Skip to Content

14. யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்
(மார்ச் 2008 இதழின் தொடர்ச்சி....)


 

கர்மயோகி
 

79. உனக்குப் பொறுக்காதவற்றை (sensitive) அறிவதுபோல் வாழ்வை அறிய வேண்டும். நமக்கு வரவேண்டிய பிரமோஷன் அடுத்தவருக்குப் போய்விட்டது; பெரிய வரன் வந்தது எனக்கு, முடிந்தது எதிர்வீட்டுப் பெண்ணுக்கு; பந்தியில் மரியாதையில்லாமல் நடத்துவது; வயதில் சிறியவர் வயதிற்குரிய மரியாதை தாராதது; தங்கை என்னிடமிருப்பதைவிட அண்ணனிடம் அதிக நம்பிக்கை வைப்பது; நமக்குக் கீழே வேலை செய்தவன் கீழே நாம் வேலை செய்யவேண்டிய நிலை பொறுக்க முடியாதவை. பல உதவிகள் நம்மிடம் பெற்றவன் ஓர் உதவி செய்ய மறுப்பது, நமக்கு செய்யவேண்டிய உதவியைப் பிறருக்குச் செய்வது பொறுக்காதவை. மரியாதை, உரிமை போகும்பொழுது மனம் புழுங்கும். நாம் பாதிக்கப்படுவதுபோல் பிறர் பாதிக்கப்படுவதை நாம் பொருட்படுத்துவதில்லை.

பிறரைக் கடந்த நிலையில் வாழ்வுள்ளது.

நாம் பொறுக்காததுபோல் வாழ்வு பொறுக்காது.

நமக்கு ஜீவன் உள்ளதுபோல் வாழ்வுக்கும் ஜீவன் உண்டு.

அதை அறிவது பெரிய விஷயம்.

நமக்கு உரிமையுள்ளவரை வாழ்வு பொறுக்கும். நம் உரிமையின் எல்லையைக் கடந்து பேசத் தோன்றுவது அதிகப்பிரசங்கித்தனம். அப்படிச் செய்தால் வாழ்வு எதிரான பலன் தரும். DMKயைப் பற்றி இராஜாஜியை அவர் முதலமைச்சராக இருந்தபொழுது அபிப்பிராயம் கேட்டார்கள். அவர் அரசியல் தலைவர். DMK அரசியல் கட்சி. நேரு அவர்களை "நான்சென்ஸ்' என்றார். அது அரசியல் அபிப்பிராயம். அரசியல் அபிப்பிராயத்தைக் கடந்து religious, spiritual opinion மதாச்சாரியர்கள்போல இராஜாஜி பேசினார், "அவர்கள் ராட்சசர்கள். அவர்களுக்குள்ளே அடித்துக்கொண்டு சாவார்கள்'' என்றார். 10 ஆண்டுக்குள் அவர் DMK மேடையிலிருந்து DMKவை ஆதரித்துப் பேசும் நிலை வந்தது. ஒருவர் நிலம் வாங்க முயன்றார். நண்பர் தாம் விலை பேச முன்வந்தார். முடியும் பொழுது தமக்கு அதில் பாதிவேண்டும்எனக் கேட்டார். பிறர் வாங்கும் சொத்தில் பங்கு எவரும் கேட்கமாட்டார்கள். வாழ்வு அதை அனுமதிக்காது. ஓராண்டுக்குள் இவர் மனையை சொற்ப விலைக்கு சர்க்கார் எடுத்துக்கொண்டது.

  • பிறர் புண்படுவது எளிய செயல்.

  • வாழ்வு புண்படுவது பெரிய செயல்.

மனிதன் நடத்தைத் தவறாக இருப்பது, நாணயம் தவறுவதுண்டு. அதை வீட்டிற்குள்ளே செய்தால் குற்றம். நடத்தை நாணயம் தவறினால் தவறுபவன் தண்டனை பெறுவான். நெருக்கமான இடத்தில் அதைச் செய்தால் வாழ்வு புண்படும். குடும்பம், நட்புஎன்பவை வாழ்வு ஏற்படுத்தியவை.

  • தவறு வேறு.

  • வாழ்வை மீறித் தவறுவது வேறு.

ஒருவனை அடித்தால், அது அடிதடி சண்டை; போலீஸ்காரனை அடித்தால் அது சர்க்காருக்கு எதிரான செயல். கோர்ட்டில் எதிரியைத் திட்டுவது திட்டு; ஜட்ஜைத் திட்டினால் (contempt of court) ஜெயிலுக்குப் போகவேண்டும்.
 

வாழ்வின் நயங்களை அறிந்து, அவை திருப்திப்படும்வகையில் நடக்கவேண்டும். அவற்றைச் சீண்டக்கூடாது.
 

