Skip to Content

11.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள் 

(சென்ற இதழின் தொடர்ச்சி....)          

                                                                                                                   கர்மயோகி

30. மனம் களைத்துப்போகும்வரை The Life Divineஐப் படிப்பது.

The Life Divine ஆன்மீக அனுபவங்கள் சொல் வடிவில் எழுதப்பட்டது.

எளிய நூல்கள் செய்தி (information) தரும்.

பெருநூல்கள் புதிய கருத்துகளை எழுதும்.

கவி தன் திருஷ்டிக்குக் காவிய வடிவம் தருகிறார்.

The Life Divine பகவான் எழுதத் திட்டமிட்ட நூலில்லை.

1914இல் அன்னை பகவானைச் சந்தித்தபொழுது இந்த ஞானம் உலகம் பெறவேண்டியது; அதனால் இது எழுதப்பட வேண்டும் எனக் கேட்டார்.

அன்னை சொல்லியவற்றை பகவான் ஆணையாக ஏற்றுச் செயல்பட்டிருக்கிறார்.

உடற்பயிற்சி செய்யச் சொல்லியதை மட்டும் மறுத்துவிட்டார்.

நூலைப் படிப்பவர் உடலுள் மின்சாரம் போன்ற சக்திப் பாய்வதைக் காணலாம்.

ஆன்மீக சக்தியைப் - அருளைப் - பெற நமக்கு அளவுண்டு.

The Life Divine படிப்பதால் அருள் நம் ஜீவனை நிரப்பும்.

அதைத் தொடர்ந்து பெற இயலாது.

அருள் வழிந்தோடும்.

அந்நிலையில் கொட்டாவி வரும்; அறிவு களைத்துவிடும்.

பிரிட்டிஷ் விஞ்ஞானி 2 பக்கத்திற்குமேல் படிக்கவில்லை என்றார்.

100க்கு மேற்பட்ட உலக விருதுகளைப் பெற்றவர் "அந்தப் புத்தகம் நம்மால் படிக்க முடியாது'' என்றார்.

ஓரளவு ஆன்மீக ஆர்வம் உள்ளே சேராமல் புத்தகத்தைத் தொட முடியாது.

படித்தால் 2 பக்கம் அல்லது 10 பக்கம் படிக்கலாம்.

புரிந்து படிப்பது அவசியம்.

புரிவது போதாது.

புரிந்தது மனத்திரையைக் கிழித்து ஆத்மானுபவமாக வேண்டும்.

எவ்வளவு படிக்கிறோம் என்பதைவிட எப்படிப் படிக்கிறோம் என்பது முக்கியம்.

  • தொடர்ந்து படிப்பது, களைக்கும்வரை படிப்பது, படிப்பதில் இடைவெளி கூடாது என்பது discipline கட்டுப்பாடு. அதுவே மனதில் முதலிடம் பெறவேண்டும். அது மட்டுமே இலட்சியமாக இருக்க வேண்டும்.முடிந்தவரை தவறாது படிக்கவேண்டும். நேற்றைவிட இன்று சற்றுக் கூடப் படிக்கவேண்டும். The Life Divine படிப்பது பகவானையடைய முயலும் நிஷ்டை. படிப்பது ஜீவனில் கலந்தால் கிடைப்பது விழிப்பில் சமாதி என்ற உணர்வுடன் படிக்க வேண்டும்.

நான் ஆரம்பத்தில் கூறிய ஆன்மீகப் பலனை வாழ்வில்  பெற்றுத்தரும் திறனுடையது இம்முறை.

இப்படிப்பு அறிவில் ஆரம்பித்து திருஷ்டியில் முடியும்.

மனம் விழிப்படைந்த பின்னரே படிக்க முடியும்.

ஆத்ம விழிப்படைந்த பின்னரே படித்தப் பலன் பெற முடியும்.

The Life Divine படிப்பது யோகம்.

ஜீவனோடு படிப்பதே படிப்பது.

படிப்புக்கு ஜீவன் தருவது அறிவில்லை; ஞானம்.

இப்படிப்பு ஞான சித்தியாகும்.

31. மரணபயத்தை விலக்குவது.

வயதான பின்னரே மரணம் நினைவு வரும்.

சௌகரியமாக வாழ்பவர்க்கு அது குறைவாக வரும்.

பிரபலமாக, அன்பான குடும்பத்தில் வெற்றிகரமான வாழ்வை நடத்துபவர்க்கு மரணம் நினைவு வாராது.

