Skip to Content

08.கால் சென்டர்

"அன்னை இலக்கியம்"

கால் சென்டர்

வி.ரமேஷ்குமார்

மாலை மணி ஆறு. பேக்டரியில் அனைவரும் சென்று விட்டார்கள். நான் எப்போது போவேனோ என்று வழி மேல் விழிவைத்து காத்திருந்தான் வாட்ச்மேன். ஜன்னல் வழியாகப் பக்கத்தில் இருந்த பூங்காவைப் பார்த்தேன்.... காதல் ஜோடிகள், நடைப்பயிற்சி செய்யும் முதியோர்கள், உற்சாகம் கொப்பளிக்க விளையாடும் குழந்தைகள்... என்னைத்தவிர உலகத்தில் அனைவரும் சந்தோஷமாக இருப்பது போல்பட்டது.

கொஞ்ச நாட்களாகவே வாழ்க்கை ஒரு சுவாரசியமும் இல்லாமல் இருக்கிறது. வியாபாரம் எதிர்பார்த்தவிதத்தில் இல்லை. நஷ்டமில்லாமல் ஓட்டுவதே போராட்டமாக இருந்தது. நாளைய பணப் புரட்டல்களுக்கு என்ன செய்வது என்று தெரியாமல் நண்பர் ஜெகனைக் கேட்க... அவர் ஆறு மணிக்கு வருவதாகச் சொன்னதால் இந்தக் காத்திருப்பு. இன்னது தான் செய்வது என்று தெரியாமல் குழப்பத்தில் இரண்டு ஊதுவத்தி ஏற்றி அன்னை படத்தருகில் வைத்துவிட்டு பார்த்துக்கொண்டு இருந்தேன்.... நினைவுகள் பின்நோக்கிச் சென்றது.

Injection moulding மற்றும் pet recycling projectக்காக, இருந்த நல்ல வேலையையும் இராஜினாமா செய்துவிட்டு பேங்க் லோனுக்காக அலைந்த போதுதான் தெரிந்தது.... இவையெல்லாம் சாமானியனுக்கு இல்லை என்று. முப்பதே நாட்களில் முடித்துக் கொடுப்பதாகச் சொன்ன பேங்க் மேனேஜர்.... ஆயிரம் சான்றிதழ்கள் கேட்க ஆறு மாதங்களாகியும் ஒரு டேபிள்கூட நகராமல் இருந்தது என் ஃபைல். கையிருப்போடு, எதிர்காலத்தைப் பற்றிய நம்பிக்கையும் கரைந்தது. வீட்டிருக்கும் பூச்சிகள் கூட என்னை மதிக்காமல் என்னைமட்டுமே கடிப்பதாக பிரமை. "ஜாதகத்தில்" நேரம் சரியில்லாததால் "எதுவும்" கூடி வரவில்லையாம்.

விரக்தியின் உச்சத்தில் இருந்தபோதுதான் நண்பர் ஜெகன் ஓரிடத்திற்கு வரச் சொன்னார். குடும்ப நண்பரானதால் தட்ட முடியாமல் சென்றேன். அங்குப் பலர் அமைதியாக உட்கார்ந்து தியானம் செய்து கொண்டு இருந்தனர். அந்த அமைதி.... எனக்குப் புதிது. நடந்து சென்று அனைவரையும் பார்த்து.... இதுதான் இங்கு வழிபடும் முறையோ என்று மண்டியிட்டு அன்னை படத்தின் கீழ் தலைவைத்தேன். வாழ்க்கையில் நான் மண்டியிடுவது என்பது இதுவே முதல்முறை. காரணமே இல்லாமல்..... சிறுவயதில் நானும், என் தங்கையும் பள்ளிவிட்டு ஓடிவந்து.... யார் முதல்... என்று அம்மா மடியில் தொப்பென்று விழ.... செல்லமாய்த் திட்டிக்கொண்டே வாஞ்சையுடன் தாய் தடவிக்கொடுக்கும் சுகம் ஏனோ நினைவுக்கு வந்தது. அதே சுகம் இப்போது உடலில் பரவுவது போலத் தோன்ற அந்த அன்பைத் தாங்க முடியாமல் நெஞ்சுநெகிழ்ந்து அழுகை வர ஆரம்பித்தது. யாரும் பார்த்து விடுவார்களோ என்று சட்டென்று எழுந்து, ஓரமாக உட்கார்ந்தேன். ஒருவித இலேசான இதயத்துடன் வீடு திரும்பியதும், உறங்கியதும், விவரிக்க இயலாதது.