80. அழைப்பு ஆழத்தில் ஆனந்த உணர்வு கொடுப்பதைக் கவனி.

அழைப்பு பிரச்சினைகளைத் தீர்க்கும்.

மேலும் அழைப்பு வாய்ப்பை உற்பத்தி செய்யும்.

இவையிரண்டும் வாழ்வுக்குரியவை.

ஆத்மாவுக்குரிய மௌனத்தையும், காட்சி, நேரடி ஞானம்,

ஞானத்தையும் அடுத்த அடுத்த கட்டங்களில் அழைப்பு தரும்.

அதற்கும் அடுத்தது சுமுக உணர்வு.

சுமுக உணர்வு ஆனந்தம் தருவது சத்தியஜீவியம்.

"என் சந்தோஷம் இரு மடங்காகி ஒரு வாரம் இருந்தது'' என ஒரு அன்பர் எழுதினார். இது யோக சித்தி. Mother's joy swelling up.

அன்னையின் ஆனந்தம் பொங்குவது.

ஒரு நிமிஷம் இது கிடைப்பது அனுபவம்.

நிலையாகக் கிடைப்பது சித்தி.

இந்த ஆனந்தத்தில் உலகம் சிருஷ்டிக்கப்பட்டது.

ஆனந்தத்தில் தோன்றி, ஆனந்தத்தில் வாழ்ந்து, ஆனந்தத்தை அடைவது சிருஷ்டி.
 

சமர்ப்பணம் இவ்வானந்தத்தால் சரணாகதியாகும்.
 

அன்றாட எளிய நிகழ்ச்சிகளில் சமர்ப்பணம் இந்த ஆனந்தத்தைத் தருமானால், ஒரு முறையும் தருமானால், அவர் அன்னை விரும்பும் அன்பர். அவருக்குப் பிரச்சினைகள் பிரச்சினையில்லை.

இந்த ஆனந்தமும் மனம், உணர்வு, உடல், ஆத்மா என்ற 4 நிலைகளுள் மேலெழுந்தவாரியாகவும், ஆழ்ந்தும் உண்டு (consciousness and substance).

மனம்பெறும் ஆனந்தம் பரந்தமனம் தரும்.

உணர்வுபெறும் ஆனந்தம் உறவை இனிக்கச் செய்யும்.

உடல்பெறும் ஆனந்தம் நன்றியால் பூரித்து, உடல் புளகாங்கிதம் அடைதல்.

பரந்தமனம் நம் விஷயத்திலும், நமக்கு வேண்டியவர் விஷயத்திலும் அடைவது மேல்நிலை; பிறர் விஷயத்தில் எழுவது ஆழ்ந்த நிலை.

வேண்டியவர் உறவு இனிப்பது சிறியது. எவர் உறவும் இனிப்பது பெரியது.

உடல் பூரிப்பது ஒரு நிலை. புல்லரிப்பு ஆழ்ந்த நிலை.

நோக்கம் இந்த ஆனந்தம் பெறுவதானால் அன்பன் சாதகனாவான்.

ஆனந்தம் அறிவுக்கு அழகாகத் தெரியும்.

ஆனந்தம் ஆத்மாவுக்கு அன்பாகத் தெரியும்.

ஆனந்தம் உணர்வுக்கு சந்தோஷமாகும்.

அருள் உள்ளே வந்தால் அன்பாக வெளிப்படுகிறது.

அருள் உள்ளே ஆனந்தமாக ஆத்மாவில் எழுந்து அன்பாகிறது.

அழைப்பு வாய், மனம், நெஞ்சம், ஜீவன்எனப் பல நிலைகளிலிருந்து எழும்.

ஒவ்வொரு நிலைக்குரிய ஆனந்தம் ஒரு வகை.

இதைக் கவனிப்பது ஆத்ம விழிப்பு.


 

81. எவரையும் அவருக்குத் தாங்க முடியாத இடத்தில் (Sensitive point) தொடாதே.

சில ஊர்களுக்குக் கெட்ட பெயருண்டு.

சில ஜாதிக்கும் அது சில ஊரில் உண்டு.

ஓர் ஊரில் புகழுடைய ஜாதிக்கு வேறு ஊரில் நல்ல பெயரிருக்காது.

(Sensitive ) சூடான சொரணையுடையவருக்கு இது போன்ற

விஷயத்தில் positiveபாஸிட்டிவாகக் கூறினாலும் கோபம் வரும்.

வக்கீலுக்கு எந்த ஊரிலும் மரியாதை.

