Skip to Content

08.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து

இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

(சென்ற இதழின் தொடர்ச்சி....)      

N. அசோகன்

8. தோற்றத்தைவிட உள்ளிருக்கும் சாரம் முக்கியம். சாரத்தை கருதுபவன் விரைவில் முன்னேறுவான். தோற்றத்தை கருதுபவன் பின்தங்குவான்.

     முன்னேற்றத்திற்கு முக்கியமானது உள்ளுறை சாரம்தானேயொழிய தோற்றம் அவ்வளவாக முக்கியமில்லை. தோற்றம் உள்ளுறை சாரத்தை பிரதிபலிக்கிறதுஎன்று நாம் பொதுவாக நினைக்கிறோம்அதனால் தோற்றம் சரியாகவிருந்தால் உள்ளுறை சாரமும் சரியாகவுள்ளதாக வைத்துக்கொள்கிறோம்இப்படி நாமேவொரு associationஐ வைத்துக் கொள்வதால் தவறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதுதோற்றம் சாரத்தை பிரதிபலிக்கின்றதுஎன்பது நாளடைவில் மாறி, தோற்றமே சாரத்திற்கு சமமாக எடுத்துக் கொள்ளப்பட்டு சாதித்துவிட்டதாக ஒரு போயான திருப்தி உண்டாகிவிடுகிறது. ஆனால் உண்மையில் முன்னேற்றமில்லை. தோற்றத்தையே சாரமாக, தவறாக எண்ணிவிட்டதால் முன்னேற்றத்திற்கு பதிலாகச் சரிவுதான் வந்துள்ளதுஎன்பது ஒரு காலகட்டத்தில் தெரியும் பொழுது ஏமாற்றமும் அதிர்ச்சியும் வருகிறது.

     நல்ல கேரக்டர் உள்ளவர்கள் பொதுவாக நல்ல mannersஉம் உள்ளவர்களாக இருப்பார்கள். இதனால் மக்களிடையே கேரக்டருக்கும்  mannersற்கும் இடையே ஒரு association உருவாகிறது. நாளாவட்டத்தில் நல்ல mannersஇருந்தாலே நல்ல கேரக்டரும் இருக்கும் என்றோர் அர்த்தம் பண்ணிக்கொள்கிறார்கள். Mannersஎன்பது தோற்றம்; கேரக்டர்என்பது சாரம். தோற்றம் சரியாகவிருந்தால் சாரமும் சரியாக இருக்கும்என்ற அவசியமில்லை. தவறான கேரக்டர் உள்ளவர்கள்கூட போலியாக நல்ல mannersஐக் கடைப்பிடித்து ஊராரை ஏமாற்றலாம் என்றாகிறது. இதனால் நல்ல manners உள்ளவரை நல்லவர், நாணயமானவர்என்று நினைத்து கடன் கொடுத்து ஏமாந்துபோகின்றவர்கள் உண்டு.

     ஒரு காலத்தில் பணக்காரனுக்கும் ஏழைக்கும் இடையே உடை வித்தியாசம் நிறையவிருந்ததுஇன்று அந்த வித்தியாசம் மிகவும் குறைந்துவிட்டதுகார் டிரைவர்கள்கூட பணக்கார வாலிபர்களைப்போல கோல்டு வாட்சும் விலையுயர்ந்த பேண்ட், சர்ட் மற்றும் கூலிங்கி ளாஸுடன் காட்சியளிக்கிறார்கள்இப்படிக் காட்சியளிக்கும் கார் டிரைவரை கார் வைத்துள்ள பணக்கார வாலிபன்என்றொரு பெண் நினைத்துக் காதலித்து ஏமாந்துபோவதாக திரைப்படக் காட்சிகள் வருகின்றன.