அவர்மூலம் அன்னையை அறிந்து வழிபட்டேன். அன்னை படத்தின் முன் உட்கார்ந்து தியானம் செய்தேன்.

மறுநாள்.....

ஏதோ ஒரு சக்தி உள்ளே வந்ததுபோல இருந்தது. பேங்க்குக்குச் சென்றேன். வழக்கமாக என்னைப் பார்த்தாலே தீவிரமாக வேலை செய்வதுபோல இருக்கும் மேனேஜர் எழுந்து வரவேற்றார். "நேற்றுதான் ஞாபகம்வந்தது. எங்கள் பேங்க் ரூல்.... புராஜக்ட் ஸ்டேட்மெண்டில் உள்ளதில் 10% confirmed order from a reputed company காட்டினால் லோன் தரலாம் என்று உள்ளது'' என்றார். ஐயோ! "மீண்டும் ஒரு சான்றிதழா" என்று இருந்தாலும், அதே துறையில் இருந்ததால், அதைப் பெறுவதில் ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. அதன்பின் பதினைந்தே நாட்களில் லோன் வந்ததும், மூன்றே மாதங்களில் மிஷின்கள் இறங்கி, உற்பத்தி தொடங்கியதும் இன்று நினைத்தாலும் ஆச்சரியமாக இருக்கிறது.

எல்லாம் Gestation periodமுடியும் வரைதான். லோன் கட்டும் நேரம் வந்த போதுதான் தெரிந்தது, "பேக்டரி தன்னைத் தானே சமாளித்துக் கொள்ளும் நிலையில் இல்லை"யென்று. என்ன செய்வது என்று தெரியாமல் உருட்டல்.... புரட்டல் ஓடிக்கொண்டுஇருக்கிறது.

கதவு தட்டப்பட... ஜெகன் உள்ளே நுழைந்தார். பணம்பற்றிப் பேசுவார் என்று ஆவலோடு பார்த்தேன். "கேட்கிறேன் என்று தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள். இன்னும் எவ்வளவு நாளைக்கு இப்படி உருட்டல், புரட்டல் ஓட்டப்போகிறீர்கள்'' என்றார் ஜெகன்.

"என்ன செய்வது... ஆர்டர்கள் ஒன்றும் சரியாக இல்லை. நல்ல காலம் வரும் வரை இப்படியே சமாளித்து ஓட்டிக் கொண்டு இருக்க வேண்டியது தான்'' என்றேன்.

"ஒன்பது மாதங்களுக்கு முன் நல்லகாலம் இருந்துதான் இந்த பாக்டரி வந்ததா?'' ஜெகனின் கேள்வி தாக்கியது.

"இல்லை, அது அன்னையிடம் சென்றதால் வந்தது. அதில் சந்தேகமே இல்லை. ஆனால், அதன்பின் எந்தப் பிரார்த்தனையும் பலிக்கவில்லையே?நம் விதி அவ்வளவுதான் என்று விட்டுவிட்டேன். ஆனாலும் நம்பிக்கை இல்லாமல் இல்லை. அதனால்தான் வேறு எந்தப் பரம்பரை சம்பிரதாயங்கள் எதுவும் வேண்டாம் என்றுவிட்டு அன்னை மட்டுமே போதும் என்று இருக்கிறேன். அன்னை தான் கண் திறக்கமாட்டேன் என்கிறார்'' என்றேன்.

