Skip to Content

01.யோக வாழ்க்கை விளக்கம் IV

 யோக வாழ்க்கை விளக்கம் IV

கர்மயோகி

681) அன்னை, ஸ்ரீ அரவிந்தர் அவதாரங்கள் மனிதனுக்கு எடுத்துக்காட்டாக மட்டும் அமையவில்லை. மனிதன் செய்ய வேண்டிய வேலைகளைத் தாங்களே செய்தார்கள். விவசாயம், வியாபாரம், பாங்க், மானேஜ்மெண்ட் ஆகிய இடங்களில் நாம் விஷயத்தைச் சொல்லிக் கொடுத்தால் மட்டும் போதாது. நாமே செயல்படுத்திக் காண்பிக்க வேண்டும்.

யோகத்தைச் செய்ய வந்த அவதாரங்கள் அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும்.

       உலகம் தடம் மாறிப் போகும் என்ற நேரத்தில், எப்படிப் போகக் கூடாது, எப்படிப் போக வேண்டும் என்று எடுத்துக்காட்டாக இருக்க அவதாரங்கள் உலகத்தில் எழுந்தன. தாங்கள் பிறருக்குச் சொல்லியதைத் தங்கள் வாழ்வில் வாழ்ந்து காட்டினார்கள். அதுவே இதுவரை அவதாரங்கள் நிலை. விஞ்ஞானி புதிய கருவியொன்றைக் கண்டுபிடித்தால் அது பெரிய சேவை, ஆச்சரியம். அவர் கண்டு பிடித்ததை உலகம் பெற்று அனுபவிக்க வியாபார ஸ்தாபனங்கள் (commercial product) விற்பனைக்குரிய பொருளாக அதை மாற்றி உலகுக்கு வழங்குகிறார்கள். விஞ்ஞானியே அதைச் செய்வதில்லை.

       அன்னையும், ஸ்ரீ அரவிந்தரும் உலகம் பொய்மையிலிருந்து விடுபட்டு, மரணத்தை வென்று, மனிதன் சத்திய ஜீவனாகலாம் என்றனர். அதை மனிதன் ஏற்றுச் செய்ய வேண்டும். அவர்களே மனிதன் செய்ய வேண்டியதைச் செய்ய முன் வந்தனர். தாங்களே யோகத்தை மேற்கொண்டனர். அவதாரமாக எழுந்த புருஷனுக்குத் தவம், யோகமில்லை. ஆனால் அவர்கள் அதை ஏற்றனர். இறைவன் எங்களைப் பணித்திருக்கிறான் என்றனர். இது அவதாரங்களுடைய நிலைக்கே புதியது என்றார் அன்னை.

       அரசனுக்கும், அரசனின் நிர்வாகத்திற்கும் கடமைகள் உண்டு. முக்கியமாக எதிரியைத் தோற்கடித்து விரட்ட வேண்டும். நாட்டில் நீதியை நிலை நிறுத்த வேண்டும். இதுவே அரசனின் கடமை. அரசுக்கு அதற்கடுத்தாற்போல் தர்மம் உண்டு, கடமையில்லை. 1967லிருந்து உலக அரசுகள் சத்திய ஜீவியத்தின் ஆட்சிக்குள் இருப்பதாக அன்னை சொல்கிறார். அதுவும் தாம் சொல்வதாகச் சொல்லவில்லை. பகவான் அன்னையை சூட்சும உலகில் சந்தித்து இதைச் சொன்னார் என்றார். சேர சோழ பாண்டியர் நாட்டிலும், இராம இராஜ்ஜியத்திலும், தர்மர் ஆண்ட நாளிலும், அசோக சாம்ராஜ்யத்திலும், டெல்லியில் சக்ரவர்த்திகள் ஆட்சி செய்த நாட்களிலும், ரோமாபுரியிலும், விக்டோரிய மகாராணியின் ஆட்சியிலும், நம் குழந்தைகட்குப் பாடம் கற்பிப்பது நம் கடமை. நம் வாழ்வைச் செப்பனிடுவது நம் பொறுப்பு. நாம் ஒரு தொழில் செய்ய முதலைத் தேடுவது நம் குடும்பப் பொறுப்பு. எந்த அரசாங்கமும் அதை உலகில் 1950வரை ஏற்றுக் கொண்டதில்லை.

