Skip to Content

03. அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

அன்பு அமிர்தமாகி, அபரிமிதம் அனந்தமாகும் அழைப்பு

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

கர்மயோகி

  • குடும்பம் என்பது கோயில்
    (Family organisation)
    • குடும்பம் ஊரின் சிறு உருவம்.
      மனிதன் குடும்பத்தில் உருவாகிறான்.
      இந்த மனிதன் ஊருக்குக் கட்டுப்படுவான்.
      உயர்ந்தமனம், ஊருக்குத் தலைமை தாங்கும்.
      தாழ்ந்த மனம் ஊரின் சிறுமைக்குக் கட்டுப்படும்.
      எது நமக்குரியது என்பது நம் மனத்தின் விசாலத்தைப் பொறுத்தது.
      ஊருக்குப் பெரியவன் தவறு செய்தால் ஊர் கேட்காது.
      ஊருக்குப் பெரியவன் தவறு செய்ய முடியாதவன்.
      தன் கையை அரசன் வெட்டிக் கொண்டு, "தவற்றை" விலக்கியது, ஊருக்குப் பெரியவனாவது.

      மாறுவேடத்தில் அரசன் இரவில் ஊரைச் சுற்றி வரும் பொழுது ஒரு வீட்டில் ஆணும், பெண்ணும் கலகலப்பாகப் பேசுவதைக் கேட்டு நின்றான். அது ஒரு வீரனுடைய வீடு. வீரன் போர்முனையிலிருப்பதால் அரசன் ஐயப்பட்டு கதவைத் தட்டினான். தட்டியவுடன் ஆணின் குரல் அவ்வீட்டு வீரனின் குரலெனப் புரிந்து அரசன் விரைவாக அங்கிருந்து சென்றுவிட்டான். மறுநாள் அரசவையில் அவ்வீரன் "என் வீட்டுக் கதவை இன்றிரவு யாரோ தட்டினார்கள்" எனப் புகார் கொடுத்தபொழுது அரசன் "அவனுக்கு என்ன தண்டனை தரலாம்?" எனக் கேட்டான்.

      "கையை வெட்ட வேண்டும்" எனப் பதில் வந்தது. அரசன் தன் கையை வெட்டிக் கொண்டு, நடந்ததைக் கூறினான்.

      - இது இலட்சியம்.
      - யதார்த்தம் எதிரானது.

      ஊருக்கு இலட்சியம், குடும்பத்திற்கு இலட்சியம்.
      அதுவே தலைவனுக்கும், தலைவிக்கும் உரியது.
      தலைமுறை அதுபோல் சிறக்கும்.
      கடந்ததில் நல்லதைத் தவறாமல் எடுத்துக்கொள்ள வேண்டும்.
      காலத்திற்கு ஒவ்வாததை அவசியம் விலக்க வேண்டும் என்கிறார் பகவான்.
      பழைய பண்பின் சாரத்தை, புதிய பழக்கத்தில் வெளிப்படுத்துவது பழையன கழிதலும், புதியன புகுதலும் உலக இயல்பு.
      அதை நிர்ணயிப்பது மனச்சாட்சி.
      மதருக்கு மனச்சாட்சி (adversary) எதிரி.
      ஏனெனில் மனச்சாட்சி அன்றைய உலகைப் பிரதிபலிக்கும்.
      மனச்சாட்சியால் பிரபஞ்சம் முழுவதும் பரவ முடியாது.
      பரவினால் அகந்தை கரையும்.
      அளவோடு வாழ்வது அகந்தை.
      அளவு கரைந்தால் அகந்தை கரையும் - The Life Divine.
      மத வழிபாட்டின் உச்சக்கட்டமான மனச்சாட்சி அன்னை வழிபாட்டுக்குத் தடை.
      அன்னை உலகைக் கடந்தவர்.
      உலகைக் கடந்த பிரபஞ்சத்தையும் கடந்தவர்.
      பிரபஞ்சத்தைக் கடந்த பிரம்மத்திற்குரியவர் அன்னை.
      1946இல் லோகமாதா அன்னைக்குத் துணையாக வந்தார்.
      உலகம் அவரைக் கண்டுகொள்ளவில்லையெனத் திரும்பிப் போய்விட்டார்என அன்னை கூறுகிறார்.

