Skip to Content

09.தரிசனம்

"அன்னை இலக்கியம்"

தரிசனம்

(சென்ற இதழின் தொடர்ச்சி....) இல.சுந்தரி

வைத்தியநாதன் நாடு திரும்பியதும் முதல் வேலையாக நேரே புவனேஸ்வரி காலனியில் உள்ள தம் நண்பர் பரமசிவத்தின் வீட்டிற்கு வந்தார். (நண்பன் பரமசிவம் சமீபத்தில் இறந்து விட்டார். அவர் குடும்பம் எதிர்பாராத இழப்பால் நொடித்துப் போனது. மீனாவுக்கு நெஞ்சுவலி என்று நண்பரின் மனைவி புவனா தன்னிடம் கூறியவுடன், தாம் மணியன் நர்ஸிங் ஹோமில் வைத்தியத்திற்கு ஏற்பாடு செய்வதாயும், மீனாவிற்குத் தெரிவிக்காமல் அவளை அங்கு அழைத்துப் போகும்படிக் கூறியிருந்தார்.மீனா தன் தந்தையின் மறைவுக்குப்பிறகு, தன் தாய் யாரிடமும் எந்த உதவியும் பெறக் கூடாது என விரும்பினாள். எனவேதான் அவளுக்குத் தெரிய வேண்டாம் என எண்ணினார்).

இப்போது அவளுக்குக் குணமாகி வீடு திரும்பிய செய்தி அறிந்து நேரே அங்குச் சென்றார்.

மீனா தன் தோழிகளுடன் மகிழ்வாகக் காணப்பட்டாள். அவருக்கு நிம்மதியாய் இருந்தது. "மீனா' என்று வாஞ்சையுடன் அழைத்தவண்ணம் உள்ளே வந்தார் வைத்தியநாதன்.

"வாருங்கள் மாமா. எப்போது வந்தீர்கள்?'' என்று வரவேற்றாள்.

"நேரே ஹாஸ்பிட்டலுக்குப் போனேன். நீ வீட்டிற்கு வந்துவிட்டதாகத் தெரிந்ததும் நேரே இங்குதான் வருகிறேன்'' என்றார்.

"ஹாஸ்பிட்டலுக்கா? உடம்பு சரியில்லையா?'' என்றாள்.

உடனே எச்சரிக்கையானார். தான் உதவி செய்தது தெரிய வேண்டாம் என்று கூறியதை மறந்து ஏதேனும் பேசிவிடக்கூடாதே என எண்ணி, "ஆமாம், லேசாக உடல்நலம் சரியில்லை. அதுதான்'' என்று மழுப்பினார்.

"கவலைப்படாதீர்கள் மாமா. எனக்குக்கூட நெஞ்சுவலி என்று பயந்து இதயநோய் சிறப்பு நிபுணரைப் பார்த்தோம். இதயம் "'க்ளாஸாக இருக்கிறது, வெறும் வாயுத் தொல்லை என்று மாத்திரை கொடுத்தார்.

இப்போது நான் ஓ.கே. ஆகிவிட்டேன்'' என்று குதூகலித்தாள்.

சற்று குழப்பமானது. இருந்தாலும் அவள் நலமாக இருக்கிறாள், அது போதும் என்று விடை பெற்றார். நேரே மணியன் மருத்துவமனைக்குச் சென்றார். அங்கு டாக்டர் பிரகாஷ் அப்போதுதான் வந்திருந்தார்.

அவரிடம் தம்மை அறிமுகப்படுத்திக்கொண்டார்.

டாக்டர், வைத்தியநாதனை அன்புடன் வரவேற்று நன்றி சொன்னார்.

மீனாவின் வைத்திய விபரங்கள் அடங்கிய ஃபைலை செலவுக் கணக்குகளுடன் அவரிடம் ஒப்படைத்தார். "மீனா மிகவும் நல்லவள்.நேற்றுதான் வீட்டிற்கு அனுப்பினோம். நீங்கள் சற்றுமுன் வந்ததாகச் சொன்னார்கள். நான் அவசர கேஸ் ஒன்றிற்காக வெளியே போயிருந்தேன்'' என்றார்.