30 வயதிலும் மரணம் பயம் காட்டும் நபர்கள் உண்டு.

கடமைகள் பாக்கியாக இருந்தால், நிலையில்லாத வாழ்வை நடத்தினால், பல தில்லுமுல்லுகளால் காரியங்கள் நடந்திருந்தால், மற்றவர் இறந்து போகும் எண்ணம் மேலிட்டால் மரணம் பயம் தரும்.

பயமே சுபாவம் என்பவருக்கு எந்த வயதிலும் மரணம் பயம் காட்டும்.

இந்த பயம் உள்ளவர் இதை விலக்க முடியுமா?

அவர் அன்னையை அறியாதவரானால், அறிந்தவுடன் பயம் பெரும்பாலும் மறைந்துவிடும்.

அன்னையை அறிந்தபின் உள்ள பயம் சொல்லும் செய்தி வேறு -இவரே இந்த பயத்தை பிடித்துக்கொண்டு விடமறுக்கிறார்என அன்னை கூறுகிறார்.

நம்செயலை அன்னைச் செயலாக மாற்றினால் மரணபயம் குறைந்து மறையும்.

இதற்காக நாம் படித்த முறைகளை நினைவுகூர்ந்தால் 50க்கு மேல் நினைவில் வரும்.

எந்த முறையும் முழுப்பலன் தரும்.

காணாமற்போன பொருளை நாம் தேடுவதற்குப்பதிலாக பிரார்த்தனையால் பெறுவது அன்னைச் செயலாக நம் செயலை மாற்றுவது.

வயிற்றுவலிக்கு 20 மாத்திரை கொடுத்தால் வலி15 மாத்திரையில் நிற்பது,அந்த அளவு செயல் நம்மிடமிருந்து அன்னைக்கு மாறுவது.

வழக்கமாக வரும் படபடப்பு பாதி குறைவது அது போன்றது.

செயல் நம்மிடமிருந்து அன்னைக்கு மாறும்பொழுது மரணபயம் குறையும்.

தொடர்ந்து ஆர்வமாக, நம்பிக்கையுடன் நன்றியெழத் தொடர்ந்தால் பயம் போய்விடும்.

போன பயம் பின்னணியிலிருக்கும். பயம் போனால் காரியம் கூடிவரும்.

பின்னணியிலுள்ள பயமும் போனால் பயமிருந்ததே நினைவுக்கு வாராது.

காரியம் வாய்ப்பாக மாறும்.

வாய்ப்பு இனிய, பெரிய, பிரபலமான வாய்ப்பாகும்.

பயம் மறந்து, பலனும் மறந்து, எதுவும் நினைவில்லையெனில் அன்பராக மனம் மாறியதாகப் பொருள்.

32. சமர்ப்பணத்தை ஜீவனின் சிகரத்தில் ஏற்பது.

சமர்ப்பணமான வாழ்வைவிட ருசியானது இல்லை என்கிறார் அன்னை.

சமர்ப்பணம் உயர்ந்தது. நமக்கு சமர்ப்பணம் எது?

குழந்தைக்கு அ, , , ஈ என்பது படிப்பு. நமக்கு புத்தகம் படிப்பது படிப்பு.

சமர்ப்பணத்தின் எளிய உருவம் பிரச்சினை தீர்ப்பது. அதற்கு அன்னையிடம் சொல்வது சமர்ப்பணம்.

மனிதரிடம் சொல்லாதே, மதரிடம் சொல்லு என்பது சமர்ப்பணத்தின் ஆரம்பக் கட்டம்.

வாழ்வில் சிரமம், வாய்ப்பு, கடமை, அறிவு, உணர்வு, செயல், சிறிய சாதனை,பெரிய காரியம், யோக சாதனைஎனப் பல கட்டங்களுண்டு.

சிரமம் விலகச் செய்யும் சமர்ப்பணம் எளியது.

படிப்படியாக உயர்ந்து முடிவான கட்டத்தில் யோகசாதனைக்கு வருகிறோம்.

அங்கும் பல கட்டங்களுண்டு.

எண்ணம் ஓடுவது நிற்பது, சிந்தனை கரைவது, மனம் அழிவது, உணர்ச்சி அமைதியாவது, நினைவு குறுக்கிடாதது, செயல் முடிவது, சுபாவம் கட்டுப்படுவது, கட்டுப்பட்ட சுபாவம் கரைவது, பிறர் நினைவு தெரிவது, பிரபஞ்சம் தெரிவதுஎன சத்புருஷன் தெரிந்து, பிரம்மம் தெரியும் வரை சமர்ப்பணம் பல கட்டங்களிலுள்ளது.

