Skip to Content

07.பிரார்த்தனை பலிக்க வேண்டும்

பிரார்த்தனை பலிக்க வேண்டும்

                                                            (சென்ற இதழின் தொடர்ச்சி....)

தம்பி - நீங்கள் சொல்லியதின் சுருக்கம்,

. உலகில் பணம் பெருகி தன்னைத்தானே பெருக்கும் கட்டத்திற்கு வந்துவிட்டது.

. ஒரு காலத்தில் பணம் மொழி, காற்றுபோல ஏராளமாகும்.

. அதன்பின் அனைவருக்கும் பணத்தைப் பெருக்கும் திறன் வரும்.

. அதற்குள் ஒருவர் அதைப் பெற விழைந்தால் நல்லெண்ணத்தால் பெறலாம்.

நீங்கள் goodwill நல்லெண்ணம் என்பது நாமறிந்த நல்லெண்ணமா? வேறு ஏதேனுமா?

அண்ணன்- நல்லெண்ணம் என்பதை பல கட்டங்களில் பார்க்கலாம். நான் சொல்வது தூய நல்லெண்ணம், முழுமையான நல்லெண்ணம்.

தம்பி - நாமெல்லோரும் அப்படிப்பட்ட நல்லெண்ணமுடையவர் என்றுதானே நினைக்கிறோம்.

அண்ணன் - அது உண்மையானால் பல ரூபங்களில் அது நமக்குள்ளிருப்பதை வெளிப்படுத்தும். இருளற்ற ஒளி, வறுமையற்ற செல்வம், தோல்வியற்ற வெற்றி, தாழ்வற்ற உயர்வுண்டு. அதுபோல் கெட்ட எண்ணத்தின் சாயல்லிலாத நல்லெண்ணம் ஆங்கிலத்தில் பகவான் பெரிய எழுத்தான G மூலம் Goodwill எனக் குறிப்பிடுகிறார்.

. ஆதாயத்திற்கான நல்லெண்ணம்.

. பாசத்திற்கான நல்லெண்ணம்.

. சந்தர்ப்பத்தால் ஏற்பட்ட நல்லெண்ணம்.

. பயந்து ஏற்படும் நல்லெண்ணம். போன்றவையின்றி நல்லெண்ணம், நல்லெண்ணமாகவே இருப்பது Good will, மற்றவை goodwill.

தம்பி - எனக்கு ஒரு கண் போனாலும், அடுத்தவனுக்கு இரண்டு கண்ணும் போகவேண்டும் என்பது கெட்ட எண்ணம். அதற்கெதிரான நல்லெண்ணம் வேண்டும் என்று சொல்கிறீர்களா?

அண்ணன்- ஊரில் நல்லவனாக இருந்தால் மட்டும்நாட்டாண்மைக்காரனாக வர முடியாது. கெட்டவனை அடக்கும் திறனிருந்தால்தான் நாட்டாண்மைக்காரனாக முடியும். வெறும் நல்லெண்ணத்திற்கு சக்தியில்லை. கெட்ட எண்ணத்தை அடக்கும் திறன், ஆளும் திறனிருப்பதே தூய நல்லெண்ணம்.

தம்பி - தூய எண்ணம், தூய நல்லெண்ணம் ஆகியவற்றிற்கும் ஆன்மாவுக்கும் தொடர்பு உண்டா? Self-existent தானே தனித்திருப்பது என்பதை விளக்க முடியுமா?

அண்ணன்- மனத்தின் எண்ணம் நல்லதாகவுமிருக்கும், கெட்டதாகவுமிருக்கும். மனத்தில் எழும் நல்லெண்ணம் கெட்ட எண்ணத்திற்கு எதிரானது. ஆன்மாவுக்கு நல்லெண்ணம் மட்டும் உண்டு. அது நல்லெண்ணம்தான். கெட்ட எண்ணத்திற்கு எதிரான நல்ல எண்ணமில்லை. ஒளி எனில் இருட்டு உண்டு, நிழல் உண்டு. ஒளி இருட்டுக்கு எதிரானது. ஆன்மாவில் இருள் இல்லை. ஆனால் ஒளியுண்டு.அது இருளற்ற ஒளி self-existent light.

.மனத்தின் நல்லெண்ணம் கெட்ட எண்ணத்திற்கு எதிரான நல்லெண்ணம்.

. ஆன்மாவின் நல்லெண்ணம், நல்ல எண்ணமாகப் பிறந்து, நல்லெண்ணமாக இருப்பது. கெட்ட எண்ணம் என்ற ஒன்று இருப்பதை அறியாதது.

தம்பி - சமூகம் வளர்ந்து அனைவரும் பணத்தின் பலனைப் பெறும்பொழுது நமக்கும் அது வரும். இப்பொழுதே நமக்கு அத்திறன் வர நமக்கு நல்லெண்ணம் வேண்டும் என்பது எதனால்?

