Skip to Content

01.எங்கள் குடும்பம்

 எங்கள் குடும்பம்

                                                               (சென்ற இதழின் தொடர்ச்சி....)

கணவர் : பிறருக்கு உதவி செய்வது அதிர்ஷ்டம். அதை நாம் செய்கிறோம்.

பெரியவன் : அதுவும் அம்மாவுக்கு ஆகாது.

தாயார் : அன்னை அப்படிச் சொல்கிறார்.

பெண் : ஏனம்மா?

தாயார் : ஒரு பெண் தாய்லாந்தில் வேலை செய்தாள். அவர் அமெரிக்கப் பெண். அவளுடைய கல்லீரல் வேலை செய்யவில்லை. 48 மணி நேரத்தில் இறந்துவிடுவாள் என வீட்டிற்குச் செய்தி. தங்கை புறப்பட்டு வந்தாள்.விமானப் பிரயாணம் முழுவதும் அன்னைக்குப் பிரார்த்தனை செய்தாள். கல்லீரலுக்குப் பதிலாக கல்லீரல் கண்டுபிடிப்பது சிரமம், மாதக்கணக்காகும். அதிர்ஷ்டவசமாக 48 மணி நேரத்திற்குள் பதில் கல்லீரல் கிடைத்தது. புது கல்லீரலை வைத்தார்கள். பெண் பிழைத்துக்கொண்டாள். அன்று முதல் தங்கையைத் தனக்குப் பரம எதிரியாக நடத்துகிறாள். 5 ஆண்டுகள் கழித்து அவளுக்குக் கான்சர் வந்தது. தங்கை மீண்டும் அவளுக்காகப் பிரார்த்திக்க விரும்பினாள். இந்த விஷயத்தில் யோசனை கூறும் நண்பர் இம்முறை அவளைத் தடுத்துவிட்டார். என்றாலும் அவளால் தமக்கைக்காகப் பிரார்த்திக்காமல் இருக்க முடியவில்லை. அடிக்கடி அவர் சொல்லை மீறிப் பிரார்த்திப்பாள். உடனே அக்காள் அவளிடம் சண்டைக்கு வருவாள். இது விலக்கில்லாத விதி.

பெண் : புரியவில்லை. ஏன் உதவி செய்பவருக்கு ஊறு செய்யவேண்டும்?

தாயார் : ஏன் என்பது பிறகு. நடப்பது இது. இதிலிருந்து நாம் ஜாக்கிரதையாக இருக்கவேண்டும்.

கணவர் : நாம் உதவி செய்த அனைவரும் நமக்கு எதிராகப் போகவில்லையா. எதிர்வீட்டுப் பையனுக்கு வேலை வாங்கிக்கொடுத்தேன்.

பெரியவன் : அவன்தான் எதிரி.

தாயார் : 140 ரூபாய் சம்பாதித்தவருக்கு 500 ரூபாய் சம்பளத்திற்கு ஏற்பாடு செய்தோம்.

சிறியவன் : நமக்கு முதல் எதிரி அவர்தாம்.

கணவர் : சர்க்கார் எடுத்துக்கொண்ட மனையை மீட்டுக் கொடுத்தோம்.

சிறியவன் : எனக்கு அது தெரியாதே. அவர் செய்தது பொறுக்க முடியாததே.

தாயார் : இதுவே மனித சுபாவம். நமக்குப் பார்ட்னர் உதவுகிறார். அவரிடம் நமக்குப் பகைமை வரக்கூடாது. அது முக்கியம்.

கணவர் : தாசீல்தார் மகனுக்கு M.A. அட்மிஷன் பெற்றுக் கொடுத்தோம். அதன்பிறகு அவன் வரவேயில்லை. எத்தனை முறை வந்து போனவன்.

தாயார் : துரோகம் பல வகையின. சம்பளம் கொடுக்கும் ஸ்தாபனத்திற்குத் துரோகம் செய்தவர் உனக்குத் தெரியுமே. வேலையே செய்யமாட்டார். வேலையை ஏமாற்றுவதில் பெருமைப்படுவார். அவருக்குப் பிரமோஷனே வரவில்லை. ஓய்வு பெற்றபின் உறவினர்கள் அவர் தம் ஸ்தாபனத்திற்குச் செய்ததை அவருக்குச் செய்கின்றனர். அத்தனை பேரும் அலட்சியம் செய்கின்றனர். சட்டம் தவறாது.

பெரியவன் : அம்மா சொல்படி நடப்பதானால், பூமிக்கு மேலே ஒரு அடியில் நடப்பதுபோலிருக்கும்.

பெண் : நல்ல பழக்கம் அவ்வளவு கடினம்.

கணவர் : நம் பாக்டரிக்குப் பக்கத்து ஷெட் விலைக்கு வருகிறது. பார்ட்னர் அதை வாங்க ஆசைப்படுகிறார். சட்டப்படி செல்லாது. எல்லோரும் வேறு வழிகளைப் பயன்படுத்துகின்றனர். நீ என்ன சொல்கிறாய்?

தாயார் : எனக்கு விபரம் தெரிந்தால் சொல்வேன். நாம் சட்டத்திற்கு எதிராகப் போகாவிட்டால், சட்டம் நமக்குச் சாதகமாகச் செயல்படும்.

கணவர் : பார்ட்னர் நீ சொல்வதைக் கேட்பார்.

