Skip to Content

06. உடன்பாடுகளும் முரண்பாடுகளும்

உடன்பாடுகளும் முரண்பாடுகளும்

N. அசோகன்

நம்முடைய மானிட வாழ்க்கையில், பாசிட்டிவ் x நெகட்டிவ் என்று ஒன்றுக்கொன்று எதிராக செயல்படக்கூடிய இரட்டைகள் நிறைய இருக்கின்றன. நன்மை ஷ் தீமை, உண்மை x பொய், வெற்றி x தோல்வி, ஐஸ்வரியம் x ஏழ்மை, ஒற்றுமை x வேற்றுமை, சுதந்திரம் x கட்டுப்பாடு, வாய்ப்புகள் x சிரமங்கள், பிறப்பு x இறப்பு, ஆண்டவன் x படைப்பு, இன்பம் x துன்பம், மாற்றம் x நிலைத்திருத்தல் என்று இப்படிப்பட்ட எதிரெதிரான இரட்டைகள் நம் வாழ்க்கையில் நிறைய இருக்கின்றன.

இப்படிப்பட்ட இரட்டைகளை நாம் ஒன்றுக்கொன்று முரண்பட்டதாகவும், எதிராகச் செயல்படுகின்றன என்றும் வர்ணிக்கிறோம். இப்படி வர்ணிப்பதால் இப்படிப்பட்ட இரட்டைகளில் நெகட்டிவாக நாம் கருதுவதை வேண்டாம் என்றும், அவற்றை விலக்க முடியுமா என்றும் பார்க்கிறோம். உதாரணமாக நன்மை x தீமை, உண்மை x பொய், வெற்றி x தோல்வி, ஐஸ்வரியம் x ஏழ்மை போன்ற இரட்டைகளில் யாருக்குமே தீமை, பொய், தோல்வி மற்றும் ஏழ்மை என்ற இந்த நெகட்டிவ் அம்சங்கள் பிடிப்பதில்லை. கூடுமானவரையிலும் இந்த நெகட்டிவ் அம்சங்களையெல்லாம் அழித்துவிட்டு பாசிட்டிவாக உள்ள நன்மை, உண்மை, ஐஸ்வரியம் மற்றும் வெற்றி போன்ற நல்ல விஷயங்களை மட்டும் தக்க வைத்துக் கொள்ள விரும்புகிறோம்.

தீமையின் கலப்பே இல்லாத நன்மை மற்றும் பொய்யின் கலப்பே இல்லாத உண்மை ஆகியவை சத்திய ஜீவிய நிலையில் தான் இருக்கின்றனவே தவிர நம்முடைய சாதாரண மானிட நிலையில் இல்லை. நாம் இருக்கின்ற பிஸிக்கல் லெவலிலும் இப்படிப்பட்ட தீமையின் கலப்பில்லாத நன்மையும், பொய்யின் கலப்பில்லாத உண்மையும் வெளிப்பட வேண்டும் என்று கேட்பது இரவே இல்லாமல் பகல் மட்டும் வேண்டும் என்று கேட்பதற்குச் சமமாகும். வலியின் சுவடே தெரியாத ஒரு ஆனந்தம் சத்திய ஜீவிய நிலையில் இருக்கிறது. ஆனால் எலும்பு மற்றும் தசையாலும் செய்யப்பட்டுள்ள நம்முடைய உடம்பு என்ற நிலையில் வலி என்ற உணர்வு மிகவும் அவசியமாக இருக்கிறது. உடம்பு காயப்படுவதைப் பற்றி நமக்கு எச்சரிக்கை வழங்கக்கூடிய உணர்வாகத்தான் வலி நம் உடம்பில் எழுகிறது. இந்த வலியே எழாவிட்டால் நாம் பயமே இல்லாமல் ஆபத்தான பல காரியங்களைச் செய்து நம் உடம்பைப் பல வகையில் காயப்படுத்திக் கொள்வோம். உதாரணமாக முற்றிய சர்க்கரை நோய் உள்ளவர்கட்குப் பாதங்களில் நரம்புகள் செயலிழந்து போய் வலி உணர்வு போய்விடுகிறது. இதன் விளைவாக அவர்கள் காலில் முள் குத்தினாலும் சரி, கண்ணாடித்துண்டு கிழித்தாலும் சரி, இருசக்கர வாகனத்தில் உள்ள சைலன்சர் சூடேறி சுட்டாலும் சரி, எதுவுமே அவர்களுக்குத் தெரிவதில்லை. இதனால் அவர்கள் தம் பாதங்களைப் பல வகையாகக் காயப்படுத்திக் கொள்கின்றனர்.

