Skip to Content

03.சமர்ப்பணமும் சரணாகதியும்

"அன்னை இலக்கியம்"

சமர்ப்பணமும் சரணாகதியும்

                                                   (சென்ற இதழின் தொடர்ச்சி....)         சியாமளா ராவ்

தீபா கூறவும் இருவருக்குள்ளும் சந்தோஷம் பொங்கியது.

"அம்மா! அன்னை, ஸ்ரீ அரவிந்தர் பத்தி, எங்களுக்கு ஒண்ணுமே தெரியாது. சொல்லுங்கம்மா. எங்களுக்குக் கிடைச்ச இந்த அனுபவத்தால, இன்னும், இன்னும்னு, அவங்களைப் பத்தின எல்லாத்தையுமே தெரிஞ்சுக்க மனசு துடிக்கிறதும்மா. சொல்லுங்களேன்.... ப்ளீஸ்!''

"நிச்சயமா சொல்றேன் கோகிலா. ஆனா, நானும் உங்கள மாதிரிதான். அன்னையையும், ஸ்ரீ அரவிந்தரையும் பத்தித் தெரிஞ்சுக்கணும்னா நிறையப் படிச்சுத்தான் தெரிஞ்சுக்கணும். ஆனா, அதைவிட நீங்க.... உங்க ஊரான சென்னையிலிருக்கிற தியான மையத்துக்குப் போங்க. அங்கே நிறைய புத்தகங்கள் இருக்கும். வாங்கிப் படிங்க. அப்பப்ப, அங்கே நடக்கிற சொற்பொழிவைக் கேளுங்க. சந்தேகங்களை அவங்களைக் கேட்டே தெரிஞ்சுக்கலாம். சரி, இப்ப எனக்குத் தெரிஞ்ச அளவுல சொல்றேன். முக்கியமா, நம்ம பெரியவங்கள்லாம், காலம்காலமா சொல்லிட்டு வரது என்ன? எந்த ஒரு கஷ்டமோ, நஷ்டமோ வந்தாலும், ஹும்.... எல்லாமே, போன ஜன்மத்து பாவம். அந்தக் கர்மவினையைத்தான், கர்மபலனா அனுபவிக்கிறோம்னு சொல்லுவாங்க. நாமளும், அதுவும் சரிதானே.... பெரியவங்க சொல்றது சரி தான்னு இருப்போம். அனுபவிப்போம் கஷ்டங்களை.... சரிதானே கோகிலா.....''

"ஆமாம் ஆண்ட்டி. அதுல என்ன தப்பு? தொன்றுதொட்டு வர பேச்சுகள்தானே. இல்லேன்னா.... ஏன் இந்த கஷ்டம் வரணும்?''

"சரி, அப்ப நீ போன ஜன்மத்துல என்ன தப்பு செஞ்சே? இல்லே ஆனந்த், என்ன அநியாயம் போன ஜன்மத்துல செஞ்சார்? சரி, விடு.உன்னோட அப்பா, அம்மாவோ, ஆனந்தைப் பெத்தவங்களோ, போன ஜன்மத்துல, பெரீசா யாருக்காவது துரோகம் செஞ்சாங்களா? அது என்னன்னு சொல்லேன்.... நானும் தெரிஞ்சுக்கறேன்''.இருவரும் பதில் சொல்ல முடியாமல், ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்து, விழிகளில் ஆச்சரியத்தையும், அதே சமயம், "இது என்ன புதுவிதமான கேள்வி...'' என்பதுபோல் கண்களாலேயே, தீபாவையே பார்த்தார்கள்.

"ஏன்? பதிலே இல்லே? சொல்லக்கூடாதுன்னா.... இல்லே, சொல்லத் தெரியலையா..... சொல்லுங்க...''

"தீபாம்மா, உங்க கேள்வியோட தாத்பர்யமே.... எனக்குப் புரியலே....பூர்வ ஜன்ம வினைங்கறது, எந்த மதத்துலேயுமே..... சம்மதம்னு ஏத்துக் கொள்ளப்பட்ட ஒண்ணுதானே. தொன்று தொட்டு வந்ததுன்னு சொல்றதும் நிஜம்தானேம்மா. அனாதிகாலமா, சொன்னதையும்,கேட்டதையுந்தானே இன்னிக்கும் பேசறோம், நடக்கிறோம், நம்பறோம்.அதுல என்னம்மா தவறு? புரியலே. நீங்க கேட்ட கேள்விகளுக்கும் பதில், எங்களால மட்டுமில்லே, யாராலயும் முடியாது. ஆனா, எதுக்காக....நாங்க கேட்டதுக்கும், நீங்க எங்களைக் கேட்டதுக்கும் சம்பந்தமே இல்லையே... ஒண்ணுமே புரியலையேம்மா....''

"கோகிலா, சம்பந்தம் இருக்கு. எதுவுமே தவறுன்னு சொல்லலே.வேறே நல்ல வழியிருக்கும் போது, அதை ஏத்துக்கலாமேன்னுதான் சொல்றேன். அதனாலதான் கேள்வி கேட்டேன். நீயும், யாராலயும் முடியாதுங்கறதைத்தான் உன்னோட பதிலா சொன்னே. அதை ஒத்துக்கிறதானே... அதுல எந்த மாற்றமும் இல்லையே....''புரியாமலேயே "இல்லை' என்ற பதிலைக் கூறினாள் கோகிலா.

"அப்ப சரி. நீ உண்மையை ஒத்துக்கறே. நாம என்ன பாவம், என்ன கொடுமை செஞ்சோம்கறத தெரிஞ்சுக்காமலேயே, அதோட பலனை அனுபவிக்கணும்கறது, நமக்குத் தேவையானதுதானா.... சொல்லு....''

"தேவையில்லேதான்.... ஆனா....''உடனே, "நிறுத்து' என்பதுபோல் தன் கையைக் காட்டினாள் தீபா.

"அதுதான் அன்னை சொல்றதும். "போன ஜன்மத்து வினைகளை இந்த ஜன்மத்துல நீ ஏன் அனுபவிக்கணும்? வேண்டாமே. அதற்கான வழி முறைகள் இருக்கே. அதுபடி நடந்தால், எல்லாம் தன்னாலே விலகிடும்'என்று சொல்றார். அதுதான் அன்னையோட வழி''.

"ஆண்ட்டி! நிஜமாவா..... உண்மையாவா சொல்றீங்க? புரியலையே.அது எப்படி ஆண்ட்டி? அப்ப, அந்த வழிமுறைகள்லாம் எங்களுக்கும் சொல்லுங்களேன். அன்னையால, என்னோட கஷ்டம் தீரும்னா, நான் நிச்சயமா, அன்னையோட வழிமுறைகளை ஏத்துக்கறேன். என்னால முடிஞ்சவரையிலும், அதைக் கண்டிப்பாய் கடைபிடிப்பேன். எனக்கு நன்மைதான் ஏற்படும்கற நம்பிக்கையுமிருக்கு ஆண்ட்டி. நீங்க, எங்களை இப்ப கேட்ட கேள்விகளும், அதுக்கு நாங்க ரெண்டு பேருமே பதில் சொல்லாததுமே, புரியாத புதிரைப் பிடிச்சுண்டு, இன்னும் கஷ்டப்பட்டுண்டிருக்கோம்கற அளவுக்குப் புரிஞ்சுது. உடம்போட உபாதைக்கு, டாக்டர்கிட்ட போறோம். அவர் சொன்னபடி கேக்கறோம்.அதேபோல நம்ம மனசுக்கு, அன்னைகிட்டே சரணாகதி அடைஞ்சு,அவர் சொல்றதைக் கேட்டு நடக்கறதுல, எனக்கு ரொம்ப ரொம்ப சம்மதம் ஆண்ட்டி''.