மத்தியஸ்தத்தில் வக்கீல் பேசுவதை ஏற்க முடியாதவர் வக்கீல்போலப் பேசுகிறீர்கள்என்றால் வந்த விஷயமே கெட்டுவிடும்.

குடும்பம், ஊர், தொழில், ஜாதி, வயது, படிப்பு, கட்சி, இவற்றைப் பற்றிப் பேசுவதால் மனம் புண்படும். அவற்றை அடியோடு விலக்குதல் அவசியம்.

சிலருக்கு இப்படிப் பேசுவதே பழக்கமாக இருக்கும்.

"கொட்டினால்தான் தேள்'' என்பது அவர் சட்டம்.

அவர்கட்குரிய முறை இது.

இப்படிப் பேச சந்தர்ப்பம் வந்தால் அவர்களால் பேசாமலிருக்க முடியாது.

"நீ டிரைவர்தானே?'', "உனக்குப் பேச வயதில்லை'', "இது உங்கள் ஊர் பாஷை'', "படிக்காதவருக்குப் பேச உரிமையில்லை'', "உங்க ஜாதிக்கே முரட்டு ஜாதி, முட்டாள் ஜாதிஎனப் பெயர்'', "நீ கம்யூனிஸ்ட் அல்லவா?'' என்ற சொற்களைச் சொன்னால் வம்பு வரும்.

அந்த சந்தர்ப்பம் வரும்பொழுது பேசத் துடிக்கும்.

குளப்பாக்கம் என்ற ஊர் பெயர் சொன்னாலே சிரிப்பார்கள்.

அந்த ஊர்க்காரரிடம் அதைத் தொட்டுப் பேசக்கூடாது.

இவ்விஷயத்தில் மனத்தைக் கட்டுப்படுத்த முயன்றால் உள்ளே போராட்டம் பெரியதாக இருக்கும்.

அமெரிக்கர் நாகரீகமற்றவர், ஹாலண்டு நாட்டினர், ஸ்காட்லண்ட் நாட்டினர் கருமிகள்எனப் பெயர் பெற்றவர். நாம் வெளிநாடு போனால் நம்மை அந்த நாளில் மகாராஜா, பாம்பாட்டி என நினைப்பார்கள். இந்தியாவில் ராஜாக்கள் அதிகம்.

இங்கு தெருவில் பாம்பாட்டியைக் காணலாம்என அறிவார்கள்.

நம்மை "நீங்கள் ராஜாவா, பாம்பாட்டியா?''எனக் கேட்டால் நம் மனம் என்ன பாடுபடும்.
 

இதுபோன்ற discipline கட்டுப்பாட்டை 1 மாதம் பயின்றாலும் பலனுண்டு;

1 வாரமும் போதும்.

இந்தக் குணமுள்ளவர்க்கே இது பொருந்தும்.

அனைவர்க்கும் பொதுவாகப் பொருந்தும்.

குறிப்பாகப் பொருந்தாது.
 

82. சிறு தவறும், குறையும் ஏற்படாவண்ணம் 3 நாள் அல்லது குறைந்தபட்சம் 24 மணி நேரம் செயல்படுதல்.

தவறின்றிச் செயல்பட மனிதன் தெய்வமாக இருக்க வேண்டும்.

கடிதம் எழுதி மடித்துக் கவரில் போட்டபின் எடுத்துப் பார்த்தால்

நாம் செய்த வேலை நமக்கே சிரிப்பு வரும்; பேப்பர் கோணலாக இருக்கும்.

ஜவுளிக்கடையில் 1 புடவை வாங்க பெண்கள் பல புடவைகளைப்

பரிசீலனை செய்வர். கடையில் அப்புடவையை மீண்டும் மடித்து வைக்கும் நயம், பொறுமை பெரியது. 1 நாள் முழுவதும் நம் செயல்களை நாமே கவனித்தால் எப்படி அவற்றைச் சரியாகச் செய்வதுஎனப் புரியும். முதல்

எப்படி ஒவ்வொரு சிறு காரியத்தையும் (perfectஆக) சிறப்பாகச் செய்வது என விவரமாக முடிவுசெய்யவேண்டும். அம்முடிவு மனத்தில் மகிழ்ச்சியாக மலரும்வரை பொறுமையுடன் பூரிக்க வேண்டும்.

3 நாள் அதைப் பின்பற்ற ஆரம்பித்தால் தவறுஎன வரக்கூடாது.