       பிள்ளைகள் படிப்பிலிருந்து, வீடு கட்டுவதுவரை, வேலை தேடுவது முதல், தொழில் நடத்துவதுவரை இன்றைய இந்திய அரசாங்கம், குடிமகன் பொறுப்பைத் தான் ஏற்றுக் கொண்டு செயல்படுகிறது. அதைப் பின்பற்றி ஏராளமான நாடுகள் அதேபோல் செயல்படுகின்றன. இது சத்திய ஜீவிய சக்தி செயல்படும் வகை.

       அன்னை பக்தர்கள் விவசாயத்தில் புது முறையைக் கண்டாலும், புதிய மானேஜ்மெண்ட் முறைகளை வகுத்தாலும், அவற்றை உலகுக்குத் தெரிவிப்பதுடன் நிறுத்த முடியாது. நாமே செயல்படுத்தி நடைமுறையில் அவற்றுள் அன்னை சக்தி வெளிப்படுவதைக் காட்ட வேண்டும்.

       அவதாரப் புருஷன் யோகத்தை ஏற்றதுபோல், அரசாங்கம் குடிமகனின் பொறுப்பை ஏற்றதுபோல், புது முறைளைக் காணும் பக்தர்கள், அவற்றைச் செயல்படுத்தும் கடமையையும் ஏற்க வேண்டியது முறை. இதுவே அவர்கள் பாதையில் நாம் செல்வதை ஊர்ஜிதப்படுத்தும்.

****

682) பிரபஞ்சம் மனிதனில் தன்னைச் செறித்து காண்பதுபோல், யோகத்தை மேற்கொண்டவர் தம் ஆன்மாவில் நிலைப்பட வேண்டும். வாழ்வு பிரபஞ்சமாகிறது. ஆன்மா அதன் மையமாகிறது.

உடலே பிரபஞ்சம், ஆன்மாவே ஜீவாத்மா.

       ஆன்மா உலகில் பிறப்பெடுக்க உடலை உற்பத்தி செய்து ஏற்று அதனுள் தன்னைப் பொதித்தது என்பது மரபு. அதேபோல் சச்சிதானந்தம் தன் உடலாகப் பூமியை உற்பத்தி செய்தது என்கிறார் பகவான்.

       பிரபஞ்சம் என்பது பிரகிருதி (இயற்கை). தான் உயர்ந்து பரமாத்மாவையடைய பிரபஞ்சம் விழைகிறது. பிரகிருதியின் பிரபஞ்சம் ஆன்மாவான பரமாத்மாவை நேரடியாக அடைய முடியாது. எனவே தன்னுள் உள்ள ஆன்மாவைக் கண்டு, அதன் நிலையை அளவுகடந்து உயர்த்தி அதன் மூலம் பரமாத்மாவை அடைய வேண்டும் என்று பிரபஞ்சம் முடிவு செய்தது. அதற்காக (individual soul) ஆன்மாக்களை ஆயிரக்கணக்கில் பிரபஞ்சம் உற்பத்தி செய்தது. தன்னை செறிவடையச் செய்த புள்ளிகளே ஆன்மாக்கள். இப்படி உற்பத்தியான ஆன்மா, தனக்கென ஒரு சாதனையைச் செய்து ஒரு சிறு கூட்டுக்குள் தன்னை அமைத்துக் கொள்கிறது. கூட்டுக்குள் வளர்ந்து, வளர்ச்சி முடிந்தபின் கூட்டை அழித்து, பிரபஞ்சம்வரை வியாபித்து, பிரபஞ்சத்தை ஆன்மீக வலுவடையச் செய்கிறது. ஆயிரக்கணக்கான ஆன்மாக்கள் வளர்ந்து கூடுகளை அழித்து பிரபஞ்சம் முழுவதும் பரவி பிரபஞ்சத்தின் ஆன்மீக நிலையை உயர்த்தினால், உயர்வு ஒரு கட்டத்தைத் தாண்டும்பொழுது பிரபஞ்சத்தின் ஆத்மா, பரமாத்மாவை எட்டும். ஆன்மா உள்ள கூடே அகந்தையாகும்.

       மனிதன் பிரபஞ்சத்தின் சிறு உருவம் (miniature). மனிதன் பிரபஞ்சம்போல் வளர, அவனது ஜீவனுடைய கரணங்களில் ஆன்மா உற்பத்தியாகவேண்டும். கரணங்களின் ஆன்மாவுக்கு சைத்தியப் புருஷன் எனப் பெயர். மனம், உணர்வு, உடல் ஆகியவற்றில் சைத்தியப் புருஷன் உற்பத்தியாகி அவற்றிற்குள்ள கூடுகளை அழித்து வெளிவந்து, கரணங்களின் ஆத்மா, ஜீவனின் ஆத்மாவாகி ஜீவாத்மா, தான் மாற்றமற்றது என்ற நிலையிலிருந்து மாறி, வளர ஆரம்பித்து, பிரபஞ்சத்தின் ஆத்மாவுடன் ஐக்கியமாக வேண்டும்.