பெரியவன் : ஏம்பா, அம்மா வீட்டில் சமையல் பண்ணுகிறவர்கள். அவர்களைப் போய் பிஸினஸ் விஷயமெல்லாம் கேட்டால் என்ன தெரியும்? மதர் விஷயம் கேட்கலாம். எல்லாரும் செய்வதை நாம் செய்யாவிட்டால் அந்த ஷெட் கிடைக்காது.

சிறியவன் : அப்பா, இதெல்லாம் ஏம்பா அம்மாவைக் கேட்கிறீங்க?

பெண் : கேட்பது வேறு. செய்வது வேறு. எப்படிப்பா, அம்மாவுக்கு ஷெட், பாக்டரி தெரியும்?

கணவர் : எல்லோரும் சும்மாயிருங்க. நீ சொல்லும்மா. குறுக்கே பேசினா, உங்களையெல்லாம் எழுந்து போகச் சொல்வேன்.

தாயார் : நடக்கறது உங்க முடிவு பிரகாரம் நடக்கும்.

கணவர் : என் முடிவு அன்னை சொல்படி நடக்கவேண்டும்.

பெரியவன் : அதாவது அம்மா சொல்படி நடக்கவேண்டும்.போன் வருகிறது. பார்ட்னர் பேசுகிறார். கணவர் போனை எடுத்தார். ஷெட் விஷயம் நல்ல செய்தி என்றார். நேராக வருகிறாராம்.

சிறியவன் : அம்மாதான் அன்னை.

கணவர் : நீங்கள் எல்லாம் எழுந்து போங்க.கொஞ்ச நாழி கழித்து பார்ட்னர் வந்தார். ஷெட் மேனேஜர் இவரைக் கூப்பிட்டு, "பக்கத்து ஷெட் காலியாகிறது. சட்டப்படி நமக்கு வாராது. அதற்கு ஏலம் போடவேண்டும். ஏலம் போட்டால் விலை அதிகமாகும். எனக்கு அதிகாரம் உள்ளது. நான் அன்றைய விலைக்கே உங்களுக்குத் தருகிறேன்'' என்றார் என்ற செய்தியை முழு விவரத்துடன் கூறினார்.

கணவர் : இது என்ன? வாயால் முடிவைச் சொன்னால் உடனேநடக்கிறதே.

தாயார் : அது எல்லோருக்கும் இல்லை. முடிவை நிறைவேற்றினால்தான் நடக்கும். உங்களுக்குத்தான் முடிவு எடுத்தால் நடக்கிறது.

கணவர் : அது நல்லதா? பெரியதா?

பார்ட்னர் : நீங்க நல்ல முடிவைத் தொடர்ந்து எடுக்கவேண்டும். சில பேர் அழகாகப் பேசுகிறார்கள். நாம் அவர்களைப் பார்த்துக் கற்றுக்கொள்ளவேண்டும்.

கணவர் : நீங்கள் நன்றாகப் பேசுகிறீர்கள். எனக்கு யார் அழகாகப் பேசுகிறார்கள் எனத் தெரியும். எதைச் சொல்லக் கூடாதோ அதை நாம் சொல்கிறோம். அவர்கள் அதைச் சொல்லமாட்டார்கள். அது கேட்பவருக்கு இனிமையாக இருக்கும்.

தாயார் : நாம் ஒருவனை "நீ மடையன்'' என்று சொல்லும் பொழுது அவர்கள், "நீ சொல்வது எனக்குப் புரியவில்லை'' என்பார்கள். அதைச் சொல்கிறீர்களா?

கணவர் : அதுவும்தான். நான் சொல்வது வேறு. இரயில் டிக்கெட் கிடைக்கவில்லை என்றால், "முன்பே ரிசர்வ் செய்யவில்லையா?'' என்பது அவர்கள் குறையை அவருக்குச் சுட்டிக்காட்டுவது போலாகும். நான் சொல்பவர்கள் அதைச் செய்யமாட்டார்கள்.

பார்ட்னர் : அதற்குப் பக்குவம் அதிகம் தேவை.

கணவர் : அந்த பக்குவத்திற்கு 3 காரணங்கள் உள்ளன.

1) அவர்கள் புத்திசாலிகள்.

2) அந்த நாளில் ராஜாவுடன் பழகுபவர்கள் ஒரு சொல் தவறிச் சொல்லிவிட்டால் தலை போகும். இவர்கள் பெரிய இடத்தில் பழகியவர்கள்.

3) இவர்கள் தயவு, பரிசு எதிர்பார்ப்பவர்கள். அதனால் குறையைச் சொல்லாமலிருக்கக் கற்றுக்கொண்டார்கள். நமக்குப் புத்திசாலித்தனமோ, பழக்கமோ, தயவோ இல்லை.

பார்ட்னர் : அதிர்ஷ்டம் என்றால் என்ன?

தாயார் : பூர்வஜென்மப் புண்ணியம், அதிகத் திறமையுள்ளவர் குறைவான திறமை தேவைப்படுமிடத்தில் வேலை செய்வது, அடக்கம், நாம் பிறருக்குச் சமம் என்ற அறிவு, எவருக்கும் எதுவும் தெரிய வாய்ப்புண்டு என்ற தெளிவு, பிறர் அறிவைப் பாராட்டும் பரந்த மனப்பான்மை ஆகியவை அதிர்ஷ்டம் தரும். தனக்குரியதைக் கேட்காமலிருக்கும் அடக்கம் அவற்றுள் பெரியது.

பார்ட்னர் : ஒவ்வொன்றையும் விளக்கமாகக் கூறுங்கள்.

