Skip to Content

06.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

அன்னைக்கு வணக்கம்!

என் தங்கையின் வாழ்வில் ஏற்பட்ட ஓர் அற்புதத்தை, அன்னையின் அருளைப் பற்றி உங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்.

தாயற்ற மூன்று பெண்களும், ஒரு தம்பியுமாக உத்தியோகம் பார்க்கும் தந்தையின் அரவணைப்பில் வாழும் எங்கள் குடும்பத்தில் கணவனுடன் வாழ முடியாத என் சிறிய பாட்டி எங்களுடன் சேர்ந்து கொண்டார்.

அக்காவைக் கட்டிக் கொடுத்தாகிவிட்டது. அவள் வாழ ஆரம்பித்த கதை பெரிய கதை. அன்னையின் அருளால் தற்போது அவள், நான் வியக்க, உலகம் வியக்க, வாழ்வு நடத்துவது அன்னைக்கும், எனக்குமே வெளிச்சம்.

தாயில்லாக் குறை தெரியக்கூடாதென்று அப்பாவும் நினைத்தார். நானும், என் தங்கையையும், தம்பியையும் அக்குறை போக்கி வளர்க்க முடிவு செய்தேன். நான் வயதுக்கு வந்தவள், அவள் சிறுமி. எல்லோரும் படிக்கிறோம்.

என் அக்காவையும் சேர்த்துதான் கூறுகிறேன். முடிந்தவரை, தங்கைக்கு எந்த வேலையும் வைக்காமல், வீட்டு வேலை, சமையல் எல்லாம் நானே முடித்துவிடுவேன். அவள் படிக்க வேண்டும், நன்றாகப் படிக்க வேண்டும், கஷ்டம் தெரியாது வாழவேண்டும், நல்லபடியாகக் கவனித்துக்கொள்ள வேண்டுமென்பது என் தந்தையின் ஆசையும்கூட. பால் நிறைய வாங்கி இரவில் எல்லோரும் பால் அருந்த வேண்டும். நானே காய்ச்சி எல்லோருக்கும் தருவேன்.

இந்தப் பாட்டி ஒரு மாதிரி. கணவனால் ஆதரிக்கப்படாததால், ஆண் வர்க்கத்தின் பேரிலேயே ஒரு துவேஷம். எங்கள் இருவரையும் எந்த ஆண் பிள்ளைகளோடும் விளையாட விடமாட்டார். என் தங்கையோ நல்ல குண்டாகவும், மிகவும் கலகலப்பாகவும் இருப்பதால், சில ஆண் பிள்ளைகளுடன் இருப்பாள்.

பாட்டிக்கோ அதை நினைத்தாலே அருவருப்பு. திட்டித் தீர்த்து விடுவார். அவர் மனப்போக்குக்கு அறவே பிடிக்காது. காலத்தை அனுசரிக்கத் தெரியாதவள் பாட்டி. அதனால் தங்கை, பாட்டி கூறுவது எதையும் காதிலேயே போட்டுக்கொள்ள மாட்டாள். தாயில்லாது மிகவும் செல்லமாக வளர்ப்பதால், அவளுக்கு ரோஷம் அதிகம்.

ஒரு நாள் பாட்டி என்ன கோள்மூட்டினாரோ தெரியவில்லை, அப்பா வெறுப்பு வந்து, தங்கையை மனம் வெறுத்து, இரண்டு அடிஅடித்துவிட்டார். எல்லாம் தெரிந்த அப்பாவே அடிக்கிறார் என்ற எண்ணம் தலைதூக்கி நிற்க முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தாள். இரவு சாப்பிட்டு முடித்ததும், "அக்கா, என் பாலை நானே காய்ச்சிக் குடிக்கிறேன். நீ காய்ச்ச வேண்டாம்'' என்றாள்.