"சபாஷ்! ஆனந்த், உன்னையறியாமலேயே, உன் வாயிலிருந்து நழுவிய வார்த்தை, அன்னைக்கு ரொம்ப உகந்ததுப்பா. அந்த வார்த்தைதான் சரணாகதி. சரணாகதிங்கறது வாய் வார்த்தையா சொல்லிப் பிரயோஜனமில்லே ஆனந்த். நம் மனசு நிரம்பி, தளும்பி,

உணர்ச்சிபூர்வமாய் சரணாகதியடையணும். அதேபோலத்தான் சமர்ப்பணமும். சமர்ப்பணமும், சரணாகதியும் ஒன்றோடொன்று தொடர்புடையதுதான் ஆனந்த். இந்த இரண்டையுமே, நாம உள்ளுணர்வோட, முழுமையான, உண்மையான, மனநெகிழ்வோட செஞ்சோம்னா, அன்னையை நெருங்கலாம். ஆனா, அதுலயும் ஒரு உண்மையைத் தெரிஞ்சுக்கணும், புரிஞ்சிக்கணும்''.

"என்ன ஆண்ட்டி, சொல்லுங்க. நீங்க என்ன சொன்னாலும் செய்யறேன். புரிஞ்சுக்கறேன். சொல்லுங்க.....'' பரிதவிப்போடு கேட்டான் ஆனந்த்.அது புரிந்தது தீபாவிற்கு. ஆனாலும் அவசரப்படாமல் பொறுமையாகவே கூறினாள்.

"உங்க ரெண்டு பேருக்குமே சொல்றேன், எனக்குத் தெரிஞ்சஅளவுல சொல்றேன். அன்னையோட அருள் பூரணமா கிடைக்க, சில முக்கியமான கோட்பாடுகள் இருக்கு. கேட்க ரொம்ப சுலபமாயிருக்கும். செய்யலாம்.ஆனா, நடைமுறையில தீவிரமாகக் கடைபிடிக்கணும். அதுல, சிலதை மட்டும் சொல்றேன் கோகிலா. அன்னைக்குச் சுத்தங்கறது மிகவும் பிடித்தமானது. சத்தம்.... அதாவது சண்டை, சச்சரவு, பெரிசா பேசறதுங்கறதுன்னு வீட்டில் கத்தல் கூடாது. உண்மை, மிகவும் முக்கியம். அன்னை சத்தியத்துக்குக் கட்டுப்பட்டவர். நாம, அன்னையோட கோட்பாடுகளைத் தெரிஞ்சுகிட்டாமட்டும் போதாதுப்பா. ஆனந்த்! அதுபடி நடந்தா, நம்மை நாமே சுத்தீகரிக்கப்பட்டு, புடம்போட்ட தங்கம்போல் ஆவோம்கறது நிச்சயம்ப்பா. அந்த அளவுக்கு அன்னையைப்பற்றிய புத்தகங்களைப் படிச்சுத் தெரிஞ்சுக்கணும். சுத்தம்கறது, வெளிப்புறச் சுத்தம்மட்டுமில்லே ஆனந்த். நம்ம மனசும், எண்ணங்களும்கூட சுத்தமாயிருக்கணும்கறது மிகமிக முக்கியம். கோபத்தையடக்கணும்,பொறாமை கூடாது. இதெல்லாம் என்ன புதுசுன்னு உனக்குத் தோணறதா? தப்பில்லே. அந்த மாதிரி நடந்துக்கிறது எவ்வளவு கஷ்டம்னு நடைமுறையில செயல்படுத்தற போதுதான் புரியும்ப்பா. கஷ்டங்களைத் தாண்டி, நாம அந்தக் கோட்பாடுகள்ல நிக்கறப்ப, நமக்குக் கிடைக்கிற அபரிமிதமான பலன், எதிர்பாராத அளவிற்கு இருக்கும். அன்னை எல்லாத்துக்குமே ஒரு விதிவிலக்கு. கர்மவினைகளை இந்த ஜன்மத்துல அனுபவிக்க வேண்டாம்னு சொன்ன ஒரே.... ஒருத்தர் அன்னை மட்டுந்தான் ஆனந்த். இன்னும் எவ்வளவோயிருக்குப்பா. இந்த ஒரே ஒரு நாளுல பூராவுமா சொல்றதுங்கறது முடியவும் முடியாது, கஷ்டமும்கூட. ஆனா, அன்னையின் தியானமையத்துக்கு அடிக்கடி போவதை வழக்கமாக்கிக்கிட்டு, அங்குள்ள புத்தகங்களையும் வாங்கிப் படிங்க. அங்கு நடக்கும் கூட்டுப்பிரார்த்தனையில கலந்துக்கங்க. அதிமனசக்தி ஏற்படும். இருண்டதையெல்லாம் விலக்கும். நீங்களே உணருவீங்க. ஆனந்த், கோகிலா, நீங்க ரெண்டு பேருமே முடிந்தபோது மதர்ஸ் சென்டருக்குப் போய் க்ரூப் மெடிடேஷனில் கலந்துக்குங்க. அந்த வைப்ரேஷன் உங்களுக்குப் புரியும். நம்மை நாமே பாரமற்று லேசாக உணருவோம் கோகிலா. கூட்டுப்பிரார்த்தனைக்கு சக்தி அதிகம்மா. ம்.... சரி சரி நேரமாச்சு. வாங்க, படுத்துத் தூங்குங்க. காலையில் பார்க்கலாம். குட் நைட்''.

தீபா கூறிவிட்டுச் சென்றாள். ஆனந்தும், கோகிலாவும் தங்களுக்குக் கொடுக்கப்பட்ட அறையினுள் நுழைந்தனர். படுக்கவேண்டும், தூங்க வேண்டும் என்ற எண்ணமே அற்றுப்போயிருந்தது.

"கோகிலா, பிஸினஸுக்காக நான் எத்தனையோ தடவை வந்துருக்கேன். அப்போதெல்லாம் கிடைக்காத ஓர் அனுபவம் இப்ப,உன்னோட வந்தபோது ஏற்பட்டிருக்கு..... நிஜம்மா, எனக்குள்ளேயே,நானே.... இங்கேயும், அங்கேயுமா.... பரவசத்தோட ஓடறேன் கோகிலா.எங்கிட்டேயிருந்த பயம், சுயபரிதாபம், எல்லாமே போயிடுத்து கோகிலா.தீபா ஆண்ட்டி பேசப் பேச.... இன்னும்.... இன்னும்னு, அவங்கப் பேச்சைக் கேட்கணும்கற ஆர்வம்தான் அதிகமாயிருந்தது, இல்லையா கோகிலா?''ஆர்வத்தோடு கேட்டான்.