அண்ணன் - ஒரு காலத்தில் படிப்பு, உயர்வு, வசதி, பணம் கொஞ்சம் பேரிடம் இருந்தது. அவர்களைக் கடந்து அது வெளியில் போகக்கூடாது என்று அவர்கள் நினைத்தார்கள். அது குறுகிய எண்ணம். கெட்ட எண்ணம். இன்று படிப்பு, உரிமை, உயர்வு, வசதி, பணம் அனைத்தும் அனைவருக்கும் வரவேண்டுமென சமூகம் நினைக்கிறது. இது நல்லெண்ணம். அந்த நல்லெண்ணத்தின் கருவியாக ஜனநாயகம், பல்கலைக் கழகங்கள், தினசரிப் பத்திரிக்கைகள், கம்ப்யூட்டர், இன்டர்நெட் ஆகியவை செயலாற்றுகின்றன. சமூகத்தின் நல்லெண்ணத்தின் பயன் நமக்கு வர நமக்கு நல்லெண்ணம் தேவை.

தம்பி -நாம் நல்லெண்ணம் என்று கூறுவதற்கும் நீங்கள் சொல்லும் ஆன்மீக நல்லெண்ணத்திற்கும் உள்ள வித்தியாசத்தை எடுத்துக் கூற முடியுமா?

அண்ணன் - நாம் வாயால் நல்ல கருத்தைத் தெரிவிக்கிறோம். செயலுக்கு வரும்பொழுது கை வாராது. பிறர் வாழ்வில் ஏற்படும் சிறப்பு நமக்கு சந்தோஷம் தருவது ஆன்மீக நல்லெண்ணம்.

தம்பி - நமக்கு நல்லெண்ணமிருந்தால் போதுமா?

அண்ணன் - இப்பணப் பெருக்கம் தன்னைத்தானே வளர்க்கும் திறனால் வருவது. நமக்கு நல்லெண்ணம் தன்னைத் தானே வளர்க்கும் அளவுக்கிருந்தால் நாம் அதனால் பயன் பெறலாம்.

தம்பி - மனதில்படும்படிச் சொன்னால் தேவலை.

அண்ணன் - நம் பணம் நம்மையறியாமல் தானே பெருக ஆரம்பித்தால் நம் நல்லெண்ணம் தானே வளரக்கூடியது எனப் பொருள்.

தம்பி - இல்லை என்றால்?

அண்ணன் - நமக்குள்ள நல்லெண்ணம் அவ்வளவுதான் எனப் பொருள்.

தம்பி - Values பண்புகளைப் பற்றிப் பேசினீர்கள். பிறகு நல்லெண்ணத்தைப் பற்றிச் சொன்னீர்கள். என்ன தொடர்பு?

அண்ணன் - பொருள்கள் goodsக்கு லிமிட் உண்டு. சேவை serviceக்கு லிமிட் உண்டு. ஆனால் பண்புக்கு லிமிட் இல்லை. அளவில்லாத பண்புகளை எந்த மனம் சேகரம் செய்கிறதோ அம்மனம் அளவில்லாத பணம் பெறும் என்கிறேன்.

Self-existent good will தானே தனித்தியங்கும் நல்லெண்ணம் இந்த எல்லாப் பண்புகளையும் தன்னுள் அடக்கியது என்பதால் அதைச் சொன்னேன்

தம்பி - அப்படி ஒருவருக்கு நல்லெண்ணம் அளவுகடந்து பெருகினால் பணம் எந்த வழியாக வரும்?

அண்ணன் - இக்கேள்விக்குரிய பதில் இரு பகுதிகள் உள்ளன.

-எவ்வழியாக வரும் என்று சொல்ல முடியாது. நமக்கு நல்லெண்ணமிருந்து சமூகத்தின் நல்லெண்ணத்தை அது தொட்டுவிட்டால் உடனே அது செயல்படும். நம் வாழ்வில் அதற்குரிய நிகழ்ச்சி எழும். முறை, வகை, ரூபம் எது என்று கூற முடியாது. அதிர்ஷ்டம் உற்பத்தியாகும்.

-கூற முடியுமிடங்களில் சொல்லக் கூடாது. சொல்வதால் அது நடைபெறாது.

ஜாதகத்திலில்லாத அதிர்ஷ்டத்தை உற்பத்தி செய்யும் வழி இது. அதிர்ஷ்டம் உற்பத்தி செய்யப்பட்டுவிட்டால் அது எப்படியும் செயல்படும் என்று நாமறிவோம்.

தம்பி -இதுவரை அன்னையைப் பற்றி எதையும் சொல்லவில்லையே?

அண்ணன் - சித்-சக்தி என்பதை நாம் அறிவோம். சச்சிதானந்தத்தில் சக்தி, சித்திலிருந்து பிரியும் இடம். நல்லெண்ணம் Good willஅந்த இடத்திற்கு உரியது. அதுவே அன்னையின் பிறப்பிடம். எனவே அன்னை என்பதை Good willமூலம் சொன்னேன்.

தம்பி - அன்னை மூலமாக இதுவரை சொல்லியதை மீண்டும் சொல்ல முடியுமா?

அண்ணன் - அன்னையை நாடுபவர்கட்கு மனத்தில் பணம் உட்பட எதுவுமிருக்காது.

தம்பி - அன்னைமூலமாக பணம் பெற விரும்பினால்...?