     திரைப்படங்களுடன் இத்தகைய காட்சிகள் நின்றுவிடுவதில்லைநிஜவாழ்க்கையிலும் இப்படித் தோற்றத்தையும் சாரத்தையும் மாற்றிப் புரிந்து கொண்டு முன்னேற்றத்தைக் கெடுத்துக்கொள்கின்ற நிகழ்ச்சிகள் நடக்கத் தான் செய்கின்றனஅமெரிக்கர்கள் பொதுவாக சாரத்திற்கு அதிக மதிப்புக் கொடுத்து, தோற்றத்தை இரண்டாம்பட்சமாகக் கருதக் கூடியவர்கள்தாம்இருந்தாலும் அவர்களுக்கும் சில சமயங்களில் அறிவு தடுமாற்றம் வந்து முக்கியமான விஷயங்களில் தவறு செய்யவும் நேரிடுகிறது.

     பணமும் செல்வமும் உழைப்பு, திறமை மற்றும் ஆர்கனைஷேஷன் மற்றும் பண்புகளின் பலனாகக் கிடைப்பதென்று அமெரிக்கர்களுக்குப் பொதுவாகத் தெரியும். இவற்றின் அடிப்படையில் தான் அவர்கள் அந்நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டுபோனார்கள்இருந்தாலும் அமெரிக்கப் பொருளாதாரத்தில் ஸ்டாக் மார்க்கெட்என்ற புதிய ஸ்தாபனம் ஒன்று உருவாகியதுஇங்கே கம்பனிகள் தம்முடைய பங்குகளை விற்க ஆரம்பித்தார்கள்விலை குறைந்த சமயம் பங்குகளை வாங்கி விலையேறும் சமயம் விற்றால் நல்ல லாபம் கிடைக்குமென்ற வாய்ப்பு உருவானது.

     இப்படி விலையேற்ற இறக்கத்தைப் பயன்படுத்தி, பங்குகளை வாங்குவது மற்றும் விற்பதுஎன்பதற்கு speculation என்று பெயர். இப்படி speculation மூலம் நிறைய சம்பாதிக்கலாமென்ற ஆசை அமெரிக்கர்களுக்குகூட 1920ஆமாண்டுவாக்கில் நிறையவிருந்தது. வருமானத்திற்கு உழைப்புதான் அவசியம்என்று நம்பியிருந்த மக்கள் இப்பொழுது உழைப்பைவிட speculationற்கு முக்கியத்துவம் கொடுக்க ஆரம்பித்தார்கள்.

     அமெரிக்கப் பொருளாதாரத்தில் அப்பொழுது ஒரு dynamic boom நிலவிக்கொண்டிருந்ததுஇதனால் பங்கு மார்க்கெட்டும் மும்முரமாக இயங்கிக்கொண்டிருந்தது. Speculationஇல் ஆர்வமுள்ளவர்களுக்கு இது மிகவும் வசதியாகப்போய்விட்டது. பங்கு பரிமாற்றத்தைத் தீவிரப்படுத்தினார்கள். இதனால் பங்கு மார்க்கெட்டில் பங்குகளின் விலை செயற்கையாகப் பல மடங்கு ஏறியதுநாட்டில் உற்பத்தித்திறன் பெருகி, அதனால் நாட்டின் செல்வம் பெருகினால் அது உண்மையான முன்னேற்றமாகும். பங்கு மார்க்கெட்டில் பங்குகளின்விலை செயற்கையாக உயர்வதைப் பொருளாதார முன்னேற்றமாக எடுத்துக்கொள்வதுஎன்பது அறிவு இல்லாமல் தோற்றத்தைச் சாரமாகத் தலைகீழாகப் புரிந்துகொள்வதாகும்.

    அடிப்படை ஆதாரமின்றி செயற்கையாக ஒன்றை வளர்த்தால் அதுவொரு கட்டத்தில் பாரம் தாங்காமல் முறிந்துவிழும். அப்படித்தான் செயற்கையாக உயர்ந்த பங்குகளின்விலை ஒரு கட்டத்தில் சரிய ஆரம்பித்தது. சரிவு அடிமட்டத்திற்கு வந்தபொழுது பொருளாதாரம் மிகவும் நலிந்து போனதுசாரத்தை விட்டுவிட்டு தோற்றத்தைப் பாராட்டியதற்காக வாழ்க்கை அமெரிக்காவிற்கு வழங்கிய தண்டனையாக நாமிதை எடுத்துக்கொள்ளலாம்.