தாயார் : பூர்வ ஜென்மப் புண்ணியம் என்பதை ஏற்கனவே பெற்ற அதிகத் திறமை எனலாம். அதிகத் திறமையுள்ளவர் குறைவான திறமை தேவைப்படுமிடத்தில் அதிகப் பலன் பெறுவது இயற்கை. அதை நாம் அதிர்ஷ்டம் என்கிறோம். அடக்கம் என்பது திறமையுள்ளபொழுது திறமை இல்லாததுபோல் நடக்கும் பாங்கு. பிறர் அறிவைப் பாராட்டுவதும் அடக்கமே. தனக்குரியதைக் கேட்காமலிருப்பதும் அடக்கம்.

அடக்கம் அதிர்ஷ்டம் எனப்படுகிறது.

பார்ட்னர்: :அந்த நாளில் அடக்கப்பட்டவருக்குக் கட்டாயமாக அடக்கம் வந்ததால் இன்று அவர்கள் அதிர்ஷ்டம் பெறுகிறார்கள்.

தாயார் : ஆமாம். அடக்கம் அதிர்ஷ்டம் என்பதை அறிந்து, இன்றில்லாத அடக்கத்தை நாமே ஏற்றுக்கொள்வது அந்த நிலையில் திருவுருமாற்றம். அது பேரதிர்ஷ்டம். அன்னை அருளைப் பெற நாம் செய்யவேண்டியது அது. மறுத்துப் பேசுவது தரித்திரம். மறுத்துப் பேசாதது அதிர்ஷ்டம் என்பது இவற்றுள் முக்கியமானது.

பார்ட்னர் : பிரம்மம் என்பதை விளக்கமுடியுமா?

தாயார் : எந்தக் குணமும், ரூபமும் இல்லாதது பிரம்மம். அது எல்லாவற்றையும் சிருஷ்டித்தது. சிருஷ்டியால் குறையாதது. குறையாதது மட்டுமன்று, அதிகப்படவும் அதனால் முடியாது. நாமே அந்தப் பிரம்மம் என அறிவது பிரம்மம் சித்திப்பது. அதுவே முடிவான அதிர்ஷ்டம்.

பார்ட்னர் : எந்தக் குணமும், ரூபமும் இல்லை நமக்கு என்றறிந்தால் அடக்கம் வந்துவிடும். அது வந்தால் அதிர்ஷ்டம் வரும். எதையும் சிருஷ்டிக்கலாம். குணமேயில்லை, ரூபமேயில்லை என்றால் எப்படிக் குறைய முடியும், அதிகப்பட முடியும். அது அதிர்ஷ்டம்தான்.

தாயார் : நமக்குள்ள குணங்கள், ரூபங்கள் முக்கியமானவை அல்ல எனத் தெரிவது அடக்கம். அவை குணங்களேயில்லை, ரூபமேயில்லை என்பது பெரிய விஷயமன்றோ? இந்த ஞானம் குணத்தினின்று விடுதலை செய்கிறது. நமக்குள்ள உத்தியோகத்தைப் பாராட்டாமலிருக்க முடியவில்லை. எப்படிக் குணத்தைப் பாராட்டாமலிருப்பது?

பார்ட்னர் : நமது கெட்ட குணங்களை நாம் முக்கியமாகப்பாராட்டுகிறோம். நம் அந்தஸ்தை நாம் பாராட்டாவிட்டால், உடனே அனைவரும் பாராட்டுவார்கள். அதுவே அதிர்ஷ்டமாகும்.

தாயார் : அன்னை கொடுக்கத் தவறுவதில்லை. நாம் பெறத் தவறுகிறோம். V.C.Post 5 பேருக்கு வந்தது. அது அவர்களில் ஒருவருக்குத்தான் தெரியும். 5 பதவிகளும் உடனிருந்த நல்லவர்கட்குப் போய்விட்டது. இந்த 5 பேரும் அன்னை, அன்னை அன்பர்களை நெருங்கி இருந்ததால், அவர்களால் குறைபடாமல், பொறாமைப்படாமலிருக்க முடியவில்லை. தூர இருந்தவர்கட்கு இங்குள்ள நிலைமை தெரியாது. குறைப்பட, பொறாமைப்பட சந்தர்ப்பமில்லை. அவர்கள் இவர்கட்கு வந்ததைப் பெற்றுக்கொண்டனர். இந்த ஐந்து பேர்கள் விஷயத்திலும் நாம் தெளிவாகப் பார்த்தோம். நம்மால் குறைப்படாமல், பொறாமைப் படாமலிருக்க முடியுமானால், அன்னையிடம் பெற முடிவேயில்லை.

கணவர் : என்னால் குறை சொல்லாமலிருக்க முடியாது. அது முடியுமா என எனக்குத் தெரியவில்லை. என்னால் முடியும் என்றால் நான் செய்துவிடுவேன்.

பார்ட்னர் : This is a good attitude. அது சரி. நாமாகத் தவறு செய்யக்கூடாது.

தாயார் : நாமாகத் தவறு செய்யாவிட்டால் பிரச்சினை வாராது. வாய்ப்பு வரவேண்டுமானால், பிறர் தூண்டுதலாலும் தவறு செய்யக்கூடாது.

சிறியவன் : என்னென்னமோ சொல்கிறீர்களே. அவற்றை எல்லாம் சுருக்கமாகச் சொல்லக்கூடாதா?

தாயார் : Good character, நல்ல சுபாவம் வேண்டும்.

பெண் : Character, சுபாவம் யோகத்திற்குத் தடை.

தாயார் : Manners, behaviour, character, personality ஐக் கடந்தது யோகம். அது யோகத்திற்குச் சரி. நம்மவர்கட்கு manners பழக்கமே பத்தாது. இவையெல்லாம் வந்தால் வாழ்க்கை அதிர்ஷ்டமாக இருக்கும்.