ஆகவே, உடம்பு என்ற நிலையில் பார்த்தால் இன்ப உணர்வும், வலிஉணர்வும் ஒன்றுக்கொன்று எதிரானவையோ, முரண்பட்டவையோ இல்லை. மாறாக இரண்டுமே ஒன்றுக்கொன்று பரஸ்பரம் உதவியாக உள்ளன. இந்த வலி உணர்வுதான் நம் உடம்பைக் காயப்படாமல் காப்பாற்றி ஒழுங்காக வைத்துக் கொள்ள உதவுகிறது. நம்முடைய உடம்பு முழுவதும் சத்திய ஜீவிய உடம்பாக மாறும் பொழுதுதான் நமக்கு வலி உணர்வு தேவையில்லை என்று நாம் அதை விட முடியும். சத்திய ஜீவிய உடம்பு நன்றாக வளைந்து கொடுக்கக் கூடிய திறமை கொண்டது என்று அன்னை கூறுகிறார். எவ்வளவு பெரிய அடி அதன் மேல் விழுந்தாலும் மற்றும் எவ்வளவு பெரிய சக்தி அதைத் தாக்கினாலும் சத்திய ஜீவிய உடம்பு வளைந்து கொடுத்தே அந்த அடியையும், அந்தத் தாக்குதலையும் காயம் ஏற்படாத வகையில் தாங்கிக் கொள்ளும் என்று அன்னை கூறுகிறார். நாம் உயரத்திலிருந்து கட்டாந்தரையில் குதித்தால் நமக்குக் கால் வலிக்கிறது. ஏனென்றால் கட்டாந்தரை இறுகியிருக்கிறது. அதே சமயத்தில் அதே உயரத்திலிருந்து நாம் ஸ்பிரிங் பெட் மேல் குதித்தால் ஸ்பிரிங் பெட் குஷன் போல் அமுங்கி வளைந்து கொடுத்து நாம் குதிப்பதால் உண்டாகிற அதிர்ச்சியை வாங்கிக் கொள்கிறது. ஆகவே அதிர்ச்சியை ஸ்பிரிங் வாங்கிக் கொள்வதால் நமக்கு வதெ ரிவதில்லை. இம்மாதிரியே நம்முடைய சத்திய ஜீவிய உடம்பு கூட ஸ்பிரிங் போலவும், குஷன் போலவும் செயல்பட்டு எவ்வளவு பெரிய அடி விழுந்தாலும், அதனால் வருகின்ற அதிர்ச்சியை வாங்கிக் கொண்டு நமக்கு வலியே தெரியாமல் செய்துவிடும் என்கிறார்.

இன்பமும், துன்பமும் ஒன்றுக்கொன்று complementaryஆக செயல்படக்கூடிய இரட்டைகளாக இருப்பது போல முரண்பாடுகளாகத் தெரியக்கூடிய இன்னும் பல இரட்டைகள் இம்மாதிரியே complementaryஆகத்தான் செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. உதாரணமாக, கட்டுப்பாடே விதிக்காமல் முழுச் சுதந்திரம் பலருக்குக் கிடைத்தால் அந்தச் சுதந்திரம் அவர்களுக்கு நல்லது செய்யாது. அவர்கள் அதைத் தவறாகப் பயன்படுத்தித் தங்கள் வாழ்க்கையை வீணாக்கிக் கொள்வார்கள். நம் வாழ்க்கையில் சில இடங்களில் சுதந்திரம் நம் வளர்ச்சிக்கு உதவுகிறது. அதே சமயத்தில் கட்டுப்பாடும் நம்முடைய எனர்ஜி விரயம் ஆவதைத் தடுக்கிறது.