       பிரபஞ்சத்தின் பரிணாமமும், மனிதனுடைய பரிணாமமும் ஒரே வகையானவை. மனிதனுடைய பிரபஞ்சம் அவன் உடல். அவன் உடல் திருவுருமாற்றமடைந்தால், பிரபஞ்சம் திருவுருமாற்றமடையும். உடலின் திருவுருமாற்றத்தை உலகில் அன்னையின் உடல் தவிர வேறெதுவும் ஏற்கும் திறனுடையதன்று என்ற பகவான் சொல்லியதன் பொருள், அன்னையின் உடல் பூமியையும், பிரபஞ்சத்தையும் நேரடியாகக் குறிப்பிடுகிறது என்றாகிறது. ஆரம்ப நாட்களில் அன்னை தம்முடல் பூமியுடன் இரண்டறக் கலந்ததைக் குறிப்பிடுகிறார். அதை, பகவான், Vedic experience வேத காலத்து ஆன்மீக அனுபவம் என்றார். அன்னைக்குப் பிறகு வெளிவந்த அவருடைய பேச்சுகளில், தம்முடல் பிரபஞ்சம் முழுவதும் (physically expanded) பரவித் தழுவியதாக எழுதியுள்ளார். அன்னையின் உடல் பிரபஞ்சத்தின் பிரகிருதி. கடைசி நாட்களில் தாம் இறைவனாக சில நிமிஷம் மாறியதை விவரிக்கின்றார். பிறகு அந்நிலை பல மணி நீடித்ததையும் எழுதுகிறார். அன்னையே இறைவனான பின், அவருடல் இறைவனின் திருவுடலான பிரபஞ்சம். மேலும் சொன்னால் பிரபஞ்சத்தையும் தம்முட் கொண்ட சிருஷ்டியை அன்னையுடல் குறிக்கிறது.

       பூரணயோகம், பூமாதேவியைத் திருவுருமாற்றி, பிரபஞ்சத்தையும் திருவுருமாற்ற, இறைவனை பூவுலகுக்குக் கொண்டுவர முயல்கிறது. அதுவே அதன் இலட்சியம். இறைவனின் சக்தி - சத்தியஜீவிய சக்தி - பூமியில் 1956இல் இறங்கி வந்து அன்றிலிருந்து செயல்படுகிறது.

****

683) நாலு பேர் எதிரில் மனிதன் முறையற்று நடப்பதில்லை. மனச்சாட்சிக்குட்பட்டவன் எண்ணத்தால் ஊறு செய்வதில்லை. யோகி தன் ஆழ்ந்த மனத்தினின்று தவற்றையும், தீமையையும் அகற்ற வேண்டும்.

மனிதன் செயல் தூய்மையானவன்,

மனச்சாட்சி எண்ணத்தின் தூய்மை,

யோகம் ஜீவியத்தின் தூய்மை.

       மனித வாழ்வு கெட்டதை விட்டகன்று, நல்லதை நாடுகிறது. தீமையை அழித்து நன்மையை ஆதரிக்கிறது. முறைகெட்டதைத் தவிர்த்து முறையை ஏற்கிறது. இதை விவரிக்கும் நிலைக்கு மனிதனை மூன்று வகைகளாகப் பிரிக்கலாம்.

1. சமூகம் தன் தோற்றத்தை ஏற்றுக் கொண்டால் போதும் என்ற சாமானிய மனிதன். இவன் மேல் மனத்தின் மேற்புறத்தில் வாழ்பவன்.

2. தன் நெஞ்சம் தன்னை ஏற்க வேண்டும் என்ற நெறியான மனச்சாட்சிக்குட்பட்ட மனிதன். இவன் மேல் மனத்தின் ஆழத்தில் உணர்வால் வாழ்பவன்.

3. தான் ஏற்ற ஆன்மீகக் கொள்கையின் உறைவிடமான ஆழ்மனம் தன்னை அங்கீகரிக்க வேண்டும் எனும் யோகி. இவன் உள்மனத்தில் வாழ்பவன்.

