Skip to Content

01. பூரண சமர்ப்பணம்

பூரண சமர்ப்பணம்

சமர்ப்பணம் பூரணம் பெறும் பொழுது சரணாகதியாகும். மூச்சு விடுவதற்கு இடைவெளியில்லை என்பது போல் சமர்ப்பணம் செய்யும் பொழுது இடைவெளி வரக்கூடாது. சமர்ப்பணத்திற்குரிய இலட்சணம் பூரணம். ஒரு சிறு கம்பெனி பாட்டில் விற்கிறது. இதுவரை அவர்கள் பெற்ற பெரிய ஆர்டர் 15,000 பாட்டில்கள். விற்பனை என்ற செயலில் பல பகுதிகள் உண்டு. விற்பனை இலாபம் தரும் என்பது ஓர் எண்ணம். விற்பனையைச் சமர்ப்பணம் செய்தால் அது சேவையாகும். சேவை வேலையைச் சிறப்பாக்கும். வேலை சிறப்படைய அதன் பகுதிகள் முழுமையுற்றுச் சிறப்படைய வேண்டும். பாட்டில் சரக்கு. அது எல்லா வகையிலும் முதல் தரமாக இருந்தால் விற்பனை சிறப்படையும். பாட்டில் முதல் தரமாக அதன் உருவம் அழகாக இருக்க வேண்டும், மூடி பாட்டிலினுள் பொருந்துவது மிருதுவான மென்மையாகும். விற்பனைக்கு எழுதும் ஆர்டரில் தவறு இருக்கக் கூடாது. ஓர் ஆர்டர் டைப் செய்ய 3லீ நிமிஷங்களாகும் எனில் பொதுவாக அதை 9 நிமிஷங்களில் முடிப்பார்கள். அவசரமாகச் செய்தால் 5 நிமிஷங்களில் 2 தவறுகளுடன் டைப் செய்வார்கள். 3 மணி 31 நிமிஷங்களில் டைப் செய்வது சமர்ப்பணமாகாது. அது 3.30 ஆக வேண்டும். தவறிருந்தால் சமர்ப்பணம் குறையாகும். பெரு முயற்சியால் தவறின்றி 3.30-இல் செய்து முடிக்கலாம். அது சமர்ப்பண மாகும். முயற்சியின்றி செய்வது முழுமை. செயலுக்கு ஜீவனுண்டு. செயலே தன்னை முழுமையாகப் பூர்த்தி செய்வது பூரணம். அந்த கம்பெனியில் எவரும் சமர்ப்பணம் செய்யவில்லை. அன்பர் ஒருவரை கம்பெனிக்கு ஆலோசனை செய்ய அழைத்தார்கள். அவர் வருகைக்கு நாள் குறித்தார்கள். அடுத்த ஆர்டர் சைனாவிலிருந்து வந்தது. அன்பரால் அன்னை ஸ்பர்சம் பெற்றது கம்பெனி. அதில் அன்னை சூழல் உண்டு. ஆர்டர் ஐந்து மில்லியன் பாட்டில்கள் ஆயிற்று.

நம் செயல் சமர்ப்பணத்தால் பூரணமானால் மடி நிறையும், மனம் நிறையும். நெஞ்சு விம்மும், ஆத்மா விழிக்கும், பத்து ஆண்டிற்குமுன் பண நெருக்கடியால் ஓர் அன்பர் கதறிய நேரம் ஓர் அன்பருக்குச் செய்தி போய் அவர் இருபது லட்ச ரூபாயைக் கொடுத்தார். பெற்றவர்க்கு நினைவிருக்கிறதா என்று தெரியவில்லை. 2 அல்லது 3 ஆண்டுகட்குமுன் 50,000 திருப்பிக் கொடுத்தார். அதன்பின் பலமுறை 50,000 கொடுத்துள்ளார். கால் பாகம் முடிந்திருக்குமா எனத் தெரியாது. நான் இக்கட்டுரையை எழுதிக் கொண்டிருக்கும் சமயம் அவர், கடன் கொடுத்தவர் பாங்குக் கணக்கில் 50,000 கட்டிய செய்தி வந்தது. சமர்ப்பணத்தைப் பற்றிய கட்டுரைக்கு அந்தப் பவர் உண்டு. சமர்ப்பணம் செய்யாமல் அன்பனாக முடியாது. அதிகாரம் செய்தால், ஒட்டுக் கேட்டால், கோள் சொன்னால், சின்ன புத்தி செயல்பட்டால், கேட்காவிட்டால் எதையும் செய்யலாம் என நினைத்தால், அதிகாரியின் பவரை அவரைஅறியாமல் செலுத்தினால், சாப்பிட ஆசை எழுந்தால், பொய் சொன்னால், ராகு காலம் பார்த்தால், தகப்பனார் கிளார்க்கான பொழுது ஆபீசர் என்றால், மிகைப்படுத்தி, பொய் சொல்லி பெருமைப்பட கட்சியில் தொண்டரை M.L.A. என்றால் அவர் பல ஜென்மங்கட்கு அன்னையை அறிய முடியாது. அன்னையைப்பற்றிப் பேசினால் அவருக்கு ஜுரம் வரும். இவ்வளவும் செய்பவரிடம் உள்ள “நல்லதின்’’ மூலம் அன்னை சூழல் செயல்பட்டு 27 ஆயிரத்திற்கு விற்க முடியாத பொருளை அன்னை தரிசனத்திற்கு அவர் வந்ததால் 81 ஆயிரத்திற்கு விற்க முடிந்தது. அன்னையை அறிவது ஆன்மிக பாக்கியம். ஏற்பது யோகம்.

**********



book | by Dr. Radut