சாப்பிடக் கூடாது.
 • நல்ல உடை உடுக்கக் கூடாது.
 • வசதியான வீட்டில் வாழக்கூடாது.
 • வாழ்வை அனுபவிக்கக் கூடாது.
 • ஏழை, எளியவரை, சமமாகக் கருதவேண்டும்.
 • பெருவியாதிக்காரனைக் கண்டு அருவருப்புக் கொள்ளக் கூடாது.
 • எதிரிக்கும் கருணை செய்யவேண்டும்.
 • அமைதிக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும்.
 • பணத்தை பவுனைக் கையால் தீண்டக்கூடாது

என்று உலகம் அறிந்து, அறிந்ததைப் போற்றி வருகிறது. இவ்வளவும் உண்மை, ஆனால் பகுதியான உண்மை. இந்த உண்மைக்கு எதிரான உண்மையுண்டு. அதுவும் உண்மை. மாறான உண்மைகள் ஏராளமாக உண்டு. அத்தனையும் உண்மை. அத்தனை உண்மைகளும் சேர்ந்தது முழுமை. முழுமையே உண்மை என்பதால், எந்த உண்மையையும் நாம் மறுக்கக்கூடாது. தலைப்பில் எழுதிய கருத்து The Life Divineஇல் கடைசி அத்தியாயத்தின் இறுதிப் பகுதியில் வருகிறது. நாம் அறியாமையில் ஆண்டவனைக் கண்டதால், ஆண்டவனைக் காணும் சந்தர்ப்பங்கள் அதுபோல - காடு, மலை - அமைந்ததால் அந்த நேரம் இருந்த சந்தர்ப்பங்களை எல்லாக் காலங்களுக்கும் உரியனவாகக் கருதியது மனித மனப்பான்மை. செல்வம் நிறைந்த சமுதாயம் இன்று தாம் அன்றிருந்த வாழ்வைப் போற்றி திருமணச் சீதனத்தை ஓலைப்பெட்டியில் மணப்பெண்ணின் தலைமீது தாங்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கிறார்கள். இது பழக்கம்.

சிருஷ்டி ஆனந்தமயமானது. பரிணாமம் இன்று அறியாமையிலிருந்து அறிவை நாடுகிறது. சத்தியஜீவன் பிறந்தபின் அறியாமையிருக்காது. பரிணாமம் அறிவிலிருந்து பெரிய அறிவை நாடும் என்பது ஸ்ரீ அரவிந்தம்.

 • திருவுருமாற்றம் கருவான இடம்.
 • சரணாகதி அதற்குரிய கருவி.
 • திருவுருமாறியபின் அறியாமை, வலி, நோய், துன்பம், மரணமில்லை.
 • அது சித்தி பெற்ற நிலை.
 • சித்தி பெற்றபின் வாழ்வுண்டு.
 • வாழ்வு எப்படியிருக்க வேண்டும்?
 • எப்படியுமிருக்கலாம்.
 • எளிமையாகவுமிருக்கலாம், வளமாகவுமிருக்கலாம்.
 • அந்த வாழ்வு எளிமையை விலக்கவில்லை.
 • நம்வாழ்வு வளத்தை விலக்குகிறது.
 • விலக்கினால் மிஞ்சுவது பகுதி. பூரணயோகம் முழுமையைத் தேடுவதால் எதையும் விலக்கமுடியாது.

In our life, we find the world creates us In spiritual life, we create our world

 • பணம்என்றால் பிணமும் வாய் திறக்கும்.
 • ஊருடன் பகைக்கின் வேருடன் கெடும்.
 • நாலு பேர் ஓடும்பொழுது நடுவில் ஓடவேண்டும்.
 • ஊர் ஓடும்பொழுது ஒத்து ஓடவேண்டும்.
 • ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
 • அரசன் எவ்வழி, குடிகள் அவ்வழி.
 • முன்னேர் போனவழி பின்னேர் போகும்.
 • ஊருக்குப் பெரியவன் செய்தால் நான் என்ன செய்வேன்?

என்ற பழமொழிகள் தனி மனிதன் திறனற்றவன், ஊர் சக்திவாய்ந்தது என்பதைக் கூறுகிறது. பாரதத்தில் திரௌபதிக்கு நியாயம் வழங்க பீஷ்மரோ, துரோணரோ தயாராக இல்லை. ‘செஞ்சோற்றுக் கடன்' என அடங்கினர் என்ற செய்திபோன்ற சரித்திர இலக்கியச்செய்திகள் ஆயிரம் மக்கள் மனநிலையைக் காட்டுகின்றன.

