Skip to Content

03.எங்கள் குடும்பம் II

எங்கள் குடும்பம் II

(சென்ற இதழின் தொடர்ச்சி.....)

கணவருடைய வாழ்வில் மனைவியாய், பையனுடைய வாழ்வில் தாயாராக இருக்கிறேன்.

அதற்குரிய வேலையை உள்ளே செய்யலாம்;

முடியும் நேரத்திலும் அதையெல்லாம் வக்கீலே செய்வது தவறு;

பையனைக் கல்லூரிக்கு அனுப்பினால் படிப்பது அவன் பங்கு:

. காது கேட்காதவருக்குக் கண் கூர்மையாக இருக்கும். பார்வையற்றவருக்குக் காது கூர்மையாக இருக்கும். காதால் கண் வேலையைச் செய்யமுடியும் என்றாலும் கண் தன் வேலையைச் செய்ய வேண்டும். நம் நாட்டில் கூட்டுக் குடும்பத்தில் பிரியம் காரணமாக ஒருவர் வேலையை அடுத்தவர் செய்கிறோம்.

. அது அழகு, பண்பு, உயர்ந்தது.

. அதன் எதிர்ப்புறம் உண்டு. சோம்பேறி இக்காரணத்தால் தன் வேலையை யாராவது செய்யவேண்டும் என எதிர்பார்க்கிறான். அது நாடு உருப்படாத மனப்பான்மை. அது கடன்படச் சொல்லும்.

. மனைவி மற்றவர் பொறுப்பை ஏற்பதைக் காண்பவர்கள் தங்களுக்காக அவரே தங்கள் கடமையைச் செய்ய வேண்டும் என நினைக்கிறார்கள்.

. பிறருக்காகச் சில காரியங்களைச் செய்யலாம், சில காரியங்களைச் செய்ய முடியாது.

. பிறருக்காக மருந்து சாப்பிடமுடியாது, படிக்கமுடியாது, மெய் அவர்கள் சார்பாக மற்றவர் சொல்லமுடியாது.

. நம் கடமையைப் பிறர் செய்ய வேண்டும் என்பது தரித்திரமான நினைவு.

. இதன் தத்துவம் என்ன?

. பரமாத்மா பல்லாயிரம் ஜீவாத்மாவாயிற்று.

. பரமாத்மா பிரபஞ்சத்தில் மொத்தமாக வளரமுடியாது என்பதால் பல ஜீவாத்மாக்களாகி, வளர முயன்றது.

. பரமாத்மா ஜீவாத்மாவானது வளர்வதற்காக.

. ஒவ்வொரு ஜீவாத்மாவும் தனித்தனியே வளர்ந்து சேர்வது பரமாத்மா வளர்வதற்காக.

. ஜீவாத்மா என்பது மனிதன். வளர்வதற்காக மனிதன் சிருஷ்டிக்கப் பட்டான்.

. அதுவே சிருஷ்டியின் நோக்கம் எனில் தம் வேலையைப் பிறர் செய்ய வேண்டும் என்பது தலைகீழாக இருக்கிறது.

. கடன் மக்கள் வாழ ஏற்பட்டது. கடனை மனிதன் தன்னை அழிக்கப் பயன்படுத்தினால், மனிதன் சத்தாக மாறுவதற்குப் பதிலாக அசத்தாவான்.

. அதுவும் சிருஷ்டிக்கு ஆட்சேபணையில்லை.

. எது வேண்டும் - choice - என்பதை நிர்ணயிக்கும் சுதந்திரம் மனிதனுக்குண்டு.

. பிறர் செய்தால் தேவலை என்பவன் தனக்குள்ள சுதந்திரத்தைப் பயன்படுத்தித் தன்னை அழித்துக்கொள்பவன்.

. சிருஷ்டிக்கு அழித்தலும், ஆக்கலும் ஒன்று என்பதைப் போற்றுபவருக்கு அதுவும் சரி.

எப்பொழுது கையெழுத்திடலாம் எனக் கேட்கிறார்கள்;

நமக்கு அருள் பேரருளாக இருப்பதால் முடிவு எடுத்தவுடன் காரியம் முடிகிறது;

மனம் சோம்பேறியானால் 3 நாள் பிரார்த்தனையைச் செய்து முடிக்கவேண்டும்;

நானே சமர்ப்பணம் செய்தால்? - கணவர்;

வேண்டாவெறுப்பாக ஏற்பதை விருப்பாக ஏற்றால் மூச்சுத் திணறாது:

. கர்மம், அருள், பேரருள் என்பவை என்ன?

. Force சக்தியின் செயல் கர்மம்.

. Being ஜீவனின் செயல் அருள்.

. பேரருள் என்பது இருவகைகள்: 1) ஜீவன் தானே முனைந்து செய்வது,

2) Being of the Becoming செயல்படுவது.

. பம்பாய் கம்பனி வேறொரு கம்பனியிடமும் தொடர்பு கொண்டுள்ளது எனக் கேள்விப்பட்டு மனம் சஞ்சலப்பட்டபொழுது கணவர் 3 நாள் பிரார்த்தனையை மேற்கொள்ள முடிவுசெய்தவுடன் எப்பொழுது கையெழுத்திடலாம் எனக் கேட்கிறார்கள்.

. பார்ட்னர், கணவர், மனைவி, இவர்கள் மனம் நிலையாக இருப்பது, ஊசலாடுவது ஆகியவை புறநிகழ்ச்சியை நிர்ணயிக்கின்றன.

. கணவருக்கு மட்டுமே சஞ்சலம்.

. புறநிகழ்ச்சி நம்மை நிர்ணயித்தால் நாம் forceஇல் இருக்கிறோம். புறநிகழ்ச்சி நம்மை நிர்ணயிக்காவிட்டால் நாம் ஜீவனில் இருக்கிறோம். நாம் எங்கிருக்க வேண்டும் என்பதை நாமே நிர்ணயிக்கிறோம். நிர்ணயிக்க முடியாதவருக்குப் பிரார்த்தனை தேவை. பார்ட்னர் உறுதியாகவும், தாயார் நிலையாகவுமிருப்பதால் கணவர் ஊசலாடினாலும், ஒவ்வொரு முறையும் நல்ல முடிவுக்கு வருகிறார். கணவர் நிலையற்ற நீர்க்குமிழி. ஆனால் எதிரானவர் இல்லை.

. பார்ட்னருக்கில்லாத அதிர்ஷ்டம் கணவர் மூலமாக வருகிறது. தாயார் தமக்குள்ள பக்தி, நம்பிக்கையைக் கணவர் மூலம் பூர்த்தி செய்தால் அவர் இன்று அவருக்கில்லாத இடத்திலிருந்து அவருக்குரிய இடத்திற்குப் போவார். அதற்குரிய கருவி கணவர், அவர் மனம்.

. காரியம் முடிந்தபின் பிரார்த்தனை தேவையா?தெளிவானவர்க்குத் தேவையில்லை.

. மூச்சுத் திணறுவது மனம் இசையாததால்.

. மனம் ஈடுபட்டுச் செய்யும் காரியம் திணறாது.

