Skip to Content

06.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V                                                               கர்மயோகி

837) குடும்பம், நாடு, கம்பெனி, மனிதன் ஆகியவை தங்கள் நிலையில் முன்னேற்றம் பெறுவதற்குப் பதிலாக, அடுத்த பரிணாமக் கட்டத்திற்குரிய வளர்ச்சியைத் தரும் முன்னேற்றத்தைப் பெற, ஜடத்தை ஆன்மாவால் மாற்றிக்கொள்ள வேண்டும்.

ஜடமும், ஆன்மாவும் இடம் மாறினால் குடும்பம், நாடு பெருமுன்னேற்றமடையும்.

முன்னேற்றம் என்பது இருப்பதைவிட உயர்வது. சிறு விவசாயி பெரிய விவசாயி ஆவது போன்றது. பரிணாமத்திற்குரிய வளர்ச்சி என்றால் விவசாயம், வியாபாரம், சர்க்கார் வேலை, அரசியல், அரசியல் பதவி என்று படிப்படியாக உயர்வது. அம்முன்னேற்றத்தைச் சிறு விவசாயி பெரு விவசாயி ஆவதுடன் ஒப்பிட முடியாது.

SSI சிறு தொழிலதிபர்கள் 100 பேருடன் ஆரம்பித்த தொழிற்பேட்டைகளில் 10 ஆண்டுகள் கழித்துப் பார்த்தால் 25 மூடியிருக்கும். அவருள் பாதி பேர் திவாலாகியிருப்பார்கள். அடுத்த 25 பேர் கிட்டத்தட்ட அதே நிலையில் போராடி உயிரை வைத்திருப்பார்கள். அடுத்த 30 பேர் சிறு தொழிலிலிருந்து வளர்ந்து பெரிய தொழிலாக அங்கேயே செயல்படுவார்கள். மீதி 20 பேரில் ஓரிருவர் அகில இந்திய அளவில் பெருகியிருப்பார்கள். கொஞ்சம் பேர் இலட்சத்திலிருந்து கோடி, நூறு கோடி என வளர்ந்திருப்பார்கள்.

கொஞ்சம் பேர் தொழிலை அரசியலில் கொண்டுபோகும் பெரிய அரசியல்வாதிகளாகவும், மற்றவர்கள் தொழில் சம்பந்தப்பட்ட ஸ்தாபனத் தலைவர்களாகவும், பத்திரிகை நடத்துபவர்களாகவும் மாறி உயர்ந்திருப்பர்.சிறு குடும்பம் பெரிய குடும்பமாவது வளர்ச்சி; அது அதிர்ஷ்டம்.பொதுவாக அளவில் சிறு குடும்பம் அளவுகடந்த செல்வம் பெற்று,அளவில் பெரிய குடும்பமானால், அந்த அளவுகடந்த செல்வம்

மீண்டும் பழைய அளவிலேயே இருப்பதாகத் தெரியும். பிரபலமானபோதும், செல்வாக்கு உயர்ந்திருந்தாலும் வளர்ந்த செல்வத்தை வளரும் குடும்பம் பகிர்ந்துகொள்வதால் அடிப்படை வருமானம் பழைய அளவிலேயே அமையும். குடும்பத்தில் ஓரிருவர் அமெரிக்கா போனால், அதன்மூலம் எல்லா நிலைகளும் மாறிப்போகும். மாற்றம் உயர்வு தரும் மாற்றமாகும். ஒரு பையன் டென்னீஸில் பிரபலமானால் அதுவே நடக்கும். சிறு வயதில் அரசியல் சந்தர்ப்பம் கிடைத்தாலும் அப்படியே. நாட்டின் மாறிய நிலையால் ஆரம்ப நாளில் வருமானத்திற்காக ஆரம்பித்த நர்ஸரி பள்ளி பிரபலமாகி கல்லூரியாக மாறி மெடிகல் காலேஜ் ஆரம்பிக்கும் நிலையிலும் குடும்பங்கள் உயர்வடைகின்றன.

. வளர்ச்சி, இருப்பது பெருகுவது.

. பரிணாம வளர்ச்சி, இல்லாதது நம்மிடையே வந்து, வந்த நிலையில் பெருகுவது.

சக்தி பெருகினால் வளர்ச்சி வரும். பரிணாம வளர்ச்சி பெற அடிப்படை நிலைகள் மாறவேண்டும். உழைப்பாளி தலைவனாவது, தலைவன் அறிஞனாவது, அறிஞன் ஞானியாவது போன்றவை பரிணாம வளர்ச்சி தரும். யோக பாஷையில்,

. ஜடம் தன் ஆட்சியை விட்டுக்கொடுத்து ஆன்மாவை ஆள அனுமதித்தால் பரிணாம வளர்ச்சி ஏற்படும்.

. நாடு முன்னேறுவதால் உடல், உயிர், மனம் என்ற அடுக்குகளில் அனைவரும் முன்னேறலாம்.

. அன்னையை ஏற்றால் அவையனைத்தையும் தருவதுடன் தமக்கேயுரிய அதிர்ஷ்டத்தையும் தருவார்.


 

ஜீவிய மணி

ஒரு சொல் சாதிக்கும் யுகதர்மம்.


 


 


 


 



book | by Dr. Radut