"டாக்டர், எனக்கு மிகவும் குழப்பமாக உள்ளது. நான் மீனாவை வீட்டிற்குப் போய் பார்த்து விட்டுத்தான் வருகிறேன். அவளுக்கு, நீங்கள் கூறுவதுபோல் இதயத்தில் எந்தக் கோளாறும் இல்லை என்று இங்கு தான் பரிசோதித்து அனுப்பியதாக அவளே சொன்னாள்''.

"அப்படியா? நான் மீனாவிற்குக் குணமானதும் அவள் எனக்கு நன்றி சொன்னாள். அப்போது நன்றிக்குரியவன் நானல்லேன். உன் தந்தையின் நண்பர்தாம் அதற்குரியவர் என்று கூறினேன். அவள் உடனே தன் தந்தைக்கு நெருங்கிய நண்பர்கள் பழக்கம் இல்லையென்றும்,அதுவும் உங்கள் பெயரில் யாரையுமே தனக்குத் தெரியாது என்றும் சொன்னாள். முன்பின் தெரியாத தனக்கு இவ்வளவு பெரிய உதவி செய்தவரைப் பார்த்து நன்றி கூற வேண்டும் என்றாள். நல்ல பெண்.

பெற்றோர் இல்லாத நிலையில், இந்த இளம் வயதில் தன் தம்பி,தங்கைக்காக உயிர் வாழ்பவள்'' என்று உணர்வுபூர்வமாய்க் கூறினார்.அப்போது தான் டாக்டர் கொடுத்த விபரங்களடங்கிய ஃபைலை பிரித்துப் பார்த்து, அவள் முகவரியைக் கண்டார். "அட இது என்ன புதிய முகவரி? நான் கூறும் மீனாவின் முகவரி இதுவன்று. ஏதோ மாறுபாடு நிகழ்ந்திருக்கிறது. எதுவாயினும் சரி. இறைவன் விருப்பம் என்று நினைப்போம். நான் போய் இந்த மீனாவைப் பார்த்து வருகிறேன் டாக்டர்'' என்று புறப்பட்டார்.

இதில் ஏதோ மாறுபாடு நிகழ்ந்திருப்பதாக மீனாவும் கூறியதை டாக்டர் நினைவு கூர்ந்தார். தம் செயலில் எங்கு தவறு நேர்ந்துள்ளது என்று எல்லாவற்றையும் ஒரு முறை சரிபார்த்தார்.

"இப்போது அங்கு நெஞ்சுவலி என்று வந்திருக்கும் மீனாவின் வைத்தியத்திற்கான செலவு தம் பொறுப்பு என்றும், இது பற்றி அவளிடம் கூறவேண்டாம்' என்றுதான் இருந்தது.

"சார், நீங்கள் மீனாவின் கேஸை எடுத்துக் கொள்ள வேண்டும் என்று மெயில் அனுப்பியபோது எங்களிடம் வந்த மீனா இவர்தாம்.

அதுவும் தவிரவும் இவள் ஏழை. இவள் சிகிச்சைக்குப் பெரும்பணம் தேவைப்பட்டது. எங்களுக்கு நன்கொடை வரும்போது கையிலுள்ள கேசுக்கு அதைப் பயன்படுத்துவோம். நீங்கள் மீனா என்றே குறிப்பிட்டு இருந்ததால் உங்கள் பணத்தை இந்த மீனாவுக்குச் செலவிட்டோம்''என்றார்.

"உங்கள் மீது தவறேதும் இல்லை டாக்டர். இறைவன் செயலே நிகழ்ந்துள்ளது. எதுவாயினும் உங்கள் உதவிக்கு நன்றி'' என்று கூறி விடைபெற்றார். உடனே மீனாவின் முகவரிக்குப் புறப்பட்டார்.விலையுயர்ந்த காரொன்று தங்கள் வீட்டின்முன் வந்து நின்றதும் மீனாவின் தம்பியும், தங்கையும் ஓடி வந்து பார்த்தனர். மீனாவின் குடும்பம் பற்றி டாக்டர்மூலம் அறிந்திருந்ததால் சிறுவர்களுக்குப் படிப்புக்குப் பயன்படும் பொருட்கள், பிஸ்கட், டிரஸ், இவற்றுடன் மீனாவிற்கு ஹார்லிக்ஸ், பழம் யாவும் வாங்கிவந்திருந்தார். பெரிய பார்சலுடன் படியேறி வரும் இவரைப் பார்த்து முன்னர் தெரியாதவர் என்பதால் விழித்து நின்றனர்.