       வீட்டில் பழைய கந்தலை உடுத்தினாலும், வெளியில் நல்ல உடையோடு காணப்பட வேண்டும் என எல்லா வசதிகளுக்குமுரிய பணத்தையும் உடைக்குச் செலவிடுவது வழக்கம். தோற்றம் முக்கியம், படிப்பில்லாவிட்டாலும் பட்டம் முக்கியம், பவுனில்லாவிட்டாலும் பவுன் போன்ற தோற்றமுள்ள நகை முக்கியம், நல்ல சாப்பாடில்லாவிட்டாலும், வீட்டில் T.V. இருப்பதாக அனைவரும் நினைக்க வேண்டும் என்று மனிதன் எல்லா நிலைகளிலும் பாடுபடுகிறான். வசதியில்லாதவன் வசதியான தோற்றத்தையும், வசதியிருந்து குடும்பச் சுமுகமில்லாதவன் சுமுகமான தோற்றத்தையும், செல்வமிருந்து புகழில்லாதவன் தோற்றத்தில் புகழும் நாட நாள்தோறும் முயல்கிறான். இவர்கள் சாமானியர்கள். பிறர் பொருளைத் தீண்டக்கூடாது, உதவி கேட்கக் கூடாது, பொறாமைப்படக் கூடாது, உதவி செய்யத் தவறக்கூடாது, மனத்தாலும் ஒரு தவற்றைச் செய்தல் கூடாது என்று மனச்சாட்சியை தெய்வமாக்கி வாழ்பவர் சதவீதக் கணக்கில் குறைவாக இருந்தாலும் ஓர் ஊரில் பல நூறு நல்ல மனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்களுக்குத் தோற்றம், நாலு பேர் சொல்வது இரண்டாம்பட்சம். தன் நெஞ்சம் சுடக் கூடாது, பதற்றப்படக் கூடாது, நெஞ்சில் எழும் உணர்வு உத்தரவு அளிக்காவிட்டால் அவர்களால் செயல்படமுடியாது. இவர்களை மனிதத் தன்மையுடைய நல்ல மனிதர்கள் என்போம்.

       யோகியின் இலக்கு மோட்சம். அவனுடைய பாதையில் தோற்றத்திற்கு வேலையில்லை. மனச்சாட்சி ஏற்றால் போதாது. மனம் அறியாத நிலையில் ஆழ்மனம் அவன் ஏற்ற பாதைக்கு ஊறு செய்வதை ஏற்றல் கூடாது. ஆழ்மனம் ஏற்பதை சூழலும், கனவும், தியானமும், சகுனமும், புற நிகழ்ச்சிகளும், அகவுணர்வுகளும், அவனுக்கு உணர்த்தியபடியிருக்கும். ஆழ்மனம் தூய்மையாக இல்லாமல், யோகப்பாதையில் யாத்திரையில்லை. கதவை அணுகலாம். திறக்காது. மனச்சாட்சி திறனற்றுப் போகும் சொர்க்க வாயில் அது.

****

684) ஆன்மாவைப் பொறுத்தவரை தவறில்லை. மனச்சாட்சி தீமையைக் கண்டதும் விலகுகிறது. சமூகம் பொது இடத்தில் தவறிழைக்க அனுமதியில்லை.

ஆன்மாவுக்கு அனைத்தும் சரி.

மனச்சாட்சி தவற்றை அனுமதிக்காது.

சமூகம் தவறான நடத்தையை அனுமதிக்காது

       சமூகத்தில் வெளித்தோற்றம் முக்கியம். உள்ளே எப்படியிருந்தாலும் கேள்வியில்லை. மனச்சாட்சிக்கு உள்ளேயுள்ள மனநிலை முக்கியம், தோற்றமன்று. ஆன்மாவுக்குத் தோற்றம் இல்லை. உள்ளேயுள்ள மனநிலையும் முக்கியமில்லை. ஏனெனில் ஆன்மாவுக்குத் தீமை என்பதில்லை, தவறு என்பதில்லை, குற்றம் கிடையாது அதனால் மன்னிப்பு கிடையாது. பாவம் என்பதை மனிதன் உணர்கிறான். ஆன்மா பாவ, புண்ணியங்கட்கு அப்பாற்பட்டது.