வந்தால் அதிலிருந்து மீண்டும் 3 நாள் தொடர வேண்டும். இப்பயிற்சியை மேற்கொண்டபின் நம்மால் எந்த ஒரு சிறு காரியத்தையும் சரிவரச் செய்ய இயலாது, இதுவரை செய்யவில்லைஎனப் புரியும். கதவைச் சார்த்துவது, காரை ஸ்டார்ட் செய்வது போன்றவை சிறு வேலைகள். சத்தம் போடாமல், கதவு பொருந்தும்படி சார்த்த இயலாது; பெருமுயற்சி வேண்டும். கார் ஆடாமல் (jerk) ஸ்டார்ட் செய்ய பாதி பேரால் முடியாது. அவர்களாலும் ஜெர்க் இல்லாமல் நிறுத்த முடியாது. மேஜை மேல் தட்டு, டம்ளர் சத்தமில்லாமல் வைக்க பயிற்சி வேண்டும். தினமும் பரிமாறுபவர் கரண்டியில் சூடாக சாம்பார் எடுத்துப் பரிமாறுகிறார். ஒரு நாளைக்கு அந்த வேலையை நாம் செய்தால் சாம்பார் சிதறும், கை பிடிபடாது; பயிற்சி தேவை. நெடுநாளைய பயிற்சியின்பின் இவற்றைப் பாதிப்பேரே ஒழுங்காகச் செய்வார்கள். சாம்பாரை அழகாகப் பரிமாறுபவர் கவனம் முழுவதும்

பரிமாறுவதிலிருக்கும். அவரால் அடுத்த ஒரு காரியத்தை அதேபோல் செய்ய முடியாது.

 

  • நாள் முழுவதும் நாம் 100க்கு மேற்பட்ட காரியங்களைச் செய்கிறோம். ஒவ்வொன்றையும் சரியாகச் செய்ய வேண்டும்.

  • சரியாகச் செய்ய முடிந்தால் படபடப்பு வரும். Relaxed சல்லிசாக இருக்க முடியாது. இயல்பாக, படபடப்பின்றி, அழகாக அனைத்துக் காரியங்களையும் முகமலர்ந்து செய்வது தெய்வஅம்சம்.

  • அதை முயன்று, கவனித்து, பொறுமையுடன் பெற்று 3 நாள் பயிற்சியாக மேற்கொள்வது நாம் நம் நிலையை அடிமட்டத்தினின்று உச்சிக்கு உயர்த்துவதாகும்.

  • இந்த நாளில் பேனாவுக்கு இங்க் போடவேண்டாம். பென்சில் சீவ வேண்டாம். அவை ஒருவர் நிதானத்தையும், திறமையையும் அளந்து காட்டும் செயல்கள்.


 


 

83. 3 மணி நேரம் மனத்துள் ஒரு குறையும் எழாதவாறு கட்டுப்படுத்து. எப்பொழுதும் யார்மீதாவது குறை சொல்பவருக்கு உகந்த முறையிது. குறையுடையவர் குறை சொல்வார்.

வாயால் சொல்லாமலிருந்தால் டென்ஷன் வரும்.

மனத்தால் சொல்லாமலிருந்தால் பயித்தியம் பிடிக்கும்.

குறையுடையவர் குறைசொல்வது அவர் வாழ்வு செவ்வனே நடக்க உதவும்.

அவர் குறைசொல்வதைத் தடுக்கக்கூடாது.

தாம் சொல்லும் குறையைக் கண்டு அவரே வெட்கப்பட்டு, குறை கூறக் கூடாதுஎன விரும்பினால், அவருக்கு உதவும் முறையிது.

கடல் அலை எழுவதுபோல் மனத்துள் அவருக்குக் குறையெழும்.

"இதுதான் என் சுபாவம். எனக்கு இது வெட்கம் தருகிறது' என்பது முதற்படி.

அதை உணர்பவர் செய்யக்கூடியது என்ன?

அடுத்த முறை நம்மையறியாமல் குறை சொல்லும்பொழுது அதைக் கண்டு நாம் வெட்கப்பட வேண்டும்.

வெட்கம் பூரணமானால், துணி அவிழ்ந்தால் வெட்கப்படுவதுபோல் வெட்கப்பட்டால், இம்முறையை ஆரம்பிக்கலாம்.

அதன்பின் முடிவாகச் செய்ய வேண்டியது,

யார் பிறர்மீது குறைசொல்வதையும் நாம் வாயாலோ, மனத்தாலோ கண்டிக்கக் கூடாது.

அப்படிக் கண்டித்தால் குறை உள்ளே உயிரோடிருக்கிறதுஎனப் பொருள். இவரும் நம் போருக்கிறார்எனத் தோன்ற வேண்டும்.
 

குறை கூறாத மனம் நிறையுடையதுஎன்று விளங்க வேண்டும்.
 

அதன்பிறகு மனத்தைக் கட்டுப்படுத்த முயன்று 3 நிமிஷம், 10 நிமிஷம் என வளர்ந்து 3 மணி நேரம் மனம் அமைதி பெறுவது பயிற்சி முடிவது.