பெண் : அன்னையிடம் பலன் பெருகுவதற்குக் காரணம் என்ன?

தாயார் : பெருகுவதற்கு சக்தி வேண்டும்.

பெண் : பழக்கம் சக்தியைத் தருமா?

தாயார் : முதலில் ஒரு நல்ல பழக்கம் உற்பத்தியாகப் பெற்றோர் எவ்வளவு முயல்கிறார்கள். அதைக் காப்பாற்ற குழந்தைகள் எவ்வளவு பாடுபடுகிறார்கள். அந்த சக்தி எல்லாம், சக்தியைப் பெருக்கப் பயன்படுகிறது.

பெரியவன் : ஏன் யோகத்திற்குத் தடையானது, வாழ்விற்குப் பயன்படுகிறது?

தாயார் : அவை எதிரானவை. சக்தி உழைப்பிலிருந்து எழுகிறது. நீ யாருக்காக உழைத்தாலும், உனக்குரிய பலன் தவறாது வரும். படிக்காதவனுக்குப் பட்டம் பெற உழைத்தால், பணமில்லாதபொழுது பல வகைகளிலும் பணம் ஏராளமாக வந்து சேர்கிறது. எந்த உழைப்பும் வீண்போகாது. உழைப்பாளி கஷ்டப்பட்டான் என்பது உலகில்லை.

சிறியவன் : உழைப்பாளி கஷ்டப்படுகிறான் என்பது எல்லோரும் சொல்வது.

தாயார் : கஷ்டப்படுபவனைப் பார்த்தால், அவன் உழைப்பாளி இல்லை, உழைப்பாளி எனக் கூறுபவன் எனத் தெரியும். உழைக்காமல் ஊரை ஏமாற்றுவதாக நினைப்பவன் தன்னையே ஏமாற்றிக்கொள்வதை அவன் அறிவதில்லை.

பெண் : அடிக்கடி சொல்கிறீர்களே, 1 ஏக்கர் 365 ஏக்கராயிற்று, 10000 ரூபாய் 2½ இலட்சம் ரூபாயிற்று, 11 இலட்சமாயிற்று, 100 ரூபாய், 200 ரூபாய் கொல்லை வருமானம் 1 இலட்சம், 1½ இலட்சமாயிற்று என்று, இந்தப் பெருக்கம் எதிலிருந்து வருகிறது?

தாயார் : கொல்லையில் வருமானம் பெற்றவர், அந்த பகுதிகளிலேயே சிறப்பான உழைப்பாளி எனப் பெயர் பெற்றவர். 1960 முதல் 1972வரை செய்த பல வேலைகளில் பலன் கைக்கு வாராததால், 10000 ரூபாய் வசூல் செய்யப் போனபொழுது அது பெருகியது. அந்த 12 ஆண்டுகளில் செய்தது 24 ஆண்டுகள் வேலை. அங்கிருந்த சந்தர்ப்பங்கள் பலனைத் தடுத்தன. பொற்கிழியில் அது பலித்தது. 1 ஏக்கர் 365 ஏக்கராயிற்று என்றால் ஒருவர் திறமையை 365 மடங்கு உயர்த்தும் வேலையைச் செய்ததால் அது நிலத்தில் தெரிந்தது. உள்ளது போகாது. அன்னையை அறிய முயல்வது ஆன்மீக உழைப்பு. அதுவும் பலன் எதிர்பார்க்காத உழைப்பு. அதற்குப் பலன் வரும்பொழுது அளவுகடந்தும் வரும்.

பார்ட்னர் : நம் பாக்டரி எப்படி வந்தது என நான் இதுவரை எவரிடமும் சொல்லவில்லை. அது வந்ததே நீங்கள் சொல்வது போலத்தான். இந்த மாதிரி லைசென்ஸ் எல்லாம் நம்ம மாதிரியுள்ளவர்க்கில்லை. அது தொழிலில் நெடுநாளிலிருந்து, மார்க்கட், பணம் கையிலிருப்பவர்க்கு உண்டு. நமக்கு எதுவுமே இல்லையே. ஒரு நாள் உங்களுடன் (கணவருடன்) பேசியபொழுது நீங்கள் அன்னையைப் பற்றிக் கூறினீர்கள். இப்போ அம்மா சொன்ன விஷயங்களைச் சொன்னீர்கள்.

கணவர் : எனக்கு நினைவில்லை.

பார்ட்னர் : நான் அதைப் பற்றியே சிந்தனை செய்துகொண்டு இருந்தேன். இரயிலில் போகும்பொழுது சிந்தனை கற்பனையாகி, கற்பனை காட்சியாகி, நான் மலர்ந்து பூரித்த சமயம் உடனிருந்தவர் பேச ஆரம்பித்தார். இறங்கிப் போகும்பொழுது அவருடன் காரில் வரச் சொன்னார். வீட்டிற்கு அழைத்துப் போனார். கம்பெனியைப் பற்றிச் சொன்னார். எனக்கு எதுவுமே விளங்கவில்லை. பிரியமாகப் பெரிய மனுஷன் பேசுவதாக நினைத்தேன். தொடர்பு நீடித்தது. "நான் அதிர்ஷ்டக்காரரைத் தேடினேன். நீங்கள் எனக்கு அதிர்ஷ்டம்'' என்றார். கம்பெனி ஏற்பட்டது.

கணவர் : எங்களுக்கு நீங்கள் அதிர்ஷ்டம்.