 • இவ்வளவும் உண்மை என்றாலும், உலகம் இவர்களால் இயங்கவில்லை என்பதைக், குறள், சான்றோரிருப்பதால் உலகம் இயங்குகிறது என்கிறது.
 • இன்றுவரை உலகம் முன்னேறியது. புத்தர், சங்கரர், ஏசு, காந்திஜீ போன்று சமூகத்தினின்று விலகி புது வழி ஏற்படுத்தியவரால் முன்னேறியது என்பது தெளிவு. ஆன்மீக உண்மை இதைப் பற்றியது.
 • புறத்தோற்றம், அகத்தின் வெளிப்பாடு.
 • அகத்தில் தோன்றி புறத்தில் செயல்படுவதால் ஏற்படுவது உலகம்.
 • அகத்தில் தோன்றாமல் புறத்தில் செயல்படுவதில்லை.

இந்த ஆன்மீக உண்மையை அன்பர்கள் தங்கள் வாழ்வில் காணலாம்.

 • அன்னையை அறியும்வரை ஜாதகம் பலித்ததையும்,
 • அன்னையிடம் வந்தபின் ஜாதகம் பலிக்காததையும்,
 • அன்னையிடம் வந்தபின் நடப்பனவெல்லாம் ஏற்கனவே நாம் விரும்பி மறந்து போன பழைய எண்ணங்கள் எனக் காணலாம்.
 • ஜாதகத்திலில்லாத நம் ஆசைகள் ஆழ் மனத்திலிருந்தவை இன்று பலித்தன என்பது நாம் நம் உலகை சிருஷ்டிக்கின்றோம் என்பதாகும்.
 • தங்கள் வாழ்விலும், பிறர் வாழ்விலும் இதை அன்பர்கள் காணலாம்.

Evolution can be speeded up, but no step can be escaped

பரிணாமத்தைத் துரிதப்படுத்தலாம், எந்தக் கட்டத்தையும் தவிர்க்க முடியாது

 • இது பரிணாமத்திற்கும், சமூக முன்னேற்றத்திற்கும், எந்தச் சாதனைக்கும், வாழ்விற்கும் பொதுவான விதி. அடிப்படையான விதியுமாகும்.
 • புத்தகம் அச்சடிக்க வேண்டும் என்றால் எழுத வேண்டும், டைப் செய்ய வேண்டும், கம்போஸ் செய்ய வேண்டும், அச்சடிக்க வேண்டும், பைண்டிங் செய்ய வேண்டும் என்று ஏராளமான கட்டங்கள் உண்டு.
 • 1 மணி நேரத்தில் 20,000 பேப்பர் பிரதிகள் அச்சடிக்கும் மெஷின் 100 ஆண்டுகட்குமுன் வந்துவிட்டது. என்றாலும் வேகத்தைக் கூட்டலாம், எந்தக் கட்டத்தையும் விட முடியாது.
 • வீடு கட்டுவதானாலும், மாநாடு நடத்துவதானாலும், ஆப்பரேஷன் செய்வதானாலும் விதி ஒன்றே.
 • உலகம், காலத்தால் இடத்தில் இயங்குகிறது.
 • அதனால் காலம் மாறும் நேரம் காலத்தைச் சுருக்கலாம்.
 • காலம் சுருங்கினால் இடம் சுருங்கும்.
 • காலம் சுருங்கினால், கட்டம் தவிர்க்கப்பட முடியாது.
 • கட்டங்கள் அமைப்பு (structure).
 • காலம் செயல் நிகழும் லோகம்.
 • அமைப்பை மாற்ற பரிணாமமே மாறவேண்டும்.
 • அது இந்த சிருஷ்டிக்குரியதன்று.
 • நரசிம்மராவ் நேரடியாகப் பிரதமராகலாம். ஆனால் MPயாக தேர்ந்தெடுக்கப்படுவதைத் தவிர்க்க முடியாது. அது இந்திய ஜனநாயகப் பரம்பரைக்கு நாம் செலுத்தும் மரியாதை.
 • எந்த வயதிலும் விட்டபடிப்பைத் தொடரலாம். ஆனால் விட்ட இடத்தினின்று தான் ஆரம்பிக்க வேண்டும்.
 • காலம் கடுமையானது. பரிணாமம் சக்தி வாய்ந்தது. காலத்தையும் கடந்து செல்லவல்லது பரிணாமம்.
 • அமைப்பு ஆண்டவனுடையது. மனிதனாக ஆண்டவனே பிறந்தாலும் மனிதச் சட்டப்படியே ஆண்டவனும் வாழவேண்டும். அவதாரப் புருஷன் என்பதால் அந்தச் சட்டத்தை மீற முடியாது.