 

  • ஏன் குறைசொல்கிறேன்என விளக்கத் தோன்றும்.

  • இது சொல்ல வேண்டிய அவசியமாயிற்றேஎனத் தெரியும்.

  • நம்மையும், நம் புதுமுடிவையும் மறந்து குறை கூறுவோம்.

  • இயல்பாக எழுவதை எப்படித் தடுக்க முடியும்எனத் தோன்றும்.

  • வெட்கப்படுவது, உஷாராக இருப்பது, இலட்சியம் நினைவில் இருப்பது அவசியம்.

  • அப்படியிருப்பது மனம் கட்டுப்படுவது.

  • மனம் குறை விஷயத்தில் கட்டுப்பட்டால் வேறொரு விஷயத்தில் ஓடும்.

  • எந்த விஷயத்திலும் ஓடாதது அமைதி.

  • குறை விஷயத்திலாவது கட்டுப்பட வேண்டியது அவசியம்.

  • 3 மணி நேரம் கட்டுப்பட்டால் பிறகு பொதுவாகக் கட்டுப்படும்.

     

    84.பிறர் கர்மத்திற்குக் கருவியாகக் கூடாது. 1 வாரம் அல்லது 1 மாதம் அதைக் கடைப்பிடிக்கலாம்.

    நாம் கர்மத்திலிருந்து விலகுகிறோம். பிறர் கர்மத்தை ஏற்கலாமா? சம்பாதிக்க முடியாதவன், படிப்பை முடிக்காதவன், திருமணமாகாதவன் பெரிய குடும்பங்களிலும், சிறிய குடும்பங்களிலும் இருப்பதுண்டு.

அத்தைமகளைத் தன்விருப்பத்திற்கு எதிராகச் செய்து வைத்ததால், திருமணத்தன்றே "அவளுடன் வாழப் போவதில்லை' என்றான்.

சொல்லியவன் கல்லூரி ஆசிரியன். கடைசிவரை வாழவில்லை.

நிலைமை பரிதாபமானது. பலரும் மத்தியஸ்தம் செய்ய முன்வந்தனர்.

எவராலும் எதுவும் செய்ய முடியவில்லை. சர்க்காரில் டெபுடி டைரக்டராக இருந்தவன் பிரமோஷனில் சர்க்காருடன் கோபித்துக்கொண்டு ராஜினாமா செய்தான்.

ஓய்வுபெற வேண்டிய வயதிற்குமுன் இறந்துபோனான்.

இவனை மனைவியுடன் இணைக்க எவர் முயன்றாலும், இவனுடைய

கர்மம் அவர்களுக்கு வரும். இவனுடைய கல்லூரி ஆசிரியர் முயன்றார்.
 

அவர் பையன் இவன்போல ஆனான். அவர் தம்பி அகால மரணமடைந்தான்.
 

இது நல்ல காரியமாயிற்றே செய்யக்கூடாதாஎன்பது கேள்வி.

அவனோ, அவன் மனைவியோ பிரச்சினையை அறிந்து, அதிருந்து

மீள விரும்பி, நம்மை அணுகினால் செய்யலாம்; நாமே செய்யக்கூடாது.
 

பரம்பரை பட்டினியிருப்பவருக்குப் பஞ்சம் நீங்கி சுபிட்சம் வர முயன்றால் அவருடைய பஞ்சம் இரண்டு தலைமுறைக்கு செய்தவருக்கு வருகிறது.

சொந்த சுபாவத்தால் கெட்ட பெயர் வாங்கியவர்க்கு அகில இந்தியப் புகழ் தேடிக் கொடுத்தால் அவர் கெட்ட பெயர் இடம் மாறுகிறது.
 

கூலிக்காரன் மகன் குடித்தனக்காரனாக முயல்வதை, இது இவன் கர்மம்எனப் புரியாது, நடத்திக்கொடுத்தால் நாட்டை ஆள வேண்டிய அம்சம் உள்ளவருக்கும் நல்லது நடக்கத் தவறுகிறது.
 

இதைச் செய்ய முயல்பவர் குறைவு.

அவர்களுக்கு இந்த சந்தர்ப்பம் ஒரு நாளைக்கு 10 முறை வரும்.

அவர்களால் கட்டுப்படுத்த முடியாது.

1 மாதம் கட்டுப்பாட்டிருந்தால் நாம் எதிர்பார்க்கும் பலன் வரும்.

அவர்களால் ஒரு நாள், ஏன் ஒரு முறையும் தங்களைக் கட்டுப்படுத்த முடியாது.

சுபாவம் நம்மை மீறக்கூடியது.

