Skip to Content

10. அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

அன்பர்களின் அன்றாட வாழ்வில் அன்னையின் பிரத்யட்சம்

(சென்ற இதழின் தொடர்ச்சி)

கர்மயோகி

வேலை போய்விட்டது. போன வேலை திரும்பக் கிடைக்க, பொதுவாக ஒரு வருஷமாகும். இதுவரை என் அனுபவம் அதுவே என்றவர்க்கு மேற்சொன்ன கருத்தைச் சொல்லி, அகவுணர்வைப் பூர்த்தி செய்தால் வேலை கிடைக்கும். அதற்கு ஒரு வருஷம் உங்கள் அனுபவம் ‘எந்த நிமிஷம் அகவுணர்வு பூர்த்தியாகிறதோ, அதே சமயத்தில் வேலை கிடைக்கும்’ என்று சொன்னால், அவர் ‘நான் வேலை வேண்டும் என்றுதானே நினைக்கின்றேன்; பூர்த்தி செய்ய என்ன இருக்கிறது’ என்று கேட்கிறார். வேலை வேண்டும் என்பது வேறு. வேலை செய்யப் பிரியப்படுகிறேன் என்பது வேறன்றோ? வேலை செய்யப் பிரியப்படாததால், வேலை போயிற்று. அந்த மனநிலைக்குரிய புற நிகழ்ச்சி வேலை போவது. அந்த மனநிலையை மாற்றி, உண்மையாகவே மாற்றி, இப்பொழுது வேலை செய்ய வேண்டும் என்ற பிரியத்தை மனதில் ஏற்படுத்தினால், அகவுணர்வு பூர்த்தியாகிறது. அப்படி மனத்தை மாற்றி, உள்ளுணர்வைப் பூர்த்தி செய்தபின், வெளிநாட்டிலிருந்து செல்வாக்குள்ள உறவினர் வீட்டுக்கு வந்து உள்ளூரில் பெரிய கம்பெனியில் பெரிய வேலைக்கு ஏற்பாடு செய்து 15-ஆம் நாள் வேலையில் சேர்ந்தார் ஒருவர்.

நமக்குப் புற நிகழ்ச்சியாகத் தெரிவது அகவுணர்ச்சியின் பிரதிபலிப்பே. புற நிகழ்ச்சி நம் கையில் இல்லை; அகவுணர்ச்சி நம் கட்டுப்பாட்டுக்குட்பட்டது. அதை மாற்றும் திறன் நமக்குண்டு. அதைச் செய்ய முன்வருவோர்க்கு வெளிநிகழ்ச்சிகள் அதே சமயத்தில் கட்டுப்படும். பிரார்த்தனை பலிக்க உதவி செய்யும் முறைகளில் இதுவும் ஒன்று.