. நம் கட்சி தோற்கவேண்டும் என வேலை செய்பவன் மனம் புழுங்குகிறது. அவன் நம் கட்சி ஜெயிக்க வேண்டும் என மாறிக் கொள்ள வேண்டும். இவ்வளவு பெரிய காரியம் வந்தபின் வெறுப்பாக உள்ள மனிதரை அவருக்குரியவர் ஏற்கவேண்டும் என்பது வாழ்வு அவருக்கு அளித்தது.

நமக்கு பம்பாய்க் கம்பனி கான்ட்ராக்ட் பெரிய விஷயம். போன் ரிப்பேர் சிறிய விஷயம். சமர்ப்பணத்திற்கு இரண்டும் சமம்; சிறியது பெரியதில்லையா?

. பெரியது, சிறியது உலகில் முக்கியம். பிரம்மத்திற்குப் பெரியது, சிறியதில்லை.

. பெரியது, சிறியது தோற்றம் - பிரம்மம் விஷயம்.

. இதை உதாரணங்களால் விளக்குவதைவிட சோதனைமூலம் செய்து பலனைக் கண்டு மனத்தைத் தெளிவு செய்யலாம். பம்பாய்க் கம்பனி கான்ட்ராக்ட், போன் ரிப்பேர் இரு விஷயங்கள். போன் ரிப்பேர் சமர்ப்பணத்தால் முடிந்தால் கான்ட்ராக்ட் தானே முடியும். அதுவே நடந்தது. ஆனால், அதைத் தலைகீழே - கான்ட்ராக்ட்டால் போன் ரிப்பேராயிற்று எனப் - புரிந்து கொள்வதுபோல் நடந்துவிட்டது. சோதனை: போனைச் சமர்ப்பணத்தால் ரிப்பேர் செய்தால், கான்ட்ராக்ட் கையெழுத்தாகும். அதைக் கண்டபின் மனம் இரண்டும் சமம் என ஏற்கவேண்டும். அது நடந்துவிடும். மனம் ஏற்காது என்பது நடைமுறை.

. சமர்ப்பணத்திற்குப் பெரியது, சிறியது என்பதில்லை என்பதை மனம் ஏற்பது பெரியது. பிரதமராக நேரு 58 வயதில் தயாரானார். அவர் பேரன் 40 வயதில் பிரதமரானார். பதவிக்கு வயதில்லை. பதவியைப் பொருத்து மரியாதை, வயதைப் பொருத்ததன்று.

. சமர்ப்பணம் முக்கியம். பெரியது, சிறியது என்பது முக்கியமில்லை.

. சமர்ப்பணமானால் சிறியது பெரியதாகிவிடும்.

. சமர்ப்பணம் செய்யும்பொழுது உள்ளே அவை சமம் என ஒரு குரல் சொல்லும். அதை நாம் பொருட்படுத்தவேண்டும்.

. 5 watt பல்பும், 500 watt பல்பும் மின்சாரத்திற்குச் சமம். சிறிய பல்ப் எரிந்தால் கரண்ட் இருக்கிறது எனப் பொருள். பெரிய பல்ப் எரிந்தால் தான் கரண்ட் இருப்பதாக அர்த்தமன்று.

. பலித்தால் சமர்ப்பணம் எல்லா இடங்களிலும் பலிக்கும். இல்லையெனில் எங்கும் பலிக்காது.

. நமக்கு ஊரில் பெரியவர், சிறியவர்; காரியத்தில் சிறியது, பெரியது என்ற நம்பிக்கை சமர்ப்பணத்திற்குக் குறுக்கே நிற்கிறது.

. சமர்ப்பணத்திற்கு மட்டும் சிறியது, பெரியதில்லை என்பதில்லை. சிறியது, பெரியது என்ற வித்தியாசம் உலகிலில்லை. தோற்றத்தில் உண்டு.

. நாம் தோற்றத்தைக் கருதுகிறோமா, விஷயத்தைக் கருதுகிறோமா என்பது முக்கியம்.

. தோற்றம் வாழ்வு; விஷயம் சமர்ப்பணம்.

. தோற்றத்திலிருந்து வெளிவருவது எளிதன்று.

கேலி பிறரைப் புண்படுத்தும்;

எவரையும் புண்படுத்தாமல் அனைவரையும் சிரிக்கவைக்கும் கேலியும் உண்டன்றோ?

சாப்பாட்டில் வெளிப்படும் இறைவனை நம்முள் உள்ள இறைவன் அனுபவிக்கிறான்;

Intolerable ecstasy, unflinching rapture என்பவற்றை நாம் பாக்டரி, போன் ரிப்பேர், கான்ட்ராக்ட், தோப்புக் குத்தகை என்ற பலன்களாகப் பெறுகிறோம்;

மூன்றாம் நிலை அன்பைத் தாங்கிவரும் பரிசு:

. கேலி எதிரியின் கூர்மையான ஆயுதம். Humour is the savour of life என்பது பகவான் வாக்கு. ஹாஸ்யம், நகைச்சுவை என நாம் கூறுவதும் humour என ஆங்கிலத்தில் சொல்வதும் சற்று மாறுபட்டது. ஹாஸ்யம் நம்மை நகைக்க வைக்கிறது. Humour நம் மனத்தை இனிக்க வைக்கிறது. நாட்டுக்கு நாடு நகைச்சுவை மாறுபடும். கேலி நம் நாட்டில் வெறியேற்றுவது என்ற கொடுமையை எட்டிவிட்டது. அது கொடுமையின் கருவி.

அதனால் கேலி தரித்திரத்தின் சின்னம்.

வறுமை என்பது இல்லாமை.

தரித்திரம் என நாம் குறிப்பிடுவது வறுமையைப் போற்றி அனுபவிப்பது.

கேலியுள்ள இடத்தில் அன்னை வரமாட்டார்.

இக்கதையில் தாயாரின் பக்தி பெரியவனின் கேலியைவிட வலுவானது. பெரியவன் கேலியில்லாவிட்டால் தாயாரின் பக்தி இருமடங்காகப் பலிக்கும்.

. கேலிக்கு, ஹாஸ்யத்திற்கு அத்தனை கெட்ட குணமிருந்தாலும், எவரையும் புண்படுத்தாமலும் எல்லோர் மனமும் இனிக்கும் ஹாஸ்யம் humour. ஹாஸ்யத்திற்கு அப்படிப்பட்ட உயர்வுண்டு. அதற்குச் சொல்வன்மை தேவை. மனிதனைக் கேலி செய்யாவிட்டால் சொல்லை, நிகழ்ச்சியைக் கேலி செய்யலாம்.

. Humour, ஹாஸ்யம் பிறரைச் சந்தோஷப்படுத்த முனைகிறது. கேலி, வெறியேற்றுவது பிறரைப் புண்படுத்த முனைகிறது. நம் சந்தோஷம் பிறரைச் சந்தோஷப்படுத்துகிறது. Ecstasy பூரிப்பு நம் சந்தோஷத்தின் உச்சக்கட்டம்.

. இறைவன் பூரிப்பைக் கொடுத்தாலும், நாம் அதை நமக்குரியது போல் மாற்றினால் அது பாக்டரியாகும், வெறும் பூரியுமாகும்.

. இந்த மாற்றமும் இருவகைகளாகும். உயர்ந்த பூரிப்பு, சாப்பிடும் பூரியாகலாம்.

. அதுவே ஆனந்தம் வெளிப்படும் பூரியானால், அதை சாப்பிடுபவருக்கு மரணமில்லை. அது சச்சிதானந்தப் பூரிப்பாகும்.

