Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்புள்ள ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தருக்கு!

உங்களுக்கு நான் நன்றி சொல்என்னை இக்கடிதத்தை எழுத வைத்ததற்கு நன்றி. என் அப்பாவிற்கு திடீரென்று காது சுத்தமாகக் கேட்காமல் போய்விட்டது. நாங்கள் அதிகமாக சத்தம் போட்டுப் பேசினால்தான் என் அப்பாவிற்கு கேட்கும். அவர்கள் மிகவும் ஜாலியான டைப். ஆனால் அந்த ஒரு வாரம் அவ்வளவாகப் பேசக்கூட இல்லை. ஆபீஸிலும் யாரிடமும் பேசாமல் அமைதியாக இருப்பதைப் பார்க்க மிகவும் கஷ்டமாக இருந்தது.

அப்பொழுது எல்லாம் எங்களுக்குப் பக்கதுணையாக இருந்து, எங்களுக்கு ஆறுதலாக இருந்தது ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தர் மட்டும்தான். தினமும் காலையில் எழுந்து அன்னையைக் கும்பிட்டபிறகு அப்பாவிடம் போய் காது இப்போது கேட்கிறதா என்று கேட்பேன். அவர்கள் அது காதில் விழாமல் அமைதியாக இருப்பார்கள். அப்பொழுது நான், அக்கா, அம்மா, மூவரும் அன்னையிடம் சொல்லிஅழுவோம். நான் தினமும் இரவு படுக்கச் செல்லும்முன் அன்னையிடம், நாளை காலை எழும்போது அப்பாவிற்கு காது கேட்டு இருக்க வேண்டும் என்று வேண்டிவிட்டு போய் தூங்குவேன். ஆனால் ஒரு வாரமாக காது கேட்கவே இல்லை. பின் White Roses bookஐ எடுத்துப் படித்தேன். அதில் கீழ்க்கண்ட வாக்கியம் என்னை மிகவும் பாதித்தது.
 

"எல்லா நோய்களும் பகைச் சக்திகளின் தாக்குதலாகும். அதையே நான் விஷமம் என்று சொல்கிறேன். அச்சக்திகள் அதன்மூலம் நம் சகிப்புத்தன்மையைச் சோதிக்கின்றன. நம்முடைய நம்பிக்கையை உடைத்துச் சுக்குநூறாக்க முயல்கின்றன. இன்னும் அதிக சகிப்புத்தன்மையுடனும், இன்னும் அதிக நம்பிக்கையுடனும் அவற்றுக்கு நாம் பதிலடி கொடுக்க வேண்டும். அப்பொழுது அவை மிக மோசமாக முறியடிக்கப்பட்டு விலகிவிடுகின்றன. பேருண்மைக்கு ஒரு பெருவெற்றி கிடைக்கிறது.

எவ்வளவுக்கு எவ்வளவு சகித்துக்கொள்கிறோமோ அவ்வளவுக்கு அவ்வளவு அதிகம் பிரபுவின் சக்தியும், அன்பும் நம்முடன் இருக்கின்றன. பெருவெற்றியின் மகிழ்ச்சியும் கூடுதலாகிறது."

"அவசரமாகச் செய்வதைவிட நிறைவாகச் செய்வதில் மிகவும் அதிக மகிழ்ச்சி கிட்டுகிறது. உண்மையான அன்பு சாசுவதமானது, அனைத்திலும் இனியது."

"இறைவன் அரைகுறை வெற்றியையும், நீடித்து நிற்காத வெற்றியையும் விரும்புவதில்லை. அவரது வெற்றி முழுமையானதாக, சாசுவதமானதாக இருக்க வேண்டும். அதனால்தான் நாம் சரியான நேரம் வரும்வரை சகித்துக்கொண்டு காத்திருக்க வேண்டியிருக்கிறது. எனினும், நம்பிக்கையுடனும், நம்பிக்கையில் உறுதியுடனும் இருக்கும்போது சகித்துக்கொள்வதுகூட எளிதாக வருகிறது."

இதைப் படித்தவுடன்தான் நோயின் காலக்கெடுவை நாம் நிர்ணயிக்காமல் ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தரிடம் பொறுப்பை விட்டுவிட்டு நோயை ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தர் துணையுடன் சகித்துக்கொள்ள வேண்டும் என்பதை புரிந்துகொண்டு ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தரிடம் என் அப்பாவிற்குச் சரியாக வேண்டும் என்று மட்டும் கூறி நம்பிக்கையோடும், உறுதியோடும் வேண்டினேன். வேண்டி இரு நாட்களிலேயே என் அப்பாவிற்கு துல்யமாகக் காது கேட்க ஆரம்பித்துவிட்டது. என் நன்றியை மேலும், மேலும் ஸ்ரீ அன்னை & ஸ்ரீ அரவிந்தருக்குத் தெரிவித்துக்கொள்கிறேன்.


 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

முதிர்ச்சியின் உயர்ந்த புறத்தோற்றம் விவேகம்.

விவேகம் பக்குவத்தின் பவித்திரமான குரல்.


 


 



book | by Dr. Radut