Himself the Play, Himself the Player, Himself the Playground

ஆட்டமும் அவனே, ஆடுபவனும் அவனே, அரங்கமும் அவனே

மரபில் உலகை லீலை என்கிறார்கள். அவர்கள் ஆனந்தத்தை நாடுபவர்கள். நாத்திகவாதிகள் உலகம் யதார்த்தமானது என்கிறார்கள். அவர்கள் லீலையை மறுக்கிறார்கள். ஆனந்தத்தை நாடுபவர்கள் நாத்திகத்தை மறுக்கிறார்கள். இதரர் இவ்விரண்டையும் மறுத்து, உலகமே பரமன் என்கிறார்கள். ஸ்ரீ அரவிந்தம் மூன்றும் ஒன்றே, மூன்று பார்வைகட்கு மூன்று அம்சங்கள் தெரிகின்றன. அவற்றுள் முரண்பாடில்லை என்று கூறுகிறது.

ஒரு ஸ்தாபனத்தில் தலைவருக்குப் பரம எதிரியொருவன் மிரட்டல் கடிதம் எழுதுவான். அவன் தான் எழுதியது என அவன் மீது நடவடிக்கை எடுக்க அவன் கையெழுத்து இருக்காது. இது பல ஆண்டுகளாகத் தொந்தரவு. நிலைமை மாறியது. இதுநாள் வரை எதிரியாக இருந்தவனுக்குத் தலைவரால் காரியம் ஆகவேண்டியிருந்தது. எப்படிப் போவது? என்ன செய்வது என யோசனை செய்தான். ஸ்தாபனத்தில் கூட்டம் போட்டார்கள். தலைவர் உணர்ச்சி வசப்பட்டவர். எதிரி ஒரு மாலையை வாங்கி வந்து அவர் கழுத்தில் போட்டான். மாலை போடும் பழக்கமோ, சந்தர்ப்பமோ இல்லாத இடத்தில் உணர்ச்சி வசப்பட்ட தலைவர் கழுத்தில் மாலை விழுந்தவுடன் தழுதழுத்துப் போனார். எழுந்தார், பேசமுடியவில்லை. தொண்டை அடைத்தது. அவருக்கு எதிரி தெரியவில்லை, மாலை தெரியவில்லை, அவன் ஆதாயம் நாடுகிறான் என நினைக்க முடியவில்லை. பேச முயன்றார், முடியவில்லை. உட்கார்ந்தார், மீண்டும் எழுந்தார். சமாளித்துக் கொண்டு பேசினார், ‘சகோதரர் இப்படிச் செய்துவிட்டார்’ என்றார். அதற்குமேல் பேச்சு வரவில்லை. தலைவர், மிரட்டல் கடிதம், எதிரி, ஆதாயம் எல்லாம் போய் உணர்ச்சியே மேலோங்கி நின்றது. உணர்ச்சிக்கு முழுமையுண்டு, ஒருமையுண்டு, ஐக்கியம் உண்டு, பாகுபாடு, பிரிவினை, பகுதியான நிலையில்லை. சிந்தித்தால் இவன் எதிரி எனத் தெரியும். உணர்ச்சிவசப்பட்டால் எதிரியின் செயல் எரிச்சல்மூட்டும். நான் தலைவர் எனக் கருதினால் அதிகாரம் வரும், ஆர்டர் பிறப்பிப்பார்.