  • குழந்தைகள்
    • குழந்தைகள் முழுவதும் பெற்றோரின் பிரதிபலிப்பு.
      இரு பெற்றோரையும் பிள்ளைகளில் காணலாம்.
      ஜாடை, சாயல் அதை உடலில் காட்டும்.
      குரலும் வெளிப்படுத்தும்.
      குணம் குழந்தைகளில் அடுத்த கட்டம் போகும்.
      நல்ல தகப்பனாருக்குப் பெரிய நல்ல மகன் பிறப்பான்.
      நல்லது பூரணமானால் கெட்டது வெளிப்படும்.
      நல்ல பெற்றோருக்குக் கெட்ட குழந்தை பிறக்கும்.

      மனிதன் முழுமையானவன். நல்லதும், கெட்டதும் உடையவன். கெட்டவன் கெட்டதை வெளிப்படுத்துகிறான். நல்லவன் நல்லதை வெளிப்படுத்துகிறான். தகப்பனார் வெளிப்படுத்- தாதது, பிள்ளையில் வெளிப்படும். அதனால்,

      • நல்ல பெற்றோருக்குக் கெட்ட பிள்ளைகளும்
      • கெட்ட பெற்றோருக்கு நல்ல பிள்ளைகளும் பிறக்கும்.

       மேலும் தகப்பனாரைவிட பிள்ளை அதே குணத்தை அதிகமாகப் பெறுவதும் உண்டு. தகப்பனார் ஒரு குணத்தை முழுவதும் அனுபவிக்காவிட்டால், அதே குணம் பிள்ளையில் தொடர்ந்து வளரும். அதாவது,

      • நல்ல தகப்பனாருக்கு மிக நல்ல பிள்ளையும்
      • கெட்ட தகப்பனாருக்கு மிகக் கெட்ட பிள்ளையும் பிறக்கும்.

      ஒரு குணத்தை, தகப்பனார் முழுவதும் அனுபவித்துவிட்டால் பிள்ளை எதிராக இருக்கும். ஏனெனில் ஆத்மா அக்குணத்திற்கு எதிரானதை அனுபவிக்க முயல்கிறது.

      • போன ஜென்மத்தில் பெரிய ஏழை இந்த ஜென்மத்தில் பெரும்பணக்காரனாகவும்
      • போன ஜென்மத்தில் பெரும்பணக்காரன் இந்தப் பிறவியில் பெரும்ஏழையாகவும் பிறப்பான்.

       இது புரியாத பரம்பரை - unconscious understanding - நல்ல மரத்தில் புல்லுருவி பிறந்தது என்பர்.
      குழந்தையில் தன்னைக் காண்பது 8வது (reversal) மாற்றத்தை ஏற்பதாகும்.
      அது ஞானம் முதிர்வதாகும்.
      அதை ஏற்பது பக்குவம்.
      அளவு கடந்த செலவு, அளவு கடந்த சுயநலம், அளவு கடந்த கடுமை, அளவு கடந்த கயமைபோன்றவை திருவுருமாறும்.
      திருவுருமாறச் சம்மதித்தால் தரித்திரம் பெரிய அதிர்ஷ்டம் ஆகும்.
      அன்னைச் சூழல் தானே திருவுருமாற்றும்.
      திவாலானவர் திருவுருமாற்றம் நம்மையறியாமல் வந்தால் சராசரிக்குக் கீழ் பலனிருக்கும். அது தாழ்வு மனப்பான்மையால் வருகிறது.
      நாமறிந்த திருவுருமாற்றம் அன்பர்கட்குண்டு. இதுவும் அரைகுறையாக இருக்கும்.
      அரைகுறையானதை முழுமையாக்குவது விழிப்படைவது.
      அப்படி நடந்தால் கறுப்புப் பணம் வெள்ளைப்பணமாகும்; தவறு சரியாகும்.
      திருமணமாகாமல் பிறந்த குழந்தைகட்கு திருமணமானபின் பிறந்த குழந்தையின் அந்தஸ்து வரும்.
      அதைப்பெற நாம் உள்ளதை விடவேண்டும்.
      இருப்பதை விட்டால் பறப்பதைப் பிடிக்கலாம்.
      அன்னை வாழ்வு ரிஸ்க் மயமானது.
      ரிஸ்க் (risk) அதிகமானால் சந்தோஷம் அதிகமாகும்.
      அன்னை வாழ்வில் ரிஸ்க் (risk) என்பது அனைத்தையும் இழப்பது.