நம் சமர்ப்பணம் எந்த உச்சிக்குப் போயுள்ளதுஎன நமக்குத் தெரியும்.

மழை கேட்டால் வருகிறது, பணம் கேட்டால் பலிக்கமாட்டேன் என்கிறது என்றால் சமர்ப்பணத்தின் சிகரம் நமக்குப் பணம்என்று புரிகிறது.

எண்ணத்தைச் சமர்ப்பணம் செய்தால் நிற்கிறது, எதிர்பார்ப்பு கட்டுப்படவில்லையெனில், அதுவே சிகரம்.

மௌனம் பலிக்கிறது, திருஷ்டி கிடைக்கவில்லை;

ஞானம் பலிக்கிறது, பிரபஞ்சம் தெரியவில்லை;

பழைய பாக்கி சமர்ப்பணத்தால் வருகிறது, மார்க்கட் விரிவது முடியவில்லை;

மார்க்கட் அளவுகடந்து பெருகுகிறது, இலாபம் வரவில்லை;

பணம் பிரவாகமாக வருகிறது, பிரபலம் கிட்டவில்லை;

Charles Dickens பிரபல ஆங்கில ஆசிரியர். அவர் புகழ் உச்சாணிக்-கொம்புக்குப் போனபின் David Copperfield என்ற நாவலை எழுதினார்.புகழ் மேலும் உயர்ந்தது. ஆனால் புத்தகம் அந்த அளவு விற்கவில்லை.  ந்திஜீயால் குண்டர்கள் மனத்தை மாற்ற முடிந்தது, ஜின்னா மனம் மாறவில்லை;

என் மனைவி நான் கூறுவதை அப்படியே ஏற்பாள், பிள்ளைகள் சட்டை செய்வதில்லை;

உலகமே என்பேச்சை தலைமேல் தாங்கும், கணவன் மறுப்பார்;

தியானம் சிறப்பாக இருக்கும், ஆனால் தானே வாராது;

தியானமும் என்னைத் தேடிவரும், ஆனால் புல்லாங்குழல் கேட்பதில்லை;

வேணுகானமும் கேட்கிறது, அசரீரி (inner voice) பலிப்பதில்லை;

அனைவரும் கட்டுப்படுவர்; ரிக்ஷாக்காரன் அடாவடி, கட்டுப்படுவதில்லை, என்பன நாம் அறிந்த நிலைகள்

 கட்டுப்படாதவை கட்டுப்பாட்டால் கட்டுப்படும்.

அவற்றைப் பிரச்சினை, வாழ்வு, வாய்ப்புகளிலிருந்து விலக்கி உள்ளே மௌனம், திருஷ்டி, ஞானம்என மாற்றலாம்.

மாறும் நிலைக்கு முடிவுண்டு.

மௌனம் அதுபோல் திருஷ்டியானால், ஒரு வினாடி நிலைக்கும்.

அதே கட்டத்தில் சமர்ப்பணத்தை நிறுத்த வேண்டும்.

மீண்டும் சமர்ப்பணத்தைக் கீழே மௌனத்திற்கோ, சிந்தனைக்கோ

கொண்டுவரக்கூடாது.

இது நம் சமர்ப்பணத்தின் சிகரம்.

அதையும் எண்ணத்தால் சாதிப்பதைவிட நிஷ்டையில் சாதிக்கலாம்;                                                                                             ஜீவனால் அடையலாம். எண்ணம் நின்று, நிஷ்டை சமர்ப்பணத்தை ஏற்பதைக் காணலாம். நிஷ்டை அடங்கி ஜீவன் எழுந்து சமர்ப்பணத்தைத் தாங்குவதைக் காணலாம்.

மனிதனுக்கு எண்ணம் உயர்ந்தது. தியானமெனும் நிஷ்டை எண்ணத்தைக் கடந்தது. ஜீவன் தியானத்தின் பின்னாலிருப்பது தெரியும். தியானம் மனத்தின் முயற்சி. ஜீவன் மனத்தைவிடப் பெரிய முழுமையுடையது

அந்த உச்சியிலேயே அதிகபட்சநேரம் இருக்க முயல்வது இம்முறை.

33. எதையும் செய்ய முயல்வதைத் தவிர்ப்பது.