சிரித்தார் ஜெகன்.

"அதனால்தான் உங்களின் அத்தனைக் குளறுபடிகளையும் மீறி பாக்டரி இன்றும் நடக்கிறது. என்றாலும் நினைத்துப்பாருங்கள்... வேறு படத்திற்கு பதிலாக அன்னை, பகவான் படங்கள்... பூமாலைக்குப்பதிலாக தட்டில் மலர்கள்.... விளக்குக்குப்பதிலாக ஊதுவத்தி.... இதுதானே நீங்கள் சொல்லும் நம்பிக்கை.... எண்ணங்கள், முறைகள் எல்லாம் அப்படியே உள்ளதே. நீங்கள் செய்யும் பிரார்த்தனைகளையெல்லாம் நிறைவேற்றுவது தான் அன்னை வேலையா?''

"இல்லைதான். நானும் அன்னைக் கொள்கைப்படி இருக்கத்தான் விரும்புகிறேன்..... முடிந்தவரை சுத்தமாக இருக்கிறேன்..... முடிந்தவரை கணக்கு எழுதுகிறேன். ஆனால், மற்றனவெல்லாம் முடியவில்லையே....கத்தவில்லை என்றால் வேலை நடக்காது. போட்டி, கயமை, தந்திரம் என்பது தொழில் தர்மமாகி விட்டது. அப்போதைக்கப்போது வரும் வேலையைச் செய்யவேண்டி இருப்பதால் organised ஆக, puncutalஆக இருக்கமுடியவில்லை''..... இழுத்தேன்.

"முடியாது என்பதுபற்றி இப்போது பேசவேண்டாம். முடிந்தவரை என்றீர்கள் அல்லவா..... சுத்தம்..... இந்த பாக்டரியை மீண்டும் ஒரு முறை சுற்றிப்பார்த்து, ஒரு படி உயர்த்தமுடியுமா.... அதே போல கணக்கு.... உங்கள் பார்ட்டைம் அக்கவுண்டண்ட் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை தானே வருகிறார். அதுவரை அத்தனையும் இதோ கிடக்கின்றன. இன்றைய கணக்கு என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா?..... குறைந்தபட்சம் day book மட்டுமாவது அன்றைக்கன்றே முடித்துப் பாருங்களேன்''....

அவர் வார்த்தைகளில் இருந்த உண்மை எனக்குப் பிடிக்கவில்லை. பண விஷயத்தைப் பற்றிப் பேசுவார் என்று பார்த்தால்..... எரிச்சலாக வந்தது.

"என்ன? ஏதேதோ பேசுகிறேன் என்று பார்க்கிறீர்களா? என் நண்பர் பைனான்சியர் ஊரில் இல்லை. அடுத்த வாரம்தான் வருகிறாராம்'' என்றவாறே எழுந்தார்.

அவர் சென்றபிறகும் யோசித்துகொண்டே இருந்தேன். உண்மைதான். இன்றைய ஸ்டாக் என்ன என்பது எனக்குத் தெரியாது. பாங்கிலிருந்து செக் வந்துள்ளதாகக் கூப்பிட்டால்தான் தெரியும். அரக்கபரக்க இரண்டு மணிக்குள் புரட்டிக் கட்டுவதுதான் பழக்கம். இதற்கே நேரம் சரியாக இருக்கும்போது எங்கே வியாபார முன்னேற்றம்பற்றி நினைப்பது....எருதின் வலி காக்கைக்குத் தெரியுமா? செய்துபார்த்தால் தெரியும்....மனதிற்குள் திட்டிக்கொண்டேன்.