ஓர் அமெரிக்கருக்குச் சிறு வயதிலிருந்து ஒரு கதை எழுதி வெளியிட வேண்டும் என்ற அவா அதிகமாகவுண்டு. 6 வயதில் ஒரு கதை எழுதினார். M.A. முடித்தபின் பிரபலமான தினசரி பேப்பரில் நிருபராக வேலை செய்தார். வெளிவரும் ஒவ்வொரு கதையையும் படிப்பார். தாம் எழுத இருக்கும் ‘கதை’யுடன் ஒப்பிடுவார். எப்படியாவது ஒரு புத்தகம் தம் பெயரில் வெளிவர வேண்டுமென்ற ஆவல் மிகுந்திருந்தது. தென் அமெரிக்காவில் ஒரு பத்திரிகைக்கு ஆசிரியராகச் சென்றார். இங்கிலாந்தில் ஒரு சர்வதேச மாத இதழுக்கு 15 ஆண்டுகள் ஆசிரியராக இருந்தார். அபிலாஷை பூர்த்தியாகவில்லை. ஆசிரியராகப் பிறர் எழுதுவதை வெளியிடும் பாக்கியமே கிடைத்தது. மேலும் உயர்ந்த பதவிகளை எட்டினார். வயது 50-ஐத் தாண்டியது. அன்னையைப் பற்றிக் கேள்விப்பட்டார். ஆசிரமம் வந்தார். ஓர் உயர்ந்த புஸ்தகம் எழுத நிறைந்த கருத்துகளை வைத்துக்-கொண்டு, அதை வெளியிடும் தகுதியில்லாமல் தகுதியுடைய ஒருவரைத் தேடிக்கொண்டிருக்கும் இளைஞரைச் சந்தித்தார். இவருடைய தகுதி மிக உயர்ந்தது. நிருபர், ஆசிரியர் பதவிகளை வகித்து, அதைவிட உயர்ந்தவர். கதை எழுத முடியவில்லை. தம் துறையில் இளைஞர் புதுக்கருத்துகள் சொல்வதைக் கேட்டார். இளைஞருடைய கருத்தும், இவருடைய தகுதியும் சேர்ந்து புத்தகம் வெளிவந்தது. 5 மொழிகளில் பிரசுரம் ஆயிற்று. இவருக்கிருந்த ஆர்வம் பெரியது. அது அபிலாஷை- யாகவே இருந்தது. அதற்குரிய திறமையில்லை. தம் துறையிலும் எழுதக்கூடிய தகுதியில்லை; வெளியிடக்கூடிய அந்தஸ்து இருந்தது. அன்னையிடம் வந்தவுடன் இவருடைய ஆர்வத்தைப் பூர்த்திசெய்ய, இவரிடம் எந்தக் குறையிருந்ததோ அதை இன்னொருவர் நிறைவு மூலம் பூர்த்தி செய்தார் அன்னை. வாழ்க்கை பூர்த்தி செய்யாத விஷயங்களை, பூர்த்தி செய்யத் திறமையில்லாத விஷயங்களை அன்னை பூர்த்தி செய்கிறார். அன்னையின் குறிக்கோள் சிருஷ்டி. அதாவது புதியன படைத்தல். ஒருவருக்கு எழுத்துத் திறமையிருக்கிறது; வெளியிடும் அந்தஸ்து இல்லை. மற்றொருவருக்குப் புத்தகத்தை வெளியிடும் அந்தஸ்து (social status) இருக்கிறது; எழுதும் திறமையில்லை. இவையிரண்டும் சேர்ந்தால் புத்தகம் என்பது சிருஷ்டிக்கப்படும். அதுபோன்ற சிருஷ்டியை அன்னை அனுதினமும் செய்துகொண்டிருப்பதால் நமக்குள்ள திறமையெல்லாம் செலவு செய்து முயற்சியை முடித்தபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், நமக்கில்லாத விஷயத்தைக் கொண்டுவந்து சேர்த்து, பிரார்த்தனையைப் பூர்த்தி செய்வார்.

திறமையில்லாத பணக்கார முதலாளிக்குத் திறமையும், நேர்மையும் உள்ள மானேஜர் அமைந்தால், அதை அதிர்ஷ்டம் என்கிறோம். நேர்மையே இல்லாத வல்லுநரை எவரும் நம்பி வேலை கொடுக்கமாட்டார்கள். வல்லுநராக (expert) இருந்தால் மட்டும் போதாது, நேர்மையும் வேண்டும். நேர்மையான பார்ட்னர் கிடைப்பதை அதிர்ஷ்டம் என்கிறோம். பொறுப்பில்லாத கணவனுக்குப் பொறுப்புள்ள மனைவி அமைவதை அதிர்ஷ்டம் என்பது வழக்கம். நமக்கு எது இருக்கிறது, எது இல்லை என்ற பிரச்சனையில்லை. இருப்பதை முழுவதுமாகப் பயன்படுத்தியபின் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தால், இல்லாத அனைத்தையும் மற்றவர்கள் மூலமாகவும், புது சந்தர்ப்பங்கள் மூலமாகவும் அன்னை பூர்த்தி செய்வது வழக்கம். அதுவே அன்னைக்கு உரிய சிறப்பு. சிறப்பால் தவறாது அன்னை நம் வாழ்வில் செயல்பட நாம் செய்ய வேண்டியது பிரார்த்தனை. பிரார்த்தனையை அதற்குரிய ஆன்மிக இலட்சணத்துடன் பூர்த்தி செய்ய வேண்டும். பிரார்த்தனையை ஆரம்பிக்கும்முன் அதற்குரிய நிபந்தனைகளைச் சரிவரப் பூர்த்தி செய்ய வேண்டும். நம் கடமைகளையும், திறமைகளையும் முழுவதுமாகப் பயன்படுத்த வேண்டும் (exhaust) என்பது ஒரு நிபந்தனை. இதுபோன்ற பிரார்த்தனை தவறியதை நான் 31 வருஷ காலத்தில் ஒரு முறையும் பார்த்ததில்லை. எவரும் கண்டதாக நான் கேட்டதும் இல்லை.