. அதுவே ஸ்ரீ அரவிந்தம் கூறும் மூன்றாம் காலம், மூன்றாம் நிலை.

. காலத்தைக் கடந்தவர் ரிஷி.

. அவர் காலத்துள் வரமாட்டார். வரமுயன்றால் ஒத்துவாராது. கடந்த நிலை போய் அவரும் நம்மைப்போல் காலத்துள் வருவார்.

. கடந்ததை இழக்காமல், காலத்துள் வந்து, செயல்பட்டால் காலத்திலோ, கடந்த நிலையிலோ செயல்படமுடியாது. மூன்றாம் நிலை எழும்.

அடுத்தவர் செய்யும் அட்டகாசம், அட்டூழியம், அநியாயம், ஆண்டவன் செய்யும் நியாயம், ஆர்ப்பாட்டம், சிருஷ்டி என மனம் பூரிப்பது; சத்தியஜீவியம் என்பது சத்தியத்தின் பரநலமான நல்லெண்ணம் எனக் கூறலாமா?

. தலைவரை எதிர்க்கப் பிரியப்பட்டு, எதிர்க்க முடியாதவன், அவருக்கு அடுத்தவரை எதிர்ப்பான், தலைவர் கொள்கைகளை எதிர்ப்பான், தலைவர்போல் நடக்கும் மற்றொருவரைக் குறை கூறுவான். அடிமனம் மேல்மனத்துடன் பேச இயலாது. மேல்மனம் இடம் கொடுக்காது. அதனால் அடிமனம் மேல்மனம் பிரியப்படுவதன்பின் தன் அபிப்பிராயமிருந்தால், மேல்மனத்தை அதை நாடும்படிக் கூறும். அவ்விஷயத்தை மேல்மனத்தை நோக்கி வரச்செய்யும். மேல்மனம் அதை நோக்கிச் செல்லும். அடிமனத்தின் இலட்சியம் அவ்வாறு மேல்மனத்தால் பூர்த்தியாகும். அதுவே மேல்மனத்திற்குப் பிரச்சினை. ஒருவருக்கு ஆன்மீகப் பக்குவம் வரும் நேரம், உலகில் தீமை இருப்பதையோ, தன்னுள்ளே தீமையிருப்பதையோ அவர் அறியாதவரானால்,

. அவர் பக்குவம் பெற the dark imperative தன்னுள்ளேயுள்ள இருளை அவர் திருவுருமாற்ற வேண்டும். அவர் மேல்மனத்திற்கு உள்ளே இருள் இருப்பதே தெரிவதில்லை. அவரது அடிமனம் அதைச் சாதிக்க வெளியிலிருந்து தீமையைப் பணிவாக அவர் முன் வைக்கிறது. பணிவால் ஈர்க்கப்பட்டவருக்குத் தாம் தீமையை ஏற்கிறோம் எனத் தெரிவதில்லை. பணிவுக்குரிய கடமை முடிந்தவுடன் தீமை போர்க்கோலம் பூணும். தம்முள்ளேயுள்ள தீமையை ஏற்காமல், அதைத் திருவுருமாற்ற சம்மதிக்காமல் அவரால் வெளியிலுள்ள தீமையைச் சமாளிக்க முடியாது.

. இதுவே அடுத்தவர் செய்யும் அட்டகாசம், அட்டூழியம், அநியாயமாகும்.

. இவை தம் அடிமன ஆர்ப்பாட்டம்என அவர் அறியவேண்டும்.

. இதுவே தம் மனத்திற்குமட்டும் உரியதன்று, உலகுக்குரியது எனவும் அறியவேண்டும்.

. இது ஆண்டவனின் நியாயமாகத் தெரிவது அவசியம்.

. சிருஷ்டியின் பாங்கு இது.

. அதைக் கண்டு மனம் வெதும்புவது அறியாமை.

. கஷ்டப்படாதது அறிவு.

. பூரிப்படைவது ஞானம்.

. சத், சித், ஆனந்தம், ஐக்கியம், சத்தியம், நன்மை, ஞானம், உறுதி, அன்பாகப் புறத்தில் வெளிப்படுவது சத்தியஜீவியம்.

. அதனால் சத்தியஜீவியத்தை இந்த ஆறு அம்சங்களில் ஒன்று அல்லது பலவற்றால் குறிக்கலாம்.

. பரநலம் என்பது நன்மை.

. சத்தியத்தையும், பரநலத்தையும் இணைப்பது நல்லெண்ணம்.

. எனவே சத்தியஜீவியத்தை நாம் அப்படிக் கூறலாம்.

. பிறர் பலன் பெற உண்மையாகச் செயல்படுவதை சத்தியஜீவியம் எனலாம்.

. நமக்கு ஆதாயமில்லாத சத்தியம் சத்தியஜீவியம்.

நாம் உள்ளே உயர்வாக இருந்து, பணத்தை அன்னை மூலமாக மட்டுமே சம்பாதித்து, உடல் பிரம்மச்சர்யத்தை ஏற்று, பழக்கம் பண்புடையதாக இருந்து, பரநலத்தைக்கடந்த பரநலமே நம் நலம் எனப் பயின்று, ஆதாயத்திலும் அன்பைக் கண்டு, பக்குவம் பவித்திரமாகி, நன்றி நிலையானால், அது சத்தியஜீவியத் திருவுருமாற்றம்:

. திருவுருமாற்றம் மனம், முனிவர், ரிஷி, யோகி, தெய்வம், உயிர், உடலுக்குண்டு.

. நமக்கு அன்னையோடு ஏற்படும் தொடர்புகள், எந்தத் தொடர்பு எந்த நிலைக்குரியது, எது பிரார்த்தனை, எது தியானத்தால் வருவது, எது நல்ல குணத்தால் வருவது, எது மௌனத்தால் வருவது, எது திருஷ்டிக்குரியது, ஞானத்திற்குரியது எது, தெய்வீகமனம் எப்பொழுது செயல்படுகிறது என்பதை அறிவது யோகஞானம்.

. இத்தனை levelக்கும் மூன்று கட்டங்கள் உள்ளன.

  உதாரணமாக மனம் என்பது பிரகிருதி. மனம் சாட்சிப்புருஷனை  வெளிப்படுத்துவதும், சைத்தியப்புருஷனை வெளிப்படுத்துவதுமான 3 கட்டங்கள் உள்ளன.

*

பிரகிருதி

ஜீவன்

சைத்தியப்புருஷன்

*

காலம்

காலத்தைக்கடந்தது

காலத்தின் மூன்றாம் நிலை

*

மனம்1

புருஷனுக்குரிய மனம்2

மனத்தின் சைத்தியப்புருஷன்3

*

சிந்தனை மனத்திற்கு

உரியது1

மௌனம் புருஷனுக்கு உரியது2

அன்னை வெளிப்பட்டு சிந்தனை மணம் கமழுவது மனத்தின் சைத்தியப் புருஷனுக்குரியது3.


. கதையில் தாயார்தவிர மற்றவர்கள் மனநிலை, பேச்சு, செயல் 2மனத்திற்குரியவை.

. கம்பனி வந்தது, பாக்டரி பெருகுவது ஆகியவை 3மனத்தின் சைத்தியப்புருஷனுக்குரியவை.