பார்வை உணர்ச்சியால் முழுமையாகிவிட்டதால், பகுதிகள் மறைந்தன. முழுமையான உணர்ச்சி எஞ்சியது. பார்வை ஆனந்தத்தால் முழுமையானால் யதார்த்தம், ஆட்டம், அரங்கம் மறைந்து, ஆனந்தம் மிஞ்சும். உலகை நாம் எண்ணத்தால் கண்டால் மாயையாகவும், செயலால் கண்டால் பிரகிருதியாகவும், உணர்வால் காணும்பொழுது லீலையாகவும் தெரிகிறது. ஆனந்தத்தால் உலகைக் காணும்பொழுது ஆட்டம் ஆனந்தமாகவும், ஆடுபவன் ஆனந்தமாகவும், அரங்கம் ஆனந்தமாகவும் தெரியும்.

 • தன்னையறியாத முழுமை விலங்குக்குரியது.
 • தன்னையறிந்த முழுமை தெய்வத்திற்குரியது.
 • மனிதனுக்குக் கீழேயும், மேலேயும் இரண்டும் உண்டு.
 • எது வேண்டும் (choice) என்பதை நிர்ணயிப்பது மனிதனே.
 • முழுமையை வாழ்வில் நாடும் மனிதன் பெறுவது அதிர்ஷ்டம், யோகத்தில் நாடுவது அருள்.

Realising it cannot possess without being possessed it feels fulfilled

தன்னை ஆட்கொள்ளாமல் தான் ஆட்கொள்ள முடியாது என்பது ஞானசித்தி

மனிதன் உடலால் வாழ்பவன். அவனை ஒருவன் எதிர்த்தால் அழிப்பான், கொலை செய்வான். எதிரியைக் கொலை செய்வது அந்த நாளில் பெருமை, தர்மம், மானம். உடலை விட்டு மனிதன் உயிருக்கு வந்தபொழுது கொலையைக் கைவிட்டான். கொலையைக் கைவிட்டவன் உயிரை எடுத்தான். மானமே உயிர் என்பதால் மானத்தை எடுத்து எதிரியை அவமானப்படுத்தினான். இவை மனிதன் வாழ்ந்த வகைகள்.

மனம் சூட்சுமமானதால், தன் ஆட்சிக்குத் தான் எதையும் விழுங்கவேண்டாம் என அறியும்.

மனம் பிறரை ஆளவேண்டுமானால்,

 • அவனைக் கொலை செய்யவேண்டாம்.
 • அவனை அவமானப்படுத்தவேண்டாம்.
 • நம் எண்ணத்தை அவன் ஏற்றால் போதும்.

நமது எண்ணத்தை ஒருவன் ஏற்றால், அவனை நாம் ஆளுவதாகப் பொருள். கிருஷ்ண தேவராயர் சபைக்கு வடநாட்டுப் பண்டிதர் ஒருவர் வந்தார். சபையில் பண்டிதரைச் சந்தித்து விவாதிக்கப் பிரியப்பட்டார். அரசன் குறும்பாகத் தன் ஒன்றரைக் கண் சமையல்காரனைப் பண்டிதராக ஜோடித்து அனுப்பினான். வந்தவர் சங்கேதபாஷையில் பேச விரும்பினார்.

அவர் உலகம் ஒன்று, ‘ஏகன்' என்று கூற ஆள்காட்டி விரலைக் காட்டினார்.

சமையல்காரன் இரு விரல்களைக் காட்டினான்.

பண்டிதர் மூன்று விரல்களைக் காட்டினார்.

சமையல்காரன் முஷ்டியைக் காட்டினான்.

பண்டிதர் எழுந்து அவனுக்கு சாஷ்டாங்க நமஸ்காரம் செய்தார்.

"உலகம் ஒன்று என்றேன். அவர் - சமையல்காரன் - துவிதம் இரண்டு என்றார். நான் இறைவன், பிரபஞ்சம், மனிதன் என்ற மூன்று என்றேன். மூன்றும் ஒன்றே என முஷ்டியைக் காட்டினார். நான் தோற்றேன்" என்று பண்டிதர் கூறிப்போனார்.

ஒருவருடைய எண்ணத்தை அடுத்தவர் ஏற்பது அவருக்கு வெற்றி, ஏற்பவருக்குத் தோல்வி என்பது மனத்தின் சட்டம், கொலை இல்லை, அவமானமில்லை.

பண்டிதர் போனபின் அரசன் சமையல்காரனை விசாரித்தான். "அந்த ஆள் எனக்கு ஒரு கண் என்றான். எனக்குக் கோபம் வந்தது. உன் இரு கண்ணும் என் ஒரு கண்ணுக்குக் சமம் என்றேன். மீண்டும் ‘நம் இருவருக்கும் மூன்று கண்' என்றான். ஒரே குத்தாகக் குத்திவிடுவேன் என முஷ்டியைக் காட்டினேன்" என்று சமையல்காரன் விளக்கமளித்தான்.