பிரார்த்தனையை எளிதாகவும் கருதலாம். எல்லாவற்றையும் தன்னுள் அடக்கிய பெரிய விஷயமாகவும் கருதலாம். அப்படிக் கருதினால், பிரார்த்தனைக்குரிய ஒவ்வொரு அம்சத்தையும் ஓர் உதாரணத்தின் மூலம் விளக்கி எழுத முயன்றால், அது கட்டுரையாக ஆரம்பித்து புத்தகமாக வளர்ந்துவிடும். இக்கட்டுரையில் முக்கியமான எல்லா அம்சங்களையும் குறிப்பிட்டுச் சில சிறப்பான உதாரணங்களையும், குறிப்பான நிகழ்ச்சிகளையும் மட்டும் சொல்கிறேன்.

பிரார்த்தனையின் ஜீவனோடு தொடர்புகொண்டு அதை ஆரம்பிக்க நேரம், இடம் குறிப்பிட்டு, அதற்குமுன் நம் கடமைகளை எல்லாம் பூர்த்தி செய்தபின், நாம் எடுத்துக்கொண்ட பிரச்சனையை அன்னைமுன் வைத்தபின், என்ன வேண்டும் என்று பிரார்த்திப்பது ஒரு கேள்வி. அதற்குரிய பதில்கள் பல.

கடன் கொடுத்தோம். இனி வாராது என்ற நிலையில், ‘இந்தக் கடன் திரும்பி வர வேண்டும்’ என்றாவது, ‘வட்டியுடன் வர வேண்டும்’ என்றாவது, ‘ஒரே மாதத்தில் கிடைக்க வேண்டும்’ என்றாவது குறிப்பாகப் பிரார்த்தனை செய்யலாம். பெரும்பாலும் பிரார்த்தனை செய்தபடியே பூர்த்தியாகும். அப்படியில்லை என்றால், அதைவிட ஒரு பெரிய நல்லதைக் கொடுப்பதற்கு மட்டுமே அன்னை எதிர்பார்க்கும் பலனை மாற்றுவார்.

தவறிய பிரார்த்தனை:

வியாபாரி ஒருவர் ஜில்லா ஏஜென்சி எடுக்க முழுக்க அபிப்பிராயப்பட்டு, அதற்குரிய முறையில் பிரார்த்தனையைப் பொறுத்தவரை எதுவும் தவறில்லாமல் செய்துவிட்டு, ஒரு மாத காலம் அலைந்துகொண்டிருக்கும்பொழுது, சமாதிக்குப் பல முறை வந்தவர் முழுவதுமாக ஏமாந்துவிட்டார். ஏஜென்சி கிடைக்கவில்லை என்ற ஏமாற்றம் பெரியது. தாங்கிக்கொள்ள முடியவில்லை என்றாலும் அன்னைமீது நம்பிக்கைக் குறையவில்லை. மீண்டும் ஒருமுறை ஆசிரமம் வர முடிவு செய்தபொழுது வழியில் ஒரு கார் ரிப்பேராகி இருப்பதைப் பார்த்து அவர்களுக்கு உதவப்போய், உதவி நட்பாக மாறி, நட்பு வியாபாரக்கூட்டாக மாறி, கூட்டு ஏழாம் நாள் ஷேர் வாங்கியதில் முடிந்து, மனம் நிறைந்த நிலையில் அவர் கண்ட புதுமை என்னவென்றால், எந்தப் பொருளுக்கு ஜில்லா ஏஜென்சி கிடைக்கவில்லையோ, அந்தப் பொருள் உற்பத்தி செய்யும் கம்பெனியில் இவர் வாங்கிய ஷேர் சர்ட்டிபிகேட் இவரை அக்கம்பெனியின் டைரக்டராக நியமித்தது.

அன்னையிடம் செய்த பிரார்த்தனை தவறுவதில்லை. தவறினால் அதன் மூலம் நாம் எதிர்பார்ப்பதைவிடப் பெரிய நல்லதே நடக்கும். இது அன்னையின் அவதாரச் சிறப்பு. பெரும்பாலும் குறிப்பிட்ட பிரார்த்தனைக்குப் பலன் கேட்டது போலிருக்கும். பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்துடனிருந்தால், கேட்டது கேட்டபடியே கிடைக்கும். இதுவே பிரார்த்தனைகளில் சிறியது.