. வந்த வாய்ப்புகளை மனம்முதல் உடல்வரை (சத்திய ஜீவன்வரை) பிரித்துப் பிரித்துச் சொல்லலாம். அப்படிப் பார்க்கும்பொழுது ஏற்படும் தெளிவு:

. யோகத்தால் வாழ்வை அறிவதாகும்.

. யோகத்தால் வாழ்வை அறிந்தால், யோகசக்தியை வாழ்வில் பயன்படுத்தலாம்.

. குடும்பவாழ்வில் யோகதத்துவம், அம்சம் என்பது அதை விளக்க முயல்வதாகும்.

. இக்கதையில் சுமார் 100முதல் 200வரை சிறிய, பெரிய நிகழ்ச்சிகள் உள்ளன. அவற்றை எடுத்து, ஆய்ந்து, விளக்குவது வாழ்வில் யோகஞானம் பெற உதவும்.

. 243 பக்கங்களுக்கு 243முதல் 2430 பக்கங்கள் வரை அதுபோன்ற விளக்கம் எழுதலாம்.

. நான் எழுதுவது சுட்டிக்காட்டுவது.

. அதன் மூலம் படிப்பவர் மற்ற அனைத்தும் பெறமுடியும்.

அம்மாவிடம் விஷயத்தைச் சொல்லு - வேலைக்காரியின் கணவன்; நானும் அதைச் செய்துபார்க்க ஆசைப்பட்டேன் - வேலைக்காரி; அதைத் தொடர்ந்தால், தோப்பு உன்னிடம் வந்துவிடும் - தாயார்;

அப்படியெல்லாம் (மூடநம்பிக்கையால்) அன்னையை நம்பமுடியாது:

. சந்தோஷம் பரவசப்படுத்தும். அன்னை தரும் சந்தோஷம் அனைவரையும் பரவசப்படுத்தும். பரவசப்பட்டால் முக்கியமான விஷயமும் மறந்துவிடும். தோப்பு சொந்தமாக வந்தபின்னும் வேலைக்காரிக்கு அது வாயில் வரவில்லை. அவள் கணவன் விஷயத்தைச் சொல்லு, சொல்லு என்கிறான். பரவசம் என்பது ஜீவனின் சமர்ப்பணம். அதனால் மறந்துபோகும். பரவசம் என்பது அன்னைவசம். நாமே அன்னைவசமானால், நம் விஷயமும் அவர் வசமாகிவிட்டதால், நமக்கு நினைவு வாராது. வேலைக்காரியின் நம்பிக்கை உயர்ந்தது. அது மூடநம்பிக்கையில்லை. மூடநம்பிக்கை உள்ளவர்கள் காட்டேரி கும்பிடுவார்கள். ஆசிரமத்திலேயே இருந்தாலும் அன்னை நினைவு வாராது.

. சமர்ப்பணம் பெரிது எனக் காதில் விழுந்தவுடன் வேலைக்காரி செய்து பார்க்க ஆசைப்படுவது சூட்சுமத்தில் தீட்சை பெறுவதாகும். வேலைக்காரி சூட்சுமமாக இருப்பதால் அவளுக்குத் தோப்பு குத்தகைக்கும், சொந்தமாகவும் வருகிறது. ஏகலைவன் துரோணர் சொல்லிக் கொடுக்க மறுத்ததை அவர் அடிமனத்துடன் தொடர்பு கொண்டு பெற்றுக்கொள்கிறான். துரோணர் ஏகலைவனுக்குத் தலை போன்ற வலக்கைக் கட்டைவிரலைக் காணிக்கையாகக் கேட்டதால்,போரில் சிகண்டி துரோணர் தலையைச் சீவுகிறான். பெரிய ஞானத்தின் எதிரான அம்சம் துரோணர் கேட்கும் காணிக்கை.

. பொய்யிலும், இருளிலும் சாஸ்திரம் செயல்பட்டால், அதற்கு எதிரானது இதுபோல் வரும்.

. சாஸ்திரம் வேடுவனுக்கில்லை என்ற பொய்யை நிலைநிறுத்திய காலம் அது.

. அன்னை வாழ்வில் வேலைக்காரிக்கும் தோப்பு உண்டு.

. பொய்யின் வாழ்வுக்கும், மெய்யின் வாழ்வுக்கும் உள்ள வித்தியாசம் இது.

. சத் விஷயம் பிறர் காதில் விழுந்தால் ஈயத்தைக் காய்ச்சி ஊற்ற வேண்டும் என்பது பொய்யின் ஆட்சி. காதில் விழுந்தால் பலிக்கும் என்பது சத்தியத்தின் ஆட்சி.

. வேலைக்காரிக்கு மூடநம்பிக்கையில்லை. அவள் நம்பிக்கை எளிமையானது. அவளுக்கு வீட்டு விஷயம் தெரியும். எளிமையான நம்பிக்கை தூய்மையானது என்பதால் எட்டாத உயரம் எட்டுகிறது. அவளுக்கு ஜீவாத்மா, பரமாத்மா தோப்புபோல் சூட்சுமமாகவும் காதில் விழாது. விழுந்தாலும் தோப்பு பலிப்பது போல் பலிக்காது.

. பலிப்பது பர்சனாலிட்டியின் தரத்தைப் பொருத்தது.

. ஆத்மா பக்குவமானது எனில் எளிமையான நம்பிக்கை தூய்மையானதானால், காதில் விழுவது சித்தியைத் தரும். அது விதிவிலக்கு. அதை விதியாகச் சொல்ல முடியாது.

. தாயார் இனி சொல்லப்போவது வேலைக்காரிக்கு முன்னதாகவே பலிக்கிறது என்பது சூட்சுமத்தைக் கடந்த காரணலோகம் (causal plane).

. காரணலோகத்தில் பலித்தாலும் தோப்புதான் பலிக்குமேதவிர பிரம்மம் சித்திக்காது.

நமக்கெல்லாம் நம்பிக்கையே வரமாட்டேன் என்கிறது - கணவர்;

அது அன்னை கொடுக்கும் தண்டனையில்லை. அவர்களே பெறுவது - தாயார்;

கொடுப்பது அன்னை, பெறுவது நாம் - கணவர்:

. நம்பிக்கை என்பது என்ன என்று எல்லோரும் எழுதுவதில்லை. நம்பிக்கை வேண்டும் என்று கூறுவதுடன் சரி. நம்பிக்கையை விளக்கமாக எழுத, எழுதுபவர் நம்பிக்கையைக் கடந்த நிலைக்கு உரியவராக இருக்கவேண்டும். நாம் எதை நம்புகிறோம்? எழுதும்போது பேனா தொடர்ந்து எழுதும்; நடக்கும்பொழுது காலடியில் தரை இல்லாமல் போகாது, இருக்கும்; சாப்பிட்டால் சாப்பாடு ஜீரணமாகும் என நம்புகிறோம் என்றால், அது இயல்பான நம்பிக்கை subconscious faith . இத்தனை நாள் நடந்தது, இனியும் நடக்கும் என்பது instinct, அது தவறாது. படித்தவன், விவரம் தெரிந்தவன், மனம் வளர்ந்தவன் conscious தன்னையறிந்தவன். Consciousஆன பிறகு consciousஆகச் செய்யும் வேலையில் sub-conscious faith எப்படியிருக்கும்? அது வந்தால் நம்பிக்கையின் தரம் உயரும்.

