Skip to Content

05.திருமணம் அவசியம்

 திருமணம் அவசியம்

N.அசோகன்

உடல்ரீதியாகப் பார்த்தால் எல்லோருக்கும் திருமணம் அவசியம்.ஒரு பெண்ணுக்குத் திருமணத்தைப்போல், குழந்தைப் பேறும் மிகவும் முக்கியம். ஆணுடைய வாழ்க்கையும் மகப்பேற்றில்தான் நிறைவு அடைகிறது. இருந்தாலும், ஓர் ஆண் மனநிறைவைத் தேடுவது திருமணத்தில்தான். மனைவியின் பாராட்டுக்காகக் கணவன் ஏங்குகிறான். அவளுடைய அன்பு மற்றும் ஆதரவைவிட ஓர் ஆடவன் போற்றுவது வேறெதுவுமில்லை. உடல்ரீதியான மற்றும் உணர்வுரீதியான காரணங்கள் தவிர, திருமணம் சமூகரீதியாகவும் அவசியமாகி விட்டது. திருமணமானவருக்கு சமூகத்தில் கிடைக்கும் மரியாதை திருமணமாகாதவருக்குக் கிடைப்பதில்லை. 40 வயதில் பிரம்மச்சாரியாக இருப்பவருக்கு வாடகைக்கு வீடோ, அறையோ கிடைப்பது கடினம். திருமணமாகாத பெண்களைக் காண்பது அரிது. சமூகம் அவர்களைப் புறக்கணிக்கிறது. இதனாலேயே, படிப்பு முடிந்தவுடன் எல்லோரும் திருமணத்தை நாடுகிறார்கள்.

பிள்ளைகளின் திருமணத்தைப் பிரதான காரணமாக வைத்துத் தான் பெற்றோர்கள் இப்பொழுது சம்பாதிக்கிறார்கள். குடும்பத்தில் கடைசி பிள்ளைக்குத் திருமணமானவுடன் பெற்றோர் வருமானத்தைப் பெருக்கும் முயற்சிகளைக் கைவிடுகிறார்கள். மேலைநாடுகளில் இளம் ஆண்களும் பெண்களும் அவரவருடைய வாழ்க்கைத் துணையை அவரவரே தேடிக்கொள்ள வேண்டும். திருமணம் முடிந்தபிறகே பெற்றோருக்குச் செய்தி தெரிகிறது என்ற நிலையுமுண்டு. ஆனால்,இங்கே இந்தியாவில் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பதும்திருமணத்துக்கான செலவுகளை ஏற்பதும் பெற்றோருடைய பொறுப்பாகிறது. இதனால், இந்தப் பொறுப்புகள் தீர்ந்ததும் பெற்றோருக்கு மேற்கொண்டு சம்பாதிக்கும் எண்ணம் போய் விடுகிறது.

சாதிக்க வேண்டுமென்பது மேலை நாடுகளில் ஒரு தீவிர நோக்கமாக உள்ளது. அத்தகைய தீவிரம் இங்கில்லை. இரண்டாம் உலகப்போருக்குமுன்னர் நிறைய நிலம் வைத்திருப்பது பெரிய சாதனையாகக் கருதப்பட்டது. இன்னமும் இந்நிலை நீடிக்கிறது.திருமணத்திற்குப் பெற்றோர் தரும் முக்கியத்துவத்துக்கு ஈடாகவும் இன்றைய இளையசமுதாயம் பெருஞ்சம்பாத்தியத்தைப் பிரதானமாக நாட வேண்டும். இப்படியொரு தீவிரம் இளைஞர்களிடையே எழுந்தால்,இந்தியா விரைவில் பணக்கார நாடாகும்.

சமூக விருத்திக்காக ஏற்பட்ட திருமணம், இப்பொழுது சம்பாத்தியத்துக்குத் தூண்டுகோலாகிவிட்டது. இம்மாதிரியே, பிள்ளைகளின் படிப்புச் செலவும் அதிகரித்துவிட்டதால், இதுவும் சம்பாத்தியத்துக்குத் தூண்டுகோலாகிவிட்டது. பழங்காலத்தில் பல பிள்ளைகளுக்குத் திருமணம் செய்துவைப்பதற்குஆன செலவு இப்பொழுது ஓரிரு பிள்ளைகளின் படிப்புச் செலவுக்கு ஈடாகி விடுகின்றது. நடுத்தரக் குடும்பத்தினரிடையே இப்பொழுது சராசரி படிப்பு என்பது எஸ்.எஸ்.எல்.சி.யிliருந்து பட்டப்படிப்புக்கு உயர்ந்து விட்டது. குழந்தைகள் பிறந்ததில் இருந்தே அவர்களுடைய உயர் படிப்புக்கு நிதி திரட்ட பெற்றோர் தொடங்கிவிடுகின்றனர்.

தம்முடைய மகளுக்கு டாக்டர் மற்றும் என்ஜினீயர் வரன் அமைய வேண்டுமென்றால், அவர்கள் கேட்கும் வரதட்சிணையைக் கொடுக்கத் தயாராகிவிடுகின்றனர். இப்படிச் செய்வதால், மருமகன்-களுடைய படிப்புச் செலவையும் பெண்ணின் பெற்றோர் ஏற்கிறார்கள் என்றாகிறது. இவற்றையெல்லாம் வைத்துப் பார்க்கும்போது,திருமணமும் படிப்பும் சம்பாத்தியத்தை உயர்த்தும் கருவிகளாகச் செயல்படுகின்றன. அவ்வகையில் இவை சமூகம் உயர்வதற்கும் காரணமாக உள்ளன.

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்

பகவான் வாழ்வு அவருடைய தத்துவத்தைவிட வலுவான சூழலுடையது.

தத்துவத்தைவிட வலுவான வாழ்வு.

 



book | by Dr. Radut