வருமானத்தை நாம் பாஸிட்டிவாகவும், செலவை நெகட்டிவாகவும் நினைக்கலாம். வருமானம் நம்மிடமுள்ள பண இருப்பை அதிகரிப்பதால் நாமதை பாசிட்டிவாக வரவேற்கிறோம். செலவு நம் கையிருப்பைக் குறைப்பதால் அதை நாம் நெகட்டிவாகக் கருதித் தவிர்க்க விரும்புகிறோம். ஆனால் இதுவொரு வெறும் பிரமையாகத்தான் கருதப்பட வேண்டும். வரவும், செலவும் ஒன்றோடு ஒன்று பிரிக்க முடியாதபடி பின்னிப் பிணைந்துள்ளன. நாம் வருமானம் தேடுவதே செலவு செய்வதற்காகத்தான். செலவு செய்ய அவசியமே இல்லை என்றால் நாம் ஏன் வருமானத்தைத் தேட வேண்டும்.

உண்மையில் சம்பாதிக்க விரும்பினால்கூட செலவு செய்துதான் வருமானத்தையே பார்க்க முடியும். ஒரு பிஸினெஸ் செய்கின்ற தொழிலதிபர் மூலப் பொருள் வாங்குவதற்கும், மெஷீன்கள் வாங்குவதற்கும், ஊழியர்களுக்குச் சம்பளம் கொடுப்பதற்கும், செலவு செய்ய முன்வராமல் எந்தவொரு பிஸினஸையும் நடத்தி இலாபம் பார்க்க முடியாது. செய்ய வேண்டிய முறையான செலவுகளை நாம் தாராளமாகச் செய்தால் பணம் செலவு ஆகஆக மேற்கொண்டு வருமானம் நம்மைத் தேடி வந்து கொண்டேயிருக்கும் என அன்னையே தெள்ளத் தெளிவாகச் சொல்லியிருக்கின்றார். ஒரு கிணற்றிலுள்ள தண்ணீரை பம்ப் செட் வைத்து நாம் இறைத்துக் காலி செய்யும் பொழுது கிணற்றின் சுவர் ஓரங்களிலிருந்து ஊற்றுக் கிளம்பி அந்த காலியிடத்தை நிரப்புகிறது. இருக்கின்ற தண்ணீரை வெளியேற்றாமல் புது ஊற்றுக் கிளம்பாது. கிணற்று நீரைக் காசெய்தால்தான் புது ஊற்று எழுந்து கிணற்றை நிரப்பும் என்பது எவ்வளவு உண்மையோ அதே அளவிற்குக் கையிலுள்ள பணத்தைச் செலவு செய்து பணயிருப்பைக் காலி செய்தால்தான் அந்த வெற்றிடத்தை நிரப்ப புது வருமானம் நம்மைத் தேடி வரும்.

The Life Divine புத்தகத்தில் எதிரெதிரான இரண்டு நியதிகளைச் சேர்ந்து செயல்பட வைத்துப் பலனைக் கொண்டு வரும் அணுகுமுறையை இயற்கை வழக்கமாகவே கையாளுகிறது என்று பகவான் குறிப்பிட்டுள்ளார். ஜடத்திலிருந்து உயிரை இயற்கை வெளிக் கொண்டு வந்துள்ளது என்பது நமக்கு ஒரு அற்புதமாகத் தெரிகிறது. இம்மாதிரியே nerve tissueஆல் உருவாக்கப்பட்டுள்ள நமது மூளையிலிருந்து சிந்திக்கின்ற அறிவை தோற்றுவித்துள்ளது. பிஸிக்கலான மூளையையும், விழிப்புணர்வு பெற்ற அறிவையும் இயற்கை ஒன்று சேர்த்துள்ளது என்பது ஒரு அசாத்தியமான சாதனைதான். இப்பொழுது இன்னொரு அற்புதத்திற்காக நாம் காத்திருக்கிறோம். அதாவது பிஸிக்கல் பாடியில் ஆன்மாவை இயற்கை வெற்றிகரமாக வெளிப்படுத்தும் அற்புதத்தைக் காண காத்திருக்கிறோம். இந்தக் குறிக்கோளை நோக்கித்தான் இயற்கை சென்று கொண்டிருக்கிறது. பரிணாம வளர்ச்சியில் இதை நாம் தடுக்க முடியாது.