. நம்பிக்கை இயற்கையாக (sub-conscious) இருப்பது.

. செயற்கை வாழ்வு வந்தால் நம்பிக்கை போய்விடும்.

. இயற்கையான நம்பிக்கை சிறியது.

. செயற்கை வாழ்வை மீறி எழும் நம்பிக்கை பெரியது.

. செயற்கை வாழ்வில் மனிதன் இயற்கை வாழ்வைவிடப் பெரியவன்.

. பெரியவனுடைய நம்பிக்கை பெரிய நம்பிக்கை.

. செயற்கை இயற்கையாக மாறுவது மனிதன் வளர்வது.

. இயற்கையான வாழ்வு இயல்பானது.

. செயற்கையான வாழ்வு பிறரை நம்பிய வாழ்வு.

. செயற்கையான வாழ்வில் மனிதன் இயல்பானால் செயற்கை இயற்கையாகிவிடும்.

. மனிதன் என்பவன் தானே செயல்படுபவன்.

. இயற்கையோ, செயற்கையோ, தன்னையறிபவன் மனிதன்.

. செயற்கையான மனிதன் அன்னையிடம் வந்து விலகினால் அவனுக்கு உள்ளதும் போகும்.

. அன்னை கொடுப்பதைப் பெற மனிதன் இயல்பாகத் தன்னையறிய வேண்டும்.

. இயற்கை என்பது முழுநிலை.

. செயற்கை என்பது பகுதி, ஜீவனற்ற பகுதி.

. இயற்கை ஜீவனுடையது.

. அன்னை கொடுப்பதைப் பெற அவரளவில் முழுமையாக ஜீவனோடிருக்க வேண்டும்.

. அன்னையை அறியாமல் ஏற்றவர் பேர் ஆதரவு பெறுகிறார். செயற்கை, பகுதியை மீறி ஆதரவு செயல்படுகிறது. ஆதரவை விட்டு அகன்றால் ஜீவனற்ற செயற்கையான பகுதி வாழத் தகுதியற்று அழியும்.

கம்பனி உங்களால் அவருக்கு வந்தது என்று சொல்ல பார்ட்னருக்கு என்ன அடக்கம் வேண்டும்?

அன்னை பாதுகாக்கமாட்டார்களா?

நீ அன்னையை விலக்காதவரை, அவர் விலகமாட்டார். மெனக்கெட்டு விலக்கினால் அன்னை அங்கிருக்கமாட்டார்;

பொங்கலில் புதுநெய் விட்டால் மணமாக இருக்கும். கல்லிருந்தால் பல்லை உடைக்கும். உள்ளதற்குப் பலன்:

. நான் அனைவரிலுமிருக்கிறேன் என்ற ஆத்மஞானம் என்னைப் பெரியவனாகக் கருதாது. அதுவே அடக்கம்.

. அடக்கமாக இருப்பது ஒன்று. அடக்கமாகப் பேசுவது அடுத்த கட்டம். அது ஞானம் ஜீவியமாவது (knowledge becomes consciousness).

. அடக்கமாகப் பேசவும் முடியாதது இனிமை. அது ஜீவியம் பொருளாவது (consciousness becomes substance).

. அடக்கம் பண்பு, அடக்கமாகப் பேசுவது பண்பின் சிறப்பு, அடக்கமாக இருப்பது பண்பின் பவித்திரம்.

. இவ்வளவுமிருந்தும் பார்ட்னர் அன்னையைத் தாயார் போல் ஏற்றவரில்லை. அவரிடமுள்ள உயர்ந்த பண்பு, அன்னையை அதிகமாகப் பெறுகிறது. அதே பண்பு அவருக்கு முக்கியமானவுடன் அது அன்னையை ஏற்கத் தடையாகிறது. வேலைக்காரி காதில் விழுந்த செய்தி அவளை பக்தையாக்கி, முடிவான கட்டத்திற்கு வெகுசீக்கிரம் கொண்டுவருகிறது.

.பார்ட்னர் பண்புமிக்கவர்.

. தாயார் பண்பைக்கடந்த பக்தியுடையவர்.

. வேலைக்காரி பண்பில்லாவிட்டாலும், பண்பைக் கடந்த பக்குவம் உள்ளவர்.

. வேலைக்காரிக்கு அவள் வேலையில் உள்ள (work value)  கடமை உணர்ச்சி பார்ட்னரைக் கடந்த பலன் தருகிறது.

. அடக்கம் உயர்ந்தது.

. அதைவிட உயர்ந்ததும் உண்டு.

. எதுவும் உயர்ந்ததில்லை என்பது ஆத்மாவைக் கடந்த பிரம்ம ஞானம்.

. அன்னைக்கு எதிராக நடந்து, அன்னையை மெனக்கெட்டு விலக்கியபின், ஏன் அன்னை பாதுகாக்கவில்லை என்பது மனிதன் அன்னையை மட்டும் கேட்பதில்லை.

. பூரணச்சுதந்திரம் உள்ள இடத்தில் மனிதன் நடக்கும் பாணி இது.

. மனிதன் இக்கேள்வியை அனைவரிடமும் கேட்பதில்லை.

. தனக்கு முழுவதும் கட்டுப்பட்டவர், தம் அநியாயத்தை எதிர்க்கவும் திறனற்றவர், "இவனை எது செய்தாலும் கேட்பாரில்லை"என்று அறியும் உறவில் மனிதன் அப்படிப்பட்ட குறையைச் சொல்வான்.

. பலருக்கு அதுபோன்ற உறவு, கொடுமை செய்யக் கிடைப்பதுண்டு.

. தாம் யார் கீழேயிருக்கிறோமோ அவரிடம் அந்தச் சுதந்திரத்திற்கு வழியில்லை.

. அந்த உறவில் இந்தச் சுதந்திரம் நினைக்கவும் முடியாது.

. மனிதன் அன்னையை "என்ன ஆயிற்று உங்கள் பாதுகாப்பு"எனக் கேட்கிறான் எனில், அவன் அன்னையிடம் அந்தச் சுதந்திரத்தை அனுபவிக்கிறான் எனப் பொருள்.

. சுதந்திரம் வளரும் சந்தர்ப்பம். அதை நல்ல முறையில் பயன்படுத்துவது வளர்ச்சி.

அவ்வளவு பிரியமாக வைத்திருந்த புத்தகத்தை அர்த்தமற்றவருக்குக் கொடுத்தது தவறு;

அன்னை என்னை நல்லபடியாகமட்டும் வைத்திருக்க மாட்டாரா எனக் கேட்கிறான் - கணவர்

அந்த நினைப்பு போகும்வரை அன்னை அருகில் வரமாட்டார்:

. மனிதனுக்கு முக்கியமானது தான் வாழவேண்டும் என்பதில்லை. பிறர் அழியவேண்டும். தன்னால் பிறர் அழிக்கப்படவேண்டும். "இறைவன் திருவுள்ளத்திற்கு எதிரான பிரார்த்தனைகள் தவிர மற்ற எல்லாப் பிரார்த்தனைகளும் பலிக்கும்". அகந்தை அழியவேண்டும் என்பது திருவுள்ளம். மனிதன் தன் அகந்தையை வளர்க்கமட்டும் முயல்கிறான். அந்த நினைப்பு போகும்வரை அன்னை அருகில் வரமாட்டார். பிறருக்கு உதவமுடியாது, கூடாது என்பதன் காரணம் இதனுள் உள்ளது.