"நீங்க ரொம்ப அழகா சொல்லிட்டீங்க. ஆனா, இதையெல்லாம் சொல்லத் தெரியாம, உங்க பேச்சுலேயே.... நானும் மனசளவுல கலந்துகிட்டேன்கறது தான் உண்மை ஆனந்த். எனக்கென்னமோ, இன்னிக்கு தூக்கம்வராதுபோல. ரெண்டு பேருமா.... அன்னையை நினைச்சு தியானம் செய்வோமா.....''

"சரி கோகி. கை, கால் அலம்பிண்டு உட்காரலாம்''. இருவருமாய் சம்மணமிட்டு, கண்களை மூடி அமர்ந்தார்கள். விடிவிளக்குமட்டுமே எரிந்தது. மின்விசிறி சத்தமின்றி சுழன்று, காற்றைத் தென்றலாக்கியது.மௌனம், மௌனம், மௌனம். இருவரின் தியானமும் அவர்களை மெய்மறக்கச் செய்தது.

****

மறுநாள் பட்டாச்சார்யாவுடன், கோகிலாவும், ஆனந்தும் கம்பனிக்கான வேலையின் பொருட்டுச் சென்றார்கள். புறப்படுவதற்குமுன், இருவரும் அன்னை, ஸ்ரீ அரவிந்தரை வணங்கிவிட்டுத் தான் புறப்பட்டார்கள். பேச்சுகள் சுமுகமாய் முடிந்தது. கணவன், மனைவி, இருவருமே கலந்து பேசியது, அனைவருக்குமே சுமுகமாய், சந்தோஷமாய் இருந்தது. காபி, டிபன்என சாப்பிட்டு, அனைவரிடமும் விடைபெற்று, வீடு திரும்பினார்கள், மகிழ்ச்சியுடன்.வீடு வந்தபின், அன்றும் மாலையில் தியானமையம் செல்லவேண்டும் என்ற எண்ணம் அதிகமாகியிருந்ததில், அவர்களை ஓய்வெடுக்கக்கூடஅனுமதிக்கவில்லை.கிளம்புவதற்கு, பத்து நிமிடங்களுக்குமுன் திடீரென ஆனந்த் கோகிலாவைப் பார்த்துக் கேட்டான், "கோகிலா, பசங்க எங்கேம்மா?கண்ணுல தென்படலையே.... விளையாடப்போயிட்டாங்களா? அம்மா எங்கே? சரவணனும், அப்பாவும், கம்பெனிக்குப் போயிருப்பாங்க. ஆனா,

அம்மா எங்கே போனாங்க? உங்கிட்டே சொன்னாங்களா? என்ன கோகி.... ஏன் பதிலே சொல்லமாட்டேங்கறே....''விக்கித்துதான்போனாள் கோகிலா. "இதென்ன வேதாளம் முருங்கமரம் ஏறினதுபோல.....'' கண்களில் மளுக்கென நீர் நிரம்பிவிட்டது.பதில் பேசமுடியவில்லை.

இதயத்தினுள் பெரிய யுத்தமே நடக்க ஆரம்பித்தது.

ஆனந்த் அறைக்குள் நுழைய, கோகிலா, தீபா வீட்டு பூஜை அறையினுள் நுழைந்தாள்.

பெரியதான, அன்னை ஸ்ரீ அரவிந்தர் படங்களின் உருவில், கருணையுடன் இருந்தார்கள்.வெடித்துவந்த விம்மலை அடக்கி, சரிந்து வணங்கினாள். எழுந்திருக்க முடியாமல், குலுங்கிக் குலுங்கி அழலானாள். மனதோ அன்னையிடம் புலம்ப ஆரம்பித்தது.

"தாயே.... இது என்னம்மா சோதனை. ஏனிப்படி, அவருக்கு மறுபடியும் அந்தக் குறை வந்துவிட்டதே. உன்னை, எனக்குத் தெரியாது. ஆனாலும்,நீ தான் என்னோட குறையெல்லாம் தீர்ப்பவள் என்று உணர்ந்தேன்.உன் மடியில் இடம் தந்தாய். உட்கார்ந்தேன். என்னை அணைத்தாய்.எல்லாமே உன் ஆசீர்வாதங்களாகத்தானே ஏற்றுக்கொண்டேன். என்னை மட்டுமா? ஆனந்தையுமல்லவா கைப்பிடித்து, சந்தோஷமாக அழைத்துப் போனாய். அவரும் மெய் மறந்துபோனதில், மறுபடியும் உன்னைக் காணத்தானே அம்மா, ஓடோடி வருகிறோம். அதற்குள்.... ஏன்.....புரியவில்லையே.... எங்கே..... எப்போது.... என்ன தவறு செய்தோம்.... புரியலையே..... அம்மா.... அம்மா....''முதுகின்மேல் கரம் படிவதையறிந்து, சிலிர்த்தெழுந்தாள் கோகிலா.தீபாதான் அவளைத் தொட்டு எழுப்பியது. எழுந்தாள் கோகிலா.

"அம்மா! ஏம்மா.... இப்படி.... இன்னிக்கு.... அவருக்கு....'' கேவினாள் கோகிலா.

"கோகிலா, தளர்ந்துபோகலாமா..... கூடாதும்மா. அன்னை கண்டிப்பா நல்லதே செய்வார் கோகிலா. யானையின் பலம் தும்பிக்கையிலே, மனுஷங்க பலம் நம்பிக்கையிலேன்னு கேட்டிருக்கேதானே....''

"அப்பப்ப, நான் இன்னும் இருக்கேன்னு தலைகாட்டிண்டிருக்கே. சில சமயங்கள்ல அதிகமாகவேயிருக்கு. அதனாலதாம்மா.... அவர்கூட நானும் வந்தேன்...''.

ரொம்ப சரியாத்தான் செஞ்சுருக்கே. அன்னை உங்களுக்குக் கண்டிப்பா நல்லதேதான் செய்வார் கோகிலா. இல்லேன்னா உங்க ரெண்டு பேருக்குமே தியானத்துல வந்துருப்பாரா. நிச்சயமா செய்வார். மொதல்ல உங்க நம்பிக்கையைத் தளரச் செய்யிறது தப்பு. உன்னை நீயே உறுதிப்படுத்திக்கோ கோகிலா. அன்னை சத்தியம்கறத நம்பணும்மா. நாம, சாதாரண மனுஷங்க. அன்னை தெய்வம் கோகிலா. மனுஷங்களான நாம, கொடுக்கிறவங்களைப் புகழறோம், பாராட்டறோம், சந்தோஷப்படறோம். அவங்க கொடுக்காதபோது, இவைகளையெல்லாம் தரதுமில்லே, கண்டுக்கிறதுமில்லே. இது சாதாரண மனுஷப்பிறவிகளான நம்முடைய இயல்பு. அவ்வளவுதான். ஆனா, அன்னையோ ஒரு தெய்வப்பிறவி கோகிலா. நமக்கு எந்தச் சமயத்துல, என்ன வேணும்னும் தெரியும், அதை எப்படிக் கொடுக்கணும்னும் தெரியும். நம்மைவிட, நமக்கு, எப்போ, எது தேவைங்கிறது, நிச்சயமா, அன்னைக்குத்தான் தெரியும் கோகிலா. நாம, நமக்குத் தேவைன்னு ஒரு சமயத்துல நினைக்கிறது, அந்த நேரத்துல, அனாவசியமாக்கூட இருக்கலாம். உதாரணமா, சரியான சம்பாத்தியமில்லாத தம்பதிகளுக்கு, குழந்தை ஆசைக்காக வேண்டினால், அன்னைக்குத் தெரியும். முதல் குழந்தையைக் காப்பாற்றத் தேவையான வசதியைத்தான் தருவார். பிறகுதான் குழந்தை பாக்கியம். இது உண்மையில் நடந்த சம்பவம் கோகிலா. ஆனால், டாக்டரே தேவையில்லேன்னு அன்னை சொல்லவேயில்லை. டாக்டரிடம் காண்பிச்சு, மருந்து குடுக்கறது தப்பேயில்லே. ஆனந்த்! அன்னையிடம் உனக்கு இருக்கிற நம்பிக்கையை உணர்வுபூர்வமா அதிகமாக்கிக்கோப்பா.