நமக்குத் தெரிந்த பலன் இருக்கிறது. அதைக் கேட்கிறோம். கேட்டபடி கிடைக்கிறது. இதைவிட வேறென்ன வேண்டும் என்று நினைக்கலாம். போர்ட் டிரஸ்டில் குமாஸ்தாவாகப் போன மேதை சீனுவாச ராமானுஜத்திற்கு, கேம்பிரிட்ஜ் போகும் வாய்ப்பு அந்த உத்தியோகத்தின் பின்னணியில் புதைந்திருந்தது அவருக்கோ, மற்றவர்க்கோ தெரியவில்லை. அதேபோல், ஒவ்வொரு நிகழ்ச்சிக்குப் பின்னும், ஒரு பெரிய உலகம் மறைந்திருக்கிறது. அதை நாம் அறிவதே இல்லை. நமக்குப் புரிந்த பலனைக் கேட்டால் அன்னை அதைக் கொடுக்கிறார். அதற்குப் பதிலாகப் பிரச்சனையை அன்னைமுன் வைத்து, அன்னையின் திருவுள்ளப்படி இது தீர வேண்டும் என்று பிரார்த்தனை செய்வது சிறப்பு. இப்படிச் செய்வதால் பிரார்த்தனை சமர்ப்பணமாகி அந்த நிகழ்ச்சி மூலம் அன்னை நம் வாழ்வில் எவ்வளவு சிறப்பாகச் செயல்பட முடியுமோ அவ்வளவு சிறப்பாகச் செயல்படுவார். நடைமுறையில் நமக்குத் தெரிந்த பலன் என்று ஒன்று இருந்தால் மனம் அதை மட்டுமே விழையும்; வேறெதையும் காதில் போட்டுக் கொள்ளாது. இதுபோல் பிரார்த்தனை செய்வது அரிது; செய்தால் சிறப்புண்டு.

ஒரு வியாதி வருகிறது என்றால் பிரார்த்தனை செய்தால் அது குணம் அடையும். பிரார்த்தனை அதற்குரிய இலட்சணத்-துடன் இருந்தால் அந்த வியாதி பின்னர் வாராது. வியாதி வந்தவுடன் ஒரு முறை பிரார்த்தனை செய்தால் சில சமயங்களில் உடனே அது விலகும். விலகியபின் வியாதி நமக்கு நினைவு வருவதில்லை. மீண்டும் வியாதி வந்தால்தான் நினைவு வரும். அதுபோன்ற சமயங்களில், பிரார்த்தனையை முறையாக, அர்த்தபுஷ்டியாக, சிறப்பாகச் செய்யா விட்டாலும், இது மீண்டும் வரக்கூடாது என ஒரு பிரார்த்தனையையும் சேர்த்துக்கொண்டால், அந்தப் பிரார்த்தனையும் பூர்த்தியாகும்.

ஒரு தொந்தரவு வந்தால் அது விலகவேண்டும் என்றுதான் நமக்குப் பிரார்த்தனை செய்யத் தோன்றும். மாறாக, இந்தத் தொந்தரவு நல்லதாக மாறி, நல்ல பலனைக் கொடுக்க வேண்டும் என்றும் பிரார்த்தனை செய்யலாம்; அதுவும் பலிக்கும்.