. உதவி உன்னதமானது. ஆத்மா அளவில் உதவி அற்புதமானது. அகந்தையில் வாழும் மனிதன் உதவி செய்தால் அகந்தைக்கே உதவுவான்.

அகந்தை அழிக்கமட்டும் முயலும்.

நாம் செய்யும் உதவியை அகந்தை பிறரை அழிக்கப் பயன்படுத்தும்.

பிறர் என்பது நாம்.

அதனால் உதவி உபத்திரவத்தில் முடியும்.

. எப்பொழுதும் பாதுகாப்பு வேண்டும் என்பவர் அகந்தையுள் வாழ்பவர்.

. உதவி உயர்ந்தது என்பது மேலெழுந்தவாரியான சமூகக் கண்ணோட்டம்.

உதவியைப் பெறுபவர் சுருங்குவது அகந்தையின் உணர்வு.

சுருங்கும் உணர்வு இயல்பாக விரியும்.

விரிவது அகந்தை.

எவருமே பிறர் அகந்தை விரிவுபட இடம்தரமாட்டார்கள்.

உதவி செய்பவர் இடம் தருகிறார்.

உதவி செய்தவருக்கு, ஊறு செய்வது சட்டம்.

. கேள்வியின் தரம் புரிந்தவுடன் அவரைவிட்டு விலகுவது பாதுகாப்பு.

. எவரருகில் அன்னை வரமாட்டாரோ அவரருகில் நாம் போகாமலிருப்பது நன்று.

. 400 பக்கங்களுக்குக் குறிப்பெடுப்பது 400 நாள் வேலை. பரீட்சைக்குப் படிக்கும் புத்தகம்போல, பகவான் எழுதிய நூலை அப்படிப் படித்தால் என்ன ஈடுபாடு ஏற்படும்? அதன் பவித்திரம் தெரியாதவர், அதையும் ஒரு புத்தகம் என நினைத்தால், அதைவிடத் தவறில்லை. எவருக்கு நாம் புத்தகம் தருகிறோம், எப்படித் தருகிறோம் என்ற தராதரம் தெரிய வேண்டும். அப்படிப்பட்ட புத்தகத்தை நாம் உள்ள இடத்தில் வந்து வாங்கிக் கொண்டு போகவேண்டும்.

. நாமே அவர் வீட்டிற்குப் போய்த் தருவது பெருந்தன்மையில்லை. விவரம் தெரியாதது.

. போன இடத்தில் அவரில்லை என்பதையும் கவனிக்கத் தெரியாதவர் கொடுத்தார்.

. அவர் வீட்டில் ஏராளமான புத்தகங்கள் தரையில் உயரமாக அடுக்கிவைக்கப்பட்டதைக் கண்டவுடன், "இவர் புத்தகங்களை அலமாரியிலும் வைக்காதவர்"எனப் புரியவேண்டும்.

. இவரோடு என்ன தொடர்பு? 25 வருஷங்களுக்கு முன் உதவி கேட்டுப் பெற்றவர். பெற்றதற்கு நன்றியும் சொல்லாதவர். என்ன உதவி? இக்கட்டான நிலையில் கேட்கக்கூடாத உதவியைக் கேட்டுப் பெற்றவர். உபத்திரவம் செய்யும் உரிமையுடையவரைத் தேடிப் போய் நமக்கு ஊறு செய்ய கருவியை அவர் கையில் கொடுத்ததுபோல் அன்பர் நடந்தது குற்றம்.

"நான் உங்கள் பையன். நான் என்ன கொட்டமடித்தாலும், உங்கள் பையன் என்று அன்னை காப்பாற்றுவாரா?'' எனக் கேட்கிறான் - பெரியவன்;

ஓடிப்போன பையனை எத்தனை வகையாகக் காப்பாற்றி வீட்டுக்குக் கொண்டுவந்தார் - பெண்:

. உலகில் நல்லபாம்பை ஏன் ஆண்டவன் படைத்தான் என்பது அடிப்படையான கேள்வி.

. உயிரைக் கொல்லும் விஷம் ஏன் ஏற்பட்டது என்பதும் அதுபோன்ற கேள்வி.

. பாக்டீரியா, வைரஸ் எதற்காகச் சிருஷ்டியில் உள்ளன?

. இந்தக் கேள்விகட்கு உலகில் பதிலில்லை.

. ஸ்ரீ அரவிந்தம் பதில் கூறுகிறது.

. தேடுவது ஆனந்தமானால், அதிகமாகத் தேடினால் பெரிய ஆனந்தம் உண்டு.

. விஷம் அமிர்தத்திற்கு எதிரானது என்பதால் அமிர்தத்தைக் கடந்த உயர்ந்த பொருளை உற்பத்தி செய்ய ஓர் உபாயம் வேண்டும். அது விஷம் திருவுருமாறுவது.

. திருவுருமாற்றம் ஆனந்த மார்க்கம்.

. பெரிய திருவுருமாற்றம் பேரானந்தம்.

. பெரிய திருவுருமாற்றத்திற்குரியது பெரிய தீமை, பெரிய விஷம்.

. நல்லபாம்பு கொத்தும். அது படம்எடுத்துத் தூங்குபவன் தலைமீது படம் பட்டால் அவன் அரசனாவான்.

. நல்லபாம்பு சீறினால், கொத்தினால் அடிக்கவேண்டும். படம் எடுத்து ஆசீர்வாதம் செய்தால் பவித்திரமாக ஏற்கவேண்டும்.

. அன்னை எப்படியும் காப்பாற்றுவாரா எனில் அன்னை அழிப்பதும் காப்பது என்றவருக்கு எப்பொழுதும் பாதுகாப்புண்டு.

. வீட்டிலுள்ளவரை வீடு பாதுகாக்கிறது. வெளியில் போனபின் வீட்டின் பாதுகாப்பில்லை.

. வெளியில் போய் சும்மா இல்லாமல், திருடினால் ஜெயிலுக்குப் போகிறான். வீடு காப்பாற்றவில்லையே என்றால் ஜெயிலில் போடுவது மேலும் திருடுவதிலிருந்து உன்னைக் காப்பாற்றுவதில்லையா? வீட்டை விட்டு வெளியில்போய் நீச்சல் தெரியாத நேரத்தில் கடலில் இறங்கி இறந்து போனால் வீடு காப்பாற்றவில்லையே என்றால்?

. கடலில் இறங்கி இறந்துபோனால், "நீச்சல் தெரியாமல் நீரில் இறங்கினால் உயிர்போகும்"என்ற அறிவை அடுத்த ஜென்மத்தில் பெறும் மார்க்கம் அது.

. கடலிலிருந்தும், ஜெயிலிலிருந்தும் காக்க வீட்டை ஏற்படுத்தினால், வீட்டைவிட்டு வெளியேறுபவன் கேட்கும் கேள்விகள் இவை.

. அறிவுள்ளவன் அனுபவத்தால் மேலும் அறிவு பெறுகிறான்.

. ஆத்மா ஆழத்திலிருந்தால், இருளின் ஆழத்தில் புதைந்திருந்தால் அவை வெளிக்கொண்டுவர மனிதன் பிறரைக் கொடுமை செய்யும்படித் தூண்டும் கேள்வியிது.