     இந்தியர்களுக்கு இம்மனோபாவம் அமெரிக்கர்களைவிட அதிகமாகவே உண்டு. ஹர்ஷத் மேத்தா (Harshad Mehta) பங்கு மார்க்கெட்டில் செயற்கையாக இப்படியொரு உயர்வைக் கொண்டுவந்தபொழுது நிறைய பேர் பேராசைகொண்டு பங்குகளை வாங்கிப்போட்டனர்பின்னர் சரிவு வந்தபொழுது தாங்கமுடியாமல் நஷ்டமும் அடைந்தனர்.

     வருமானத்தை உயர்த்தி, வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதுஎன்பது சாரத்தை மேம்படுத்தி, தோற்றத்தை உயர்த்துவதாகும்இது உண்மையான முன்னேற்றம்என்பதால் இந்த உயர்வு நீடிக்கும். ஆனால் வருமானம் என்ற சாரமில்லாமல் கடனை வாங்கியாவது ஆடம்பர வாழ்க்கை வாழ வேண்டும்என்று விரும்புகின்றவர்கள் விஷயத்தைத் தலைகீழாகப் புரிந்து கொண்டு செயல்படுகிறார்கள். ஆடம்பரம் நெடுநாள் நீடிக்காது. இது சாரமில்லாத தோற்றமென்பதால் ஒரு கட்டத்தில் சரியத்தான் செய்யும்.

     பொருளாதாரத்தில் செய்த தவறுகளை அமெரிக்கர்கள் கல்வி விஷயத்தில் செய்யவில்லைகல்வியின் சாரமென்பது கிரியேட்டிவ் சிந்தனையாகும்கல்வியின் தோற்றமென்பது ஞாபகசக்தியாகும்.அறிவாளிகளுக்கு புத்திகூர்மையும் ஞாபகசக்தியும் சேர்ந்திருப்பதுண்டு.அதனால் ஞாபகசக்தியென்பது புத்திகூர்மையின் பிரதிபலிப்போ அல்லது சின்னமோ ஆகாது. அமெரிக்கர்கள் இதைச் சரியாகப் புரிந்துகொண்டு கிரியேட்டிவ் சிந்தனையைத் தூண்டும்வகையில் அவர்களுடைய கல்வித் திட்டங்களை வகுத்துள்ளார்கள்.

     ஆனால் நாமோ ஞாபகசக்தியே புத்திகூர்மையின் அடையாளமென்று நினைத்துத் தோற்றத்தையும் சாரத்தையும் ஒன்றுபடுத்திவிட்டோம்.  அதனால் நாளடைவில் சாரத்தின் முக்கியத்துவம் போய் தோற்றமே பெரிதென்று ஆகி நாம் ஞாபகசக்தியை மட்டும் மேம்படுத்தும்வகையில் கல்வித்திட்டங்களையும் பரிட்சைகளையும் வகுத்துள்ளோம். அமெரிக்க மாணவ, மாணவியர்கள் எந்தவொரு விஷயத்தைக் கேள்விப்பட்டாலும், படித்தாலும் ஏன், எப்படி, எதற்குஎன்ற கேள்விகளை எழுப்பி பதில் கேட்கின்றனர். ஆனால் இங்கே இப்படி மாணவ, மாணவிகள் கேள்வி கேட்பதையே ஆசிரியர்கள் தவறாக நினைக்கின்றனர்இப்படிக் கேள்வி கேட்பது மாணவ, மாணவியரின் curiosityஐக் காட்டுகிறதுஎன்று ஆசிரியர்கள் இதை வரவேற்பதில்லை. மாறாக அதிகப்பிரசங்கித்தனமாக எடுத்துக்கொண்டு கண்டிக்கின்றனர்.

     இதனால் நம் நாட்டில் இளைய தலைமுறையினரின் புத்திகூர்மை வளர்வதற்கு ஏற்ற சரியான சூழ்நிலை அமையாமல் உள்ளது.  இச்சூழ்நிலையை மாற்றி அமெரிக்கக் கல்விமுறைகளை நம் நாட்டிலும் கொண்டுவந்தால் நம் இளைய தலைமுறையினரின் அறிவுத்திறனும் வளரும்நம் நாட்டினுடைய இயற்கை வளங்களைவிட நம் இளைய தலை- முறையினரின் அறிவுத்திறன்தான் நம்முடைய உண்மையான சொத்துஅதை நாம் வளர்த்தால் நம் நாட்டின் வளர்ச்சி வேகத்தை மேலும் விரைவுபடுத்தலாம்.