கஷ்டம் வந்து கண்ணீரால் நனைந்திருக்கும் சமயம், இது எப்பொழுது விலகும் என்று மட்டுமே மனம் காத்திருக்கும். அன்னையின் பல்வேறு அம்சங்கள் தெரிந்தவர்கள் அந்தச் சமயத்தில் இந்தக் கஷ்டம் வந்து விலகுவதால் நான் அன்னையிடம் நெருங்கி வர வேண்டும் என்று பிரார்த்தித்தால், கஷ்டம் விலகும். நமக்கு நம்பிக்கையும், பக்தியும் பெருகி ஆன்மிகச் சிறப்புறுவோம். கோபம் போன்ற குணக்கேட்டால், அவசரப் புத்தியால் ஒரு சிக்கலை நாம் ஏற்படுத்திவிட்டால், பிரச்சனையைத் தீர்க்க பிரார்த்தனை செய்கிறோம். (அத்துடன் பிரச்சனைக்கு வித்தான அவசரமும் நம்மை விட்டுப் போகவேண்டு ம், மீண்டும் இதேபோல் அவசர புத்தியால் சிரமம் ஏற்படக்கூடாது என்ற பிரார்த்தனையையும் சேர்த்துக் கொண்டால், அது பிரச்சனைக்குரிய அஸ்திவாரத்தையே மாற்றுவது ஆகும்). குடும்பத்தில் ஏற்பட்ட கோளாறுகள் பல. அந்தத் தலைமுறை போய்விட்டது. அவர்கள் செய்த கர்மத்தால் இப்பொழுது நான் கஷ்டப்பட வேண்டியிருக்கிறது என்றால், பிரச்சனையை விலகச் செய்யும் பிரார்த்தனையுடன் அதன் பூர்@வாத்திரமான கர்மமும் கரைய மற்றொரு பிரார்த்தனையும் சேர்த்துக்கொள்ளலாம். ஒரு பெரிய சொத்தை விலைக்கு வாங்கும்பொழுது, விலை படிந்து பத்திரம் சிக்கல் இல்லாமலும், குளறுபடிகள் இல்லாமலும் சொத்து கைக்கு வர வேண்டும் என்பது இயல்பான பிரார்த்தனை. இது போன்ற நேரங்களில், பெருந்தொகை ஈடுபட்டிருப்பதால், விஷயம் பெரியது என்பதால், மனிதர்களுடைய குணவிசேஷங்களைச் சிறப்பாக அறிய முடியும். தொகை அதிகமானால் நிதானமானவன் அவசரப்படுவான். பரம்பரையான நாணயஸ்தன் நாணயத்தை இரண்டாம்பட்சமாக்கி தொகைக்குரிய அளவில் பேச்சை மாற்றிப் பேசுவான். எல்லோரிடமும் மறைந்துள்ள குணவிசேஷங்கள் செயல்படும் நேரம் அது. நமக்கு அதை எல்லாம் கவனிக்க நேரமிருக்காது. காரியம் கூடிவர வேண்டும் என்பதே முக்கியம். அன்னைக்கு இதுபோன்ற சந்தர்ப்பங்களில் செய்யும் பிரார்த்தனையுடன் மனிதனுடைய குண நுணுக்கங்களைப் புரிந்துகொள்ள வேண்டும் என்று வேறொரு பிரார்த்தனையையும் சேர்த்துக்கொண்டால், சிறிய மனிதனுக்குள்ள பெருந்தன்மை, பெரிய மனிதனிடம் இதுவரை வெளிப்படாத மிகப்பெரிய குணம், நல்லவனுக்கு உள்ள கெட்ட குணம், நண்பனுடைய துரோக மனப்பான்மை, லஞ்சத்திற்குப் பேர்போன புரோக்கருடைய சாமர்த்தியம், நாணயம் போன்றவை வெளிவந்து 25 வருஷ அனுபவத்தை 25 நாட்களில் நமக்களிக்கும்.

இன்று ஏற்பட்டுள்ள இந்தப் பிரச்சனையை அன்னை தீர்க்க வேண்டும், அத்துடன் எதிர்காலத்தில் இதுவோ, மற்ற எதுவோ பிரச்சனையாக நம் வாழ்வில் எதிர்படக்கூடாது என்றும் பிரார்த்திக்கலாம். கடன்பட்டுக் கலங்கியவர்கள் கடன் தீரும்பொழுது அப்படி நினைப்பதுண்டு. அன்பர்கள் அப்படிப் பிரார்த்தனை செய்தால் அது பலிக்கும். 1916-இல் அன்னை ஜப்பானில் உள்ள சமயம் ஒரு கொடிய ஜுரம் எங்கும் பரவி அன்னையையும் பாதித்தது. அன்னை தம்மைக் குணப்படுத்திக்கொண்டபின் நாடெங்கும் ஜுரம் விலகியது. அதன்பின் அந்த ஜுரம் ஜப்பானை விட்டே நிரந்தரமாகப் போய்விட்டது.

ஒரு பிரச்சனை ஏற்பட்டு, அது பிரார்த்தனையால் தீரும் பொழுது இனி எந்தப் பிரச்சனையையும் தீர்க்கும் திறன் எனக்கு வேண்டும் என்றும் பிரார்த்திக்கலாம். குடும்பத்தில் சண்டையும், பூசலுமாக இருந்தால், பூசல் ஒழியப் பிரார்த்திப்பதுடன், இந்தப் பூசல் ஒழிவதன் விளைவாக இனி இக்குடும்பம் அன்புக்கும், ஒற்றுமைக்கும் எடுத்துக்காட்டாக இருக்க வேண்டும் என்றும் பிரார்த்திப்பது நல்லது.

(தொடரும்)

**********



book | by Dr. Radut