  • அடக்கம்
    • குருவுக்கு, கணவனுக்கு, மனைவிக்கு, சிறுவர்க்கு, எளியவர்க்கு அடங்குவது.
      அடக்கம் அன்பின் முழுமைச் சிகரத்தைத் தொடுவது.
      அடக்கம்என்பதும் பணிவுஎன்பதும் சற்று வேறுபட்டவை.
      பணிவு அதிகாரத்திலிருந்து எழுவது.
      அடக்கம் அகத்திலிருந்து உணர்வாக எழுந்த பழக்கம்.
      சில வகை ஆண்கள், பெண்கள் அதிகாரத்திற்குப் பேர் போனவர்.
      நாற்காலிமீது காலை எடுத்து வைப்பது இவர்கள் பழக்கம்.
      பாங்க் ஆபீசர் ஒருவர் ஆலை சூப்ரரெண்டெண்ட் நாற்காலிமீது காலை வைத்தார்.
      பாங்க் செக்ரடரி அன்பர் வீட்டில் அதுபோல் நடந்தார்.
      இவர்களில் கூலிக்காரரும் அதிகாரம் செய்வார்கள்.
      அது அதிகாரம் தலைகீழே மாறுவதாகும்.
      இந்த வகையினர் அடுத்தவரைக் கண்டு நடுங்குவர்.
      அந்தபயம் தலைகீழே மாறி - inferiority complex - கர்வமாகிறது.
      இதுபோன்ற நமது நண்பர்கள் அடக்கத்தைத் தேடினால் அது 8 தலைகீழ் (reversal) மாற்றத்தில் ஒன்றாகும்.
      குருவுக்கு அடக்கம் பயத்தால் வருவது.
      கணவனுக்கு அடங்குவது பழக்கம்.
      மனைவிக்கு henpecked husband அடங்குவான்.
      சிறுவர்க்குப் பிரியத்தால் அடங்குகிறோம்.
      எளியவர்க்கு அடங்குவது நல்ல பழக்கம் condescension எனப்படும்.
      இறங்கி வருவதாக நடப்பது, நடிப்பதாகும்.

      உயர்ந்தவர்க்கு அடங்குவதுபோல் எளியவர்க்கும் அடங்குவது பண்பு.
      சக்திக்கு ஈஸ்வரன் சரணடைய வேண்டும் என்கிறார் பகவான்.
      மனைவிக்கு அன்பால் அடங்குவது சமர்ப்பணத்தின் முன் எழும் அர்ப்பணம்.
      பலமில்லாமல் அடங்கினால், மனைவி அதிகாரம் செய்வாள். அதை அன்பாக அனுபவிக்க மனம் பரந்திருக்க வேண்டும். பலமிருந்து, பண்பால் அடங்குவது, அன்பு ஞானம் பெற்று இனிமையாவது. அதை உணர்ந்து ஏற்பது, மனித மனத்தின் சிறப்பு. தத்துவம் பெரியது.

      நடைமுறை அதனினும் பெரியது.
      நடைமுறையின் தத்துவம் நளினமானது.
      கணவன், மனைவி உறவை பாரதி, "அவள் தாளினை கொண்டு மகிழ்ந்திருப்பான்" எனக் கூறுகிறார். இது நம் மரபிலில்லை.
      இது ஸ்ரீ அரவிந்தம். பாரதி எழுதியவை அனைத்தும் பகவான் கூறியவை.