கோபத்துக்கும், பாலைக் காய்ச்சுவதற்கும் என்ன சம்பந்தம்? சரி, கோபத்தை அப்படியாவது கழித்துக்கொள்ளட்டும் என விட்டுவிட்டேன்.

இரவு வெகு நேரம் ஆகிவிட்டது. விளக்கை நிறுத்தாமல் தங்கை ஏனோ விழித்துக்கொண்டு உட்கார்ந்திருந்தாள். "என்ன தூங்கலையா?''

"அக்கா, நான் செத்துடுவேனா?'' பீதியுடன் கேட்டாள். "என்ன திடீர்னுசந்தேகம் வந்துவிட்டது உனக்கு?''

"இரண்டு பல்லியைப் பிடித்து, சாவடித்து, பாலில் போட்டு கொதிக்க வைத்து குடித்துவிட்டேன்''. "எதுக்கு? ஏன் சாப்பிட்டே?''

"இரண்டு பசங்க காப்பி குடித்து இறந்துவிட்டதும், காரணத்தைப் பார்த்தால், அந்த காப்பியில் ஒரு பல்லி செத்திருந்ததைப் பேப்பரில் பார்த்தேன். அதேபோல் ஒரு பள்ளி மதிய உணவிலே ஒரு பல்லி விழுந்துகிடக்க, அதைச் சாப்பிட்ட 37 பிள்ளைகளும் மயக்கம் போட்டு விழுந்து ஆஸ்பத்திரிக்குப் போய் குணமானதைப் பார்த்தேன். பாட்டிப் பேச்சைக் கேட்டு அப்பா அடிச்சதை நினைச்சா செத்துடனும்போல பட்டது. அதான்! இப்போ ஏண்டா செஞ்சோம்னு பயமாயிருக்கு!

அன்றைக்கு அன்னையைக் கும்பிடும் பக்தர்கிட்டே, "உங்களுடைய பரிவாலே தெளிந்த நான், நல்லா வளர்ந்து, படிச்சி, எல்லோருக்கும் உதவுகிற மாதிரி வாழ்ந்து காட்டுவேன்' என்று கொடுத்த வாக்கை நானே பொய்யாக்கிவிடுவேன் போலுள்ளது'' என்றாள்.

எனக்கே பயம் வந்து "என்னதான் செய்தாய், சொல்லு'' என்று துருவிக் கேட்க,

"இந்த பாட்டிக்கு என்ன தெரியும். இந்தப் பாட்டி பேச்சைக் கேட்டுக்கொண்டு அப்பா இப்படி செய்கிறாரே. அப்பாவுக்கு எங்கே போனது புத்தி. படிச்சவருதானே! அவருக்கே தெரியவில்லை என்றால், நான் எப்படிச் சுதந்திரமா வாழ முடியும். அப்புறம் ஏன் வாழவேண்டும்? அப்படி நினைவு வந்த உடனே, பல்லி நினைவு வந்தது. அதனால்தான் நானே பாலைக் காய்ச்சிக்கொள்கிறேன் என்று சொல்லி, ஒரு பல்லியைப் போட்டு கொதிக்க வைத்தேன். முன்பே இது மாதிரி அதிகக் கஷ்டமாக இருந்தபொழுது அன்னையை வணங்கும் அந்த வீட்டுக்குக் கூப்பிட்டுப்போனாயே. "எந்த கஷ்டம் வந்தாலும் இதை வைத்துக்கொள்' என்று அன்னையின் திருவுருவப் படத்தைக் கொடுத்து, அந்த நேரத்திலே உன் கஷ்டத்தையெல்லாம் சொல்லு, எல்லாவற்றையும் போக்கிக் கொடுத்துவிடுவார்கள் என்று சொன்னார் இல்லையா! அது நினைவுக்குவர காய்ச்சிய பாலை அன்னையின் முன் வைத்து "அம்மா இந்த நேரத்தில் எனக்கு இதுதான் செய்யத் தோன்றுகிறது. என்னை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள்' என்று சொல்லி குடித்துவிட்டேன்.

