Skip to Content

06. அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னையின் அற்புதப் பேரருள்

ஸ்ரீ அன்னையின் அற்புதச் செயல்கள் அன்றாட நிகழ்ச்சிகளாக நடைபெறுகின்றன. ஸ்ரீ அன்னையின் அருட்செயல்கள் என் வாழ்க்கையில் சில நிகழ்ந்திருந்தாலும், இன்று நிகழ்ந்தது மெய்சிலிர்க்கச் செய்கின்றது. இது போன்ற அற்புதங்களை அன்றாடம் நிகழ்த்தும் ஸ்ரீ அரவிந்த மாதாவிற்கு நன்றி நவிலக் கடமைப் பட்டுள்ளேன். இதை ஸ்ரீ அன்னை அன்பர்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்புகின்றேன்.

என் மனைவி சந்தானலக்ஷ்மியுடன், 8 மாதப் பேரக்குழந்தை அரவிந்த பிரணவ ஸ்ரீ ஹரியை, அமெரிக்காவிலுள்ள Fort Worthஇல் உள்ள என் மகன், மருமகளிடம் சேர்ப்பிக்க, அக்டோபர் 29ஆந்தேதி British Airways விமானத்தில் சென்னையிலிருந்து காலை 8 மணிக்குப் புறப்பட்டோம். ஒரே நேரத்தில் 22 மணி நேரம் பிரயாணம் செய்ய 8 மாதக் குழந்தையாலும், 73 வயதான என்னாலும் முடியாது என்று லண்டன் சென்று அங்கு ஓர் இரவு என் சகோதரி ஆண்டாள், என் மைத்துனர் Dr. சுதா அவர்கள் வீட்டில் தங்கிவிட்டு, மறுநாள் காலை டல்லஸ்(Dallas) செல்ல ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி, அக்டோபர் 30ஆந் தேதி காலை 7 மணிக்கு லண்டன் Gatwick Airportற்குப் புறப்பட்டோம். Plane புறப்படும் நேரம் 9.45 காலை. சாதாரணமாக ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரத்தில் செல்லக்கூடிய தூரம். ஆனால் நாங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக் கொண்டதால் காலை 11.30 வரை airport செல்ல முடியவில்லை. 4.30 மணி நேரம் தாமதமாகிவிட்டதால் plane புறப்பட்டுப் போயிருக்கும் என்று எண்ணினோம். ஸ்ரீ அன்னையிடம் உள்ளம் உருகிக் கண்ணீர்விட்டு வேண்டிக் கொண்டே இருந்தோம். வழி தோன்றவில்லை.

சென்னை British High Commission, Librarian ஆக 23 ஆண்டுகள் பணிபுரிந்த நான், பிரிட்டிஷ் விதி முறைகளோ, செயல்பாடுகளோ எந்தக் காரணத்துக்காகவும், யாருக்காகவும் தளர்த்தப்படமாட்டா என்பதை உணர்ந்த நான் அன்று flightஐப் பிடிக்க முடியாது என்று தீர்மானித்துவிட்டேன். இருந்தாலும் அன்னையின் மீது நம்பிக்கையும், பாரமும் போட்டு நமது கடமையைச் செய்ய வேண்டுமல்லவா. என் சகோதரி எங்களை airport trainஇல் அழைத்துச் சென்று, Airportஇல் டிக்கெட்டுக்களைக் கொடுத்தார். அந்தப் பெண் அதிகாரி நொடிப் பொழுதில் 3 - 4 போன்களைச் செய்து விட்டு எங்களை ஓட்டமும் நடையுமாக Airhostess இடம் ஒப்படைத்தார். என்னால் நம்ப முடியவில்லை. 4 மணி நேரம் தாமதமாக இப்படி ஓர் அற்புதம் நடைபெறுமென்று. Aircraft 10 நிமிடங்களில் கிளம்பியது. ஸ்ரீ அன்னைக்கு நன்றி கூறி, அந்தப் பெண் அதிகாரி ரூபத்தில் அன்னை தான் வந்தார் என்று சாஷ்டாங்க நமஸ்காரம் செய்ய நினைத்தேன். ஆனால் ஒரு கையில் குழந்தை, மறு கையில் லக்கேஜ், சுற்றி ஜன நெரிசல் உளமாற அந்தப் பெண் அதிகாரிக்கு நன்றி சொல்லு முன், அந்த அம்மையார், இது தான் பிரிட்டிஷ் சம்பிரதாயம் என்று கூறாமல் கூறி மறைந்துவிட்டார். அவசரத்தில் எங்களுக்கு உதவிய அந்த மாது சிரோன்மணி பலர் ஸ்ரீ அன்னை அருளால் தோன்றி நமது பாரத நாட்டின் மக்கள் சேவைக்கு அர்ப்பணிப்பாராக என்று வேண்டி நின்றேன். பிரிட்டிஷ் நெறி முறைகளுக்குப் பழக்கப்பட்ட நான் இத்தகைய அற்புத நிகழ்ச்சியை, ஸ்ரீ அன்னை ஒருவரே நிகழ்த்தவல்லவர் என்பதை உணர்ந்தேன்.

ஸ்ரீ அரவிந்தர், ஸ்ரீ அன்னையின் அளப்பரிய சக்தியை உலகம் உணர்ந்து, ஏற்று உயர்வடைய, மக்கள் உய்ய வழி வகுத்தார் என்றால் மிகையாகாது. மக்கள் மதங்களின் பிடியிலிருந்து விடுபட்டு ஸ்ரீ அன்னையின் ஆன்மிக யுகத்தில், எளிய சீரிய வழிமுறைகளைக் கடைப்பிடித்து ஒழுகலாயினர். ஜாதி சமயமற்ற சமுதாயம் உருவாக அருட்பிரகாச வள்ளலார் பாடுபட்டார். அது நடைமுறையில் அன்னையின் வாழ்நாளில் ஒருமைப்பாட்டு முறையாக அமைய வழியேற்பட்டது. இந்தத் தொண்டு கிராமங்கள்தோறும், நகரங்கள் தோறும், நாடு முழுவதும் அன்னையின் இயக்கம் பரவிட வேண்டும். ஊர்கள்தோறும் தியான மையங்களும், தியானக் கூடங்களும் பெருக வேண்டும்.

ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னையின் ஆன்மிக சகாப்தத்தில் மக்கள் எழுச்சியும் வளர்ச்சியும் பெற்று எளிய, தூய்மையான வேறுபாடற்ற சமுதாயம் உருவாக, ஊரும், நகரும், நாடும், உலகும் உய்ய ஸ்ரீ அரவிந்தர் ஸ்ரீ அன்னை இவர்களின் எளிய வழிமுறைகள் அமைவதாக.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய நம!

***

 



book | by Dr. Radut