  • அடக்கத்தின் சிறப்பும் உயர்வும்
    • உன்னதமான உண்மையான அடக்கம். இ உன்னதம், உயர்வு, பெருந்தன்மை, இனிமை, பிரியமான பரநலம் ஆகியவை அடக்கத்தின் அம்சங்கள்.
    • பெரிய ஆத்மாவின்முன் பணிந்து, அடங்குவது அடக்கம்.
    • பயந்து, பணிந்து, ஒளிந்து அடங்குவதில்லை அடக்கம்.
    • பணிவை அடக்கம்என நாம் தவறாக நினைக்கிறோம்.
    • அதிகாரத்திற்கும், செல்வாக்குக்கும் அடங்குவது பணிவு.
    • சட்டத்திற்கும், ஒழுங்கிற்கும் பணிவது பணிவு.
    • இமயமலைமுன் நின்றாலும், மகாத்மா எதிரிலும் மனிதன் தான் எளியவன், சிறியவன்என உணர்கிறான்.
    • பெரியதின்முன் எழும் சிறியதின் உணர்வுக்கு அடக்கம் எனப் பெயர்.
    • அடக்கம் என்பது வலிமையின் ஞானம்.
    • அகம் உயர்வாகவும், வலிமையாகவும், இனிமையாகவும் இருப்பது அடக்கமாகும். அவ்வுணர்வுக்கு நெளிய, குழைய, கசங்கத் தெரியாது.
    • ஒருவன் பெரும்பாடுபட்டு முடியவில்லையென விட்ட காரியத்தை நாம் முயன்று முடித்துக் கொடுப்பது பெருந்தன்மைஎன்கிறார் அன்னை.
    • மற்றவருக்கு ஒரு பொருள் கொடுக்க நேரிட்டால், அவர் கேட்பதற்குமுன் கொடுப்பது பெருந்தன்மை. கேட்க மனிதன் சுருங்குவான். அவருக்குச் சுருங்கும் சந்தர்ப்பம் தரக் கூடாது.
    • மற்றவர்க்குரியதைத் தர மறுப்பது தவறு. கேட்ட பின்னும் தர மறுப்பது மட்டம், கயமை.

      கேட்கும்முன் தருவது பெருந்தன்மை.
      கேட்டபின்னும் மறுப்பது சிறிய புத்தி.

    • ஏழ்மை, நோய், அறியாமையிலிருந்து நல்லது எழாது.
    • செல்வர்கள் அதிகம் படித்தவரானால் அடக்கமாக இருப்பார்கள்.
    • தமிழ்நாட்டுப் பல்கலைக்கழக இணைவேந்தர் அப்பல்கலைக் கழக ஸ்தாபகரின் மகன். எவரிடம் பேசினாலும் சமமாக, இனிமையாகப் பேசுவார். சரளமாகப் பேச மற்றவர் உணரும்படி நடப்பார் (he will put others at ease).
    • அது அடக்கம் மட்டுமன்று; செல்வம் தரும் பண்பு.
    • பண்பு பெரியதினின்று எழுகிறது.
      செல்வம் தரும் பண்பு, குடும்பப் பண்பு, அறிவால் பெறும் பண்பு, குணத்தின் பண்பு, செல்வமும் படிப்பும் தரும் பண்பு, குடும்ப அந்தஸ்து தரும் பண்புஎனப் பண்பு பல வகைப்படும். பண்பு, சிறியது - ஏழ்மை, அறியாமை, நோய், கூலிவேலை, ஜெயில்வாசம் - எதனினின்றும் வாராது.
    • பெரிய மனம் பொறுப்பான பதவியிலிருப்பதால் நீண்ட நாள் அப்படி உணர்வு பெற்ற அனுபவம் பண்பாகும்.
    • ஆன்மீகம் தரும் பண்பில் அனைத்தையும் கடந்த உயர்வு உள்ளது.
    • பெண்மையின் சுவைகூடிய பண்புக்கு ஆன்மீக இனிமை உண்டு.
    • செல்வம் காரணமாகவும், உயர்ந்தவர்கள்என்பதாலும், சிறு கிராமத்தில் 50 ஏக்கர், 100 ஏக்கர் நிலமிருப்பதும், மிராசுதாரர் பல ஊர்களில் கர்வமாகக் காணப்படுகிறது. ஒவ்வோர் இடத்தில் ஒரு வகை அதிகாரம் செல்லும்.
    • இதன் காரணங்கள் பல.
      1. பணம், பதவி புதியதாய் வந்து, அதன் சக்தியை, சிறிய மனிதன் உணர்வது (inferiority complex).
      2. இல்லாதவன் இருப்பவன்போல நடிப்பது (inverse pride).
      3. ஏற்கனவே இருந்து, இப்பொழுது இல்லாததை நினைவுபடுத்துவது.