சர்வ ஆரம்பப்பரித்தியாகி என்பது பகவான் கூறிய சொல்.

(Non-reaction) எரிச்சல்படாமலிருப்பது பெரிய கட்டுப்பாடு.

எந்த ரிஷியாவது இதில் தேறுவாராஎன்பது சந்தேகம்.

அதில் தேறுபவரும் எதையும் செய்ய முயலக்கூடாது என்பதில் தேறமாட்டார்.

உடலுக்குப் பழக்கம், உணர்ச்சிக்கு ஆர்வம், அறிவுக்கு அபிப்பிராயம் உண்டு.

தாகத்திற்குத் தண்ணீர் குடிப்பது பழக்கம்; TVபடம் பார்க்க ஆர்வம்; பலர் பேசும்பொழுது நம்அபிப்பிராயத்தைக் கூறுவது மனித சுபாவம்.

நம் செயல்கள் அனைத்தும் பழக்கத்தாலும், ஆர்வத்தாலும், அபிப்பிராயத்தாலும் நடக்கின்றன. இவை நம் கட்டுப்பாட்டில்லை.

நம்மை நாம் கவனித்தால், காலையில் ஆபீஸ் போகவேண்டும். இது கடமை.

இது நாமே முயன்று செய்வது.

காலை 9 மணிக்குக் கிளம்பவேண்டும்.

இதைச் செய்வதைத் தவிர்ப்பது கட்டுப்பாடானால் எப்படிச் செயல்படுவது?

நாம் ஆபீஸ் போகும் பழக்கத்தைத் தவிர்த்தால் மனம் அமைதியாகும்.

உள்ளிருந்து "ஆபீஸுக்குப் போ' என அன்னை உத்தரவளிப்பார்.

அதைக் கேட்டு ஆபீஸுக்குப் போவது அன்னை அனுமதியால் போவது. போகாமலிருக்க முடிவு செய்தால் படபடப்பு வரும், பயம் வரும், வேலை போய்விடும் என்று தோன்றும். அதையும்மீறி பேசாமலிருந்தால் உள்ளிருந்து அன்னைகுரல் வாராது. என்ன செய்ய?

படபடப்பு அடங்கி, பயம் போகும்வரை பயிற்சி. பிறகு அமைதிவரும்.

அமைதி கனத்து, ஆழ்ந்து, செறிந்து, குரல் எழும்.

அதுவரை பேசாமலிருக்க வேண்டும்.

அது பலித்து, குரல் கேட்டு, ஆபீஸ் போனால், ஆபீஸில் பெரிய செய்தி காத்திருக்கும்.

நாமே பழக்கத்தால் ஆபீஸ் போனால், அதற்குரிய பலன் அட்டண்டன்ஸ்.  கடமையால் ஆபீஸ் போனால் திறமை வந்து, பிரமோஷன் வரும்

ஆர்வமாக ஆபீஸ் போனால், அடுத்த டிபார்ட்மெண்டிற்கு பிரமோஷனில் மாற்றல் வரும்.

அபிப்பிராயப்படி ஆபீஸ் போனால் அதற்கேற்ற பலன் வரும்.

அமைதியாகச் செய்தால் இப்பலன்கள் அதிகமாக வரும்.

அன்னை நினைவோடு செய்தால் நெஞ்சு அன்னையால் நிறையும்.

கடமை சேவையாக மாறிச் சமர்ப்பணமாகும்.

குரல் அன்னை எழுப்பினால், அன்னையின்அருள் நம்வாழ்வில் பூர்த்தியாகும்.

குரல் ஆழத்திலிருந்து வந்தால் உலகில் அன்னையின்எண்ணம் நம் செயலால் பூர்த்தியாகும்.

பழக்கம், ஆர்வம், ஆசை, அபிப்பிராயம், வேகம் விலகுவது மனிதன் மனத்திலிருந்து விலகுவது.

மனிதன் விலகினால் மனம் உயரும்.

மனம் உயர்ந்தால் மௌனம், திருஷ்டி, ஞானம், மூலம், முனிவர், ரிஷி,யோகி, தெய்வநிலை சித்திக்கும்.

இவற்றைக் கடந்தால் சத்தியஜீவியம் பலிக்கும்.

வாழ்க்கையில் இலட்சியமில்லாவிட்டால் யோக அம்சம் பலிக்கும்.

"நான்' விலகினால் அன்னையின் கருவியாகி, அன்னையின் இலட்சியம் உலகில் நம் செயலால் பலிக்கும்.

