Skip to Content

12. பூரணயோகம் - முதல் வாயில்கள்

பூரணயோகம் - முதல் வாயில்கள்

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கர்மயோகி

(27) பிரம்மம் அசைவற்றது மட்டுமன்று; அசைவதும் கூட - பிரம்மம் பூரணமானது

  • பிரம்மம் சாட்சிப்புருஷன். பிரம்மம் நாம் காணும் உலகம்.
  • சாட்சிப்புருஷன் அசைவற்றது; உலகம் அசைவாலானது என்பது மரபு.

பிரம்மம் பூரணமானது என்பது தத்துவமானால், நாம் அதை ஒரு க்ஷணமாவது காண முடியுமா? காண்கிறோமா? அப்படிக் காண்பது பூரணயோகத்துள் நுழையும் வாயிலாகும்.

ஒரு பிரச்சினை பிரார்த்தனையால் தீருவது பெரிய விஷயம். பிரச்சினை வாய்ப்பாவது அன்பர்கட்கு அறிமுகமான ஒரு விஷயம். அதுவும் நடப்பதுண்டு. வழக்கில் ஒரு கட்சி தோற்கும்; அடுத்தது ஜெயிக்கும். அல்லது சமரசம் நடக்கும். இரு கட்சிகட்கு ஜெயம் என்பதில்லை. அன்பர்க்கு அந்த அனுபவமும் உண்டு. ஓய்வு பெற்று, மீதி நாள் சர்வீஸுக்குரிய சம்பளம் பெற்று, பென்ஷனும் பெறுவது உலகில் இதுவரையில்லை. அது அன்பர் உள்ள இடத்தில் நடப்பதுண்டு. அது பூரண பிரம்மம்.

பூரணபிரம்மம் என்பது ஜீவனில் ஒரு பகுதி ஆன்மாவாகத் திருவுருமாறுவது.

மனம், உயிர், உடல் ஆகியவை பகுதி என்பதுபோல், ஆன்மாவும் ஒரு பகுதி.

மனத்துள்ளும் ஆன்மா உண்டு.

பரிணாமத்தால் மனமே ஆன்மாவாக மாறலாம்.

அதுபோல் உடல் ஆன்மாவாகி, உயிர் ஆன்மாவாகி, மனமும் ஆன்மாவாவது ஜீவன் முழுவதும் ஆன்மாவாகத் திருவுருமாறுவது. இது பிரம்மம் பூரணமாவதாகும்.

ஒரு கம்பனியில் முதலாளி இலாபத்தில் கருத்தாக இருப்பார்.

தொழிலாளி சம்பளம் பெறுவதில் இருப்பான். மானேஜர் போனஸ்மீது குறியாக இருப்பார். இது இயல்பு.

முதலாளிபோல் தொழிலாளியும், மானேஜரும் இலாபத்தில் கண்ணாக இருப்பது அரிது.

முதலாளி தொழிலாளிக்கு அதிகச் சம்பளம் தருவதிலும், மானேஜருக்கு அதிக போனஸ் தருவதிலும் நாட்டமாக இருப்பது பிரம்மம் முழுமை பெறுவதைக் காட்டுகிறது.

வீட்டில் கல்யாணம் நடக்க ஆபீஸில் கடன் தருவது முறை.

ஆபீஸில் எதிர்காலச் சம்பளத்தைக் கல்யாணச் செலவுக்காகக் கொடுப்பது நடைமுறையில்லை, அது புதியது.

பிள்ளை வீட்டார் கல்யாணச் செலவை ஏற்பது, ஆஸ்பத்திரி ஆபரேஷன் செலவை ஏற்பது, கல்லூரி படிப்புச் செலவை ஏற்பது என்பவை உலக வழக்கிலில்லை. அது அன்பர்களில் சிலருக்கு நடக்கும்.

அது பூரணயோக வாயிலாகும்.

பயிற்சி பெற்றுப் போனால் பெரிய கம்பனியில் எடுத்துக் கொள்வார்கள். சிறப்பானவரை எடுத்து, சிறப்பான பயிற்சி கொடுத்து, சிறப்பான சம்பளம் தருவது அரிது.

நாம் செய்யும் தொழில் சிறப்புற அன்னைக்குக் காணிக்கை வழங்குகிறோம்.

அன்னை நம் தொழிலை அவர் தொழிலாக ஏற்று, அது சிறக்க பணம் உதவுவது அன்பர்கட்கு அரிதாக நடந்துள்ளது.

கடன் கேட்டால் கிடைப்பது பெரியது.

கடன் கேட்டால், கேட்ட தொகையை அன்பளிப்பாக அன்பர் பெற்றதுண்டு.

"ஏன் கடன் கேட்டு என்னை ஏமாற்றுகிறீர்கள்? நான் உங்களுக்குக் கார் வாங்கிப் பரிசாகத் தர இருக்கிறேன். கார் வாங்க என்னைக் கடன் கேட்டுவிட்டீர்கள். பரிசு தரும் சந்தர்ப்பம் ஜீவனிழந்துவிட்டது. சரி, கார் விலையைப் பரிசாகத் தருகிறேன்" என்றும் அன்பரிடம் கூறியதுண்டு.