நாம் சுபாவத்தை மீறுவது இலட்சியம்.

அது ஒரு வினாடியும் கட்டுப்படாதது. 1 மாதம் கட்டுப்பட்டால் பெரும் பலன் வரும்.

எந்த விஷயத்தில் சுபாவத்தைக் கட்டுப்படுத்தினாலும் இப்பலன் வரும்.

கர்மம் விஷயத்தில் சுபாவம் கட்டுப்படுவது மிகக் கடினம்.

கடினமான காரியத்தை அருள் சமாளிக்கும்.

அருளை அழைத்து கர்மத்தைக் கரைக்கலாம். நாம் அதில் தலையிடக் கூடாது.

 

85. முடிவைத் தெளிவாக எடு - 1 வாரம்.

முடிவெடுக்க முடியாதவரை முக்கியமான நேரத்தில் பார்த்தால் பரிதாபமாக இருக்கும். Chit fundஇல் சேரலாமா, வேண்டாமாஎன்பது சிறிய விஷயம்.
 

முடிவு எடுக்க முடியாதவருக்கு அது பாரமாகப் போகும்.
 

அது நாமேயானால் - நம்மால் முடிவு எடுக்க முடியாமற்போனால் - நமக்கு நிலைமை மிகத்தெளிவாக விளங்கும்.

இரண்டுவரன் வந்தபொழுது மனம் ஊசலாடும்.

இரண்டுவரனிடையே ஊசலாடும் மனம் காபி வேண்டுமா, டீ வேண்டுமா என்றும் அதேபோல் ஊசலாடும். ஊசலாடுவது மனம், ஊசலாட்டுவது விஷயம்எனத் தோன்றும்.
 

ஆழத்தின் முடிவு மூலத்தின் முடிவு.
 

இப்படிப்பட்டவர்க்கு தினமும் போராட்டம், எதிலும் போராட்டம்.

ஆயுள் முழுவதும் இவர்கள் அப்படியேயிருப்பார்கள்.

1 வார காலம் இவர்கட்கு நீண்ட காலம். அன்னையை ஏற்று, சிறு விஷயத்தில் - காபியா, டீயா - முடிவை ஆட்டங்காணாமல் எடுக்க ஆரம்பித்தால் அன்னை ஆட்டத்தை அகற்றி, மனத்தில் நிம்மதி தருவதைக் காணலாம். அது வெற்றி.
 

அன்னையில்லாமல் இதே வெற்றிபெற ஒரு ஜன்மத்தில் முடியாது.

"இது என் சுபாவம், இனிமே மாறப்போகிறேனா?' என்பார்கள்.
 

அன்னையை நம்பினால் ½நிமிஷத்தில் ஆட்டத்தை அகற்றுவார்.

"காபி, டீயும் வரனும் சமமாகுமா?'என மனம் கேட்கும். மனம் கேட்டவுடன் பதில் கூறும்வகையில் இரண்டுவரன் வரும். சற்று உள்ளே போய் கூர்ந்து பார்த்தால் முடிவு அதே ½ நிமிஷத்தில் எந்த வரன் வேண்டும்எனக் கூறும்.
 

காபி, டீயும் வரனும் ஒன்று என்று அன்னை காட்டுகிறார்.

இதுவரை நடந்தது அருள்.

இதை 1 வாரம் தொடர்ந்தால் ஊசலாடும் சுபாவம் ஆட்டத்தைக் கைவிடுவது தெரியும். கிடைத்ததைப் பற்றிக்கொண்டால் பலன் உண்டு.

கிடைத்ததுமூலம் அன்னையைப் பற்றிக்கொண்டால் முடிவான பலனுண்டு.

1 வாரத்தில் 50 அல்லது 60 முறை முடிவுகள் எடுக்க வேண்டியிருக்கும்.

ஒரே வாரத்தில் நாம் புத்துயிர் பெற்று புது மனிதனாவோம்.

அன்னையை அறிந்த அன்பர்கள் சில நாட்களில் பெருமாறுதலடைவதைக் கண்டு, பிறர் பேசுவதுண்டு.

விஷயம் சிறியதானாலும் மனம் ½ நிமிஷம் நிலைத்தால், அன்னை

அதன் மூலம் செயல்படுவார். ஆடிக்கொண்டேயுள்ள பலகையில் சித்திரம் வரைய முடியாது.
 

முடியாத பெரும்பலனை முடிந்த சிறுகாரியம்மூலம்பெற அன்னையின் துணையுண்டு.
 

சிறு காரியத்தில் பெருநெறி வெளிப்படும்.
 

86. கடன் பெறுவதைக் கொஞ்ச காலம் நிறுத்தி வை.