இதுவே முடிவான disciplineகட்டுப்பாடாகும்.

34. எரிச்சலைத் தவிர்ப்பது.

எரிச்சலைத் தவிர்க்க நினைத்தால் எரிச்சல் வரும்.

எரிச்சல் என்பது இயலாமை.

அறியாமை அறிவின் இயலாமை.

அவசரம் உணர்வின் இயலாமை.

சோம்பல் உடலின் இயலாமை.

அவற்றைத் தொட்டால் அவை பேசும் பாஷை எரிச்சல்.

ஞானம் உணர்வை அறிவோடு உணரவைக்கும்.

எரிச்சல் இயலாமையென மனம் அறிந்தால் எரிச்சல் குறையும்.

திறமையற்ற இடத்தில் திறமையைத் தேடினால் எரிச்சல் மறைந்து இதமான எண்ணம் தோன்றும்.

உடல்நலம் குன்றியவர்க்கு உடல் தேறினால் எரிச்சல் குறையும்.

எளிய விஷயங்களில் எரிச்சல் ஏராளமாக வரும்.

புறப்படும்பொழுது மோட்டார்பைக்கில் பெட்ரோல்லைஎன்றறால் தாள முடியாத எரிச்சல் வரும்.

முன்யோசனை அவ்வெரிச்சலை அடியோடு அழிக்கும்.

எரிச்சல் வழக்கமாகப் பிறர் மீது வரும்.

குறை நம்மீது இருந்தால் நிறையுடையவர் மீது எரியும்.

இயலாமையும், முன்யோசனையும் பேர் அளவுக்கு எரிச்சலை விலக்கும்.

நாம் படும் எரிச்சல் வழக்கமாகச் சில இடங்களாக இருக்கும்.

அவற்றை "இயலாமை, முன்யோசனை, நியாயம், பொறுமை, நாகரீகம்' ஆகிய கண்ணோடு கண்டால், ஆராய்ந்தால், அறிவு வளரும். நம் அறியாமையைக் கண்டு நாமே வியக்கும்படியாகும்.

மனம் புரிந்ததை உணர்வு ஏற்றால் 100% எரிச்சல் விலக வாய்ப்புண்டு.

தொடர்ந்த பயிற்சியால் 90 பங்கு விலகும்.

பயில மறுத்தால் கொஞ்ச நாள் கழித்து மீண்டும் எரிச்சல் வரும்.

எரிச்சல் குறைந்த நாட்களில் வாழ்வு சிறந்ததை அறிய முடியும்.

வாழ்வு சிறக்க எரிச்சலை விலக்குவது அவசியம்.

மனம் வளம்பெற அதைச் செய்வது மேல்.

ஆத்ம நலனுக்காகச் செய்வது அதிஉத்தமம்.

எரிச்சல் - பிரச்சினை.

பொறுமை - சிக்கலற்ற வாழ்வு.

சமர்ப்பணம் எரிச்சலை அழிக்கும் ஆன்மீக முறை.

பிறர் இனிக்கப் பழகும் நாகரீகம் எரிச்சலைத் தலைகீழே மாற்றும்.

எரிச்சல் அறிவை மழுங்கச் செய்யும்.

நிதானம் தீட்சண்யம் தரும்.

"Book of Quotations'' பொன்மொழிகள் நிறைந்த பல புத்தகங்கள் உள. அவற்றுள் எரிச்சலைப் பற்றிப் பெரியவர்கள் சொல்வதைப் படிப்பது உதவும்.

சமமான திறமையுடையவருள் எரிச்சல் பேர்வழி, நிதானமானவர்  எனத் தேர்ந்து, அவர்கள் வாழ்வை ஆராய்ந்தால் பலன் உண்டு.

எரிச்சலால் கெட்டுப்போன காரியங்களை நினைவுகூறலாம். பொறுமையால் சாதித்தவற்றை நினைவுபடுத்திப் பார்க்கலாம். நாகரீகம் வேண்டும்; நலத்தை நாட வேண்டும்; நல்லவர் நட்பு தேவையெனில்,

எரிச்சல் கூடாது.

எரிச்சலுக்கு எதிரானது ஏற்றம் தரும்.

எரிச்சல் அன்னைக்குப் பிடிக்காது.

பகவானும், அன்னையும் எரிச்சல் பட்டதில்லை.

வயிறு குளிர வேண்டும்; எரியக்கூடாது.

தொடரும்....

****


 


 



book | by Dr. Radut