அப்புறமா அந்த உணர்வோட மருந்து சாப்பிடு. அன்னை, அந்த மருந்து மூலமாகவே உனக்குள் புகுந்து, பூரண குணமாக்குவார். உங்க ரெண்டு பேரோட நம்பிக்கையும், பக்தியுந்தான் காரணமாயிருக்கும். சரி சரி,கிளம்புங்கோ. போய்ட்டு வரலாம். தியான நேரம் வந்தா, உள்ளே போக முடியாது. ஆனந்தும், நீயுமா சீக்கிரமா வாங்க. நான் கீழே டாக்ஸிக்காகப் பார்க்கிறேன். நல்லதே நடக்கும். சீக்கிரமா வாங்க''.

அறைக்குள் நுழைந்த கோகிலாவிற்கு அதிசயம் காத்திருந்தது. ஆனந்த், மீண்டும் முகம் அலம்பி, தலைவாரி, நடந்ததை மறந்து, தயாராக நின்றான்.

கோகிலாவின் மனம் அன்னைக்கு நன்றி கூறியது, சந்தோஷித்தது.அன்றும் தியானம் செய்தார்கள். அன்னையைப் பார்த்ததுமே மனம் பாகாய் உருகியது கோகிலாவிற்கு.இப்போது எதையும் கேட்டு வேண்டவில்லை அவள். "உனக்கே எல்லாம் தெரியும்போது, நான் ஏன் வேண்டவேண்டும் அன்னையே....எப்போது, எது தேவையோ, அதை நீயே கொடுப்பாய் என்கிற தைரியம் என்னுள் வந்தாயிற்று. இனி உன்னை தியானிப்பேன், பிரார்த்திப்பேன்,அவ்வளவுதான். என் கவலையையெல்லாம் நம்பிக்கையோடு உன்னிடம் கொடுத்துவிட்டேனே. இனி எந்தக் கிலேசமும் என்னுள் இல்லவேயில்லை.சுமப்பதைச் சுலபமாக நீ ஏற்றுக்கொண்டதால், உன்னையே சுமைதாங்கி ஆக்கிவிட்டேன். அன்னையே..... நீயே..... என் வழிகாட்டி.... அம்மா....''தென்றல் அவளை இதமாக வருடி வருடிச் சென்றது. ஆனந்தின் மனம் மிக அமைதியாகவேயிருந்தது. கண்களை மூடி அமர்ந்தவனிடம்,மௌனமே ஆட்சி செய்தது. சரீரமே மிகவும் பாரமற்று, மிக மிக லேசாகியதில் பரவசமானான். எங்கோ போவதுபோலிருந்தது. ஆனால்,தானாக அன்று; ஈர்க்கப்பட்டு, எதிரே தெரிந்த பாதையில், காந்தத்தால் இழுக்கப்பட்ட இரும்பைப்போல் நடந்தான்.

திடீரெனக் கண்களைக் கூசும் வெளிச்சம். ஒளிமயமான இடம்.லேசான சிம்ம கர்ஜனை. ஆனால் பயத்தை ஏற்படுத்தவில்லை. மனதில் ஓர் உத்வேகத்தையும், தைரியத்தையும் தந்தது. கூசும் கண்களின்மேல்,கையைக் குடையாக்கிப் பார்த்தான். அவ்வளவேதான், பரவசத்துடன்,சாஷ்டாங்கமாய், கீழே படிந்து, நமஸ்கரித்தான். பொன்மயமான சிம்மாசனம். இரண்டு பக்கங்களிலும் கம்பீரமான இரு சிங்கங்கள்.பிடரிமயிர் தங்கக்கலரில் பளபளத்தது. அடர்த்தியாகத் தொங்குகிறது.கண்களில் தீட்சண்யம். ஆனால் அதில் கருணை. எழுந்து முன்னேறுகிறான். வெள்ளைவெளேர் என்று தும்பைப்பூ வேஷ்டி.பஞ்சகச்சம் கட்டி, கம்பீரமாய் சிம்மாசனத்தில் அமர்ந்திருக்கும் ஸ்ரீ அரவிந்தரின் கண்களில்தான் எத்தனை இறையன்பும், பரிவும்,சாந்தமும் ததும்புகிறது. அவருடைய இரு கரங்களும் பக்கவாட்டிருக்கும் சிங்கங்களின் மீது படிந்துள்ளது. வெண்மையான தலைமுடி தோள்களில் புரள, தாடியும்தான் எத்தனை பொலிவும், கம்பீரமும். கண்களாலேயே,ஆனந்தை, சிரித்தபடி "வா'என ஜாடை காட்டி அழைக்க, குழந்தையாய் ஓடுகிறான். அவர் மடியில் ஏறி உட்கார்ந்தவனின் தியானம், அந்த சமயத்தில் கலைந்தது. ஆனாலும், அந்த நிஜமான சிங்கங்களும்,சிம்மாசனமும், ஸ்ரீ அரவிந்தரும் இன்னும் அவன் கண்களைவிட்டு அகலவில்லை. சந்தோஷத்திலும், அவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது. வெடித்துவந்த கேவலை அடக்க, மிகவும் பிரயத்தனப்பட்டான்.கரம் கூப்ப, கண்கள் மூட, மீண்டும் அந்தப் பொன்னுலகத்துக்குப் போகத் தொடங்கினான். பாதை நீண்டது.

****

வழியில் ஏதும் பேச்சின்றி மௌனமாகவே வந்தனர். ஆனந்த், கோகிலாவின் மனம் நிரம்பியிருந்தது. எதையும் வெல்வோம் என்கிற தைரியம் ததும்பியது. கவலை என்பதைத் தூரமாக ஒதுக்கித் தள்ளினார்கள். இருவர் முகமும் மிகத் தெளிவாயிருந்தது.வீட்டிற்குள் நுழைந்ததுமே, முதல் நாள், கம்பனி விஷயமாகப் பேச வந்தவர்களில் ஒருவர், "ஆனந்த் சார்! நீங்களிருவரும் ஏதேனும் ப்யூட்டி பார்லருக்குப் போய்வந்தீர்களா? உங்கள் மனைவியின் முகமும், உங்கள் முகமும், அதென்ன அப்படி ஒரு தேஜசாக, பிரகாசமாக இருக்கிறது!