"மீனா அக்கா இருக்கிறார்களா?'' என்றார்.

! அக்காவின் ஆபீஸர் போலும் என்றெண்ணி, உள்ளே ஓடிச்சென்று

"அக்கா, உங்கள் ஆபீஸர் உன்னைப் பார்க்க வந்திருக்கிறார்'' என்று தணிந்த குரலில் கூறினர்.

வெளியே வந்த மீனா முன்பின் அறிந்திராத ஒருவரைப் பார்த்து,புரியாமல் விழித்தாள். இருந்தாலும் மரியாதை கருதி, "வாருங்கள்.நீங்கள் யாரென்று தெரியவில்லை'' என்று தயங்கி நின்றாள்.

"உனக்கு என்னைத் தெரிய நியாயமில்லை. எனக்கும் உன்னை இப்போதுதான் தெரியும். ஆனால் இறைவனுக்கு உன்னையும்,என்னையும் முன்பே தெரியுமல்லவா? என்னை உன் தந்தையின் நண்பராக இங்கு அனுப்பி வைத்திருக்கிறார். என் பெயர் வைத்தியநாதன்'' என்றார்.

"! நீங்களா? வாருங்கள், வாருங்கள். நானல்லவோ உங்களை வந்து பார்த்து நன்றி கூறவேண்டும். முன்பின்னறிந்திராத எனக்கு இத்தனை உதவிகள் செய்திருக்கிறீர்கள். நான் எப்படிக் கைம்மாறு செய்வேன்'' என்று நன்றிப்பெருக்குடன் கூறினாள்.

உள்ளே அழைத்து, இருக்கையில் உட்காரச் செய்தாள்.

"என்ன சாப்பிடுகிறீர்கள் ஐயா?'' என்று அன்புடன் விசாரித்தாள்.

"என்னை "ஐயா' என்றழைத்து அந்நியப்படுத்தாதேயம்மா. உன்னை

இறைவன் எனக்குத் தந்த மகளாகவே நினைக்கிறேன். நீ என்னை "அப்பா' என்றழைத்தால் இத்தகு மகளுக்கு அப்பாவாய் இருப்பதற்குப் பெருமைப்படுவேன்'' என்றவர் குழந்தைகளுக்குப் பரிசுப்பொருட்களைக் கொடுத்து, பழங்களை அவளிடம் கொடுத்தார்.

என்ன செய்வதென்றே புரியவில்லை மீனாவிற்கு. "என்னை மேன்மேலும் நன்றிக்கடன்பட வைக்கிறீர்கள்'' என்று நெகிழ்ந்துருகினாள்.

"இல்லையம்மா. உண்மையில் நாமிருவரும் கடவுளுக்கே கடன் பட்டவர்கள். பெருந்தொகை உன் வைத்தியத்திற்குத் தேவைப்பட்டது. நீ தன்னலமின்றி உன் இளம் தம்பி, தங்கையர் எதிர்காலத்திற்குப் பாடுபடுகிறாய். உனக்கு உடல்நலம் தேவை என்பதை இறைவனறிவான்.

அதற்குரிய பணம் என்னிடமிருந்தது. அதை அவரே (இறைவனே)உனக்குப் பயன்படச் செய்திருக்கிறார். ஏனெனில் நான் இறைவனாக உணர்ந்த அவதாரம் ஒருவர் உண்டு. அந்தக் கடவுளின் கூற்றுப்படி பணம் யாருக்கும் சொந்தமன்று. அது ஒரு செயல் சாதனம். அதைக் கொடுத்தவனுடைய சித்தப்படியே அதைப் பயன்படுத்தவேண்டும்.செலவிடும் போது ஓர் உயர்வுணர்வுடன் செலவிடுவது நலம். அறிவுள்ள முறையில் தனிச்சார்பற்ற முறையில் பயன்படுத்தவேண்டும். பணத்தைப் பயன்படுத்தவும், பரவலாக்கவும் வல்ல கருவியாக ஒருவன் இருக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். எனவே, நான் இறைவன் சித்தப்படி நடக்க எனக்கு இறையருள் உதவியதாக நம்புகிறேன்''.