       கோதுமை மாவைப் பூரியாகத் திரட்டினால், பூரி உருவாகும் பொழுது சில சமயங்களில் கொஞ்சம் மாவை எடுக்க வேண்டியிருக்கிறது. அது விரயமன்று. புத்தகத்திற்கு அட்டை போட அட்டைப் பேப்பரை வெட்டினால் துண்டுகள் விரயமாகின்றன. பூரிபோக மீதி மாவு விரயமாவதில்லை. அடுத்த பூரியாகிறது. இயற்கை (nature) என்பதன் செயல் அட்டை போடும் பேப்பர் போன்ற நிலையில்லை, பூரி மாவு போன்ற நிலையுண்டு. நமக்கு விரயமாகத் தெரிவது, இயற்கைக்கு விரயமன்று. வேறொரு காரியத்திற்குப் பயன்படுகிறது. வாழை குலை தள்ளிய பின் மரத்தை வெட்டினால் அதை வீசுகிறோம். குளித்தால் தண்ணீர் சிதறுகிறது. சிதறிய நீர் விரயமாகி சாய்க்கடையில் போகிறது. சமையல் செய்தால் உபயோகமாகாத காய்கறியின் பகுதிகள் வீணாகின்றன. இன்று படித்த பேப்பர் நாளைக்குப் பயனில்லை. அது நமக்கு விரயம். இயற்கை எனும் தொழிற்கூடத்தில் துண்டான பேப்பர் மண்ணோடு மட்கி அது புதுப் பொருள் உற்பத்தியாக உதவுகிறது. குலை தள்ளிய வாழை நிலத்திற்கு உரமாகிறது. குளித்துச் சாய்க்கடையில் போகும் நீர் பூமிக்கடியில் சேருகிறது. இயற்கையின் செயல்கள் பல்லாயிரம். மனிதனுக்குத் தேவையான செயல்கள் ஆயிரம். தனக்குப் பயன்படாதவை தனக்கு விரயம். அவை இயற்கைக்கு விரயமல்ல. நாம் செயல்படாத இடங்களில் நம் கண்ணுக்குத் தெரியாத வகையில் இயற்கை செயல்பட்டுக் கொண்டேயிருப்பதால் எதுவும் இயற்கைக்கு உதவும். அதேபோல் சமூக வாழ்வில் ஏற்கக் கூடியது, ஏற்க முடியாதது என இரு பிரிவுகளுண்டு. மனச்சாட்சி நன்மை, தீமை என, செயல்களைப் பிரிக்கிறது. ஆன்மாவுக்கு இதுபோன்ற பாகுபாடுகள் இல்லை. அனைத்தையும் செயல் எனக் கருதுகிறது. அவற்றை ஆண்டவனின் செயல் என அறிகிறது. ஆண்டவனின் செயலை பாவம் என்று சொல்ல முடியுமா? ஏற்கக் கூடாதது என்று சொல்லலாமா? தீமை என்று பாகுபாடு செய்ய முடியுமா? முடியாதல்லவா?

       நாம் மனத்திலிருந்து நினைக்கிறோம். உணர்விலிருந்து செயல்படுகிறோம். ஆன்மா நினைப்பதில்லை, உணர்வதில்லை, செயல்படுவதில்லை, பாகுபாடு செய்வதில்லை. சாட்சியாகச் செயல்களை தன் ஆன்மீகத் திருஷ்டியால் பார்க்கிறது. நாம் கண்ணால் பார்த்து மனத்தால் அறிகிறோம். ஆன்மா கண்ணும், மனமும் தேவைப்படாமல், சூட்சுமப் பார்வையால் - திருஷ்டியால் - பார்க்கிறது.

****

 685) அருளை அடையாளம் காண்பது நன்றியறிதல்.

இறைவனை செயலில் காண்பது நன்றியறிதல்.

