Skip to Content

07.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அளவற்ற அன்பும், எல்லையற்ற கருணையும்கொண்ட ஸ்ரீ அன்னையின் கமலப்பாதங்களில் இக்கட்டுரையை சமர்ப்பிக்கிறேன்.

நான் 1983ஆம் வருடம் பாண்டிக்கு அருகிலுள்ள ஒரு சிறு ஊரில் இருந்தேன். அங்கிருந்துகொண்டு விழுப்புரத்திலும், பிறகு கடலூரிலும் வேலை பார்த்து வந்தேன். தினமும் பாண்டி வந்துதான் செல்லவேண்டியிருந்தாலும், அங்கிருந்த 2 வருடங்களில் நான் அன்னையை அறிந்ததில்லை. என் கணவர் பாண்டியில் பார்த்துவந்த வேலையை விட்டுவிட்டு மயிலாடுதுறையில் ஒரு வேலையில் சேர்ந்துவிட்டார். எனக்கு மயிலாடுதுறைக்கு மாற்றல் கிடைக்கவில்லை.தினமும் கடலூர் சென்றுவரவும் முடியவில்லை. எனவே 10மாதங்களுக்கும் மேலாகச் சம்பளமில்லா விடுப்பில் இருந்தேன்.அப்போதுதான் அமுதசுரபியில் அன்னையைப் பற்றிய கட்டுரையைப் படித்தேன். உடனே அன்னையிடம் எனக்கு மாற்றல் கிடைக்க வேண்டிக்கொண்டு ஒரு தொகையை காணிக்கையாக (சரியான முகவரி தெரியாத நிலையில்) ஆசிரமத்திற்கு அனுப்பிவைத்தேன்.மணியார்டர் acknowledgement எனக்குக் கிடைக்கும் முன்பே,எனக்கு மயிலாடுதுறையில் புதிதாக ஆரம்பிக்கப்பட்ட அலுவலகத்திற்கு மாற்றல் உத்தரவு தபாலில் வந்தது. அந்த அலுவலகம் மூன்று மாதம் கழித்து மூடப்பட்டபோதும் அதே ஊரில் உள்ள வேறொரு அலுவலகத்தில் எனக்கு போஸ்டிங் கிடைத்ததும் அன்னையின் அருளினால்தான்.

இதேபோல் மற்றொருமுறை சேலத்திலிருந்து, சிதம்பரத்திற்கு டிரான்ஸ்பர் கேட்டேன். நான் சேலத்திலும், என் கணவர் சேத்தியாத்தோப்பிலும், என் மகன் சீர்காழியிலுமாக இருந்தோம்.அப்போது, ஓரிடத்தில் கட்டாயம் ஒரு வருடம் பணிபுரிந்தால்தான் மாற்றல் கொடுக்கலாம் என அரசாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது. என் குடும்பச் சூழ்நிலையின் காரணமாக எனக்கு ஒரு வருடத்திற்குள் மாற்றல் வழங்கலாம் என P&R Departmentலிருந்து அனுமதி கிடைத்தது. எனினும் சிதம்பரத்தில் vacancy இல்லாததால் எனக்கு டிரான்ஸ்பர் கிடைக்கவில்லை. வேறொருவரைத் தூக்கிவிட்டு வரவும் எனக்கு விருப்பமில்லை. அன்னையிடம், "சட்டப்படி ஒரு வருடம் கழித்தே எனக்கு மாற்றல் கொடுங்கள். என்னால் யாரும் disturb ஆகக்கூடாது'' என வேண்டிக்கொண்டேன். ஒரு வருடம் கழித்து எனக்குச் சிதம்பரம் அருகிலுள்ள காட்டுமன்னார்கோயிலுக்கு மாற்றல் கிடைத்தது. அப்போது அங்கு அடிக்கடி கலவரம் ஏற்பட்டு, திடீர்,திடீரென பஸ் போக்குவரத்து பாதிக்கப்பட்டு வந்தது. அங்கு எப்படிச் சென்று பணி புரியப்போகிறோம் என நினைத்துக்கொண்டே, சேலத்திலிருந்து ரிலீவ் ஆகி காட்டுமன்னார்கோயில் அலுவலகம் சென்றேன். அங்குள்ளவருக்கு, வேறோர் இடத்திற்கான போஸ்டிங் ஆர்டர் வரவில்லை. அது வந்து, அவரை ரிலீவ் செய்தபிறகே நீங்கள் ஜாயின் பண்ணமுடியும் எனத் திருப்பி அனுப்பிவிட்டார்கள்.என்னுடைய ஒரு வார ஜாயினிங் டைம் முடியும்வரையிலும் அவருக்கு போஸ்டிங் ஆர்டர் வரவில்லை. அன்னையிடம், "இன்னொருவரை நான் டிஸ்டர்ப் பண்ண விரும்பவில்லை. அதேசமயம் என்னுடைய ஜாயினிங் டைம் முடிந்துவிட்டதால் நான் இன்று கட்டாயமாக வேலையில் சேரவேண்டும். அனைத்தும் உன் அருள்'' என வேண்டிக்கொண்டு கடலூரிலுள்ள உயர்அதிகாரியின் அலுவலகம் சென்றேன். அந்த அலுவலகத்தின் போர்டிகோவிலேயே ஓர் ஊழியர் என்னிடம், "சிதம்பரத்தில் புதிதாக ஓர் அலுவலகம் ஒரு வாரத்திற்குமுன் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதில் காலியிடம் உள்ளது.இவர்தாம் அதற்கும் இன்சார்ஜ். எனவே நீங்கள் சேரலாம்'' என்றார்.அப்படியே நடந்தது. அன்னையால் மட்டுமே இப்படிப்பட்ட அற்புதங்களை நிகழ்த்த முடியும்.

இதேபோல் என் பல கோரிக்கைகள், அவை நியாயமாகவும்,நேர்மையாகவும் இருக்கும்பட்சத்தில் உடனுக்குடன் அன்னையின் கருணையினால் நிறைவேறி இருக்கின்றன. ஒவ்வொரு குழப்பமான சூழ்நிலையிலும் மதர்ஸ் ஸர்வீஸ் சொசைட்டியின் நூல்களில் ஏதாவது ஒன்றை பிரித்துப் பார்ப்பேன். கண்ணில்படும் வரிகள் அதற்குத் தீர்வாக இருக்கும்.

ஸ்ரீ அன்னையை அறிமுகப்படுத்திய ஞானகுருவிற்கு எனது பணிவான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

******


 


 book | by Dr. Radut