. "என் ஆத்மாவை நான் அறியவேண்டும். அது படிப்பால் வெளிவாராது. அனுபவத்தாலும் வெளிவாராது. ஆழ்ந்த நல்லுணர்வாலும் வெளிவாராது. பெருங்கொடுமையால், அதிலிருந்து தப்பிக்க முயன்றால் என் ஆத்மா வெளிவரும். என்னைக் கொடுமைப்படுத்துங்கள்"என்று மனிதன் கூறி, அடிவாங்கி, நக்கீரன்போல் பெருவியாதி பெற்று தரையில் உருண்டு மோட்சம் பெறும் ஆத்மாக்கள் பிறரைக் கொடுமைப்படுத்தத் தூண்டும் கேள்வியிது.

எங்கே போனாலும், என்ன செய்தாலும் பாதுகாப்புண்டு என நான் நினைத்தேன் - சிறியவன்;

ஆத்மா அன்னையை அடைந்திருந்தால் அதுவும் உண்டு - தாயார்;

நாம் relics வாங்கி வைக்கக்கூடாதா? - பெரியவன்;

நம் வீடு சுத்தமில்லை. இங்கே வைக்கக்கூடாது - தாயார்;

"அவர்கள் வைக்கும் சூன்யத்தை பிரம்மாமட்டுமே எடுக்கமுடியும்'' - அன்னை:

. பிரம்மம் எங்கிருந்தாலும், என்ன செய்தாலும் அதற்கு அழிவோ, ஆபத்தோ இல்லை.

முளையும் செடியை ஆடு, மாடு அழிக்கும்.

வளர்ந்த மரத்தை மனிதன் வெட்டி விறகாக எரிப்பான்.

செடிக்குள்ள அழிவு மரத்திற்கில்லை என்றால் மரத்திற்கு வேறு வகையான அழிவுண்டு.

காற்று கடற்கரையில் வீசுகிறது, நெருப்பைக்கடந்து செல்கிறது, வீட்டில் அடைபட்டுள்ளது, நம் வயிற்றுக்குள் உறைகிறது. காற்றுக்கு எவராலும், எதுவாலும் அழிவில்லை. ஏனெனில் காற்றுக்கு, செடி, மரம்போல் உருவமில்லை. உருவமிருந்தால் உருவத்தை அழிக்கலாம். ரூபமற்றதற்கு அழிவு கிடையாது. ரூபத்தைக்கடந்த பிரம்மத்திற்கு அழிவுண்டோ? எங்கே போனாலும், என்ன செய்தாலும் பாதுகாப்பு வேண்டும் என்பவர் ரூபத்தைக்கடந்தவரானால் அவருக்குப் பாதுகாப்புண்டு.

அந்த ஞானம் ஆழத்துள்ளிருப்பதை சிறியவன் இப்படி வெளிப்படுத்துகிறான்.

. பால் அமிர்தம். மறுநாளைக்குக் கெட்டுவிடும். காலம் அமிர்தத்தை விஷமாக்கும். Relics பகவானுடைய உடலின் பகுதிகள். உயர்ந்தவை என்றால் உயர்ந்த சூழ்நிலையில் அது உயர்ந்ததாக இருக்கும். சூழ்நிலை தாழ்ந்ததானால், தாழ்ந்த சூழ்நிலைக்கு relics வீரியம் கொடுக்கும். அணுகுண்டு உலகப்போரை ஜெயித்தது. போரில்லாத பொழுது அணுகுண்டு சூழ்நிலையை விஷமாக்குகிறது. சதாம் ஹுசேனிடம் அணுகுண்டு உலகத்திற்கு ஆபத்து.

. அணுகுண்டு யாரிடம் இருக்கவேண்டும் என்பதுபோல்,

. Relics எப்படி வைக்கப்படவேண்டும் என்று நிர்ணயம் உண்டு.

. சட்டம் மாறினால் பலன் எதிரானதாகும்.

. பெரிய ஞானம் சூன்யமானது உலகச் சரித்திரம்.

. பெரிய ஞானம் பெறுவது மனம்.

. மனம் பகுதியானது. இருபுறமும் செயல்படும்.

. மனம் பெற்ற ஞானம் வேதம், வேதாந்தமானாலும், மனம் நேரானால் அது வேதம்; மனம் எதிரானால், தீமையானால் அது மந்திரம், மாஜிக், சூன்யமாகும்.

. மனம் மனமாகயிருக்கும்வரை நல்லது உண்டு என்பதுபோல் கெட்டதும் உண்டு என்பதைத் தடுக்கமுடியாது.

. அதனால் பெரிய மடம்என்பது தடம் மாறினால் பெரிய சூன்யத்திற்கு அஸ்திவாரம்.

. "இராமனே எல்லாம்"என நினைக்கும் தேரையையும் இராமபாணம் தெரியாமல் துன்புறுத்தும். தெரியவில்லை என்றால் தவறு வரும்.

. சட்டம் மனிதனைத் தண்டிக்கக்கூடாது, திருத்தவேண்டும் என நினைப்பது மனிதன் வாழவேண்டும் என்பதால். அந்தச் சட்டம் மனிதனைப் பட்டினி போடாது, கொடுமை செய்யாது, சித்ரவதை செய்யாது. ஜெயிலில் கட்டிலும், மெத்தையும், டி.வி.யும், போனும், புத்தகமும், மருந்தும், சாமியார் உபதேசமும் தரும்.

அதிக வட்டிக்குக் கடன்வாங்கிச் சரிந்தார். மீண்டும் மீண்டும் அதையே செய்கிறார். இவர் இன்றும் கடை நடத்துவது ஆச்சரியம் - தாயார்;

சம்பாத்தியம் உள்ள இடத்தில் உழைப்பு, சேவை இல்லாமலிருக்காது; அவற்றை நேர்மை எனக் கருதமுடியும்:

. வாழ்வில் எவர் எழுந்திருக்க முடியாதோ, எவர் மனிதனாய் வாழ முடியாதோ, எவரெல்லாம் தலைதூக்க முடியாதோ, அவர்கள் அன்னையிடம் வந்து உள்ளூர் பெரிய மனிதனாய் வாழ்கிறார்கள். அவர்கள் அன்னையை ஏற்கவேண்டிய முறைப்படி ஏற்றிருந்தால் எங்கோ போயிருப்பார்கள்.

. அதிக வட்டி:

வட்டி ஒருவர் தன்னைத்தான் கணிப்பதைக் காட்டும்.

கடன் வாங்குவதே பெரியது. அவர் எதிர்பார்க்கும் வருமானம், வீட்டுச் செலவுபோக கடனை அடைக்கும்என்று அவர் எதிர்பார்த்தால், அவர் கடன் வாங்கலாம்.

அப்படிச் சரியாகக் கடன் வாங்கியபின் அவர் வருமானம் அவர் கையிலில்லாமல் தவறினால், அவர் போட்ட கணக்குச் சரி. கணக்குத் தவறிவிட்டது எனப் பொருள்.

வட்டி அதைக் கடந்தது.

எப்படியும் கொடுத்துவிடுவேன் என்பது optimism நம்பிக்கை. நம்பிக்கை நமக்குடையது. நடப்பது நாட்டுக்குரியது. நாட்டை, நாட்டு வளத்தை அறிந்தவர் நம்பிக்கை செயல்படும். அதுவும் நம்பிக்கை.