கடன் பெறுவதுஎன்பது கடன் தேவைப்படுகிறது என்பதன்று - எவை கிடைக்கும் என்றாலும், அத்தனையையும் முழுக்க அனுபவிக்க வேண்டும் என்ற பேராசை.
 

ரூ.4000 சம்பளமுள்ளவர்க்கு மாநிலத்தில் பரவிய ஸ்தாபனத் தொடர்பு கிடைத்தவுடன் எத்தனைப் பேரிடம் அத்தொடர்பால் கடன் பெற முடியுமோ, அத்தனையும் பெற்றார்.
 

அது 4 இலட்ச ரூபாய். இதற்குக் கொள்ளையடிப்பதுஎனப் பெயர்; கடனில்லை. இவரால் கடன் கிடைக்கும்எனத் தெரிந்தால், 1 நாள் சும்மாயிருக்க முடியாது.
 

1 மணி நேரம் மனம் கட்டுப்படாது.
 

"பணம் தேவை' என்பது சாக்கு. எந்தப் பணமாவது, யாரிடமாவது பெற்று வாழ்வை அனுபவிக்க வேண்டும்என்ற ஆசை. அந்த ஆசை 1 நிமிஷம் மனதில் கட்டுப்படாது.
 

அதைக் கண்டவர், 1 மாதம் கடன் பெறும் பழக்கத்தை நிறுத்தி வைக்க முடியுமானால், அந்த நேரம் அன்னையை இடைவிடாது அழைக்க முடியுமானால்,

  • அவர் தரித்திரம் அதிர்ஷ்டமாகும்.

  • அல்பமாகப் பிறரைக் கேலிசெய்பவர், unhealthy curiosityஎன்ன விஷயம்எனக் கேட்டுத் துருவி அறிபவர், வாயைக் கட்ட முடியாதவர், தன்பெருமையை வாய் ஓயாது கூறுபவர் போன்றவரால் 1 மணி நேரம் அந்த சுபாவத்தை மனத்தில் கட்டுப்படுத்த முடியாது; செயலை 1 மாதம் தள்ளி வைக்க முடியாது.

அது அவசியம்.

  • நாரதரால் கலகத்தை உற்பத்தி செய்யாமலிருக்க முடியுமா?

  • சிலருக்கு நாரதர் ராசியுண்டு. அவர் வந்து போனால் அவர் எதையும் கிளப்பாவிட்டாலும், அங்கு கலகம் பிறக்கும்.

  • நிறுத்திவைப்பது சுபாவத்தை அறிய முற்படுவது.

  • அதன்வழி அன்னை வாழ்வினுள் வர முடியும்.

  • பொதுவாகக் கடன் பெறுவது, பெற்றதைத் திருப்பித் தருபவருக்கு இது பொருந்தாது.

  • வாழ்நாளில் கடன்என வாங்கி நான் திருப்பிக் கொடுத்ததில்லை என்பவர்களையே நான் மனதில் கொண்டு எழுதுகிறேன்.

  • அப்படி ஒருவரால் கொஞ்ச காலம் நிறுத்தி வைக்க முடியும் என்றால், அவர் வாழ்வில் அதன்பின் கடன் வாங்கும் சந்தர்ப்பம் எழாது.

  • தவறான சுபாவம் நல்ல இராசியாகும் முறையிது. அன்பர்கட்கு மட்டும் கிடைக்கும் அரியவரம். வாழ்வில் இந்த வாய்ப்பில்லை.


 

தொடரும்....


 


 

இரகஸ்யம் - The Secret


 

ஆஸ்திரேலியப் பெண் ஒருவர் வாழ்க்கையில் நலிந்தபின் ஆண்டவன் மீது நம்பிக்கை கொண்டு முன்வந்து, தம் அனுபவத்தால் பலரும் பலன் பெறும்படி நடந்து, அவற்றைத் தொகுத்து The Secret என்றொரு புத்தகம் வெளியிட்டார்.

அதைத் திரைப்படமாகவும் DVD வெளியிட்டார். 60 இலட்சம் பிரதிகள் விற்றன. உலகப் பிரசித்தி பெற்றார். ரூ.200 கோடி குறுகிய காலத்தில் சம்பாதித்தார். இது உலகெங்கும் பரவுகிறது. "நாம் பிரபஞ்சத்தின் பகுதி. நம்மால் முடியாததை, நமக்காகப் பிரபஞ்சம் நடத்திக் கொடுக்கும். அதற்குரிய உபாயங்களை நாம் ஏற்க வேண்டும்'' என்று கூறுகிறார். இவர் கூறும் உபாயங்கள்:


 

(1) பிரார்த்தனை, (2) பிரபஞ்சத்துடன் ஐக்கியமாவது, (3) கற்பனை செய்தல், (4) எண்ணத்தை எழுதி வைப்பது - வரி வடிவம், (5) பிரார்த்தனை பலித்த பின் வரும் சந்தோஷத்தை இப்பொழுதே அனுபவிப்பது, (6) பரவயப்படுதல், (7) நினைவை எண்ணத்தால் நிரப்புவதுபோன்றவை அதன் தத்துவம்.