பார்ட்னர் : தலைகீழே சொல்கிறீர்கள்.

தாயார் : வந்த அதிர்ஷ்டத்தைக் காப்பாற்றுவது அவசியம். மார்க்கட் வந்தது அதைவிடப் பெரியது.

பார்ட்னர் : மனம் பக்குவப்படுவது எல்லாவற்றையும்விடப் பெரியது.

கணவர் : உங்களுக்கு மனம். எங்களுக்கெல்லாம் பழக்கம் வரவேண்டும். கணவர் மனைவி தகராறில் சுமுகம் மலர நம்பிக்கையில்லாதவர் நண்பர் சொல்லுக்குக் கட்டுப்பட்டு பயன்படுத்தினார். விவாகரத்தாகிவிட்டது.அவர்கட்குச் சுமுகம் அப்படித்தான் வரவேண்டும் போலிருக்கிறது.

பார்ட்னர் : சைனாவில் I ching ஜோஸ்ய புத்தகத்தில் ஒரு வாக்கியம் பல இடங்களில் வரும், "நேர்மையை விடாது பின்பற்றினால் முடிவில் பலனுண்டு'' என்பது அவ்வாக்கியம். அதுவே அன்னை கூறுவதுமாகும். Infinity அனந்தம் என்பது என்ன?

தாயார் : நமக்கு அனந்தம் வாழ்வில் அறிமுகமானது காமதேனு, கற்பக விருஷம், அட்சயப் பாத்திரம்.

கணவர் : அவையெல்லாம் புராணம். நம்ம வாழ்வில் சொல்ல முடியாதா?

தாயார் : சூடான ஐஸ், ஜில்லெனும் நெருப்பு உண்டா?

பார்ட்னர் : எதிரானவையாயிற்றே.

தாயார் : அனந்தத்திற்குள் எதிரானவை உடன்பாடாகும். அனந்தத்திற்குள் முடிவில்லை என்பதால் சூடு, நெருப்பு, ஜில், ஐஸ், போன்ற முடிவான பொருள்கள் தங்கள் முடிவை இழக்கின்றன. அவையும் நாம் காணலாம்.

கணவர் : சூடான ஐஸ் காணலாமா?

தாயார் : அது (physical) ஜட உலகில். நாம் (vital வாழ்வில் காணலாம். ஒரு பொருளை வேண்டாம் என்று பெறுபவர் கூறியபின் அதை அவருக்குக் கொடுக்கும் சக்தி உலகிலில்லை. அதுவும் அவருடைய தகுதிக்கு மீறியதானால், "வேண்டாம்'' என்ற சொல் அதை ரத்து செய்துவிடும். இந்த ஜென்மத்தில் அவருக்கு அது இல்லை. அளவுகடந்த பெரிய விஷயமானால் "வேண்டாம்'' என்ற நினைப்பே ரத்து செய்யும். ஒருவர் தம் முயற்சியால் - பெரு முயற்சியால் - முடியாது எனக் கண்டதைப்போல் 5 மடங்கு, 10 மடங்கு அவருக்கு மற்றொருவர் செய்வது என்பது இல்லை.அதுவும் பெறுபவரே வேண்டாம் என்ற பிறகு நடக்காது. நான் சொல்பவர் கேலிசெய்தார். வருவதைப் பெறுபவர் கேலிசெய்தபின் வந்ததாக வரலாறில்லை. அது அவருக்கு மட்டுமன்று, அவர் சந்ததிக்கே வாராது. அப்படிப்பட்ட மனிதருக்கு அது பலிக்கும்வகையில் செயல்பட முடியுமா? அதுவும் சொல்லியதுபோல் 25 மடங்கு பலிக்கும்வகையில் செயல்பட தெய்வ சக்தியால் முடியாது. பிரம்மத்தின் அனந்தத்தால்தான் முடியும். அதுவும் நம் அனுபவம். அநேகமாக, பெரும்பாலான நம் அனுபவங்கள் அவை போன்றவையே. அங்கெல்லாம் நாம் காண்பது அனந்தம். எதுவுமில்லாமல் எல்லாவற்றையும் சிருஷ்டிப்பது அது.

பார்ட்னர் : திருப்தியான விளக்கம். பெறுபவரே முடியாது, வேண்டாம் என்றால், கேலிசெய்தால், கொடுக்கும் சக்தி உலகிலில்லை. அது இருக்கிறது எனில் அது அனந்தமான சக்திதான். மெக்ஸிகோவில் பர்ஸ் கிடைத்தது எனில் எப்படிக் கிடைத்தது எனக் கூற முடியுமா?

தாயார் : தத்துவம் ஒரு பகுதி, நடைமுறை அடுத்தது. இரண்டையும் இணைப்பது நாம். திருடனை போலீஸ் பிடிக்க எல்லா ஸ்டேஷன்கட்கும் செய்தி அனுப்பியது. அன்னை என்பது ஒரு சூட்சும ஸ்தாபனம். அது உலகெங்கும் பரவியுள்ளது. அன்பர் அன்னைக்குக் கேட்கும்படிக் கூப்பிடவேண்டும். அன்னை மெக்ஸிகோவிலும் உள்ளார் என நம்பிக்கை வேண்டும்.

கணவர் : அதெப்படி இல்லாமல் போகும்?