     இப்படி, சாரத்தை விட்டுவிட்டு தோற்றத்தைப் பிடித்துக்கொள்வது நம் நாட்டில் வழக்கமாகிவிட்டது. நம் நாட்டு ஆன்மீகத்தினுடைய சாரம் மிகப்பெரியது; மிகவும் சக்திவாய்ந்தது. அந்த ஆன்மீகச் சாரத்தை இன்று நாம் வெளிக்கொணர்ந்தாலும், அதனடிப்படையில் நம்முடைய பொருளாதார முறைகளையும் வாழ்க்கைப் பாணியையும் மாற்றினாலும் நம் நாட்டின் முன்னேற்றம் பலமடங்கு விரைவுபெறும்.

     சுத்தம், செயல்நேர்த்தி, காலந்தவறாமை, பரநலம் பாராட்டல், அடுத்தவர் கண்ணோட்டத்தை மதித்தல், முன்னேறும் மனோபாவம் ஆகியவை எல்லாம் அடிப்படையில் ஆன்மாவிலிருந்து எழும் பண்புகளாகும்இவை நம் பொருளாதார வாழ்க்கையில் இப்பொழுது முழுமையாக வெளிப்பட்டாலும் விளைவுகள் சிறப்பாகவிருக்கும். ஆனால் நம்முடைய ஆன்மீக பலத்தை மறந்துவிட்டு நாம் சடங்கு, சம்பிரதாயம்என்பவற்றில் ஊறிவிட்டோம்இவை வெறும் தோற்றத்தை வயுறுத்துபவை. இவற்றால் நம் எனர்ஜியும் நேரமும் வீணாகின்றனவேயொழிய ஆக்கப்பூர்வமான எந்த முன்னேற்றமும் வருவதில்லை.

     Formalities, procedures மற்றும் முறைகளை நாம் வலியுறுத்துவதும் சாரத்தைக் கருதாமல் தோற்றத்தைக் கருதுவதால் தான். இங்கே ஒரு தொழில் துவங்குவதற்கு ஒரு தொழிலதிபர் பூர்த்திசெய்யவேண்டிய படிவங்கள், வாங்கவேண்டிய சான்றிதழ்கள், பெறவேண்டிய அனுமதிகள் ஆகியவற்றைப் பார்க்கும்பொழுது அமெரிக்கர்கள் அசந்துபோகிறார்கள்.  இதனால் ஏற்படும் காலதாமதம், எனர்ஜி விரயம் ஆகியவற்றை அவர்கள் கவனிக்கின்றார்கள்அவர்கள் நாடு தொழிலில் மிகவும் முன்னேறியிருப்பதற்கு ஒரு முக்கியக் காரணம் இப்படிப்பட்ட procedureகளை அவர்கள் எளிமைப்படுத்தியிருப்பதுதான்நம் நாட்டில் பல தொழிலதிபர்கள் தொழில் துவங்குவதில் ஆர்வம் குன்றிப்போவதற்கு இப்படிப்பட்ட formalities காரணமாக விளைகின்ற காலதாமதம் மற்றும் பணவிரயந்தான்.

     துடிப்பும் ஆர்வமும்மிக்க இளைஞர்கள் தொழில் தொடங்க முன்வரும்பொழுது அவர்களுடைய ஊக்கத்தை பாராட்டும்வகையில் அரசாங்கம் formalitiesஐ எளிமைப்படுத்த முன்வரவேண்டும். அப்படி முன்வாராமல் formalitiesஐ வலியுறுத்தும்பொழுது தோற்றத்திற்கு முக்கியத்துவம் அதிகரித்து இளைஞர்களின் dynamism என்ற சாரம் புறக்கணிக்கப்படுகிறது.

