Skip to Content

06.லைப் டிவைன் - கருத்து

"லைப் டிவைன் - கருத்து"

P.74. காலம், இடம் - அனந்தமானவை, முடிவற்றவை

       "ஓர் எண் சொல்' என்பது ஒரு விளையாட்டு. பதிலாக 12 என்றால், அடுத்த எண் என்ன என்பது அடுத்த கேள்வி, பதில் 13. வேறொரு எண் சொல் என்பதற்கு 25 என்றால், அடுத்த எண் 26 ஆகும். அடுத்த எண் என்று ஒன்றில்லாத எண்ணை நம்மால் கூறமுடியாது. எந்த எண்ணுக்கும் அடுத்த எண் உண்டு. அதனால் எண்கள் அனந்தம் infinite முடிவற்றவை என்கிறோம். தரையில் ஒரு குச்சியை நட்டு 40 அடி கோடிட்டால், குச்சிக்கு முன்னும், 40 அடியில் உள்ள குச்சிக்குப் பின்னும் தரையுண்டு. முன்பு இடமில்லாத புள்ளியில் குச்சியை நடமுடியாது. நட்ட குச்சிக்குப் பின் இடமளிக்கக் கூடாது என்பது முடியாது. இடம் என்பதை அளவுபடுத்த முடியாது. இடம் முடிவற்றது. இருபுறமும் நீடிக்கக் கூடியது, முடிவின்றி நீடிப்பதற்கு அனந்தம் - அந்தம் எனில் முடிவு, அனந்தம் எனில் முடிவற்றது. ஒரு நாளைச் சொல், அதற்கு முன் நாளில்லாத நாளைச் சொல் என்றால் அதுபோன்ற நாள் இல்லை. 10ஆம் தேதி முதல் 30ஆம் தேதிவரை ஒரு காலம் எனில் 10ஆம் தேதிக்கு முன் 9, 8, 7,... என நாட்களுண்டு. அதேபோல் 30க்குப் பின்னாலும் நாட்களுண்டு. அதனால் காலம் என்பதற்கு அளவில்லை, அனந்தம் என்கிறோம்.

       நம் மனம் அளவான காலத்திற்குரியது. காலத்தை உற்பத்தி செய்வதே நம் மனம் என்பதால் அளவற்ற காலத்திற்கும் நம் மனம் போக முடியும். நாம் சிந்தனை செய்வதால் உற்பத்தியாவது கற்பனை, இறைவன் கற்பனை செய்வதால் உற்பத்தியாவது காலம் என்பது தத்துவம். நம்முள் உள்ள இறைவன் ஆத்மா. நாம் ஆத்மாவில் இருந்து கற்பனை செய்து காலத்தை உற்பத்தி செய்கிறோம். அதனால் காலம் நம் மனத்திற்குக் கட்டுப்பட்டது என்பது தத்துவம். ரிஷிகளுக்குக் காலம் கட்டுப்படும். நளாயினிக்குக் கட்டுப்பட்டு, சூரியன் அடங்கியது அவளது கற்பின் திறத்தால்.

வாழ்வில் உதாரணம்

       எனக்கு இன்று 5000 ரூபாய் சம்பளம். ஓய்வு பெறும்பொழுது 10,000 ரூபாயாகலாம். என் தகப்பனார் பாங்கில் 70 லட்சம் போட்டிருக்கிறார். அவருக்குப்பின் அது எனக்கு என்பவற்றுள் பலன் காலத்தால் பெறுவதாகும். இந்த 10,000 ரூபாய் சம்பளம் எனக்கு இப்பொழுது வருமா? வரும், மனம் காலத்தைக் கடந்தால் வரும். இது அன்பர்கள் வாழ்வில் அடிக்கடி நடப்பதுண்டு. அதை அருளாக ஏற்கிறோம், எப்படி என அறிய முயல்வதில்லை. அறியலாம், பலனை அடையலாம்.

       காலத்தைக் கட்டுப்படுத்துவது எப்படி? பழையவற்றை நினைத்தாலும், எதிர்காலத்தை நினைத்தாலும் மனம் காலத்திற்குட்பட்டுள்ளது. இரண்டையும் நினைக்காவிட்டால் நாம் நிகழ்காலத்தில் மட்டும் Ever-present ஆக இருப்போம். இது முடியாதா? வேலையை நாம் 1/10 கூட செய்வதில்லை. நமக்குள்ள வேலையில் ஈடுபட்டு, நம்மை மறந்தால் நாம் காலத்தினின்று விடுபட்டு - காலத்தைக் கடந்து - நிகழ்காலத்துள் வருகிறோம். ஒருவர் இதுபோல் தம்மை மறந்து 30 நாள் மெய்மறந்து வேலை செய்தால் முடிவான 10,000 ரூபாய் 30ஆம் நாள் வரும்.

        70 லட்சம் இன்றே வாங்க வேண்டுமென்றால் தகப்பனார் ஆயுளைப் பற்றி மனம் நினைக்கிறது. அது சரியாகப் படவில்லை. நான் சொல்வது அதில்லை. மனநிலைக்குத் தகுந்தாற்போல் காலம் வேகம் பெறுவதை நாம் அறிவோம். நாம் நம் மனத்தைஆராய்வோம். காலம் மனத்துள் ஒரு குறிப்பிட்ட வேகத்தில் நகர்வது தெரியும். தடையானது அறியாமை, தமஸ், அகந்தை என்று Life Divine கூறுகிறது. காலம் நம் மனத்தால் ஏற்பட்டது என்று மனம் ஏற்றுக் கொண்டால் அறியாமை விலகும். அந்த அறிவு வளர்ச்சியை உந்தினால் தமஸ் போகும். நான் வேறு என் தகப்பனார் வேறு என்று கருதுவது அகந்தை, பிரிவினை எனப்படும். மனம் உணர்வால் நானும் தகப்பனாரும் ஒன்று என உணர்ந்தால் இரண்டிலொன்று நடைபெறும்.

1) தகப்பனார் பையனை அழைத்து இன்றே பணத்தை எடுத்துக் கொள் என்பார்.

2) அல்லது அதே தொகை வேறு வழியாக பையனைத் தேடி வரும்.

       இவை காலத்தைக் கடக்கும் முறைகள். மனம் காலத்தை அனந்தம் என அறியுமானால், மனம் அனந்தமாகிறது.

****


 



book | by Dr. Radut