உலக வழக்கிலில்லாமல், இரு கட்சிகட்கும் இலாபமாக, சந்தோஷமாக, காரியம் முடிவதுண்டு. அது அரிது. அன்பர்கட்கு அந்த அனுபவம் உண்டு. அது அருள் என ஏற்கிறோம். அன்பர் யோகம் செய்தால் பலிக்கும்என இந்நிகழ்ச்சி காட்டுவதை அன்பர் கண்டுகொள்ள வேண்டும். பலன் பரிசன்று; பலன் ஞானம், சித்தியாகும்.

(28) வாழ்வில் தீமையில்லாத நிலை

குறை, குற்றம், தவறு, பிசகு, பொய் ஆகியவை முதிர்ந்து தீமை, கொடுமை, கடுமை உற்பத்தியாகின்றன.

அவை வெளிப்படும் வகை: 

  • விஷ ஜந்துக்கள்.
  • தலைவர், தொண்டர்; முதலாளி, தொழிலாளி; மாமியார், மருமகள்; வலியவன், எளியவன்; வல்லரசு, சிறிய நாடு ஆகியவை உறவில் கொடுமை எழுகிறது.
    • அந்தநாளில் கொடுமை செய்தவர், இந்தநாளில் கொடுமைக்குட்பட்டு நசுங்கினார். கொடுமை இடம் மாறுகிறது, அழியவில்லை.
  • அரிபொருளாக நாம் கொடுமை அழிந்து இனிமையான புது உறவுகளைப் பற்றிக் கேள்விப்படுகிறோம்.
    1. மருமகளை சுபாவத்தால் இனிய மாமியார் மகளாக நடத்துவது.
    2. பள்ளிக்கூடம்என்றால் "வாத்தியார் அடிப்பார்", அடிக்காவிட்டால் திட்டுவார், கடுமையாக நடத்துவார் என்ற நிலை பொது. குழந்தைகள் பள்ளிக்கூடம் போக சண்டி செய்யும்.
      • ஆசிரியர் அடிப்பதேயில்லை, திட்டுவதேயில்லை, கண்டிப்பதேயில்லைஎன்ற பள்ளிகளைப் பற்றியும் இந்நாளில் கேள்விப்படுகிறோம்.
    3. குரு என்றால் சிஷ்யனுக்கு சிம்ம சொப்பனம்.
      அது தலைகீழே மாறி தாய், தகப்பனார், நண்பரிடம் பெறாத அன்பை என் குருவிடம் பெறுகிறேன் எனக் கேள்விப்படுகிறோம்.
    4. ஒரு தபஸ்விக்கு முன்பிறப்பில் குருவாக இருந்தவர் இப்பிறப்பில் நல்ல பாம்பாகப் பிறந்து, சிஷ்யனுக்குத் தொடர்ந்து உபதேசம் செய்தார். தினமும் அப்பாம்பு சிஷ்யனிடம் வந்து 'உபதேசம்' செய்து போகும். நல்ல பாம்பின் விஷம் அமிர்தமான ஆனந்த இரகஸ்யம் ஆகிறது.
    5. தலைவர், தொண்டன் பாசமாக உள்ள இடத்தில் தொண்டன் வீட்டில், "இவருக்கு தாய், தகப்பன், மனைவி, மக்களைவிடத் தலைவர் மீது பாசம்" என்று கூறும் நிலையுண்டு.
  • கடுமையான தீமையைச் சந்திப்பது அபூர்வம்.
  • அன்பர்க்கு அக்கொடுமையான உறவு, அன்பருடைய மன மாற்றத்தால் இனிய உறவாக மாறுகிறது.
  • அல்லது ஆரம்பத்திலிருந்தே கொடுமையிருக்கக்கூடிய இடத்தில் இனிமையிருக்கிறது.
  • வேலையே செய்யாதவன், 12 வருஷம் தொடர்ந்து திருடியவன், வேலையைத் தானே விட்டுவிலகும்பொழுது, அவனது சம்பளத்தைப்போல் 300 மடங்கு தொகை கொடுத்தனுப்பியது அன்பர் அனுபவம்.
  • கொடுமைக்குப் பதில் இனிமையிருப்பது அன்பருக்கு யோக அம்சம் உண்டு எனக் கூறுகிறது.
  • அது வாழ்வில் தீமையில்லைஎன்ற உதாரணம்.

Pride and Prejudiceஇல் "என்னை மணக்க வேண்டும்" என்ற பிரபுவை வாய் ஓயாமல் அலங்காரமாகத் திட்டியவளை, திட்டு ஓய்ந்தது, பிரபு வாழ்த்துகிறார். அவள் குடும்பத்திற்கு வந்த பெரிய ஆபத்திலிருந்து குடும்பத்தைக் காப்பாற்றினார்.

அதன் பிறகு "என்னை மணக்க வேண்டும்" என்று மறுமுறையும் கேட்டு, அவளை ஏற்கிறார்.

 

தொடரும்.....

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்
 
எந்தக் காரியத்தைச் செய்ய ஆர்வமும், அறிவும், வேகமும் இருக்கின்றதோ, அது பூர்த்தியாக, மனம் நிறைந்த மகிழ்ச்சியை அளிக்கின்றது. அந்தக் காரியம் எந்த நிலையிலிருக்கிறதோ, அதுவே நாம் உறையும் மனநிலை.
 
காரியம் பூர்த்தியாகும் மகிழ்ச்சியே நம் உண்மை நிலை.

******



book | by Dr. Radut