     இங்கே எந்தக் கைவேலையாக இருந்தாலும் கௌரவக்குறைவாக கருதப்படுகிறது. உயரதிகாரிகள் தொழிலாளிகளுடன் உறவாடுவதை தவிர்க்கின்றார்கள்இங்கே ஓர் உயரதிகாரி தனக்குக் கீழிருப்பவர்களை கட்டளையிடுவாரேயொழிய அவசரத்திற்குக்கூடத் தாமே அவ்வேலையைச் செய்ய முன்வரமாட்டார்இத்தகைய மனோபாவம் வேலையைப் புறக்கணித்து தோற்றத்தைப் பெரிதுபடுத்துவதாகிறதுஆனால் அங்கே கைவேலை கௌரவக்குறைவுஎன்ற மனோபாவமே இல்லைதொழிலாளியாக ஆரம்பித்து முதலாளியாகத் தலையெடுத்தவர்கள் தேவைப்பட்டால் அவ்வேலையைத் தாமே செய்கிறார்கள். தொழிலாளிகளைவிடத் தாம் உயர்ந்து விட்டதாகக் கருதி அவர்களிடமிருந்து தள்ளி நிற்பதுமில்லை.

     இங்கே விவசாயக் கல்லூரிகளில் பட்டப்படிப்புப் படித்தவர்கள் மீண்டும் நிலத்தில் இறங்கி விவசாய வேலையே செய்வதில்லை. படிப்பிற்கேற்ற அரசாங்கப் பணி, வங்கிப்பணி மற்றும் ஆராய்ச்சிக்கூடங்களில் ஆராய்ச்சிப் பணிஎன்று கௌரவமான வேலையைத் தேடி போய்விடுகின்றார்கள். விவசாயப் படிப்புப் படித்தவர்கள் மீண்டும் விவசாயத்தில் இறங்கினால் விவசாய உற்பத்தித்திறன் பலமடங்கு அதிகரிக்கும். Floriculture மற்றும் Horticulture போன்ற விவசாயத் துறைகளில் நல்ல லாபம் காத்திருக்கின்றது. படித்த விவசாயப் பட்டதாரிகள் கௌரவம் கருதாமல் இத்துறைகளில். Salaried employmentஇல் கிடைப்பதைவிடப் பலமடங்கு அதிக வருமானத்தைக் காணலாம்.

     இங்கே வயதிற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவம் அங்கே காணப்படுவதில்லைவயதானவர்கள் அறிவு முதிர்ந்தவர்களாக இருப்பார்கள் என்ற நம்பிக்கை இங்கே நிலவுகிறதுஅதனால் வயதானவர்களுக்கு இங்கே முதலிடம் கொடுக்கப்படுகிறது. வயதிற்கும் அறிவு முதிர்விற்கும் ஒரு தொடர்பு உண்டென்றாலும் வயதானவர்கள் எல்லாம் அனுபவ ஞானம் கொண்டவர்கள்என்று நாம் வைத்துக்கொள்ள முடியாதுஅறிவில்லாதவர்களுக்கு வயது அதிகமானாலும் அவர்களுடைய அனுபவ ஞானம் வளர்வதில்லை. இதனால் வயதிற்குரிய மரியாதைஎன்பது பல சமயங்களில் வெறும் தோற்றமாகிச் சாரமில்லாமல் போய்விடுகிறது.

     அமெரிக்காவில் இளமையை விரும்புகின்றார்கள். கென்னடி மிகவும் பாப்புலரான அதிபராக விளங்கியதற்குக் காரணமே அவருடைய இளவயதுதான்அவருக்கு அனுபவம் குறைவு என்றாலும் cuban missile crisis என்றவொரு பெரிய நெருக்கடி ரஷ்யாவுடன் வந்தபொழுது அந்நெருக்கடியை அவர் சமாளித்தவிதம் அவருடைய அரசியல் சாமர்த்தியத்தை வெளிப்படுத்தியது.  Bill Clinton பாப்புலராக இருந்ததற்கும் அவருடைய இளமையே காரணம்இங்கே இந்தியாவில் 60 வயதை தாண்டினால் தான் உயர் அரசியல் பதவிகளே கிடைக்கும்என்ற நிலைமை நிலவுகிறதுராஜீவ் காந்தியும் ஜெயலலிதா அவர்களும்தான் இதற்கு விதிவிலக்காக உள்ளனர்ராஜீவ் அவர்களே இந்திராவின் புதல்வராக இல்லாமல்போனால் அவரால் பிரதமராக வந்திருக்க முடியுமாஎன்பது சந்தேகம்நம் நாட்டு மூத்தஅரசியல் தலைவர்களின் தளர்ந்த நடை சர்வதேச அரங்குகளில் நம் நாட்டின் மதிப்பைக் குறைப்பதை நாமறிவது இல்லை.