அண்ணன் - சுருக்கமாகச் சிலவற்றைக் கூறலாம்.

1. சமர்ப்பணத்தை முழுவதும் மனம் ஏற்கவேண்டும்.

2. நினைவு அன்னையிலும், செயல் உடலிலும் இருக்க வேண்டும்.

3. அன்னை விரும்பியவை எழும்பொழுது தவறாது செய்யவேண்டும்.

4. அன்னைக்குப் பிடிக்காததை எதுவானாலும் செய்யக் கூடாது.

5. பொய் மனதிலும் எழக்கூடாது.

6. பணத்தை மனம் நாடக்கூடாது.

தம்பி - பணத்தை மறந்தால், அது நம்மை மறந்துவிடுமே!

அண்ணன் - அது ஆசையிருக்கும்போது உண்மை. "பணத்தை மனம் நாடக்கூடாது' என்பதை பணத்தாசை மனதில் இருக்கக்கூடாது என்று கூறவேண்டும்.

தம்பி - நல்லெண்ணத்தை எப்படி உற்பத்தி செய்வது?

அண்ணன் - அது புதிய தலைப்பு. நல்லெண்ணம் உள்ளவர் இதனால் பயன்பட்டால் போதும்.

தம்பி - இல்லாதவர்?

அண்ணன் - இல்லை என்று யார் சொல்வது?

தம்பி - பொதுவாகத் தெரியுமே?

அண்ணன் - பிறருக்கு அது தெரிவதால் அவருக்குப் பயனில்லை.

தம்பி - அவருக்கே தெரிந்தால்?

அண்ணன் - அப்படித் தெரிந்தால், அவர் ஏற்றுக்கொள்வாரா?

தம்பி - ஏற்றுக்கொண்டால்?

அண்ணன் - அவருக்கு வழி சொல்லலாம்.

தம்பி - அதை நான் தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

அண்ணன் - இந்த முறை உனக்குப் பயன்படும். நீ பிறருக்குச் சொல்லப் பயன்படாது

தம்பி - ஏன்?

அண்ணன் - அப்படி ஒருவர் உன்னை இதுவரை கேட்கவில்லை. கேட்டால் பயன்படும். அவர் தனக்கு எவ்வளவு நல்லெண்ணமுண்டு, எவ்வளவு கெட்ட எண்ணமுண்டு, அவை எந்த நிலையைச் சேர்ந்தவை எனப் பிரித்து, அவற்றிற்கு எதிரான நல்லெண்ணத்தை மனதில் ஏற்படுத்தவேண்டும். விளக்க வேண்டுமானால் அதற்குத் தனிக் கட்டுரை எழுதவேண்டும்.

தம்பி - முக்கியக் கருத்துகள்வரை சொல்லலாமா?

அண்ணன் - உள்ளதை அறிந்து, ஏற்று, சமர்ப்பணம் செய்து, எதிரான நல்லதைச் செய்ய மனம் ஒப்புக்கொண்டு, அதனால் சந்தோஷப்படவேண்டும்.

தம்பி - அடையாளமாகச் சிலவற்றைச் சொல்லலாமா?

அண்ணன் - அப்படி மனம் மாறியது உண்மையானால், நாம் போகும் இடங்களில் நல்லது நடக்கும். நமக்கு நல்ல செய்திகள் மட்டும் வரும்.

தம்பி - குறிப்பாக உபாயம் ஒன்றில்லையா?

அண்ணன் - வேறு ஓர் இடத்தில் ஏற்கனவே சொல்லியிருக்கிறதே!

நமக்கு என்ன அதிர்ஷ்டம் வேண்டுமோ, அது நம்மைச் சார்ந்தவர்க்கு எல்லாம் வரவேண்டும் என சந்தோஷமாக மனம் கேட்கவேண்டும். நமக்கு அது கடைசியில் வரவேண்டும் எனவும் பிரார்த்திக்கவேண்டும்.

முற்றும்

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

இழந்த உரிமை, உடமை, சந்தோஷத்தை அன்னை மீட்டுத் தருகிறார்கள். உடைந்த கண்ணாடி பாட்டிலை உருக்கி மீண்டும் பாட்டிலாக வார்க்க முடியுமென்றாலும், நடைமுறையில் அது சாத்தியமில்லை. இழந்த உரிமையைப் பெறச் சட்டமும், நாட்டின் வழக்கும் மாறவேண்டும். கண்ணாடி மீண்டும் உருகி அதன் முதல் நிலையை அடையவேண்டும் என்பதுபோல, உணர்ச்சி மீண்டும் அதன் ஆரம்ப நிலையை அடைந்தால்தான் அதற்கெதிரானதாக உருமாற்றமடைய முடியும்.

இழந்ததைப் பெறலாம்.

ஆதியில் ஆரம்பித்தால் இழந்ததைப் பெறலாம்.

எதையும் செய்யலாம், இழந்த அனைத்தையும் மீண்டும் பெறலாம்.

முந்தைய நிலை பலித்தால் பிந்தையது முடியும்.

*******

 


 



book | by Dr. Radut