திடீரென மின்சாரம் நின்றது. திடுக்கிட்டேன். என் இருளடைந்த மனதைப் பிரதிபலிக்கிறதா? அன்பரைத் திட்டியது தவறோ?..... படபடப்பானது. "அன்பரைக் கோபித்ததற்கு மன்னியுங்கள் அன்னையே. நாளை முதல் அவர் சொன்ன இரண்டையும் பின்பற்றுகிறேன். மன்னித்ததற்கு அடையாளமாக இப்போதே மின்சாரம் வரவேண்டும்'' வேண்டினேன்.

பளிச்சென்று முன்னிலும் அதிகவெளிச்சம் வந்தது. ஆச்சரியமாகவும், வெறுப்பாகவும் இருந்தது. ஒவ்வொன்றும் உடனுக்குடன் பதில் கிடைக்கிறது. பின் ஏன் எப்போதும் அன்னையை நம்பியிருக்க முடிவதில்லை?....

மறுநாள்.....

காலையிலேயே வந்துவிட்டேன். சூப்பர்வைசரைக் கூப்பிட்டேன். "வெள்ளியன்று பாங்க் இன்ஸ்பெக்ஷன். சுத்தம்செய்து ஒழுங்குபடுத்து. ஒரு போல்ட்-நட் கூட அழுக்காக இருக்கக்கூடாது'' சொல்லிவிட்டு நான்கைந்து நாள் வவுச்சர்களைப் பார்க்க ஆரம்பித்தேன். Quarterly analysis இன்போது பெரிய விஷயமாகப் படாதனவெல்லாம், தினக் கணக்குகளில் பார்த்தால்.... மலைப்பாக இருந்தது செலவுகள்.... எந்தவிதப் பிளானும் இல்லாமல் இன்னும் ஒரு மாதத்திற்குத் தினமும் "பின்தேதியிட்ட காசோலைகள்" கொடுத்திருப்பது தெரிந்தது..... அப்படியே வியாபாரப் பேச்சுகளில் மூழ்கிப்போக..... மதியம் இறங்கிவந்து பாக்டரியைப் பார்த்தபோது இடமே மாறி இருந்தது. முடிந்தவரை சுத்தம்..... என்பது உண்மையில் 20% தான். எனக்கே வெட்கமாக இருந்தது. சுத்தம் என்பதும், தேவையில்லாததை ஒழிப்பது என்பதும் ஒரு கலை என்பது இப்போதுதான் புரிந்தது. அதேபோல அன்றாடம் பார்ப்பதானால்......கணக்கும் இருபது நிமிட வேலைதான். எவ்வளவு அறியாமை?..... என் ஈகோவுக்கு விழுந்த அடி வலித்தது.

நண்பர் ஜெகனுக்குப் போன் போட்டு, முடிந்தால் மாலை வரச்சொன்னேன்.

மாலை.....

நண்பரோடு பேசிக்கொண்டிருந்தபோது மணி அடித்தது. எழுந்து கேட்ட எனக்குக் கண்கள் விரிந்தன. என்றோ, எப்போதோ நான் கொடுத்த PET preforms sample இப்போதுதான் அப்ரூவல் ஆகியதாம். அதற்கு நான் நடையாய் நடந்தது ஞாபகத்திற்கு வந்தது. உடனடியாக வந்து பர்சேஸ் ஆர்டர் வாங்கிக் கொள்ளுமாறும், இன்னும் மூன்று மாதங்களுக்கு இடைவிடாத சப்ளை தேவை என்றும் சொன்னார்கள்.