நம்முடைய அறிவினுடைய புரிந்து கொள்ளும் திறன் குறைவாக இருப்பதால், எதிரெதிரான நியதிகளும் விஷயங்களும் ஒருங்கிணைந்து செயல்படக் கூடும், மற்றும் ஒரே முழுமைக்கு இரண்டு எதிரெதிரான அம்சங்கள் இருக்கக்கூடும் என்பதை நம்மால் ஏற்றுக் கொள்ள முடியாமல் போய்விட்டது. உதாரணமாக நாம் பிரம்மத்தை எடுத்துக் கொள்வோம். ஒரே சமயத்தில் பிரம்மத்தால் வடிவமில்லாத சூட்சுமமான சச்சிதானந்தமாகவும் அதே சமயத்தில் எண்ணற்ற வடிவங்களால் நிரம்பிய ஜட உலகமாகவும் வெளிப்பட முடியும். ஆனால் நம்முடைய அறிவிற்குச் சச்சிதானந்தமும், ஜட உலகமும் பிரம்மத்தினுடைய இரு வேறு பக்கங்களாக ஒரே சமயத்தில் திகழ்கின்றன என்பது நம்ப முடியாமல் இருக்கிறது. அதனால்தான் சச்சிதானந்தத்தைப் பார்த்துவிட்ட பிறகு ஆதிசங்கரர் அவர்கள் உலகம் ஒரு மாயை, பிரமை, அது நிஜமில்லை என்று உதறித் தள்ளினார். அதாவது இரண்டும் ஒன்றுக்கொன்று நேர் எதிராக இருப்பதால் ஒன்றுதான் நிஜமாக இருக்க முடியும், நேரெதிரான மற்றொன்று பொய்யாகத்தான் இருக்க முடியும் என்று நம்முடைய அறிவு ஏதேனும் ஒன்றை உதறித் தள்ளுகிறது. ஆனால் நம்மறிவிற்கு ஒரு ஆன்மீக விளக்கம் கிடைத்ததென்றால், சச்சிதானந்தமும், ஜடமும் பிரம்மத்தினுடைய இரு வேறு complementary பகுதிகள் என்றும், வடிவமோ, ரூபமோ இல்லாத சச்சிதானந்தம் வடிவங்கள் நிறைந்த ஜடத்தால் பூர்த்தியாகிறது என்றும் புரிந்து கொள்ளும். வடிவமில்லாத பிரம்மத்தால் எண்ணற்ற வடிவங்களை உண்டு பண்ண முடியும் என்பதும் உண்மை. இம்மாதிரியே அசைவேயில்லாமல் இருக்கின்ற மௌன பிரம்மத்தால் ஜட உலகில் நாம் காண்கின்ற எண்ணற்ற அசைவுகளையும், இயக்கங்களையும் கொண்டு வர முடிகிறது. அதாவது பிரம்மத்தின் ரூபமற்றத் தன்மைதான் எண்ணற்ற ஜடவுலக ரூபங்களுக்கு ஆதாரமாக இருக்கிறது. இம்மாதிரியே பிரம்மத்தினுடைய அசைவற்ற நிலைதான் ஜடவுலகில் காணப்படுகின்ற எண்ணற்ற அசைவுகளுக்கும், இயக்கங்களுக்கும் ஆதாரமாக இருக்கிறது. இது நமக்கு மிகவும் முரண்பாடாகத் தெரியலாம். ஆனால் இப்படித்தான் பிரம்மம் செயல்படுகிறது. உலகத்தில் நாம் காணும் எல்லா முரண்பாடுகளும் பிரம்மம் என்ற உயர்ந்த நிலையிலிருந்து பார்க்கும் பொழுது உடன்பாடுகளாகிறது.

