Skip to Content

03.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

கர்மயோகி


 

836) உலகம் ஜடத்தால் ஆளப்படுகிறது. ஜடம் மனத்தை நிர்ணயிக்கிறது. சிருஷ்டியும் பரிணாமமும் மனத்தால் நடப்பவை. அவற்றுள் மனம் ஜடத்தை நிர்ணயிக்கிறது. எனவே ஜடத்தை மாற்றி, அங்கு மனத்தை பிரதிஷ்டை செய்தால், அளவுகடந்த முன்னேற்றமான மாற்றம் ஏற்படும் என்பது மட்டுமில்லை. அடுத்த பரிணாமக் கட்டத்தில் அளவால் நிர்ணயிக்க முடியாத வளர்ச்சிக்குரிய முன்னேற்றமும் எழும்.

மனமும் ஜடமும் இடம் மாறினால் உலக முன்னேற்றம் பெரியதாகும்.

முதல் உலகப் போர் பெரிய நிகழ்ச்சி. தந்தி சுமார் 100 ஆண்டுகட்கு முன் கண்டுபிடிக்கப்பட்டு கொஞ்சம், கொஞ்சமாக 1850, 1860இல் நடைமுறைக்கு வந்தது. முதல் உலகப் போரை, தந்தியில்லாவிட்டால் நடத்தியிருக்க முடியாது. 1940-இல் telexஉம் வந்துவிட்டது. மூன்றாம் உலகப் போரைத் தடுக்க உலகம் பெரும்பாடுபட்டது. விமானமில்லாமல் இரண்டாம் உலகப் போரை நடத்தியிருக்க முடியாது.

ஒரு முக்கியமான மாற்றம் உலகப் புரட்சியைக் கொண்டுவரும். மனிதகுலம் முன்னேறும்பொழுது ஒவ்வொரு முக்கியக் கட்டத்திலும் ஒரு முக்கியமான மாறுதல் ஏற்பட்டுள்ளது. அது சிறியதாகவோ, பெரியதாகவோ இருக்கலாம். நல்ல மாற்றம் நல்ல புரட்சியையும், தவறான மாற்றம் ஆபத்தையும் விளைவிக்கும். அதுபோன்ற பல நிகழ்ச்சிகள்:

. அம்மை தடுப்பு ஊசி வந்தபின் இந்தியாவில் அம்மை அழிந்தது.

. ஐரோப்பாவில் மூன்றில் ஒரு பங்கு மக்கள்தொகையை அழித்த

பிளேக் அதுபோன்ற ஒரு தடுப்பு ஊசியால் அழிக்கப்பட்டது.

. இந்தியச் சுதந்திரம் ஒரு மனிதனால் பெறப்பட்டது.

. சர்ச்சில் இல்லை எனில் ஹிட்லர் உலகை ஆள்வான்.

. Anti-biotic கிருமிநாசினி வந்தபின் டைபாயிட் போன்ற விஷ ஜுரங்கள் அழிந்து ஆயுள் வளர்கிறது.

. அச்சு வந்ததால் கல்வி பரவியது.

இன்று பஸ், இரயில், போன் போன்றவையில்லை என்றால் வாழ்வு எப்படியிருக்கும்? மின்சாரம் இல்லையெனில் வாழ்வேயில்லை. அவைபோல் ஒவ்வொரு கட்டத்திலும் ஒரு மாறுதல் ஏற்பட்டதை உலகம் அறியும். அடுத்த பெரிய மாறுதல் ஏற்பட ஜடத்தால் ஆளப்படும் உலகம் மனத்தால் ஆளப்பட வேண்டும். யார் சரி, யார் தவறு என்பதை நிர்ணயிக்க மல்யுத்தம் உதவிய காலம் உண்டு. போர் என்பது அப்படி ஏற்பட்டதே. பஞ்சாயத்து, கோர்ட் ஏற்பட்டபின் அடிதடி, சண்டைக்கு அவசியமில்லாமல் போய்விட்டது. பணக்கார நாடுகள் பணக்காரர்களாக இருக்க ஒரே முக்கியக் காரணம் கல்வி. கல்வியில்லாத நாடு ஏழை நாடு. கல்வி பெற்ற நாடு செல்வரான நாடு. உலகில் ஜடத்திற்குப் பதிலாக மனம் ஆண்டால்,

. போர் அறவே அழியும். . வன்முறை இருக்காது.

. கொலை, கொள்ளை, குற்றங்களிருக்காது.

. பசி, பட்டினி, பஞ்சம், வறட்சியிருக்காது.

. விவாகரத்திருக்காது.

. குழந்தைகள் கொடுமைக்காளாகமாட்டார்கள்.

. மனிதனுக்குக் குறை என்பது இருக்காது. இப்படிப்பட்ட உயர்ந்த நிலை - சொர்க்கம் - ஏற்பட மனம் ஜடத்தை அகற்றி ஆட்சிக்கு வரவேண்டும்.


 

தொடரும்....


 


 


 



book | by Dr. Radut