Skip to Content

3. ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

N. அசோகன்

241. மனநிலை பாதிப்பு என்பது தீய சக்திகள் நம் பர்சனாட்டிக்குள் புகுந்து விடுவதால் வருவதாக அன்னை கூறுகிறார். மருத்துவ சிகிச்சை ஓரளவுக்குத்தான் நிவாரணம் அளிக்கும். தீய சக்தி வெளியேறும் போதுதான் உண்மையான நிவாரணம் கிடைக்கும்.

242. வேலை செய்யாமல் வீணே காலத்தைக் கடத்துபவர்களின் சிந்தனையில் விஷமம் தோன்றும் என்பது மிகவும் உண்மை. வேலை செய்யாமல் வீணே இருப்பவர்களுடைய மனநிலையைத் தீய சக்திகள் எளிதில் கெடுத்து விடுகின்றன.

243. உடல் ஊனமுற்றவர்களைச் சமூகம் நெடுங்காலமாகக் கிண்டல் செய்து வந்தது. ஆனால் அதே சமூகம் இப்பொழுது ஊனமுற்றவர்களுக்குக் கருணை காட்டுகிறது என்பது சமூக நாகரீகம் உயர்ந்து இருப்பதைக் காட்டுகிறது.

244. புத்தி மந்தமான குழந்தைகளைப் பழங்காலத்தில் புறக்கணித்தார்கள். ஆனால் அம்மாதிரியான குழந்தைகளுக்கும் இன்று கல்வி புகட்ட விசேஷ வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. இது கல்வித் துறையில் நிகழ்ந்த ஒரு பெரிய புரட்சியாகும்.

245. விளையாட்டில் கெட்டிக்காரர்களாக இருப்பவர்கள் பொதுவாகப் படிப்பில் மந்தமாக இருப்பார்கள். விளையாட்டுத் திறமை என்பது நம்முடைய நரம்பு மற்றும் தசைகளைப் பலப்படுத்துவதால் வருவது. தசைகளைப் பலப்படுத்துவதில் அதிக கவனம் செலுத்தும்பொழுது, அறிவு பலம் குறைந்து போவதில் ஆச்சர்யமில்லை.

246. அதிரடிப் படை வீரர்கள் செய்யும் சாகசங்கள் மனிதனுடைய உடம்பிற்குள் மறைந்துள்ள அபரிமிதமான உடல் தெம்பிற்கு அடையாளமாக இருக்கின்றன.

247. தீ மிதிப்பவர்கள் கால் தீப்புண் படுவதில்லை என்பது விஞ்ஞானத்திற்கு ஒரு புதிராக உள்ளது. தீ மிதி விழா நடக்கும் கோயில் உள்ள தெய்வம், அந்தத் தீயின் வெப்பத்தைத் தான் வாங்கிக்கொள்கிறது என்பதால், பக்தர்களுக்குக் காயம் படுவதில்லை என்பது ஆன்மீக விளக்கமாகும்.

248. கிராமவாசிகள் நகரவாசிகளைவிட வலியை அதிகமாகப் பொறுத்துக் கொள்வார்கள். விவசாயத் தொழில் மிகவும் physicalஆக இருப்பதால் நகரவாசிகளைவிடக் கிராமவாசிகள் விழிப்புணர்வு குறைந்தவர்களாக இருக்கிறார்கள். அதனாலேயே அவர்களுக்கு வலி உணர்வும் குறைவாகத் தெரிகிறது. கருத்தளவில் பார்த்தால் அறிவு ரீதியாகவும்,ஆன்மீக ரீதியாகவும் உடலிலிருந்து தன்னை வேறுபடுத்திப் பார்ப்பவருக்கு வலிகுறைவாகத் தெரிய வேண்டும்.

249. பக்தர்கள் தம்முடைய உடம்பை வருத்திக்கொள்வதை நம்மால் பார்க்க முடிவதில்லை. ஆனால் அவர்களுடைய கடவுள் பக்தி அந்த வலியைத் தாங்கிக்கொள்ளும் சக்தியை அவர்களுக்குத் தருகிறது.

250. வலிஎன்ற உணர்வு நமக்கு விழிப்புணர்வைக் கொடுப்பதற்காக இயற்கை கையாளும் ஓர் அணுகுமுறையாகும். உடம்பில் விழிப்புணர்வு வருவதற்கு வலி வருகிறதென்றால், உணர்வில் விழிப்புணர்வு வருவதற்கு அதே வலி அவமானமாகவும், ஏமாற்றமாகவும் வருகிறது.

251. மேலைநாடுகள் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப அறிவைப் பெற்றுள்ளன. இந்தியா போன்ற கீழைநாடுகள் ஆன்மீக அறிவைப் பெற்றுள்ளன. முன்னது ஒரு புறச் சாதனையாகும். பின்னது அகச் சாதனையாகும். இவையிரண்டையும் ஒருங்கிணைத்தோம் என்றால், கீழைநாடுகளுக்குப் பொருளாதார வளமும், மேலைநாடுகளுக்கு ஆன்மீக வளமும் கிடைக்கும்.