.

கற்பனையில் பலிப்பது,

நடைமுறையில் பலிக்கும்.

.

நாம் பிரபஞ்சத்தின் பகுதிஎன்பதால் நம் ஆசைகளைப் பிரபஞ்சம் பிரார்த்தனை உருக்கமானபொழுது பூர்த்தி செய்யும்.

.

வரி வடிவத்திற்கு உயிர் உண்டு.

.

கற்பனைக்கு உயிர் உண்டு.

.

ஆசை ஆர்வமானால், நினைத்தது பலிக்கும்.

வீடு வாங்க ஆசைப்பட்டவர் தம் நினைவைப் படமாக எழுதினார். 5 ஆண்டு கழித்துப் பூர்த்தியானபொழுது அவர் படத்தில் எழுதியது போன்ற வீடே அவருக்கு அமைந்தது.


 

(இவரது website - http:\\the secret.tv).


 

 

தொலைந்த பொருள்


 

இதைப் பற்றி வந்த கடிதத்தின் (email) மொழி பெயர்ப்பைக் கீழே எழுதுகிறேன்:


 

"இரண்டு வாரம் முன்பு ஞாயிறன்று பாண்டியிலிருந்து கிளம்பும்பொழுது களைப்பு மேட்ட நேரம் என்னுடைய electronic disc driveஐத் தவறவிட்டேன். சென்னை வந்த பொழுது அதைக் காணோம். எங்கு தொலைந்ததுஎனத் தெரியவில்லை. சமர்ப்பணம் செய்து மறந்துவிட்டேன். இன்று மாலை பாண்டியிலிருந்து ஒரு தாசில்தார் என்னை போனில் கூப்பிட்டு, "ஏதாவது பொருளைத் தொலைத்து விட்டீர்களா?' எனக் கேட்டார். "அது டிஸ்கா?' எனவும் கேட்டுவிட்டு, அதை என் வீட்டில் புதுவையில் சேர்ப்பதாகச் சொன்னார். அந்த டிஸ்க்கில் நூற்றுக்கணக்கான கடிதங்கள் உள்ளன. ஒரு சிலவற்றில் மட்டும் என் பெயர் இருக்கிறது. தாசில்தார் அந்த டிஸ்கிலிருந்து

எப்படி என் பெயரைக் கண்டுபிடித்தார்என்று எனக்கு ஆச்சரியம். அது 4,000

ரூபாய் பெறும். அதைப் பலர் திரும்பக் கொடுக்கமாட்டார்கள். எனது டிரைவரை நான் பாண்டிக்கு லீவில் அனுப்பியிருந்தேன். அவன் என்னை

போனில் கூப்பிட்டு, "அந்த டிஸ்க்கை கொண்டு வரட்டுமா?' எனக்

கேட்டான். "சரி' எனக் கூறினேன். என் டிரைவருக்கு டிஸ்க் விஷயம் தெரிய வந்தது எனக்கு ஆச்சரியம். டிரைவர் சென்னை வந்தபொழுது அவனுடைய நண்பன், வேறொரு டாக்ஸி டிரைவர், நான் தொலைத்த மறுநாள் காலையில் டிஸ்க்கை ரோட்டில் இருந்து எடுத்ததாகக் கூறியிருக்கிறான். டாக்ஸி டிரைவர் 10 நாள் வெளியூர் போய் திரும்பிய பின் இந்த தாசில்தாரிடம் விஷயத்தைக் கூறியிருக்கிறான். அவர் என்னைக் கூப்பிட்டார்''.

 

தொலைந்த பொருளில் அன்னை செயல்படுவது பல வகையின.

 

அதில் ஒரு முறை அப்பொருளுக்கு சம்பந்தப்பட்டவர்களை ஒன்று சேர்ப்பது.

 

பொருள் மீண்டும் கிடைக்கும்பொழுது அன்னை செயல்பட்ட வழியை அறிவது அன்னையை மேலும் அறிய உதவும்.

*

கம்ப்யூட்டரிலிருந்து அடுத்த கம்ப்யூட்டருக்குச் செய்தி எடுத்துப் போவது,

சாவிக்கொத்து போன்று 2'' நீளமுள்ளது.


 


 

 


 



book | by Dr. Radut