தாயார் : அன்னை விநாயகர் பேப்பர் வெயிட்டைக் கையில் எடுத்தபொழுது அதிலிருந்து விநாயகர் வெளியில் வந்தார். "நீ உண்மையில் இருக்கிறாயா?'' என அன்னை கேட்டார். விநாயகர் செல்வம் தரும் கடவுள் என்பது வடநாட்டு மரபு. அன்னை அவரை, "என் செலவுக்குப் பணம் வேண்டும்'' என்றார். 10 ஆண்டுகள் பணம் வெள்ளமாக வந்தது. அதன்பிறகு வறண்டு விட்டது. அன்னை மீண்டும் விநாயகரை அழைத்து "என்னவாயிற்று?'' என்று விசாரித்தார். "உங்கள் செலவு பெரியது. என்னால் முடியாது'' என்றாராம். அதன்பிறகு அன்னை விளக்கம் சொன்னார். இந்தியாவில் வேலை நடந்தவரைக்கும் விநாயகர் பணம் வந்தது. அமெரிக்காவில் வேலையை ஆரம்பித்தவுடன் பணம் நின்றுவிட்டது. அமெரிக்கர்கட்கு விநாயகர்மீது நம்பிக்கையில்லை.அதனால் அந்தச் செலவுக்குப் பணம் தர அவரால் இயலாது என்றார்.

கணவர் : அன்னை எல்லா நாடுகளிலும் உள்ளார் என்பதை நாம் ஏற்க வெளிநாடு போய்ப் பார்த்தால்தான் தெரியும் போலிருக்கு.

பார்ட்னர் : அங்கெல்லாம் போனபின் அன்னை நினைவு வருவதே கஷ்டம்.

தாயார் : அவர் தம் முயற்சிகளெல்லாம் முடித்தபின் கூப்பிடுகிறார். அடுத்த வேளைக்கு வழியில்லை என்று கூப்பிடுகிறார். சூட்சும ஸ்தாபனமிருப்பதால் கேட்கிறது. போலீஸ் என்ற ஸ்தாபனம்போல் அன்னை \சூட்சுமத்தில் வேலை செய்யும் ஸ்தாபனம். குரல் அன்னைக்குக் கேட்டு அன்னை பொருளுக்கு உத்தரவிட்டு, உத்தரவை ஏற்றுப் பொருள் கண்முன் வந்து, பார்வையில் படுவது அன்னை செயல்படும் வழி.

பார்ட்னர் : இப்படிச் சொன்னால் புரியும்.

தாயார் : பிள்ளை வீட்டார், தாமே முன்வந்து பெண் வீட்டாரை அணுகி வரன் பேசுவதோ, எல்லாச் செலவுகளையும் தாமே ஏற்பதாகச் சொல்வதோ, நாம் அறியாதது. அது சமூகத் திருவுருமாற்றம். அது நடப்பதெப்படி? திருவுருமாற்றம் என்றால் பகுதிகள் முழுமையை ஏற்பதாக அர்த்தம். ஏற்றுச் செயல்பட்டால் அது ஏற்படும். முழுமை என்பதுஅனந்தம்.

கணவர் : முழுமை என்பது அனந்தமா?

பார்ட்னர் : நாமும், நம் மார்க்கட்டும் எதிரிகளல்ல, நம் தொழிலாளிகள் எதிரிகள் அல்லர். நாமனைவரும் முழுமை எனக் கொண்டால்.....

தாயார் : அது அன்னையைச் செயல் கடைபிடிப்பதாகும். பொதுவாக ஒரு பெரிய காரியத்தைச் செய்பவர், அடுத்த விஷயத்தில் சில்லறையாக இருப்பதால் முழுமையின் முழுப் பலன் தெரிவதில்லை.

கணவர் : அம்முழுமையைக் காண நான் என்ன செய்யவேண்டும்?

தாயார் : பார்ட்னர் சொன்னதைச் செய்யவேண்டும்.

கணவர் : எப்படி?

தாயார் : மார்க்கட் நமக்கு அடுத்த பகுதி என்பதால் மார்க்கட்டைப் போட்டி மனப்பான்மையுடன் நினைக்கக் கூடாது.

கணவர் : அடுத்த கம்பெனி போட்டியன்றோ?

பார்ட்னர் : அடுத்த கம்பெனியை நம் முழுமையின் பகுதி என அறியவேண்டும்.

கணவர் : சரி.

தாயார் : அது பெரிய விஷயம். அதிர்ஷ்டம் வருவதை அவசியம் மறுக்கவேண்டும் என்பது மனித நியாயம்.

பார்ட்னர் : இது என்ன நான் கேள்விப்படாததாக இருக்கிறதே.

கணவர் : நாம் rivals போட்டி போடுபவனை நம் முழுமையின் பகுதியாக ஏற்றால் வாய்ப்பு வரும் என்கிறோம். மறுப்பதே மனித சுபாவம் என அன்னை கூறுவதை என் மனைவி அடிக்கடி சொல்வதுண்டு. 25வருஷத்தில் 2350/- ரூபாய் நன்கொடை வசூல் செய்தவருக்கு வருஷத்திற்கு 85,000 ரூபாய் சொந்த வருமானத்தைக் காட்டியபோது, "நீ என்னிடம் வேலை செய்பவன். நீ சொல்லி நான் செய்தால் என்ன மரியாதை'' என ஒருவர் மறுக்கிறார் எனில் அதற்குமேல் என்ன விளக்கம் தேவைப்படுகிறது?

பார்ட்னர் : அவரவருக்கு முக்கியமானது என்று ஒன்றுண்டு. கோடீஸ்வரன் தாழ்ந்த ஜாதிக்காரனானால், மேல் ஜாதிக்காரர் அவனோடு பணத்திற்காக சம்பந்தம் செய்யமாட்டார்.