என்னால் நம்பவேமுடியவில்லை. ஜெகனைப் பார்த்தேன். சிரித்தார். "யோசித்துப்பார்த்தால், அன்னை முறைகள் அனைத்தும் ப்ராக்டிகலாகப் பின்பற்றக்கூடியவையே. நாம் செய்வதில்லை. காரணம்.... நம் வாழ்க்கை, எண்ணம், நடத்தை எல்லாவற்றிலும் அன்னைக்குப் பிடிக்காத அத்தனைக் குணங்களும் இருப்பது நம் மனதிற்குத் தெரியும். இந்நிலையில்....அன்னைக்கு மிக நெருங்கிவந்தால், சத்தியத்தை நிலைநாட்டுகிறேன் என்று அவர் செய்ய, அது நமக்கு எதிராகவோ.... பிடிக்காததாகவோ இருந்துவிட்டால்.... இந்த குயுக்தியால் தான், நம்மால் முடிந்த, விடை தெரிந்த விஷயத்திற்கு அன்னையிடம் செல்வதில்லை. நம்மால் முடியாது என்றபோது தான் வருவோம். இப்போது பாருங்கள்.... ஒன்றிரண்டு முறைகளைப் பின்பற்றத் தொடங்கியதுமே அன்னைச் சூழல் வருகிறது.... வந்தவுடன் வியாபாரம் பலிக்கிறது.....''

மௌனமாக இருந்தேன். "எல்லாவற்றையும் பின்பற்ற ஆசையாகத் தான் இருக்கிறது..... ஆனால், நீங்களே சொல்லுங்கள், இன்றைய காலகட்டத்தில், அன்னை முறைகளையெல்லாம் பின்பற்ற முடியுமா..... மிளகாய் அரைத்து, தூக்கிச் சாப்பிட்டு விட மாட்டார்களா?.....'' என்றேன்.

"அது உங்கள் நம்பிக்கையைப் பொருத்தது. என்றாலும் கண்முன் தற்போது உள்ள ஓர் உதாரணம் காட்டமுடியும்''.

"என்ன அது?''....

"தற்போது இந்தியாவில் BPOஎனப்படுபவை அடைந்த வளர்ச்சி எதிர்பாராதது, அளவில் அடங்காதது என்று தெரியுமல்லவா?''

"ஆமாம்''.

"அது எதனால்?''

"Knowledgeable labour at low cost''.

"இல்லை. அது ஒரு சிறுஉண்மையே. அப்படிப் பார்த்தால், நல்ல அறிவுடன், குறைந்த சம்பளத்தில் நடைபெறும் அனைத்துத் தொழில்களும் அப்படி வளரவில்லையே''.

"பின் எது?''

"யோசித்துப் பாருங்கள். இத்தகைய BPO இடங்களில் சுத்தம், ஒழுங்கு,நேரம் தவறாமை என்பது அடிப்படைத் தேவை. அதேபோல கிளைண்ட் சர்வீஸில், குறிப்பாகக் கால் சென்டர்களில் கஸ்டமரின் நோக்கில் அவரை அறிவது முக்கியம். நிதானம், பொறுமை தேவை என்பதைச் சொல்லத் தேவையில்லை. எல்லாவற்றிற்கும்மேலாகப் பேச்சு, எழுத்து,ஒப்பந்தம், அனைத்திலும் 100% உண்மை மட்டுமே. அடுத்தவர்க்குக் கேட்குமளவிற்கே பேச்சு என்பது முறை. Keep it short வார்த்தைகளைக் குறைத்து, புராசஸ்களை அதிகமாக்கு என்பது விதி. இப்படி அன்னையின் வழிமுறைகள் பல. ஏதோ ஓர் அயல்நாட்டுக் கம்பெனிக்காக, அதன் திருப்திக்காக, 100% பின்பற்றப்படுகிறது. ஒரு கட்டாயத்திற்காகப் பயந்து செய்யப்படுகிறது. ஆனால்.... அதற்கே அந்தத் தொழில், அது சம்பந்தமான தொழிலாளர்கள், மாநிலம், நாடு அனைத்தும் பெறும் சுபிட்சம் வரலாறு காணாதது''.

