Skip to Content

01. அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஸ்ரீ அன்னையின் அருள் பிரவாகம்

சமீபத்தில் எங்களுக்கு ஏற்பட்ட ஓர் உண்மைச் சம்பவத்தின் மூலம் ஸ்ரீ அன்னை எங்களை எவ்வாறு ஒரு பேராபத்திலிருந்து காப்பாற்றினார்கள் என்பதை ஸ்ரீ அன்னை அன்பர்களுக்கு எடுத்துக்கூற விழைகின்றேன்.

எப்பொழுதும் காலை 4.30 மணிக்கு எழுந்து, 5.00 மணிக்குள் ஸ்ரீ அன்னையின் படத்தின் முன் தீபம், பத்தி ஏற்றி, ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் மந்திரங்களை டேப்பில் போட்டு, தியானம், பிரார்த்தனை முடித்து, பின்னர் காலை 5.50க்கு விஜய் டி.வி.யில் "ஸ்ரீஅன்னையின் பால்கனி தரிசனம்'' பார்ப்பது, ஸ்ரீ அன்னையின் மந்திரங்களை மனதால் உச்சரிப்பது அன்றாட வழக்கம்.

பின்னர் என் துணைவியார், ஸ்ரீ அன்னைக்கு புஷ்பாஞ்சலி சேவைக்காக வீட்டுத் தோட்டத்திலுள்ள பூச்செடிகளிலிருந்து பூக்களைப் பறித்து முடித்தபின்னர், வெயில் வருவதற்குள் பூச்செடிகளுக்குத் தண்ணீர் விடுவது வழக்கமான செயல்.

சம்பவத்தன்று (டிசம்பர் 2004) எங்கள் வீட்டில் மின்சாரம் இல்லை. அன்று சிறு தடுமாற்றம். விஜய் டி.வி.யில் "ஸ்ரீ அன்னையின் பால்கனி தரிசனம்'' பார்க்க இயலவில்லை. காலையில் தியானத்தை முடித்து சுமார் 6.30 மணிக்கு, என் துணைவியார் பூக்களைப் பறிப்பதற்குச் சென்றார் (ஸ்ரீ அன்னைக்கு புஷ்பாஞ்லிசக்காக விதவிதமான செடிகளை வளர்த்து வருகின்றோம்).

குறிப்பிட்ட தினத்தன்று என் துணைவியார் 1-ஆம், 2-ஆம் செடியை விட்டுவிட்டு, மூன்றாவது செடியிலிருந்து பூக்களைப் பறிக்க ஆரம்பித்தார்கள். நானும் தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது. சிறிது பூக்களைப் பறிப்பதற்குள்ளாகக் காலனிக்குத் தண்ணீர் திறந்துவிடும் பிளம்பர் அப்பொழுது, "குடிநீர் இணைப்பு திறந்துவிடப்பட்டுள்ளது'' என்று கூறி சென்றுவிட்டார் (வாரம் ஒரு முறைதான் குடிநீர் வரும்). 1 மணி நேரத்திற்குள் தண்ணீர் பிடிக்க வேண்டும். எப்பொழுதும் மாலையில் தான் குடிநீர் திறந்துவிடுவார்கள். இன்று ஏன் காலையில் விடுகின்றார்கள் என்று புரியவில்லை. பூக்களைப் பறிப்பதை உடனடியாக நிறுத்திவிட்டு, குடிநீர் பிடிப்பதற்கு என் துணைவியார் செல்லவேண்டி இருந்தது.

தண்ணீர் பிடிக்கும் வேலை காலை 8.30 மணிவரை தொடர்ந்தது. மற்ற வேலைகள் காரணமாக அதன்பின்னர் பூக்களைப் பறிக்கச் செல்லவில்லை. அதே நேரத்தில் எலக்ட்ரீஷியனுக்குத் தகவல் கூறப்பட்டது. அவர் 9.30 மணிக்கு வந்து பார்த்தபொழுது எலக்ட்ரிக் போஸ்ட்டில் இருந்து வரும் சப்ளை ஒயர் (live-wire) அறுந்து, முதல், இரண்டாவது பூச்செடியின்மேல் (1-ஆம், 2-ஆம்) விழுந்திருந்ததை கூறி, "சப்ளை தற்போது உள்ளது. எவ்வாறு இதனை கவனிக்காமல்விட்டீர்கள். இந்தச் செடிகளைத் தவறுதலாக (பூக்களைப் பறிக்கத்) தொட்டிருந்தால் கூட மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும்'' என்றும் கூறினார்.