கணவர் : ஜாதியை ஓரளவு ஏற்கலாம்.

பெரியவன் : அம்மா அந்த வக்கீல் குமாஸ்தா பையன் வாங்கிக் கொடுக்கும் வேலை வேண்டாம் என்பதை அடிக்கடி சொல்வார்கள்.

சிறியவன் : யாரது?

கணவர் : அந்தப் பையன் நம் வீட்டுக்கு வந்து போனபொழுது அவர்கட்குச் சாப்பாடு இல்லை. பெரிய குடும்பம். நான் எப்படியாவது ஒரு வேலை எங்காவது வாங்கித் தர முயன்றபொழுது, "யாருக்கு வேண்டும் இது? நான் உங்களைக் கேட்கவில்லையே. எனக்கு உள்ளூரிலேயே இல்லாவிட்டால் வேலை வேண்டாம்'' என்றான்.

பார்ட்னர் : அப்படி ஒருவன் அந்த நிலையில் சொன்னானா?

கணவர் : அப்படி மட்டுமே நாமெல்லாம் நடப்பதாக அன்னை கூறுகிறார்.

தாயார் : சம்பளத்திற்கு வேலை செய்பவன், எவ்வளவு வருவதானாலும் சொந்தத் தொழில் செய்யமாட்டான்.

பார்ட்னர் : அந்த தைரியம் வாராது.

கணவர் : நெருப்புப் பெட்டி வியாபாரி, ஷாம்பூவில் அதிக இலாபமிருந்தால் எனக்கு வேண்டாம் என்பான்.

பார்ட்னர் : புரிகிறது.

தாயார் : நெருப்புப் பெட்டி சிறியது. கொஞ்சமாக விற்கிறது. பெரிய சைஸ் ஏராளமாக விற்கிறது என்று தெரிந்தாலும், சரக்கை மாற்றமாட்டான்.

பார்ட்னர் : நாம் வாழ்க்கையைச் சுருக்கிக்கொள்கிறோம். அதிகமாகவும் சுருக்கிக்கொள்கிறோம். வருவது அந்த சுருக்கத்தின்மூலம் வரவேண்டும் என்கிறோம். இந்த மனப்பான்மை புரிகிறது.

தாயார் : உலகில் எதுவும் யாரையும் தேடி வருவதில்லை.

கணவர் : தரித்திரம்தான் வரும். உபத்திரவம் வரும்.

தாயார் : அன்னையிடம் ஆயிரம் வருகிறது. வருவதை ஏற்கும் மனம் மனிதனுக்கில்லை என்கிறார் அன்னை.

பார்ட்னர் : அதிர்ஷ்டம் வரும் ரூபத்தில் நாம் ஏற்பதே அதிர்ஷ்டம். அதிர்ஷ்டத்தை நமக்குரிய ரூபத்தில் வரச் சொல்வது தரித்திரம்.

தாயார் : மழை பெய்யும் மாதத்தில் பயிர் செய்யவேண்டும். பயிர் செய்யும்போது மழை பெய்யவேண்டும் என எதிர்பார்ப்பது முடியுமா?

கணவர் : நாங்களெல்லாம் என்ன செய்யக்கூடாது, என்ன செய்யவேண்டும் எனச் சொல்.

பார்ட்னர் : அப்படிக் கேட்கக் கூடாது என்று கூறுகிறாரே.

தாயார் : எந்த வேலையை முடிக்கவும் சில குணங்கள் வேண்டும்.

பார்ட்னர் : திறமை, பொறுப்பு, சாதுர்யம், அடக்கம் போன்றவை

தாயார் : அவையில்லை என்றால் பேச்சில்லை. அவற்றைப் பெறும்வரை பேசவேண்டாம். அந்த வேலையைக் குறைந்தபட்சமாக்க, அதிகபட்சமாக்க எப்படிச் செய்வது என்று நமக்குத் தெரியும்.

கணவர் : இந்தக் குணங்களை அதிகபட்சமாக்க வேண்டும்.

பார்ட்னர் இவற்றிற்கு எதிரான குணங்களை அடியோடு விலக்க வேண்டும்.

கணவர் : திறமைக் குறைவு, பொறுப்பின்மை, அசட்டுத்தனம், கர்வம்.

தாயார் : அவை வெளிப்படும் பேச்சு, நினைவு, உணர்வு விலக்கப்பட வேண்டும்.

சிறியவன் : பேசாமடந்தையாக இருக்கவேண்டுமா?

கணவர் : இதைச் சொல்கிறாயா?

தாயார் : இது என்ன?

கணவர் : அவனுக்கு மாற அபிப்பிராயமில்லாததால், அடுத்தவர் வாயை அடக்குகிறான்.

தாயார் : அதை என்னவென்று சொல்வார்கள்? குதர்க்கம் இல்லையா?

கணவர் : பிள்ளைகள் குதர்க்கமாக இருக்கிறார்கள், கண்டிக்கிறேன் என்றால், கூடாது என்கிறாய்.

தாயார் : அவர்களைத் திருத்த நாம் திருந்திக்கொள்ள வேண்டும்.

பார்ட்னர் : அப்படி நாம் திருந்தினால்?

தாயார் : பிள்ளைகளால் தொந்தரவு வாராது. அவர்களும் திருந்துவார்கள்.

பார்ட்னர் : ஏன் அதை நாம் செய்யக்கூடாது?

கணவர் : பார்ப்போம்.

பார்ட்னர் : நமக்கு உலகம் என்ன செய்யவேண்டுமோ, அதை நாம் பிறர்க்குச் செய்யவேண்டும் என்பது நல்ல சட்டமாயிற்றே.