"ஐ காண்ட் பிலீவ் இட்''. எப்போதும்போல்தானே கம்பெனி டீல் முடிந்தது.அதென்ன, இப்படியொரு பொலிவு.....?''

வாய்விட்டு உணர்ச்சிவசத்தில் கூறியவர், உடனே, "சாரி... வெரி வெரி சாரி! உங்களிருவரையும் இத்தனை பிரகாசமாகப் பார்த்ததும்,என்னால் சொல்லாமலிருக்க முடியவில்லை. நான்அப்படிச் சொல்லிஇருக்கக்கூடாது. சாரி, சாரி கோகிலா மேடம்..... என்னால்....''மேலே அவரைப் பேசவிடாமல் தடுத்தாள் கோகிலா. "டேக் இட் ஈஸி சார். நம்ம கம்பெனியைப் பொருத்தமட்டும் நாம ஒருவருக்கொருவர் உறவினர் போலத் தான். மனதில்பட்டதை வெளிப்படையாகச் சொன்னீங்க,தப்பில்லே. லீவ் இட். சரி இன்னிக்கே ஆனந்த் "செக்' கொடுத்துடுவார்.

நீங்க என்னிக்கு எங்க "லிஸ்ட்படி' அனுப்பறீங்க? நாங்க போவதற்குள்ளேயே, அங்கு சாமான்கள் சேர்ந்திருந்தா நல்லது. சரவணன் என் தம்பிதான். அந்த பேருக்கே அனுப்புங்க. அப்பாவுக்கு வயசாச்சு. இந்த பேருக்கு கூரியர் அனுப்பிடுங்க. ரொம்ப தேங்க்ஸ் சார்'' சொல்லியபடியே கோகிலா எழுந்தவுடன் வந்தவரும் புரிந்துகொண்டு கிளம்பினார்.

தீபா படு உற்சாகத்தோடு, வேகத்தோடு வந்தாள்.

"கோகிலா, வந்தவர் சொன்னதைக் கேட்டியா? அன்னை, உங்களிடம் நெருங்கியிருக்கிறார் என்பதன் அடையாளமே, முகத்தின் பிரகாசம். சரி, இன்னும் இரண்டு நாட்கள்தான் இருக்கு, நீங்க ஊர் திரும்ப. வாம்மா கோகிலா, முதன்முறையா வந்துருக்கே.... கல்கத்தாவை சுத்திப்பார்க்க வேண்டாமா..... கல்கத்தா காட்டன் புடவை, கல்கத்தா ஸ்வீட்ஸ், பைகள், பர்ஸுகள், டிரஸ்ஸுகள்னு, குழந்தைகளுக்கு எல்லாமே விலை மலிவா கிடைக்கும்மா.... வா.... வந்தது வந்தே.... ஊரையும் பார்த்துட்டுத்தான் போயேன்....''இடமும் வலமுமாய் சிரத்தை (தலையை) அசைத்தாள் கோகிலா.

"எனக்கு எதிலுமே இப்ப விருப்பமில்லேம்மா. இங்கே இருக்கிறவரையில தினமும் அன்னையைப் பார்க்கணும், பார்க்கணும். அதுதான் என்னோட முக்கியமான விருப்பம்மா.....''

"சரி கோகிலா, போகலாம்தான். தடையேயில்லே. ஆனா,குழந்தைகளுக்கும், வீட்டிலுள்ள மத்தவங்களுக்கும் ஏதோ ஒண்ணு வாங்கிட்டுப் போனாத்தான் நல்லது கோகிலா. பெரியவங்களுக்கு எதிர்பார்ப்பு இருக்காதுதான். ஆனா, குழந்தைகளுக்கு அந்த ஆசை இருக்குமில்லையா?

ஆனந்தும், தீபாவுடன் கூடவே பேசி, கோகிலாவை வெளியே அழைத்துப் போகச் செய்தான்.

"கோகி, எந்த யோசனையுமில்லாம போயிட்டு வா. எனக்கு எந்த யோசனையுமில்லே. ஐ ஆம் ஆல் ரைட் நௌ. போய்ட்டு வா....''

மகிழ்வோடு சிரித்துப் பேசும் ஆனந்தின் பேச்சு, கோகிலாவிற்கு உள்ளூர ஒரு புத்துணர்ச்சியை ஏற்படுத்தியது.

தீபாவுடன் புறப்பட்டு, தேவையானவைகளை வாங்கி வந்தாள். நேராக அன்னையின் முன் வைத்து வணங்கினாள்.

அங்கிருந்த இரண்டு நாட்களிலும், வீட்டில் அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் முன் தியானம் செய்தாலும், "ராணிக்குட்டி''க்குப் போய், மாலை தியானத்தில் கலந்துகொண்டார்கள் தவறாமல்.

வீட்டிற்கு வந்தார்கள். இரவு புறப்படவேண்டும். என்ன சொல்லியும் கேட்காமல், வழிக்குச் சாப்பாடும் கட்டித் தந்தாள் தீபா.ஸ்டேஷனுக்கும் வந்தாயிற்று.

"ஆனந்த், கோகிலா, ரெண்டு பேருமே எந்தவித மன உளைச்சலும் இல்லாம இருங்க. ஏன்னா, அன்னைக்குள்ள சக்தி, நம்பிக்கை மூலம் தான் செயல்படுகிறதுப்பா. நம்ம ஆசையின்மூலமோ, தேவையின் மூலமோ இல்லை என்பதுதான் உண்மைன்னு புரிஞ்சுக்கணும். ஆனா, நாம அதைத் தவிர்த்து, பலனைத்தான் முக்கியமா நினைச்சு எதிர்பார்க்க ஆரம்பிக்கிறோம்கறது தான் வழக்கம். அன்னையிடம் உங்க மனசுல தோணுவதையெல்லாம் சமர்ப்பணம் செஞ்சி, சரணாகதின்னு அன்னையின் பாதகமலங்களை மனசுல நினைச்சி, நம்பிக்கையோட எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பியுங்க. பிறகு, அதைப்பத்தின சஞ்சலமோ,சந்தேகமோ எதுவும் மனசுல ஏற்படாம, நிர்மலமாயிருங்க. அதுதான் உங்க பலம். புரிஞ்சுதா.....'' பட்டாச்சார்யா கூறவும், நன்றியுணர்வில் இருவரின் விழிகளிலும் கசிவு.

தீபா, பட்டாச்சார்யா இருவரின் கைகளைப் பிடித்துக் கண்களில் ஒற்றிக்கொண்டனர். வண்டியிலேறி கை காட்ட, வண்டியும் பயணத்தைத் தொடங்கியது.

இருவரும் பேசமுடியாமல், கூபேயில் அப்படியே அமர்ந்திருந்தனர்.எப்போது தூங்கினார்கள் என்றே தெரியவில்லை. விடிந்ததும், பல் துலக்கி,முகமலம்பி, வந்து உட்கார்ந்தார்கள். மனம் நிச்சலனமாயிருந்ததில், மகிழ்வுடன் பேசினார்கள். அப்போதுதான் ஆனந்த் கூறினான்.