இதனைச் சொன்ன பொழுது தான் எங்களுக்கு என்ன நடந்துள்ளது என்று புரிந்துகொள்ள முடிந்தது. காலையில் எங்கள் வீட்டிற்கு மாத்திரம் மின்சப்ளை இல்லை. எக்காரணத்தினால் சப்ளையில்லை என்பதை நாங்கள் உறுதிபடுத்திக் கொள்ளவில்லை.

சுருக்கமாகக் கூறினால்,

  1. முதல், இரண்டாவது செடிகளிலுள்ள பூக்களைப் பறிக்க முற்பட்டிருந்தால், என் துணைவியாருக்கு விபரீதம்,
  2. வாட்டர் டியூபில் தண்ணீரை பூச்செடிகளுக்கு ஊற்றியிருந்தாலும் மின்சப்ளை டியூபிலிருந்து செடிகளின்மேல் விழும் தண்ணீர்மூலம் வந்து பெரிய பாதிப்பை ஏற்படுத்தியிருக்கும்.

நாங்கள் அசட்டையாக இருந்த தருணத்தில் ஸ்ரீ அன்னை அவர்கள் எப்படி எங்களைக் காப்பாற்றி உள்ளார்கள் என்பதைச் சுருங்கக் கூறினால்,

  1. முதல், இரண்டாவது செடிகளிலிருந்து விலகி மூன்றாவது செடியிலிருந்து பூக்களைப் பறித்தது, என் துணைவியார் தம்மை அறியாத செயல்.
  2. ஒவ்வொரு வாரமும் மாலையில் வரவேண்டிய குடிதண்ணீரை அன்று மாத்திரம் காலையில் மாற்றி அமைத்துக் கொடுத்து என் துணைவியார் கவனத்தைப் பூக்கள் பறிப்பதை நிறுத்தியதோடு, செடிகளுக்குத் தண்ணீர் விடுவதை நிறுத்தியதற்கும் காரணமாக அமைந்தது.

நாங்கள் ஸ்ரீ அன்னையையே முழுமையாக நம்பியுள்ளோம். எங்களைக் காப்பாற்றிய ஸ்ரீ அன்னைக்கு எங்கள் ஆத்மார்த்த நன்றியைத் தெரிவித்துப் பிரார்த்திக்கின்றோம்.

ஸ்ரீ அன்னை எப்பொழுதும் நம்முடனே உள்ளார். அவர் ஒருபோதும் நம்மைக் கைவிடுவதில்லை. நம்மைவிட்டு விலகுவதுமில்லை. ஸ்ரீஅன்னையின் சக்தியை அறிந்திராத மற்ற அன்பர்களும் இதன் மூலம் ஸ்ரீ அன்னையையும், அவருடைய அளவற்ற கருணையையும் உணரலாம்.

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

மனம் இருப்பதில் செயல்படுவது. திருப்தி நிலையானது, முழுமையானது. இருப்பது நிலையில்லாதது; ஒரு பகுதியாகும். நிலையான, முழுமையான திருப்தியை நிலையில்லாத பகுதியான இருப்பதில் தேடும் மனம் என்றும் அதை அடைய முடியாது.

நிலையான முழுமையை

நிலையில்லாத பகுதியில் மனம் தேடுகிறது.

*******     

Comments

04.அன்பர் கடிதம்  Para 5 - 

04.அன்பர் கடிதம்
 
Para 5 -  Line 9 - Please make new paragraph for following lines
 
தண்ணீர் பிடிக்கும் வேலை காலை 8.30 மணிவரை தொடர்ந்தது.
:
:
தொட்டிருந்தால் கூட மிகப்பெரிய விபரீதம் நிகழ்ந்திருக்கும்''என்றும் கூறினார்.
 
Para 7 - Point 2 - Line 2 - Please join the following lines
 
 நாங்கள் அசட்டையாக இருந்த தருணத்தில் ...
:
எப்படி எங்களைக் காப்பாற்றி உள்ளார்கள் ...
  
Please highlight the last paragraph.



book | by Dr. Radut