Skip to Content

09.மாங்கல்ய பலம்

மாங்கல்ய பலம்

திருமாங்கல்யம் என்பது இந்தியர்க்குரியது. தமிழர்க்கு அது சிறப்பானது. முற்போக்குத் திருமணங்கள், கலப்புத் திருமணங்கள், வேறு மதத்தினரை மணப்பது ஆகிய இடங்களிலும் பெரும்பாலும் திருமாங்கல்யம் விலக்கப்படுவதில்லை. மனைவியின் மனஉறுதியும், உணர்வும் கணவனின் ஆயுளை நிர்ணயிக்கும் என்பதே மாங்கல்ய பலத்தின் கரு. ஒரு விஞ்ஞானிக்குத் தீர்க்கமுடியாத வியாதி, அவர் Ph.D. படிக்கும்பொழுது வந்துவிட்டது. பட்டம் எடுக்கும்வரை உயிரோடிருக்கமாட்டார் என டாக்டர் கூறினார். அதையும் தெரிந்தபின் ஒரு பெண் அவரை மணக்கச் சம்மதித்தாள்.

அவர் அதன் பிறகு இன்றுவரை (சுமார் 30 வருடங்களுக்கு மேல்) உயிருடனிருக்கிறார். அது அப்பெண் அவருக்கு அளித்த ஆயுள்.

"சர்வம் பிரம்மம்' என்பது உபநிஷதம். "மாங்கல்ய பலம்' என்ற தத்துவம் "சர்வம் பிரம்மம்' என்ற தத்துவத்திலிருந்து எழுந்தது. வாழ்வுக்குப் பொருள் மையம் என்பதைப் பொருளில்லார்க்கு இவ்வுலகில்லை என்றார்.அருள் வேறு, பொருள் வேறு. அருள் அவ்வுலகிற்கும், பொருள் இவ்வுலகிற்கும் உடையது. சர்வம் பிரம்மம் என்பதை பகவான் ஏற்று,விளக்கும்பொழுது, அருளுக்கு ஏற்படுவது புதுக் கருத்து,

அருள் பொருளை தன்னுட்கொண்டது என்பது அப்புதுக் கருத்து.

அதுவே ஸ்ரீ அரவிந்தமாகும்.

பெண்ணிற்குரிய இடத்தைக் (இடம் என்பது வீட்டில் பொருள், மனத்தில் அன்பு) கணவன் மனம் உவந்து அளித்து, அதில் பெருமகிழ்வு கொண்டால், அதை அவள் அதற்குரிய இலட்சணத்துடன் விரும்பி ஏற்றுக்கொண்டால், அப்பெண்

1) கணவனுக்கு மாங்கல்ய பலத்தைத் தருவாள்,

2) வீட்டிற்கு அருளாகிய பொருளாக இருப்பாள்.

-அவள் வீடு அபரிமிதமான சுபிட்சமாக இருக்கும்.

-அவள் கணவனுக்கு நீண்ட ஆயுளுண்டு.

இதனுள் உள்ள ஆன்மீகத் தத்துவம் பெரியது. விஞ்ஞானம் 100 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடுவதை இது தரவல்லது. ஜடத்தில் அவர்கள் தேடும் ஜீவியத்தினுள், ஜடத்தைக் காணும் தத்துவம் இது.

*******


 



book | by Dr. Radut