       கிராமத்திலிருந்து நகரத்திற்கு வர தூரம் 5 மைலானாலும், 10 மைலானாலும் நடந்துதான் வரவேண்டும். 1950இல் பஸ்ஸில் போகும் பொழுது நெடுஞ்சாலையில் தலைச்சுமையுடன் சாரி சாரியாக மக்கள் போவதைக் காணலாம். பஸ்ஸில் போக வசதியுள்ள ஊருக்கும், ஊரிலிருந்து ரோட்டிற்கு 2 மைல், 5 மைல் என நடந்து வரவேண்டும். அந்த இரண்டு மைலுக்குப் பஸ் வேண்டும் என புதுத் தலைமுறைகள் கேட்டபொழுது டவுனுக்கு 12 மைலும் நடந்தே போய்ப் பழக்கமானவன், என்ன வேடிக்கை இது வீட்டு வாயிற்படிக்கும் பஸ் வேண்டுமா உனக்கு எனக் கேட்டான். அதுபோன்ற கிராமத்தில் பஸ் வரும்பொழுது திருவிழாபோல் கொண்டாடி பஸ்ஸை வரவேற்றார்கள். புதியதாக வருவதை - போன், பஸ், பள்ளி, துணி, பேனா, விளக்கு, விவசாயம், லாரி, சாக்கு - முதலில் ஆரவாரமாக நாம் வரவேற்கிறோம். இன்று கம்ப்யூட்டருக்கு அதுபோன்ற வரவேற்புண்டு. Speed postக்கு, டெலிபோன் பூத், மிக்ஸி, காஸ், கிரைண்டர், மொப்பெட், ஸெராக்ஸ் போன்றவற்றை வரவேற்கிறோம். பழையவற்றை நாம் இருப்பதாக வைத்துக் கொண்டு (take for granted) அவற்றைக் கவனிப்பதில்லை.

       இவையெல்லாம் 50 வருஷங்களாக வந்தவை இதற்கு முன் 500 வருஷமாக, 5000 வருஷமாக வந்த நிலம், வீடு, கிணறு, ஏரி ஆகியவற்றை இன்று நாம் நினைப்பதேயில்லை. ஆண்டவன் ஆதி நாளிலிருந்திருக்கிறான். மனிதன் உற்பத்தியாகி 31 இலட்சம் வருஷமாகிறது என்று accurate துல்யமாகக் கணக்கிட்டு இருக்கிறார்கள். ஆண்டவன் அதற்கு முன்னிருந்து பூவுலகில் ஆட்சி செலுத்துகிறான். அவன் அளித்ததே சூரியன், சந்திரன், மரம், மழை ஆகியவை. பஸ்ஸில் போகும்பொழுது இந்த பஸ்ஸை அருள் தாங்குகிறது என நாம் அறியமுடிவதில்லை. நாம் சும்மா உட்கார்ந்திருக்கும்பொழுது மூச்சுவிடுவது அருளால் எனத் தெரிவதில்லை. சுவாசம் சிரமமாகி, டாக்டர் மருந்து பலிக்காத பின், டாக்டர் கைவிட்ட பிறகு, பிரார்த்தனையால் சுவாசம் எழுந்தால் அருள் செயல்படுவதை அறிகிறோம். ஆன்மாவுக்கு நன்றி சொல்கிறோம். அதுவே சும்மா சுவாசம் வந்தால் அருளின் செயல் என அறிவதில்லை. அறிந்தால் அது நன்றியறிதல்.

       சினிமாவை நாம் பார்ப்பதற்கும், அதை டைரக்ட் செய்தவர் பார்ப்பதற்கும் உள்ள வித்தியாசம் அது. டைரக்டருக்கு ஒவ்வொரு சீனும், அதிலுள்ள பொருள்களும், மனிதர்களும், சொற்களும் தாமியற்றியவை எனத் தெரியும். சினிமாவை டைரக்டர் பார்ப்பதைப் போல், நாம் பார்ப்பது அறிவு, தெளிவு.

       இன்று ஆண்டவன் மனித உருவில் உலவினால் அத்தனைச் செயல்களும் அவன் செயலே என அவன் அறிவான். அதுபோல் நாம் அறிந்தால் அது அருளை அடையாளம் காண்பதாகும். அதனால் நன்றியுணர்வு எழும். அது பலிக்க நாம் ஆண்டவனாகும் பாதையில் அடி எடுத்து வைக்க வேண்டும். பூரணயோகம் வகுத்த பாதை அதுவேயாகும்.

****

...தொடரும்

ஜீவிய மணி

செயல் வாழ்வின் கரு.

 

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

ஆதாயம், இலாபம், பொருள் நம் இலட்சியத்தை இன்று நிர்ணயிக்கின்றன. இது மாறி, இலட்சியம் இவற்றை நிர்ணயிக்கும் நிலைமை ஏற்பட்டால், அன்னையை நாம் வாழ்வில் ஏற்றுக் கொள்வதாகும். இதற்கு முதற்படியாக இலாபத்தைக் கொண்டு இலட்சியத்தை நிர்ணயிப்பதை விட்டுவிட வேண்டும்.

இலட்சியத்தை நிர்ணயிக்க இலாபம் அளவுகோலன்று.

 

 

 

 



book | by Dr. Radut