    வயதிற்கு அறிவு முதிர்வு உள்ளதென்றால் இளமைக்கு எனர்ஜியும் உற்சாகமும் சாதிக்கும் வேகமும் உள்ளதென்பதை நாமறியவேண்டும்.  Bill Gates மற்றும் Steve Jobsபோன்ற தொழிலதிபர்கள் இளமையின் சாதிக்கும்      திறனுக்கு எடுத்துக்காட்டாகும்.

     பெண்கள் உடலளவில் பலஹீனமானவர்கள்என்பதை காரணமாக வைத்து அவர்களை இரண்டாம்பட்சமாக நம் நாடு நெடுங்காலமாக நடத்திவந்துள்ளதுஆனால் இன்று அவர்களுக்கும் படிப்பு, வேலை வாய்ப்பு, விழிப்புணர்வு வந்துவிட்டபட்சத்தில் அவர்களுடைய பலஹீனமான தோற்றத்தை நாம் பெரிதுபடுத்துவது சரியில்லைஇந்திரா காந்தி அம்மையாரின் தலைமைப் பண்புகளும் மனோதிடமும் பெண்களிடமும் சாதிக்கும் ஆற்றல் நிறையவுள்ளது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.

     தோற்றத்தையும் சாரத்தையும் நாம் சற்றுக் கூர்ந்து கவனித்தால் தோற்றமென்பது விளைவாகவும் சாரமென்பது மறைந்திருக்கும் காரணமாகவுமிருக்கும்மேலைநாடுகள் செல்வச்செழிப்புடன் காட்சியளிப்பது ஒரு தோற்றம். அவர்களுடைய உழைப்பு, திறமை, ஆர்கனைஷேஷன் மற்றும் பண்புகள் எல்லாம் மறைமுகமாகச் செயல்படும் காரணங்கள். அவர்களுடைய செல்வச்செழிப்பான தோற்றத்தைப் பார்த்துவிட்டு அவர்களுடைய முன்னேற்றத்திற்கு பணமே காரணமென்று முடிவுசெய்து நமக்கும் இவ்வளவு முதலீடு கிடைத்தால் நாமும் பணக்கார நாடாக மாறிவிடலாமென்று முடிவு செய்கிறோம்இப்படிப் பலனைக் காரணமாகப் பார்ப்பது விஷயத்தைத் தலைகீழாகப் புரிந்துகொள்வதாகும்அவர்களுடைய பெரிய முதலீடே அவர்களுடைய நெடுங்கால உழைப்பு மற்றும் சேமிப்பு ஆகியவற்றிலிருந்து வருவதாகும். அப்பட்சத்தில் அந்த உழைப்பு மற்றும் சேமிப்புஎன்ற உள்ளுறை, சாரமின்றி வெறும் முதலீடுஎன்ற தோற்றத்தை மட்டும் நாம் நம்பிப் பெரிய முதலீட்டிற்குக் காத்திருந்தால் நாம் ஏமாற்றம் தான் அடைவோம்.

    கையிலிருக்கும் முதலீட்டை வைத்து நம்மால் முடிந்த வேலையைத் துவக்கிப் படிப்படியாக வாழ்க்கையில் முன்னேறுவதுதான் உண்மையில் நிகழ்வதுபெரிய முதலீட்டிற்காகக் காத்திருந்து நேரத்தை வீணடிப்பது என்பதைத் தோற்றத்தைக் கண்டு ஏமாறுவதாகும்.

****


 


 


 


 



book | by Dr. Radut