"நீங்கள் சொல்வதைக் கேட்க எவ்வளவு மகிழ்ச்சியாக இருக்கிறது.என் அனுபவத்தையும் தங்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன்''என்றாள்.

"சொல்லம்மா, சொல். நானும் அதை அறிந்துகொள்ள விரும்புகிறேன்''என்றார்.

"நான் மருத்துவமனைக்கு நெஞ்சுவலி யோடு சென்றபோது, என்னைப் பரிசோதித்த டாக்டர் பிரகாஷ் எனக்கு விரைவில் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்றும், ஓரளவு அதிகப் பணம் செலவாகும் என்றும் சொன்னார். மலைத்துப்போய், செய்வதறியாது கலங்கி உட்கார்ந்து இருந்தேன். நான் உட்கார்ந்திருந்த இடத்தில் கண்களின் புகைப்படம் ஒன்றிருந்தது. அதைப் பார்த்ததுமுதல் எனக்கு நம்பிக்கை, தைரியம் யாவும் வந்தது. அப்போது என் மருத்துவம் பற்றிய அனைத்துப் பொறுப்புகளையும் டாக்டர் தாமே ஏற்றுக்கொண்டதாக என் தோழி அருணா வந்து என்னிடம் கூறினாள். அந்தக் கண்கள் படத்தின் பின்புறம் என் நெஞ்சைத் தொடுவதுபோன்ற வாசகம் ஒன்றிருந்தது''என்று நெகிழ்ச்சியாகக் கூறினாள்.

"கண்கள் படமா? எங்கே, அதைக் காட்டு'' என்று ஆர்வத்துடன் கேட்டார்.

உள்ளே சென்று அதை எடுத்துவந்து காண்பித்தாள்.

"ஆகா! நீ நினைப்பது சரியே. இது இறைவனின் கண்கள் தாம்.

நான் இப்போது கூறிய பணத்தைப் பற்றிய கருத்தை யார் கூறினாரோ அவருடைய கண்கள்தாம் இவை'' என்று கூறினார். "இவர்தாம் உன்னையும் என்னையும் இணைத்துச் செயல்பட்டிருக்கிறார். மகளே! என் உழைப்பு இறைவன் சித்தப்படியே செலவிடப்பட்டிருப்பதாக நம்புகிறேன்'' என்றார்.

"அப்படியா? இந்தக் கண்கள் பற்றி முன்பே உங்களுக்குத் தெரியுமா?''என்றாள் வியப்புடன்.

அவர் உடனே தம் பர்சை எடுத்துப் பிரித்தார். அதில் ஒரு புறம்

கண்கள் படம், மறுபுறம் கண்களுக்குரிய ஸ்ரீ அன்னையின் முழுவடிவப் படம், இரண்டும் இருந்தது.

"! இவர்தாம் இந்தக் கண்களுக்குரியவரா? டாக்டர் கூறியது சரிதான்'' என்றாள்.

"இந்தக் கண்களுக்கு மட்டுமன்று, இந்தப் பிரபஞ்சத்துக்கே உரியவர்

இவர்'' என்றார் வைத்தியநாதன்.

"நீங்கள் என்ன சொல்கிறீர்கள்? இதுவரை இவரைப் பற்றி நான் அறியவில்லை'' என்றாள் மீனா.

"ஆம். நீ அவரை அறிந்துகொள்ளத்தான் உன் பிரச்சினையில் வாய்ப்பாக வந்துதவியிருக்கிறார். நீ இவரைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டிய நேரம் வந்துவிட்டது. நான் சொல்லி விளக்க முடியாது. உன் அனுபவமே ஓரளவு இவரை உனக்குப் புரியவைத்திருக்கும். இவரைப் பற்றிய புத்தகங்கள் நிறைய வைத்திருக்கிறேன். அவற்றைப் படித்தால் நீ மேலும் தெரிந்துகொள்வாய். உன்போல் தன்னலமற்ற தன்மை, உழைப்பு,நேர்மை உள்ளவர்க்கு இவர் மிகவும் பலிப்பார்''என்றார்.