"இதை "அன்னைக்காக" என்று செய்யமுடியாதா என்று யோசித்து என்னளவில் பின்பற்ற ஆரம்பித்தேன். நான் நினைத்த அளவு கடினமானது ஒன்றும் இல்லை. உண்மையில்.... நான் விட முடியாதவை என்று நினைத்தவையெல்லாம்... நான் விடப் பிரியப்படாதவை..... என்பது புரிந்ததும், அனைத்தும் எளிதாகிவிட்டது''. ஜெகன் பேச பேச, என்னை நினைத்து வெட்கமாக இருந்தது. இதுவரை நான், நான்தான்; என் உழைப்பு, என் திறமைதான்;.... என்று இருந்தனவெல்லாம் அபத்தமாகப்பட்டது. என்னுடைய திறமை, அறிவு அத்தனையையும் உபயோகப்படுத்தி வாழ்ந்ததில் இதுவரை சாதித்தது என்ன என்று யோசித்தேன்.... பெரிய பூஜ்யம் கண்முன்நின்றது.

மனது இறுக்கமானது. இனி என்வழி எதுவும் தேவையில்லை. அன்னை வழியில்தான் இனியெல்லாம்.... மனது உறுதி எடுத்ததும், செயல்படுத்துவதில் ஒன்றும் சிரமம் இருக்கவில்லை. அதன்பிறகு ஒவ்வொரு நாளும் முன்னேற்றமாக அன்னை முறைகளின் எளிமையும், அதன் பெரும்பலனும் புரிய ஆரம்பித்தது.

ஒருநாள்..... விடியற்காலையில் ஜெகனின் போன். "இன்னும் என்ன தூக்கம். இனி தூங்கவே உமக்கு நேரம் இருக்கப் போவதில்லை'' ஜோக் அடித்தார்.

ஒன்றும் புரியாமல், "என்ன விஷயம்?'' என்றேன்.

"EconomicTimes பார்த்தீரா?''

"இன்னும் இல்லை''.

"அடுத்த மாதம் முதல் வெள்ளை மற்றும் கலர் மினரல் வாட்டர் கேன்கள் தடைசெய்யப்படுகிறது. இனி transparent PET மட்டும் தான் உபயோகப்படுத்த முடியும். எதிர்கால மார்க்கெட் ஆயிரம் கோடியாம்.

உன்னை இனி பிடிக்கமுடியாது.....'' அவர் பேசிக்கொண்டேபோக..... அன்னை முறைகளே அன்னை என்பது புரிந்தது.


 

முற்றும்.

****

ஸ்ரீ அரவிந்த சுடர்

தெய்வமனம் நம்மை மற்ற அனைவரிலும் காண்கிறது. அதற்கு

சத்தியஜீவியம் சித்தித்தால் அனைவரையும் நம்மில் காணும்.

******

Comments

08. கால் சென்டர்   Para 3  

08. கால் சென்டர்

  Para 3   -  Line 7  -  "ஜாதகத்தில்'  -    "ஜாதகத்தில்"

 Para 3   -  Line 8  -  "எதுவும்'         -    "எதுவும்"

 Please combine Para 4 & Para 5 

 Para 5   -  Please make a new paragraph for the following lines

                 அவர்மூலம் அன்னையை அறிந்து வழிபட்டேன். அன்னை படத்தின் முன் உட்கார்ந்து தியானம் செய்தேன்

 Para 6   -    சான்றிதழா'      -     சான்றிதழா"    

 Para 7   -    Line 3  -  இல்லை'யென்று   -   இல்லை"யென்று
 Para 12  - Please move the following line to a new paragraph
        சிரித்தார் ஜெகன்.
 Para 15  - Line 3   -   அதேbபோல       -   அதே போல
 Para 19  - Line 7   -   காசோலைகள்'   -   காசோலைகள்"
 Para  19 - Line 12  -  வத்தது                -  வலித்தது
 Paragraph starting with  "இதை "அன்னைக்காக' என்று செய்யமுடியாதா
    Line 1  -  "அன்னைக்காக'   -   "அன்னைக்காக"



book | by Dr. Radut