      பெருநிலம் படைத்தவர், திறமைசாலிகள், பணம் உள்ளவர் - உள்ளூரில் வேரூன்றாதவர். மைசூரைச் சேர்ந்தவர் சேலம், கோயம்புத்தூர் ஜில்லாக்களிலும், கேரளாவைச் சார்ந்தவர் தென்பகுதி மாவட்டங்களிலும், தமிழ்நாட்டை வந்து அடைந்தவர்கள் பெருநிலம் உடையவர். ஓர் ஊரில் இவர்கள் 50 குடும்பமிருக்கும். மற்ற தமிழர்கள் 1000 குடும்பமிருக்கும். நிலம் படைத்தவன் சிறுபான்மையாக இருப்பதால் எப்பொழுதும் அவனுக்கு (sense of Insecurity) பயமிருக்கும். ஊராரைக் கண்டு பயப்படுவார்கள். இது தலைகீழாக மாறி, பிறரை மட்டம் தட்டிப் பேசச் சொல்லும். இது உண்மையில் தாழ்வு மனப்பான்மை. நடைமுறையில் மரியாதை என நினைப்பார்கள். அவர்கள் வீட்டார் தவறு செய்தால் கண்டிக்கமாட்டார்கள். வீட்டாரே கண்டித்தால் ஊரில் உள்ள மரியாதையும் போய்விடும். அதனால் இப்படிப்பட்டவரிடம் கிராமத்து உயர்ந்த பண்பைக் காண முடியாது. பேச்சிலிருந்தே இவர்களை அறியலாம்.

      • எவருக்கும் புத்திமதி சொன்னபடியிருப்பார்கள்.
      • பொதுவாக, படிக்காதவர். படிக்காதவன் பெற்ற பணம், இவர்கள் பேச்சில் மணம் வீசும்.

        இந்த மாதிரியான கிராமத்து மிராசுதார்களில் பண்புடைய ஒருவரைக் காண்பது அரிது. பெரிய அறிவாளிஎனத் தன்னைக் கூறுவதில் பெருமை அடைவார்கள்.
        பணம் அதிகமாக இருப்பதால் எல்லாக் கெட்ட பழக்கங்களுமிருக்கும்.
        இவர்கள் பணத்தால் திறமை பெற்றவர் organised.
        அவர்கள் குடும்பத்தில் ஒருவரும் ஏழையாக இருக்க அனுமதிக்கமாட்டார்கள்.
        பொதுவாக, கிராமத்து மக்கள் திறமையற்று, ஏழையாக இருப்பார்கள்.
        அவர்களிடம் ஓரளவு கிராமத்துப் பண்பிருக்கும்.

தொடரும்....

******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
சில்லறைச் சந்தோஷத்தைத் தேடுபவரை நிதானமான மனிதன் குறைவாக நினைக்கிறான். பக்குவமான நிதானமுள்ளவனுடைய மனம் புண்பட்டபொழுது, உள்ளே உள்ள கருணை அதைக் கரைக்கும் என்றறியாது, ரணத்தை ஆற்றும் மனிதாபிமானத்தை நாடி, மனிதாபிமானத்தையே நிலைநிறுத்துகிறான்.
 
பெரிய மனிதனும் புண்பட்டபொழுது சிறிய மனிதனாகிறான்.

******



book | by Dr. Radut