இதுவரையிலும் முரண்பாடுகள் உடன்பாடுகளாவது பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். இப்பொழுது வாழ்க்கையில் நாம் அடிக்கடி சந்திக்கின்ற ஒரு குறிப்பிட்ட முரண்பாடாக இருக்கின்ற இரட்டைகளை எடுத்துக் கொண்டு விவரமாகப் பேச விரும்புகிறேன். அப்படி நான் எடுத்துக் கொள்ள விரும்பும் முரண்பாடுகள், வாய்ப்புகளும், சிரமங்களும் என்பதாகும். சாப்பாடு, துணிமணி மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் என்று இவையெல்லாம் நம் அன்றாட வாழ்க்கையில் எப்படி நமக்குப் பழக்கமானவைகளோ அப்படித்தான் சிரமங்களும், வாய்ப்புகளும் நமக்கு மிகவும் பழக்கமான இரு வேறு விஷயங்களாகும். சமூகத்தில் எவ்வளவு உயர்ந்த நிலையில் இருப்பவரால்கூட தன் வாழ்க்கையில் ஒரு சிரமத்தைக்கூட அனுபவிக்கவில்லை என்று சொல்ல முடியாது. அம்மாதிரியே வாழ்க்கையில் எவ்வளவு அடிமட்டத்தில் இருப்பவராக இருந்தாலும்கூட தன் வாழ்க்கையில் ஒரு வாய்ப்பைக்கூட பார்க்கவில்லை என்று சொல்பவரும் இருக்க முடியாது.

இப்படி வாய்ப்புகளும், சிரமங்களும் நம் வாழ்க்கையில் மிகவும் சகஜமாகவும், பரவலாகவும் இருக்கின்றன என்றாலும், சிரமங்களை எப்படி முறியடிப்பது, வாய்ப்புகளை எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்ற அறிவு எல்லோருக்கும் இருக்கும் என்று சொல்ல முடியாது. தன்னுடைய வாழ்க்கையில் பிரச்சினைகள் எப்படி வந்துள்ளன என்பதே பல பேருக்குப் புரிவதில்லை. அது புரிந்ததென்றால் பிரச்சினைகளே நம் வாழ்வில் உருவாகாமல் நாம் பார்த்துக் கொள்ளலாம். பெரும்பாலானோர் தம் மனதில் என்னவெல்லாம் ஆசைகள் எழுகின்றனவோ அவற்றை எல்லாம் அப்படியே வெளிப்படுத்தி தம் வாழ்க்கையை நடத்திக் கொண்டு போகிறார்கள். பிரச்சினைகள் என்றெழுந்தால், தங்களுக்கு அவற்றைத் தீர்த்துக் கொள்ளத் தெரிந்தால் தீர்த்துக் கொள்கிறார்கள். அல்லது தீர்த்துக் கொள்ளத் தெரியவில்லை என்றால் மிகுந்த சிரமத்திற்கு ஆளாகிறார்கள். இதுவொரு பக்கமிருக்க, வாய்ப்புகளைப் பயன்படுத்திக் கொள்வது எப்படி என்பதைப் பற்றிய விவரத்தை இன்னும் குறைவாகத்தான் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பெரும்பாலான வாய்ப்புகள் நாம் எதிர்பாராத விதத்தில்தான் வருகின்றன. வருகின்ற வாய்ப்பினுடைய முக்கியத்துவமே பலருக்குத் தெரியாமல் போவதால் வாய்ப்பு வந்ததும் தெரியாது, அது போனதும் தெரியாது என்ற நிலையில் பலர் உள்ளனர். இதுபோக வருகின்ற வாய்ப்பிற்குத் தகுந்த முயற்சியை எடுக்க முன்வராமல் வாய்ப்பிற்குண்டான பலனைப் பார்க்கத் தவறியவர்களும் பல பேர் இருக்கின்றார்கள். வருகின்ற வாய்ப்பைச் சரியாகப் பயன்படுத்தி புதிய பலனைப் பார்க்கும் திறமை கொண்ட ஏதோ ஒரு சிலர்தான் வாழ்க்கையில் வெகு வேகமாக முன்னேறி அவரவர்கள் இருக்கின்ற துறையில் முன்னணித் தலைவர்களாகத் திகழ்கிறார்கள்.