"கோகி, ராத்திரி ஒரு விஷயம் நடந்தது. நீ நன்னா தூங்கிண்டு இருந்ததால உன்னை எழுப்ப மனசில்லாம நானும் படுத்தேன். தூக்கம் வரலே. தியானம் செஞ்சேன். அப்படியே தூங்கிட்டேன், கோகிலா''.

"என்ன சொல்றீங்க? என்ன நடந்தது? ஏன் எழுப்பலே? சொல்லுங்க.....''

"பதட்டப்படாதே கோகி. தீபா ஆண்ட்டி என்ன சொன்னாங்க? ஞாபகமிருக்கா. நம்பிக்கைதானே அன்னைக்கு முக்கியம். அந்த, நம்பிக்கைதான் என்னைக் காப்பாத்தியிருக்கு, கோகிலா.....''

"என்ன..... என்ன சொல்றீங்க?...... ஒண்ணுமே புரியலையே......''

"பயப்படாதே கோகி. நான் எப்ப எழுந்து, நம்ம கூபேயிலிருந்து வெளியே போனேன்னே தெரியலே. ஸ்டேஷன்ல இறங்கறமாதிரி, அந்தக் கதவைத் தொறந்து, நான் வெளியே கால் வச்சதுவரை நினைவில்லை. ஆனா..... கோகி...... அப்படியே என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே யாரோ.... ஆமா கோகி..... எப்படி வேகமா தள்ளினாங்க. எதிர்த்த மாதிரி இருந்த கதவுகிட்டே போய் "தபார்'னு விழுந்தேன். அப்புறமாதான் எழுந்து பார்க்கறேன். கதவு, நான் விழுந்ததுக்கு எதிர்புறம் இருந்த கதவு திறந்தேயிருக்கிறதும், இரயில் வேகமா போயிண்டேயிருக்கிறதும், திறந்த கதவு வழியா வந்த வேகமான காத்தாலப் புரிஞ்சுண்டேன். எப்படி இங்கே வந்தேன்? எப்படி அந்தக் கதவைத் திறந்தேன்? யார் என்னைப் பிடிச்சி, பலவந்தமா உள்ளே தள்ளினது? தள்ளின வேகத்துல எனக்கு அடிப்பட்டிருக்கணுமே? ம்... ஹும்.... கொஞ்சம்கூட வலியில்லே. கோகி....புரிஞ்சபோது என்னால தாங்கமுடியாம அழுதேன். "தேங்க்யூ மதர்,தேங்க்யூ மதர்னு' என் வாய்மட்டும் சொல்லிண்டேயிருந்தது. "அன்னையே சரணம்.... அன்னையே சரணம்னு....' அப்படியே அங்கேயே சாஞ்சிண்டு சொல்லிண்டேயிருந்தேன் கோகி. மனசு ஒரு வழியா அன்னையை நினைச்சதால, அந்த பயத்துலேயிருந்து விடுபட்டது. இல்லேன்னா, நான் வெளியே..... வேண்டாம்.... அதை.... அப்படி நினைக்கக்கூடாதுன்னும் புரியறது. எந்த ஓர் ஆபத்துலேயும் அன்னை நம்மைக் காப்பாத்த ஓடோடி வருவார்னு புரிஞ்சது. எழுந்து, திறந்திருந்த கதவை மூடிட்டு, பாத்ரூம் போய்ட்டு வந்தேன். நீ நன்னா.... நிச்சலனமா தூங்கிண்டு இருந்தே.நானும், உன்னை எழுப்பாம படுத்துட்டேன். நடந்தது கனவா, நிஜமாங்கற அளவுக்கு என்னுள்ளே ஆச்சரியமும், சந்தோஷமும் போட்டிபோட்டுண்டு துள்ளி ஓடறது. அன்னையை நினைச்சி, நினைச்சி அழறேன், சிரிக்கிறேன்,நன்றி சொல்றேன். உன்னை எழுப்பி, சொல்லணும்கற ஆர்வத்தையடக்கி,தியானம் செஞ்சேன். மனம் ஒரு நிலைக்கு வந்து சாந்தமா, சமனமாச்சு.

ஆனா, ஒண்ணு நிச்சயம், எனக்கு நன்னாவே புரிஞ்சுபோச்சு, எந்த நிலையிலயும் அன்னை என்னைக் கைவிடமாட்டார்ங்கறது தான். அந்த நம்பிக்கை, இன்னும் அதிகமாயிருக்கு கோகி. ஆமாம், இனிமே எல்லாமே நமக்கு அன்னைதான் கோகிலா'' உணர்ச்சிபூர்வமாய் ஆனந்த் கூறக் கூற, கோகிலாவும் மெய்மறந்து இருகரம் கூப்பினாள்.

"ஆமா ஆனந்த், எனக்குள்ள இப்ப படபடப்புக்கூட குறைஞ்சுடுத்து. எவ்வளவு பெரிய அபாயத்துலேருந்து நீங்க தப்பிச்சிருக்கீங்கங்கறது, நீங்க சொல்லச் சொல்ல, எனக்குள்ளேயே.... ம்.... என்னன்னு சொல்லத் தெரியலேன்னாலும், ரொம்பவே சந்தோஷமாவும், பரவசமாகவும் இருக்கு.நீங்க சொன்னதுபோல, அன்னை நம்மைக் கைவிடமாட்டார் ஆனந்த்.அன்னையோட கரங்களைக் கெட்டியாப் பிடிச்சிண்டு நாம சமர்ப்பணம் செய்யணும். அன்னையோட பாதங்களைப் பற்றிக்கொண்டு,

"நீயேதானம்மா எங்களுக்கு'ன்னு சரணாகதியாயிருக்கணும் ஆனந்த்''கண்கள் பனிக்க, புன்னகையுடன் கூறினாள் கோகிலா.

தீபா ஆண்ட்டி சொன்னாங்களே..... ஜாதகப்படி விபத்து இருக்குன்னு தெரிஞ்சிருக்கும். எப்போதோ சொன்னது நம்ம ஞாபகத்துல பதிஞ்சிருக்கும். ஆனா, அன்னையை நம்பிய நமக்குள்ளும், கர்மத்தை நம்பும் மனப்பான்மையிருந்தால், அதன் அடையாளத்தைக் காட்டும். நாம தவிர்த்தால், அன்னையின்மீது நம்பிக்கையோடு இருந்தால், எந்த விதமான பாதிப்புமிருக்காதுன்னு. ரொம்ப ரொம்ப சரி கோகிலா. அன்னையின் மீதுள்ள நம்பிக்கையை நாம் வளர்த்துக்கணும். இப்பத்தானே தெரிஞ்சிண்டிருக்கோம். எல்லாம் நல்லதே நடக்கும்கற தைர்யம் எனக்குள்ளே வந்துடுத்து கோகிலா. சரி, காபியோ, டீயோ வந்துதா?

