Skip to Content

02. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய அன்னையே சரணம்!

அன்னையை அறிந்துகொண்டதிலிருந்து என் வாழ்வில் நிகழ்ந்த அதிசயங்களை, நீங்கள் இதுவரை அன்னையை அறியாதிருந்தால் அன்னையை முழுவதுமாக நம்பி, பெற வேண்டும் என்ற ஆவலில் இதனை சமர்ப்பணம் செய்கின்றேன். ஒரு சமயம் அலுவலக விஷயமாக வெளியூர் செல்ல வேண்டி இருந்தது. உடனடியாக reservation கிடைக்காததால் சாதாரண இரண்டாம் வகுப்புப் பெட்டியில் எப்படி இடம் பிடித்துச் செல்வோம் என்ற பயம். உடனே இதனை அன்னையிடம் விட்டுவிட்டேன். "அன்னையே எனக்காக ஓர் இடத்தை நீங்கள்தான் ஒதுக்கித்தர வேண்டும்'' என வேண்டிக் கொண்டு, ஒரு சிறிய காணிக்கையை சமர்ப்பித்துவிட்டு, டிக்கெட் எடுக்கச் சென்ற இடத்தில் மக்கள் கூட்டம் இல்லை. டிக்கெட் எடுத்துக்கொண்டு வண்டியை நெருங்கும்போது, எவ்வளவு கூட்டம்! நிற்கக்கூட இடம் கிடைக்காதுஎன நினைத்த எனக்கு, ஜன்னல் ஓரம், உட்கார்ந்து செல்லும் வாய்ப்பை அளித்ததே அன்னைதான். அன்னைக்கு நன்றியை சமர்ப்பணம் செய்தேன்.

என் மகளுக்கு மகப்பேறு காலம் நெருங்கிய சமயம், அப்போது எங்கள் பகுதியில் சாலைகளைச் சரிசெய்யும் வேலைகள் நடந்து கொண்டிருந்ததால், போக்குவரத்துக்கு மிகவும் கஷ்டமாக இருந்தது. இரவு நேரமானால் என்ன செய்வோம்என்று நினைத்து மனம் பயப்பட்டது. ஆனால் என் மனைவியோ, "அன்னை நம்முடன் இருக்கும்போது எதற்குக் கவலை?" எனச் சொல்லி, ஆறுதலை தந்தாள். மேலும் அன்னையிடம், மகன் பிறந்தால் "அரவிந்த்" என்றும், மகளாக இருந்தால் "மிர்ரா" என்று அன்னை பெயரை சூட்டுவதாகவும் வேண்டிக்கொண்டேன். அன்னையின் அருளால் "ஸ்ரீ அரவிந்தரே" எங்கள் இல்லத்தில் இன்று தவழ்ந்துகொண்டு உள்ளார். எந்தப் பிரச்சினையாயினும் அன்னையிடம் விட்டுவிட்டால் அவர்கள் பார்த்துக்கொள்வார்கள் என்பது இதன் மூலம் அறியலாம்.

என் மகன் கார்த்திக் MCA இறுதி ஆண்டுத் தேர்வு எழுதும் நேரம். அவனுடன் உடன் எழுதும் மாணவர்கள் ஆறு பேரும் இரவில் அவனுடன் இங்கேயே தங்கி, உணவு உண்டு, படித்து வந்தனர். இறுதி ஆண்டு என்பதால் எல்லோருக்கும் மனதில் பயம். அப்போது அவர்களிடம் நான், "நீங்கள் பயப்பட வேண்டாம். நீங்கள் பரீட்சைக்குச் சென்று வந்தால் போதும். அன்னை உங்களுக்காக, உங்களுடன் உடனிருந்து அவர்களே தேர்வு எழுதுவார்கள்" என்று கூறினேன். அதுபோலவே அனைவரும் தேர்வில் தேர்ச்சி பெற்றதோடு, கார்த்திக் 98% எடுத்து, முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றதும் ஆகும்.