இப்படிப்பட்ட முரண்பாடான இரட்டைகளை, வாழ்க்கை ஏன் நமக்கு அளிக்கிறது என்பதை நாம் சிந்திக்க வேண்டும். வாழ்க்கையில் பாஸிட்டிவ் மற்றும் நெகட்டிவ் அம்சங்கள் என்று இரண்டும் கலந்திருப்பதால் இப்படி எல்லா இடங்களிலும் எதிர்மறைகளான இரட்டைகள் குறிக்கிடுகின்றன. அறிவுடைமை, அறியாமை, இன்பம், துன்பம், சுதந்திரம், கட்டுப்பாடு, ஒற்றுமை, வேற்றுமை, இலாபம், நட்டம் என்ற பல இரட்டைகள் இருப்பதைப் போல வாய்ப்புகளும் சிரமங்களும் ஒரு முக்கியமான இரட்டையாக நம் வாழ்க்கையில் இருக்கின்றன. வாழ்க்கையில் சிரமங்கள் மட்டுமேயிருக்கின்றன, வாய்ப்புகளே இல்லை என்றிருந்தால் வாழ்க்கை பொறுக்க முடியாத அளவிற்குப் பாரமாகிவிடும். மாறாக, வாய்ப்புகள் மட்டுமேயுள்ளன, சிரமங்களோ தடைகளோ இல்லை என்றாலும் போராடி வெற்றி பெறுவதிலுள்ள இன்பமும் போய்விடும். மனிதன் பிஸிக்கலாகவும், விழிப்புணர்வற்றவனாகவும் இருக்கிறான். அந்த பிஸிக்காலிட்டி கரைய வேண்டும் என்றால் கடுமையாக உழைத்துச் சிரமப்பட்டால்தான் அது கரையும். அம்மாதிரியே மனிதனுக்கு விழிப்புணர்வு குறைவாக இருப்பதால் தொடர்ந்து சிரமங்களைக் கொடுத்து நெருக்கடியை உண்டுபண்ணிக் கொண்டிருந்தால்தான் சிரமங்களிலிருந்து விடுபடுவதற்காகவாவது முன்னேற வேண்டும் என்ற விழிப்புணர்வே மனிதனுக்கு வரும் என்று இயற்கை புரிந்து கொண்டிருப்பதால் இப்படி ஒன்றன்பின் ஒன்றாகச் சிரமங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. இப்படி பிஸிக்காலிட்டியில் இருந்தும் unconsciousnessலிருந்தும் விடுபட்டு அறிவுடைமை மற்றும் விழிப்புணர்வு என்று இந்த நிலைகளுக்கு மனிதன் உயரும் வரையிலும், அவனைச் சாதிக்க வைக்கவும், அவனை முன்னேற்றவும் ஒரு pressureஐ உண்டுபண்ணுகின்ற கருவிகளாக சிரமங்களும், நெருக்கடிகளும் மனித வாழ்க்கையில் தொடர்ந்து கொண்டுதான் இருக்கும்.

எந்தவொரு விஷயத்திற்கும் பல்வேறு பாகங்களும், உட்பிரிவுகளும் இருக்கும். இந்தப் பல்வேறு உட்பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப் போகாமல் ஒன்றோடு ஒன்று மோதிக் கொண்டிருந்தால் அப்பொழுது அந்த விஷயம் பிரச்சினையாக மாறிவிடும். உதாரணமாக ஒரு கம்பெனியில் மேனேஜ்மெண்ட் மற்றும் ஊழியர்களுக்கிடையே கம்பெனியில் நடக்கும் வேலையைப் பற்றியும், சம்பளம் பற்றியும், அணுகுமுறைகளைப் பற்றியும் ஒருமித்த கருத்து இருந்தால் அப்பட்சத்தில் அவர்களிடையே சுமுகம் பிறக்கிறது. அதன் விளைவாக கம்பெனி வளர்ச்சியைக் காண்கிறது. அதிக இலாபமும் ஈட்டுகிறது. ஆனால் மேனேஜ்மெண்டிற்கும், ஊழியர்களுக்கும் இடையே கருத்து வேறுபாடு எழுந்துவிட்டால், அங்கே சுமுகம் கெடுகிறது. அதன் விளைவாக வேலையும் கெடுகிறது. வேலை கெடுவதால் கம்பெனியின் வருமானமும் குறைகிறது.