பசிக்கிறாப்பல இருக்கு. ஆண்ட்டி குடுத்ததை எடேன்.....இருவருமாய் சாப்பிட ஆரம்பிக்கும்போதே காபி வந்தது. அதன்பிறகு இருவருக்குள்ளும் பேச்சு எழவில்லை என்றாலும் மனதில் ஒரு

"அப்பா......டா' என்கிற நிம்மதி ஏறி அழுத்தமாக உட்கார்ந்தது நிஜமே.

****

"ஹையா! அம்மா, இந்த டிரஸ் ரொம்ப நல்லாயிருக்கும்மா. சுரபிக்கா.... உன்னோட டிரஸ்ஸும், வளையல்லாம் கல்லு வச்சு.... போம்மா.... நானும் கேர்ளாகப் பொறந்திருந்தா, நிறைய வளையல் வாங்கிண்டு வந்திருப்பே இல்லே.....'' நிபுண் கூறவும், எல்லோரும் "கொல்'லென சிரித்தார்கள். பாகீரதியின் மனதில், கேட்கவேண்டுமென்ற சில விஷயங்கள் முட்டிமோதி வாய்வரையில் வந்து வந்து மீண்டும் உள்ளுக்குள்ளேயே போனது.

சரவணனுக்கும், ஆனந்த், கோகிலா முகங்களை மாறிமாறி பார்த்தும் ஒன்றும் புரிந்து கொள்ள முடியவில்லை.

அமைதியாக இருந்தவர் ராமாமிர்தம்தான். அவர்களிருவரின் முகத்தில் விவரிக்கமுடியாத பொலிவை உணர்ந்தார். மனதில் ஒரு நிம்மதி அனாயாசமாக ஏற்படுவதையும் அறிந்தார். காரணம் அறியும் ஆவலிருந்தும் மௌனமாகவேயிருந்தார்.

சுரபியும், நிபுணனும் அம்மாவின் கன்னத்தில் முத்தமிட்டு, "தேங்க்ஸ்' கூறிவிட்டுப் பள்ளிக்குச் சென்றார்கள்.

சரவணன், பாகீரதியிடம், "அம்மா! அங்கு ப்ராப்ளமில்லாமல் இருந்தார்களான்னு கேட்டுக்குங்க. நான் கம்பனிக்குப் போய்விட்டு மதியம் சாப்பாட்டுக்கு வரப்ப பேசிக்கலாம். வரேம்மா''. "கோகிக்கா,நான் போயிட்டு வரேன், நேரமாச்சு'' என பாத்ரூம் கதவருகில் சென்று

"பை' சொல்லிவிட்டுப் போனான்.

குளித்துவிட்டு வந்த கோகிலா, வேறு நல்ல உடையை உடுத்திய பின்பு, ஹாலிலிருந்த ஒரு பெரிய அலமாரியை சுத்தம் செய்தாள். பிறகு உள்ளேயிருந்து அன்னை, ஸ்ரீ அரவிந்தரின் படங்களை பயபக்தியோடு வைத்தாள். ஊதுவத்தி ஏற்றினாள். தோட்டத்திலிருந்து பறித்த புத்தம்புதிய பூக்களை புதிய தட்டுக்களை எடுத்து, அதில் பூக்களை அழகுற அடுக்கிவைத்தாள். சம்மணமிட்டு அவள் அமர்ந்தபோதுதான்,

ஆனந்தும் குளித்துவிட்டு, நல்ல உடைகளையணிந்து, ஊதுபத்தி ஏற்றி, அவளருகில் அமர்ந்து கண்களை மூடினான்.

சுமார், முக்கால் மணி நேரத்திற்குமேல் ஆடாமல், அசையாமல்

அவர்கள் அமர்ந்திருந்ததைப் பார்க்கப் பார்க்க, பாகீரதியின் மனது விண்டுவிரிந்தது. அவளுக்கு, அந்தப் படங்களிலுள்ளவர்களைப் பற்றி எதுவுமே தெரியாது போனாலும், தானும் துளி அரவமின்றி அவர்களருகில் அமர்ந்து கண்களை மூடினாள். மனக்கதவு திறந்தது.

"நீங்க ரெண்டு பேரும் யாருன்னு தெரியாது. இவா ரெண்டு பேருக்கும் உங்களை எப்படித் தெரியும். அவா கஷ்டத்துக்கு எப்படி உதவினேள். ஒண்ணுமே தெரியாது. ஆனாலும், உங்களோட சாந்தமான புன்னகை, கருணை நிரம்பிய கண்கள், ரெண்டுமே எனக்குள்ளேயே பூந்துண்டு, என் மனசைப் பிசையறதும்மா. கூடவே ஒரு நிம்மதியும் ஏற்படும்ணு தோணறது. எனக்கு ஒண்ணுமே புரியலே. நிஜம்மா புரியலே. நீங்க ரெண்டு பேரும் யாரு? யாரானாலும் சரி, எங்காத்துக்கு வந்த வேளை, நல்ல வேளையாயிருக்கட்டும். என் ஒரே மகன், நன்னா, வியாதி இல்லாம, பொண்டாட்டி, பிள்ளைகளோட, சந்தோஷமா, ஒரு குறையும் இல்லாம குடும்பம் நடத்தணும். நீங்கதான் காப்பாத்தணும். எனக்கு.... எனக்கு....'' மேலே, மனதோடு மௌனமாக பேசுவதுகூடத் தாளமுடியாமல், வெடித்துவந்த கேவலை அடக்கமுடியாமல், அப்படியே சரிந்து, குனிந்தாள் பாகீரதி.

சட்டென இரு கரங்கள் அவளைப் பிடித்துக்கொண்டன. சரிந்தவள், அப்படியே நமஸ்கரித்து எழுந்து, தன்னைப் பிடித்தது யார் எனப் பார்த்தாள்.

ஆனந்தின் கரங்கள்தான் அவளைப் பிடித்திருந்தன.

"அம்மா! அழக்கூடாதும்மா. நீயே இப்படி அழலாமா? தப்பும்மா. எப்படி உனக்கு இவா ரெண்டு பேரையும் பார்த்ததும் பொங்கிவந்ததோ,

அப்படித்தாம்மா எனக்கும், கோகிலாவுக்கும் ஆச்சு......''

"ஆனந்தா, யாருடா இவா ரெண்டு பேரும்? இத்தனை வருஷமா, யார் கிட்டேயிருந்தும் சரி, எதுலயும் படிச்சதில்லே, கேட்டதில்லே, ஆனா,இன்னிக்கு இவா ரெண்டு பேரும், நம்மாத்துல வந்து, ஜம்...முனு, வந்து உக்காந்திருக்கா பாரேன். சாந்தசொரூபியா, சிரிச்ச முகமா இருக்கா.அவா கால்களைப் பிடிச்சிண்டு, எம்புள்ளையக் காப்பாத்து அம்மான்னு கதறணும்போருக்குடா ஆனந்தா. அதான் தாங்காம, அழுதுட்டேன். ஆனந்தப்பா...... எப்படியிருக்கே. உன்னோட உடம்புக்கு ஒரு குறையுமில்லேதானேடா கண்ணா. கோகிலா, உன்கூட இருந்தாதான்.இருந்தாலும் மனசு கிடந்து தவிச்சுப்போச்சுப்பா. இப்போ, உன்னோட,கூடவே, பயணப்பட்டு வந்துருக்காளே.... இவா ரெண்டு பேரும்... நான் பார்க்கணுமேடா அவாளை. அவா எங்கேயிருக்கா? என்னையும் கூட்டிண்டு போறியாப்பா?......''