எங்களது வழக்கப்படி கார்த்திக்கு பூணூல் போடும் விசேஷம் நடைபெற்றது. விசேஷ நிகழ்ச்சிக்கு 10 தினங்களுக்கு முன்னால் என்னைப் பெற்ற தாய்க்கு கடுமையான டைபாய்டு ஜுரம். நிலைமை சற்று மோசமாகிவிடவே, நிகழ்ச்சியை நடத்துவதா அல்லது நிறுத்திவிடுவதா என்ற நிலை. அப்போது அன்னையிடம், "அன்னையே! நான் விரும்பும்வரை என்னைப் பெற்ற தாய்க்கு எந்த விதமான இடையூறும் ஏற்படக்கூடாது. இந்த function நல்லபடியாக நீதான் நடத்தித்தர வேண்டும்" என்று வேண்டிக் கொண்டேன். மறுநாளே என் தாயின் உடல்நிலை தேறியதோடு, functionஉம் நன்றாக நடந்ததுடன், இன்று வரை என் தாய் நல்லவிதமாக இருந்துகொண்டு இருக்கிறார். இது போதாதா, அன்னை என்னுடன் இருக்கிறார் என்பதற்கு சாட்சி.

செய்யும் அனைத்துச் செயல்களிலும் அன்னையை முதலாவதாக நிறுத்திச் செயல்பட வேண்டும். கீதையில் சொன்ன "நீ உன் கடமையைச் செய்; பலனை எதிர்பாராதே" என்பது போல் கடமைகளைச் செய்; நற்பயனை அன்னை நிச்சயம் அருள்வார். சுத்தம், நேர்மை, வாய்மை, கடமை தவறாமை, குறித்தநேரம், செய்யும் செயல்களில் உரிய கவனம் போன்றவைகளைக் கூடியமட்டும் கடைப்பிடித்தால் அன்னை நிச்சயம் நம்மைத் தேடி வருவார்கள்.

என்னுள் இருக்கும் அன்னையைவிட எனக்கு வேறு என்ன செல்வம், புகழ், பெருமை வேண்டும். எல்லாம் அன்னைக்கு சமர்ப்பணம்.

என் மனைவி சென்ற ஜனவரி மாதம் 2009, 31ஆம் தேதி பணி ஓய்வுபெற வேண்டிய நாள். அதற்கு முன்பே அன்னையிடம் எந்த பிரச்சினையும், இடையூறும், அவப்பெயரும் இல்லாமலும், நல்லவிதமாகப் பணி ஓய்வுபெற வேண்டும் என்றும், வரவேண்டிய நிலுவைத் தொகைகள் தடையின்றிக் கிடைத்திடச் செய்ய வேண்டும் என்றும் அன்னையிடம் தினமும் பிரார்த்தனை செய்வோம். அது போலவே எந்த பிரச்சினையுமின்றி நற்பெயருடன் பணி ஓய்வு கிடைத்தது மட்டுமன்றி, வரவேண்டிய P.F. கிராஜுவிடி மற்றும் pension தொகைகளும் எவருடைய சிபாரிசுமின்றி அன்னையே விரைவில் பெற்றுத் தந்து உள்ளார். இவை எங்களால் என்றும் மறக்க முடியாத சம்பவங்களாகும். எனவே அன்னையிடம் உங்களை முழுவதுமாக ஒப்படையுங்கள். முழு நம்பிக்கை கொள்ளுங்கள். நிச்சயம் அன்னை எப்போதும் உங்களுடன் உடனிருந்து கண்போல் காப்பார்கள். இது என்னுடைய, எங்களுடைய முழு நம்பிக்கை.

-- என்றும், எந்நாளும், எப்போதும் அன்னை நினைப்பில் P.R.ஸ்ரீதரன், சென்னை-43

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
அதிகபட்ச அறிவு, அதிகபட்ச சந்தோஷம், அதிகபட்சத் திறமை ஆகியவை உயர்ந்தவை. நாமுள்ள நிலையில் இவை தெய்வத்திற்கு நிகரானவை. நாமுள்ள நிலையில் அதிகபட்சமான அறிவு, சந்தோஷம், திறமை பெறுவது இறைவனை அடைவதாகும்.
 
அறிவும், சந்தோஷமும் ஆண்டவனாகும்.

*******



book | by Dr. Radut