தாயார் : பாக்டரியைப் பொறுத்தவரை அந்த ஒரு சட்டம் போதும் நாம் உலகப் பிரசித்தி பெற.

பெரியவன் : யாருக்காவது, ஏதாவது செய்யச் சொன்னால் எரிச்சல் வருகிறது.

கணவர் : நமக்கு எரிச்சல் ஏன் வருகிறது?

தாயார் : செய்யப் பிடிக்கவில்லை என்றால் எரிச்சல் வருகிறது. அன்னை நமக்குச் சந்தோஷமாகச் செய்யவேண்டும் எனில், நாம் பிறருக்குச் சந்தோஷமாகச் செய்யவேண்டும்.

சிறியவன் : ஏன் செய்யப் பிடிக்கவில்லை? மனம் பரந்தது!

பெண் : ஏம்மா செய்யப் பிடிக்கவில்லை?

தாயார் : செய்வதற்குள்ள தெம்பிருப்பதில்லை. இயலாமை என்கிறோம்.

பெண் : இயலாமை எதனால் வருகிறது?

தாயார் : வறுமை, அறியாமை, நோய். நோயிருந்தால் உடலால் முடிவதில்லை, வறுமையில் உணர்வால் முடிவதில்லை, அறியாமை மனத்தின் இயலாமை.

பெரியவன் : எரிச்சல் வந்தால் புத்தியில்லை எனப் பெயரா?

கணவர் : புத்தியில்லாதவனுக்குத்தான் எரிச்சல் வரும்.

பெரியவன் : எனக்குப் புத்தியில்லையா?

தாயார் : புத்தியில்லை எனப் புரிந்துகொள்ளும் புத்தி உனக்கிருக்கிறதே, போதாதா?

பார்ட்னர் : பண்பு, பெருந்தன்மை, பக்குவம், பவித்திரம் எப்படி வரும்?

தாயார் : எதையும் முயன்று பெற்றுக்கொள்ளலாம்.

பார்ட்னர் : பலருக்கு இயல்பாக எப்படி அமைகிறது?

தாயார் : பெருஞ்செல்வம், அபரிமிதமான படிப்பு, உயர்ந்த அந்தஸ்து, பரம்பரையான பண்பிருந்தால், அவை வரும் தலைமுறைகளில் இவற்றை உற்பத்தி செய்யும்.

கணவர் : நானிவற்றைப் பெற என்ன செய்யலாம்?

தாயார் : நாளுக்கு நாள் அன்னையை அதிகமாக அறிய முயலலாம். அடுத்த அடுத்த செயல்களில் அவரை அதிகமாக வெளிப்படுத்தலாம்.

பார்ட்னர் : உதாரணம்மூலம் சொல்லுங்கள்.

தாயார் : React செய்யக்கூடாது, எரிச்சல் படக்கூடாது, பிறர் நோக்கில் பிரச்சினையைப் பார்க்கவேண்டும், எதிலும் அபரிமிதம் கண்ணில்படவேண்டும், பொறுமைக்கே பூஷணமாக இருக்கவேண்டும், செய்யும் வேலையை திருந்தச் செய்யும்பொழுது அன்னை நினைவில மட்டும் செய்யவேண்டும், எந்த நேரமும், எவர் முன்னிலையிலும், முகமலர்ந்து நிற்கும் அகமலர்ச்சி வேண்டும்.

கணவர் : பயித்தியமே பிடித்துவிடும்.

பார்ட்னர் : இத்தனையும் செய்தால் பயித்தியத்திற்கும் பக்குவம் வரும். என்ன செய்யவேண்டும் என்று சொல்லியதைப் போல், என்னசெய்யக்கூடாது என்று சொல்லுங்கள்.

தாயார் : வருத்தப்படக் கூடாது, குறைப்படக் கூடாது, குறை சொல்லக் கூடாது.

சிறியவன் : எரிச்சல் படக்கூடாது, கேலிசெய்யக் கூடாது.

கணவர் : கேலிஎன்பது, குறையை மிகைப்படுத்திக் கூறுவதே ஆகும்.

பார்ட்னர் : அப்புறம்....

தாயார் : இடைவிடாத அன்னை நினைவு இதயத்தில் மலர்ந்து, முகத்தில் தெரியவேண்டும்.

பார்ட்னர் : ஏன் அறிவைவிட உணர்வை முக்கியமாகச் சொல்கிறீர்கள்?

தாயார் : அறிவு உயர்ந்தது, செயலாற்றிச் சாதிக்க முடியாதது. உடல் அசையும், உணரவோ, புரியவோ திறனற்றது. உணர்வில் அறிவும், செயலும் சந்திப்பதால் அதனால் சாதிக்க முடியும்.

தொடரும்..


 

*.. *..*.. *..
 

ஸ்ரீ அரவிந்த சுடர்

அருளில் நம்பிக்கையுள்ளவர் அருளைச் செயல்பட

அனுமதித்து கர்மத்தை கரைக்கிறார்.


 

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம்முடைய உலகம் என்பது, நம் உணர்வால் உருவானது.அவ்வுணர்வுகளை நிர்ணயிப்பது நம் பண்புகள்.பண்புகள் ஒன்று முதல் நூறுவரை நூறு நிலைகளில் உள்ளன. நம் பண்புகள் எவை? அவை உள்ள நிலை எது? என அறிவது முன்னேற்றத்திற்கு உதவும்.

பண்பின் நிலை பக்குவத்தின் நிலை.


 


 


 


 



book | by Dr. Radut