ஒரு மனிதனுடைய தனிப்பட்ட வாழ்க்கையில் நிதி நிலைமையில் ஒரு சில பிரச்சினைகள் எப்படி எழுகின்றன என்று பார்ப்போம். ஒருவர் மிகவும் வசதியாக வாழ விரும்புகிறார் என்றால், அதற்கேற்ற வருமானத்தைக் கொடுக்கக் கூடிய வேலையை அவர் தேடிக் கொள்ள வேண்டும். அல்லது இருக்கின்ற வேலையில் அந்தளவு உயர்ந்த வருமானத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும். அவருடைய தேவையும், அவருக்குக் கிடைக்கின்ற வருமானமும் ஒத்துப்போகும்பட்சத்தில் வருமான விஷயத்தில் பிரச்சினையே வாராது. ஆனால் தேவைக்கேற்ற வருமானத்தை அவரால் பார்க்க முடியவில்லை என்றால் தேவைப்பட்ட வருமானத்திற்கும், கிடைக்கின்ற வருமானத்திற்கும் இடையே இடைவெளி வந்துவிட்டால் எதிர்பார்ப்பது ஒன்று, கிடைப்பது வேறொன்று என்று அவருடைய வருமான விஷயத்தில் முரண்பாடுகள் வந்துவிடுகின்றன. இந்த முரண்பாடுகள் பிரச்சினையாகத் தலையெடுக்கின்றன.

அரசாங்க விதிமுறைகள் எளிமையானதாகவும், கடைப்பிடிக்க சுலபமானதாகவும் ஒரு பக்கமிருக்கும் பொழுது, மறுபக்கம் தொழில் நடத்துபவருக்குத் தேவையான அடிப்படை வசதிகளும் இருக்கும் பொழுது தொழிலதிபர்களால் வெற்றிகரமாகத் தொழில் செய்ய முடியும். ஆனால் அரசாங்க விதிமுறைகள் சிக்கலாகவும், கடைபிடிக்க சிரமமாகவுமிருந்தாலும் சாலை வசதி, மின்சப்ளை மற்றும் மூலப் பொருட்கள் கிடைப்பது, வேலைக்கு ஆள் கிடைப்பது என்றிவை போன்றதெல்லாம் திருப்திகரமாக இல்லை என்றாலும், தொழிலதிபர்களுடைய ஆர்வத்திற்கும் நடைமுறை சூழ்நிலைக்குமிடையே பெரிய இடைவெளி வருகிறது. அப்படி வரும் பொழுது தொழில் செய்வதென்பது பெரிய சிரமமாக மாறிவிடுகின்றது. இப்படிப்பட்ட சிரமங்கள் நீங்க வேண்டுமென்றால் இந்தச் சிரமங்களுக்குப் பின்னிருக்கும் குறைபாடுகள் சரிசெய்யப்பட வேண்டும். நான் இப்பொழுது வழங்கியுள்ள மூன்று உதாரணங்களைப் பிரச்சினைகளும், சிரமங்களும் எழுவதற்குத் தகுந்த மாதிரிகளாக எடுத்துக் கொள்ளலாம். வாழ்க்கையில் இன்னும் எத்தனையோ இடங்களில், எத்தனையோ ரூபங்களில் பிரச்சினைகள் எழுகின்றன. ஆனால் அடிப்படையில் பிரச்சினைகளும், சிரமங்களும் எழுவதற்குக் காரணமே எந்தவொரு விஷயத்திற்குள்ளிருக்கும் பல்வேறு உட்பிரிவுகளும் ஒன்றோடு ஒன்று ஒத்துப்போகாமல் இருப்பதுதான். இப்பொழுது பிரச்சினைகள் எப்படி உருவாகின்றன, அவற்றிற்கு நாம் தீர்வு எப்படி வழங்குவது என்று ஆறு பாயிண்ட்களை பட்டியலிட்டு வழங்க விரும்புகிறேன்.