 • மனம் உடலையும், உயிரையும் விடப் பெரியது.
 • பெரிய மனமும் மடையனுக்குப் புரியும் வகை நகைச்சுவை ஆகும்.

No delight condemns the delight of another

 • Bliss ஆனந்தம் Delight என்பது ஆனந்தம் வாழ்வில் வெளிப்படுவது.
 • சிருஷ்டி ஏற்பட்டதே உலகில் சச்சிதானந்தம் பெரிய ஆனந்தமாக வெளிப்படுவதற்காக.
 • அயர்ந்து தூங்குபவரை நாம் எழுப்பமாட்டோம். அவர் ஓய்வை அனுபவிப்பதை இடையூறு செய்தல் சரியில்லை என நினைக்கிறோம்.
 • இளைஞர் பலர் ஆரவாரமாக, சந்தோஷப்படும்பொழுது அதைத் தடுப்பது போன்ற காரியத்தைச் செய்ய வேண்டுமானால், ‘எப்படி அவர்கள் சந்தோஷத்தைக் கெடுப்பது?’ என நினைக்கிறோம்.
 • ஒருவர் ஆனந்தப்படுவதைத் தடுக்கவோ, அல்லது ஒருவருக்கு வருத்தம் தரும் காரியத்தைச் செய்யவோ நாம் தயங்குகிறோம்.
 • இதன் அடிப்படை உபநிஷதம் கூறுவது,

‘எந்த ஆத்மாவும் எல்லா ஆத்மாக்களினுள் உறைகின்றது. எல்லா ஆத்மாக்களும் ஓர் ஆத்மாவில் உறைகின்றன'.

’ இதுவே சத்தியஜீவியத்தின் அடிப்படை.

ஆனந்தம் என்பது உறவு.

ஆத்மா அடுத்த ஆத்மாவோடு உறவுகொண்டு ஆனந்தப்படுகிறது.

அப்படியானால் எப்படி ஒருவர் பிறர் ஆனந்தத்தைக் கண்டிக்க முடியும்?

 • 20ஆம் நூற்றாண்டில் தூக்குத் தண்டனையை பெரும்பாலான நாடுகள் கைவிட்டன.
 • குற்றவாளியைக் குற்றவாளி எனக் கருதாது, அவன் சந்தர்ப்பம் அவனைக் குற்றம் செய்யும்படி நிர்பந்தித்தது, தூண்டியது. அந்த சந்தர்ப்பத்தில் நாமும் அப்படியே செய்திருப்போம் என மக்கள் மனம் மாறுகிறது.
 • அடுத்த கட்டத்தில் குற்றவாளி குற்றம் செய்வதில் இன்பம் கண்டால், நாம் அதை ஏற்கவேண்டும் என்று கருத வேண்டும்.
 • அது குற்றத்தைச் சரி என்பதுபோல் தோன்றும்.
 • குற்றம் வேறு, அதில் காணும் இன்பம் வேறு. அவன் பெறும் இன்பம் அவனுக்கு முக்கியம். அதை நாம் ஏற்கவேண்டும் என்பது ஸ்ரீ அரவிந்தம். இதைத் தவறாகக் குற்றத்தைச் சரி என்பதாகக் கொள்ளக்கூடாது. படிக்காமல் விளையாடும் பையன் விளையாட்டில் காணும் இன்பத்தை நாம் ஏற்கலாம். அது படிக்காதது சரி என்பதாகாது. படிப்பு முறை இத்தத்துவப்படி விளையாட்டாக அமைந்துள்ளது. காலையில் எழுந்தவுடன் சிறு குழந்தைகள் பள்ளிக்கூடம் போகவேண்டும் என்று கேட்கின்றன.
 • விளையாடும் குழந்தையின் இன்பத்தை நாம் ஏற்றால், பிறகு குற்றம் செய்பவனின் ஆனந்தத்தையும் ஏற்கலாம். ஏற்கும் காலத்து குற்றம் முதலில் பிரிந்தும், முடிவில் திருவுருமாறியும் தெரியும்.book | by Dr. Radut