252. மேலைநாட்டவர்கள் தங்களுடைய சுத்தம் மற்றும் ஒழுங்குமுறைகளால் ஜடத்திலுள்ள பிரம்மத்தையே வெளிக்கொணர்ந்துவிட்டார்கள். இதற்கு நாம் அவர்களைப் பாராட்ட வேண்டும்.

253. சோவியத் யூனியனில் கம்யூனிஸ்ட்டுகள் "கடவுளே இல்லை' என்றார்கள். ஆனால் கம்யூனிசக் கொள்கைகளான சமத்துவம் மற்றும் கடின உழைப்பு ஆகியவற்றை அவர்கள் கடைப்பிடிக்கும்பொழுது உழைப்பில் அவர்கள் இறைவனைக் காண்கிறார்கள் என்றுதான் ஆகிறது.

254. மேலைநாட்டு விஞ்ஞானிகள் விஞ்ஞான ஆராய்ச்சியில் கடைசி எல்லைக்கு வந்துவிட்டார்கள். ஜடத்தை ஆராய்வதில் அவர்கள் நிபுணர்களாக விளங்கினாலும், ஜடத்தைத் தாண்டிய ஆன்மீக ஆராய்ச்சியில் நுழைந்தார்கள் என்றால், ஒன்றும் தெரியாத குழந்தைகள் போல் இருப்பார்கள்.

255. இந்தியா போன்ற வளரும் நாடுகள் மேலைநாட்டவருடைய சுறுசுறுப்பு, கடின உழைப்பு மற்றும் வேலைப் பண்புகளைப் பெற்றுக்கொள்வது நல்லது. மேற்கண்டவைகளை வளரும் நாடுகள் ஏற்றுக்கொள்ளும் பொழுது, அவர்களுடைய வளர்ச்சி வேகம் அதிகரிக்கும்.

256. ஐரோப்பாவிலுள்ள கடுமையான குளிர், ஐரோப்பியர்களுடைய உற்பத்தித் திறனை அதிகரித்துக்கொள்ள உதவியது. இந்தியா போன்ற உஷ்ணப் பிரதேசங்களில் இருக்கின்ற தட்பவெப்ப நிலை வருடம் முழுவதும் பயிரிட உதவுவதால் இந்தியர்கள் சோம்பேறிகளாவதற்குக் காரணமாகிவிட்டது.

257. எந்த நாடும் உலக அரங்கில் சில நூற்றாண்டுகளுக்கு மேல் ஆதிக்கம் செலுத்தியதில்லை. தற்போது நிலவுகின்ற அமெரிக்க ஆதிக்கமும் இதற்கு விதிவிலக்கல்ல.

258. அமெரிக்காவில் நிலவிய சுதந்திரமான சூழ்நிலைதான் அந்நாட்டினுடைய பெரிய வலிமையாக இருந்தது. ஆனால் உலக வர்த்தகக் கட்டிடத்தின் மேல் நிகழ்ந்த தாக்குதலுக்குப் பிறகு இந்தச் சுதந்திரச் சூழ்நிலை மிகவும் குறைந்துள்ளது. ஆனால் நீண்ட காலக் கண்ணோட்டத்தில் பார்த்தால், மீண்டும் பழைய சுதந்திரச் சூழ்நிலைக்கே திரும்பி வருவதே நல்லது.

259. அமெரிக்கா, ஜப்பானிய நகரங்கள் இரண்டின் மேல் அணுகுண்டு வீசி பயங்கர சேதத்தை விளைவித்தது. ஆனால் அதற்குப் பிறகு அமெரிக்காதான் ஜப்பானிய ஏற்றுமதிகளுக்குப் பெரிய வாயிலாக உள்ளது. தான் விளைவித்த ராணுவ சேதத்திற்குப் பரிகாரம் செய்வது போலப் பொருளாதாரச் சன்மானங்களை வழங்குவதுதான் அமெரிக்கா செய்கின்ற கர்ம பரிகாரம் என்று எடுத்துக்கொள்ளலாம்.

260. தற்போது அமெரிக்காவில் நிலவும் நுகர்பொருள் கலாச்சாரம் அமெரிக்கர்களுக்கு வசதியான ஒரு வாழ்க்கையை வழங்கலாம். ஆனால் அமெரிக்க இளைஞர்கள் இந்திய ஆன்மீகத்தை நாடி வருவதைப் பார்த்தால், நுகர்பொருள் கலாச்சாரத்தில் எதிர்பார்த்த முழுச் சந்தோஷம் கிடைக்கவில்லை என்று தெரிகிறது.

தொடரும்.....


 



book | by Dr. Radut