 
பிரச்சனைகள் தோன்றும் விதம்
 
பிரச்சனைகளைத் தீர்க்கும் விதம்
1.
நம்முடைய ஆர்வத்திற்கும், எதிர்பார்ப்பிற்கும், முயற்சிக்கும் இடையே இடைவெளி எழுதல்.
1.
இருக்கின்ற இடைவெளியை அகற்றி எதிர்பார்ப்பிற்கேற்ற முயற்சியை எடுத்தல்.
2.
ஒரு வேலையில் சம்பந்தப்பட்டுள்ளவர்களிடையே வேலையைப் பற்றிய பல்வேறு கருத்து வேறுபாடுகள் எழுதல்.
2.
கருத்து வேறுபாடுகளை அகற்றி, கருத்து ஒருமித்த நிலைக்கு வர வேண்டும்.
3.
சமூகத்தினுடைய minimum standardக்குக் கீழே ஒரு நபருடைய செயலாற்றல் போகும்
பொழுது அவர் வாழ்க்கையில் வறுமை எழுகிறது.
3.
தன் செயலாற்றலை உயர்த்தி இந்த minimum standardக்கு மேல் தன்னுடைய சாதிக்கும்
திறனைக் கொண்டு செல்லும் பொழுது வறுமை மறைகிறது.
4.
உடல்நலப் பிரச்சனை எழுவதற்குக் காரணம் என்னவென்றால் வெளியில்
இருந்து நம் உடம்பிற்குக் கிடைக்கின்ற எனர்ஜியைவிட அதிகமான எனர்ஜியை நம்முடம்பு செலவு செய்யும் பொழுது உடம்பின் எனர்ஜி லெவல் குறைந்து, அதன் விளைவாக உடல்நலக் குறைபாடுகள் ஏற்படுகின்றன.
4.
இப்படி உடல்நலம் சீராக இருக்க வேண்டும் என்றால் செலவு செய்கின்ற எனர்ஜியைவிட அதிக எனர்ஜியை நாம் வெளியிலிருந்து பெற்றுக் கொண்டோம் என்றால்
எனர்ஜி லெவல் உயர்ந்து விடுகிறது. அப்பொழுது உடல் நலப் பிரச்சனைகள் இல்லாமல் உடல் நலமாக இருக்கிறது.
5.
ஒரு வேலைக்கு ஆதாரமாக இருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள் இல்லாமல் போகும் பொழுது தொடங்கப்பட்ட ஒரு முயற்சி கெட்டுப்போய் பிரச்சனையாக மாறிவிடும்.
5.
இல்லாமல் போன முக்கிய அம்சங்களை மீண்டும் கொண்டு வந்தால் பிரச்சனை விலகி சிரமம் வெற்றி வாய்ப்பாக மாறுகிறது.
6.
வெற்றிக்கு உதவக்கூடிய பாஸிட்டிவ் அம்சங்களைவிட தோல்வியை வரவழைக்கும் நெகட்டிவ் அம்சங்கள் அதிகமாக இருக்கும் பொழுது வாய்ப்பு வெற்றியில் போய் முடியாமல் சிக்கலாகிச் சிரமமாக மாறுகிறது.
6.
நெகட்டிவ் அம்சங்களைவிட பாஸிட்டிவ் அம்சங்களின் கை ஓங்கியிருக்கும்படி
செய்துவிட்டோம் என்றால் சிரமம் மறைந்து வாய்ப்புக்குரிய பலன் கிடைக்கும்.

தொடரும்.....

***********



book | by Dr. Radut