"நீங்கள் கூறுவதைப் பார்த்தால் அவர் வலிய என்னை ஆட்கொண்டார் என்று நினைக்கத் தோன்றுகிறது''.

"இருக்கலாம் அம்மா. அவர் யாருக்கு எப்படித் தன்னை வெளிப்படுத்- துகிறார் என்பதை அவரவர் தம் உள்ளுணர்வால் தான் புரிந்துகொள்ள முடியும்'' என்றார்.

"நீங்கள் அந்தக் கடவுளை எந்தப் பெயரில் குறிப்பிட்டீர்கள் என்பதை அறிய விரும்புகிறேன்''.

"கடவுளுக்குப் பெயரேது? நமக்குத் தெரிந்தவரை நம் அன்னைதான் நமக்குப் பெரியவர், உயர்ந்தவர், நல்லவர். எனவே, அவரை எல்லோரும்

அன்னை என்போம்''.

"உண்மைதான். டாக்டர் பிரகாஷ் அவர்களிடம் இந்தக் கண்களைக் காண்பித்தபோது அவரும், அந்தக் கண்களில் ஒரு தாயின் பரிவு தெரிவதாகவும், அதனால் அக்கண்கள் என் அம்மாவினுடையது என்று தாம் நம்புவதாகக் கூறினார். அறிந்தோ, அறியாமலோ அவர் தாம் என் தாய் என்று உணர்த்தினார்போலும்'' என்றாள். இவ்வாறு ஸ்ரீ அன்னை மீனாவின் வாழ்வில் வெளிப்பட்டார். நேர்மை உணர்வு சிறிதளவு வெளிப்பட்டாலும் உடனே இறைவன் அந்த ஜீவனைத் தனதாக்கிச் செயல்படுவார் என்பது மீனாவின் விஷயத்தில் உண்மை

ஆயிற்று. புத்தகங்கள் மூலம் ஸ்ரீ அன்னையை, அவரின் உயரிய கோட்பாடுகளை அறிந்த மீனா மேலும் தன் மானுடப்பிறப்பின் உயர்வை உணர்ந்து அன்னைக்குத் தன்னை அர்ப்பணித்துச் செயல்பட ஆரம்பித்தாள் என்பதை அன்னையன்பர்களாகிய நீங்களே அறிவீர் எனக் கூறி இக்கதையை நிறைவு செய்கிறேன்.

முற்றும்

ஸ்ரீ அரவிந்த சுடர்

நம் செயல்களை யோகச் சட்டப்படி புரிந்துகொள்ளுதல் ஞான யோகம். அதை அன்னையின் சட்டப்படி விளங்கிக்கொள்ளுதல் பூரண ஞான யோகம். நிஷ்காம்ய கர்மத்தால் மட்டும் பூரண கர்மயோகத்தை முடிக்க முடியாது. அதற்கடுத்த கட்டமாகிய சமர்ப்பணம் செய்யப்பட்ட வேலையால் தான் அதைப் பூர்த்தி செய்ய முடியும். இறைவனின் ஆனந்தத்தில் இலயிப்பதால் மட்டும் பூரண பக்தியோகம் பூர்த்தியாகாது. இறைவனை நம் உணர்வில் அனுபவித்தால்தான் அது பூர்த்தியாகும். உடலைத் தூய்மைப்படுத்துவதால் மட்டும் உடலின் யோகம் பூர்த்தி ஆகாது. உடலின் உள்ளே புதைந்துள்ள ஆன்மீகம் வெளிப்பட்டுச் செயல்பட்டால் தான் உடலின் திருவுருமாற்றம் பூர்த்தியாகி, பூரணயோகம் உடலில் பூர்த்தியாகும்.

உடலின் திருவுருமாற்றம் பூர்த்தியாகி,

பூரணயோகம் உடலில் பூர்த்தியாகும்.


 


 


 


 


 


 book | by Dr. Radut