ஒரு மணி நேரம் கழித்துப் பார்த்தேன். ஒன்றும் ஆகவில்லை. அந்த வேகத்திலேயே இன்னும் ஒரு பல்லியை அடித்து நன்றாகக் காய்ச்சி குடித்துவிட்டேன். அரைமணி நேரம் ஆகிறது. இப்பொழுதுதான் எனக்குப் பயம் வந்துவிட்டது, நான் செத்துவிடுவேனோ, எங்கம்மா மாதிரியே என்று. எந்த கஷ்டம் வந்தாலும், அன்னையும், நீங்களும் இருக்கும்போது பயப்படவே மாட்டேன். தெளிவாக வாழ்வை ஏற்றுக்கொள்வேன் என்ற அந்த வாக்கைக் காப்பாற்றமாட்டேன் போலுள்ளதே'' என வார்த்தைகளை நிதானமாகவும், தெளிவாகவும் பேசி முடித்தாள்.

அவள் பேசிக்கொண்டேயிருந்ததைக் கவனிக்கும்போது - அந்தத் தொனி - பக்த மீராவுக்குக் கொடுத்த பாம்பின் விஷம் செரித்து, ஜீரணமாகி, அவளுக்கு தேஜசைக் கொடுத்ததே, அதுபோல்தான் என் தங்கையின் தொனியும் இருந்தது. வெளியில் அன்னையின் அருளால் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு,

"அன்னையிடம் சொல்லிவிட்டுத்தானே செய்தாய், ஒன்றும் ஆகாது''

எனத் தைரியம் கொடுத்துக்கொண்டிருந்தேனேயொழிய, மனதில் கிலி பிடித்து, அடி வயிற்றைப் பிசைந்துகொண்டிருந்தது.

அந்த சம்பவத்தையே மறந்து, எதை, எதையோ பேசிக்கொண்டு இருந்தோம் (முக்கியமாக அன்னையையும், அன்னையின் செயல்களையும் குறித்து). விடிய ஆரம்பித்தது. பிசைந்துகொண்டு இருந்த என் மனதிற்கும் ஒரு விடியலின் ஒளி கிடைத்தது. இத்தனை மணி நேரம் ஆன பிறகு அந்த பல்லி விஷம் ஜீரணமாகியிருக்க வேண்டும், அன்னையின் அருளால். இல்லையேல் ஏதாவது அதன் அறிகுறி காட்டியிருக்க வேண்டுமே. தெளிவாகத்தானே இருக்கிறாள். நான் பார்ப்பதைவிட, நான் எண்ணமிட்டதைவிட தெளிவாக இருக்கிறாளே! ஆம்!தெளிவாகத்தான் உள்ளாள்.

இப்பொழுது, B.A.English Literature படிக்கிறாள். அன்னையின் அரவணைப்பை உணர்கிறாள். அப்பா அவளுக்கு ஒரு Encyclopediaவாங்கித் தந்துள்ளார்.

நான் இந்த கட்டுரையை என் தங்கையிடம் கொடுத்து இப்பொழுது படிக்கச் சொன்னேன். அவள் கூறியதாவது,

"நானா! இப்படிச் செய்தேன்!'' என்று மலைப்புடனும், திகைப்புடனும் படித்தாள். முழுவதும் படித்த பிறகு "பைத்தியக்காரத்தனமான செயல் செய்து இருக்கிறேன். முட்டாள்தனமாகவும் செய்து இருக்கிறேன். நான் இவ்வளவு செய்தும், நான் வணங்கிய என் அன்னையின் அருளே எனக்கு பக்கபலமாக இருந்து என்னை அந்தப் பேரழிவிலிருந்து காப்பாற்றி, நல்வழிபடுத்திக்கொண்டும் இருக்கிறது'' என்று முடித்தாள்.

*******


 



book | by Dr. Radut