ஆனந்தால் பதில் சொல்லயியலாமல், "உன்னோடு பயணப்பட்டு வந்துருக்காளே, அவா ரெண்டு பேரும்' என்கிற வார்த்தைகள்.... அன்னை... ஆமாம்.... என்னைப் பெற்றவளும் அன்னைதானே! அவள்மூலமே அன்னை, தான் காப்பாற்றியதை எவ்வளவு சூசகமாக உணர்த்தி விட்டார்.

"நான்தான் உன்னுடனேயே பயணித்தேனே..... உனக்குக் காவலாய்.புரியவில்லையா..... என் மகனே' என்று கேட்பதுபோலல்லவா, அம்மாவின் வாயிலிருந்து வார்த்தைகள் உதிர்ந்தன....பாகீரதியை, அப்படியே பற்றிக்கொண்டு, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் சென்று, சிரிப்பும், கண்ணீருமாய் வணங்கி, பெற்றவளையும் மீண்டும் வணங்கச் செய்தான்.

"அம்மா! கண்டிப்பாம்மா. நாம எல்லாருமே கல்கத்தாவுக்குப் போய்ட்டு வரலாம்மா. அம்மா..... வாம்மா.... நடந்ததெல்லாம் சொல்றோம்மா.... வாம்மா... வா....''கோகிலாவும் வர, ராமாமிர்தம் அமர்ந்த இடத்திற்கருகில் உட்கார்ந்தார்கள். கோகிலாவும், ஆனந்தும், மாறி மாறி நடந்ததைக் கூற, ராமாமிர்தமும், பாகீரதியும் பரவசப்பட்டுத்தான்போனார்கள்.

"அப்பா! பட்டாச்சாரியோட மனைவி தீபா, எங்களுக்கு சுருக்கமா சொன்னாலும், மனசுல பதியறாப்பல சொன்னாங்கப்பா. போன ஜன்மத்து

"கர்மபலனை' இந்த ஜன்மத்துல அனுபவிக்கவேண்டாம்னு சொல்ற ஒரு தெய்வம் இருக்கிறபோது, நாம ஏம்பா, எதை எதையோ நினைச்சிக்

கஷ்டப்படணும்? வேண்டாமே..... அவங்க சொல்ற கோட்பாடுகளைப் படிக்கலாம். தெரிஞ்சவங்கக்கிட்டே புரியாததைக் கேட்டுத் தெரிஞ்சிண்டு,அதன்படி நடக்கலாம். தியானம் பண்ணலாம். அவங்களையே மனசுல சுமந்துண்டு, எங்கே வேணும்னாலும் போகலாம். கஷ்டமே வராதுப்பா.சரியாப்பா....''

மோவாய் துடிக்க, கண்கள் நீரைப் பெருக்க, "சரிப்பா, அப்படியே செய்யலாம், நடந்துக்கலாம் ஆனந்தா.....'' மேலே பேச்சு வாராமல் திணறினார் ராமாமிர்தம். நாட்கள் கடந்தன. வீட்டின் சூழ்நிலை மிக அருமையாக மாறி இருந்தது. குழந்தைகளிலிருந்து பெரியவர்கள்வரை, அன்னை, ஸ்ரீ அரவிந்தரிடம் வணங்கியபிறகே வெளியே சென்றார்கள். ஊதுபத்தி ஏற்றத் தவறுவதில்லை. அவரவர், அவர்களுக்குக் கிடைக்கும் நேரத்திற்கு ஏற்ப தியானம் செய்தாலும், இரவு ஒன்பது மணிக்கு, அனைவரும் ஒன்றாகக் கலந்து, அமர்ந்து, பத்து நிமிடமாவது கூட்டுப்பிரார்த்தனை செய்வதை வழக்க மாக்கிக்கொண்டார்கள்.

தியானமையத்திற்கு அடிக்கடி போய்வந்தார்கள். கூட்டுப் பிரார்த்தனையில் கலந்துகொண்டார்கள். அன்னையைப்பற்றிய புத்தகங்களை வாங்கிப் படித்தார்கள். ஸ்ரீ அரவிந்தரின் காவியமான "சாவித்திரி''ஐயும், "Life Divine''ஐயும் தினமும் சிறிது சிறிதாகப் படித்தார்கள். கணவனின் உயிருக்காக சாவித்திரியின் போராட்டம், ஸ்ரீ அரவிந்தரின் கற்பனையில் புதிய கோணத்தில் உருவாகி எழுதியிருப்பதை, புரியாததை, அறிந்தவர்களிடம் கேட்டுத் தெளிந்தார்கள்; வியந்தார்கள். ஈடுபாட்டோடு, மேலும் மேலும் அறிந்து, மகிழ்ந்து, தங்களையே புடம் போட்டுக் கொண்டார்கள்.

காலம், முதலில் நடந்து, பிறகு ஓடி, இப்போது பறந்துகொண்டிருந்தது.அவர்களோடு ஆனந்தின் கம்பனியும் பெரிய அளவில் வளர்ந்து,நிமிர்ந்து, கம்பீரமாய் நின்றது.

சரவணனுக்கு வந்த மனைவியும் அன்னையை வணங்குபவளாக அமைந்ததில், பூரிப்பான சந்தோஷம் குடும்பத்தினருக்கு. அதுவும், ஒரே சமயத்தில், ஒரே வருடத்திற்குள் இரட்டைக் குழந்தைகளாய், ஆணும்,

பெண்ணுமாய் சரவணனுக்குப் பிறந்ததில் வீடே கோலாகலமாகியது.

ஸ்ரீ அரவிந்தரும், அன்னையுமே பிறந்துவிட்டதாக, அவர்கள் வீட்டிற்கு வந்துவிட்டதாகக் குதூகத்தார்கள்.

பாகீரதியின் கனவும் நிச்சயமாக நினைவாகும்.

அது, மாடியுடன் சேர்ந்து இணைந்தாற்போல் ஒரு பெரிய கூடம், ஒரு சின்ன அறை, சமையலறை, பாத்ரூம் என அன்னையின் மையமாக, தியானம் செய்யும் இடமாக இருக்கவேண்டுமென்று, அவளுடைய ஆசையுடன், மனம் தினமும் சமர்ப்பணத்தைச் சரணாகதியாக்கிப் பிரார்த்தித்தது.நிச்சயம் அன்னையின் அருளால் அது நிறைவேறும். நாமும் ஒரு நாள் அந்த தியானமையத்திற்கு கண்டிப்பாகப் போவோம். அந்த நாள் சீக்கிரமாகவே வரும் என்பது திண்ணம்.


 

முற்றும்

****
 


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

எதிரானவை ஒன்றைவிட்டு மற்றது விலகுவதற்குப்பதிலாக

நெருங்கிவந்து சந்தித்தால் நடைமுறையில் பலன் கிடைக்கும்.

விலகாமல் நெருங்கினால் பலனுண்டு.


 book | by Dr. Radut