. கணக்கு நம்பிக்கையைவிட உயர்ந்தது.

. நம்பிக்கை தெம்பு தரும், கணக்கு தெளிவு தரும்.

. கணக்கின்பேரில் உள்ள நம்பிக்கை தெளிவான நம்பிக்கை.

. தெளிவான நம்பிக்கை ஜெயிக்கும்.

தெளிவும், நம்பிக்கையுமில்லாமல் வாங்கும் கடன் கடனில்லை, சூது. கல்லூரியில் சேர்ந்து படித்து, பரீட்சை எழுதி பெயிலானவன் பெயில். ஆனால், கல்லூரியில் சேர்ந்து, வகுப்புக்குப் போகாமல், தறுதலையாகச் சுற்றித்திரிந்து, பரீட்சைக்குப் போகாதவன் பெயிலானதாக அர்த்தமில்லை. அவன் மாணவனில்லை. மாணவனுக்கு உண்டான சலுகையின்பேரில் மாணவருலகத்தை விட்டு விலகி மனம் போகும் வழி திரிந்தவன், வாழ்க்கையை முயன்று அழிப்பவன். வாழ்க்கையைவிட்டு விலகி, உலக வாழ்வில் சோதனை செய்பவன். அவன் பாதை வாழ்விலுள்ளவர் பாதையில்லை. மாணவன் படிப்பு, பட்டம், நகர வாழ்வில் தன் இலட்சியத்தைத் தேடுபவன். வகுப்புக்கே போகாதவன் குடும்பவாழ்வைவிட்டு விலகி, Life, வாழ்வில் எதையோ தேடுபவன். அவன் இலக்கு சத்தில்லை, அசத். நம்மைப்பொருத்தவரை அவன் அழிந்தவன். வாழ்வைப்பொருத்தவரை அவன் முன்னோடி. படிப்பைத் துறந்து அரசியலில் நுழைபவன் அரசியலுக்கு முன்னோடி என்பதுபோல்,

இவன் வாழ்வின் முன்னோடி.

வாழ்வைக் கடந்து இயற்கையும், அதைக்கடந்து தவமும், அதையும் கடந்து பிரம்மமும், முடிவாக பிரம்மஜனனமும் உண்டு. அந்த இலக்குகளை நோக்கிப் போகின்றவர்களில் வகுப்புக்குப் போகாத தறுதலையும் ஒருவன். அவனே அதையறியமாட்டான். தத்துவப்படி அதுவே உண்மை.

மனிதன் பொறாமைப்பட அசிங்கப்படவேண்டும்;

அதற்கு அசிங்கப்படுவதில்லை. விஷயம் அதுவே;

கடைசி நிலையில் உள்ளவரும் ஏதோ ஒரு காரணத்திற்காகத்

தங்களை உயர்வாக நினைக்கத் தவறுவதில்லை:

. இம்மனப்பான்மை அன்னைக்குத் தடை.

. மனிதன் உயிர் வாழவேண்டுமானால், அவனுக்குத் தெம்பு வேண்டும், எதிர்காலம் உண்டு என்று நம்பவேண்டும். தனக்கும் உயர்வுண்டு என்று கருதவேண்டும். இவையில்லாவிட்டால் அவன் தளர்ந்து, சோர்ந்து, வாடி, வதங்கி, உதிர்ந்துவிடுவான்.

. அக்காரணத்தால் அவன் பழைய பெருமை அவனுக்கு உதவும்.

. அதுவே முடிவு என்பவனுக்கு அவ்வெண்ணம் ஊன்றுகோல்.

. அதைக்கடந்து வாழ்வில் முன்னேறும் பாதைகள் உண்டு. அங்கு இந்த நினைப்பு, தடை.

. அன்னையை அறிந்தவர்க்கு எதுவும் தடை என்பதால், இதுவும் தடை, பெரிய தடை.

. பொறாமை, போட்டிக்கு முந்தைய நிலை.

. போட்டி போடுபவன் ஜெயித்தால் முன்னேறுவான், தோற்றால் மீண்டும் போட்டியிடுவான்.

. போட்டிக்கு அடுத்த கட்டம் ஒத்துழைப்பு என்பதுபோல் முன் கட்டம் பொறாமை.

. இட்ட வேலையைச் செய்பவன் ஜடம்.

. பொறாமைப்படுபவன் ஜடமான மனிதருள் முன்னோடி.

. பொறாமைப்படுவது அவனுக்குத் தெம்பு.

. அவன் நிலையைக் கடந்து வந்தவன் பொறாமைப்பட்டால், அவன் சரிந்து பொறாமைப்படுபவன் நிலைக்கும் போவான்.

. பொறாமைஎன்பது கடுமையான உணர்ச்சி (violent negative vital energy).

.ஜடமான மனிதன் பொறாமையால் முன்னுக்கு வருவான்.

.அதுவே அவன் வழி என்பதில்லை. அது (negative) வேண்டாத வழி.

.பொறாமைக்கு எதிரான வேண்டிய (positive) நல்ல வழி எது?

. கடுமை தீவிரமாகி, பொறாமை போட்டியானால், தீவிரமான போட்டி எழும். அது (intense positive vital energy). கடுமை தீவிரமாகிறது (violence becomes intensified). பொறாமை போட்டியானால் negative, positive ஆகிறது.

. பொறாமைப்படுவதைவிடப் போட்டிப்போடுவது மேல்.

. தங்களை உயர்வாகக் கருதுவது self-confidence ஆக மாறினால் வேண்டாதது, வேண்டியதாக மாறும்.

. எதுவும் தன் நிலையிலிருந்து உயர்வது நல்லது.

. உயர்வதற்கு இரு வழிகள். நாம் நல்ல வழியைப் பின்பற்றவேண்டும்.

நீ சொல்வதைப்பார்த்தால் டயாபெடிக்ஸ் பேஷண்ட் சர்க்கரை சாப்பிட்டால் பாதிக்காது என்பது போலிருக்கிறது;

பொதுவாக நம்பமுடியாது, இயற்கைக்கு மாறானது, இதுவரை நடக்காதது, ஆகியவை அன்னைசக்தியால் நடைபெறுகின்றன;

எல்லாம் புதிராக இருக்கின்றன:

. ஆயிரம் ஆண்டுகளுக்குப்பின் வருவதும் இன்று ஏதோ ஒரு ரூபத்தில் உலகில் இருக்கும். அதன்மீது force பட்டால் ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின் நடக்கப்போவது நடக்கும். விஷத்தைக் கொடுத்து உயிரை வைத்தியர் காப்பாற்றுகிறார். சர்க்கரையைக் கொடுத்து டயாபெட்டிக்ஸ்ஸை குணப்படுத்தலாம் என்பதை சக்தி நிரூபிக்கும். இவை நிரந்தரமாக நடக்காது.

. நம் கண்ணெதிரில் இதுபோன்றவை நடக்கின்றன.

. அன்பர்கள் ஆயிரம் காண்கிறார்கள்.

. கண்டாலும் மனதில்படுவதில்லை.

. இதைக்கண்டு அன்னையை அறிவது அன்னையை அதிகமாக அறிவதாகும்.

. இப்படி ஒருவர் சொல்வதை மனம் ஏற்குமானால் அவர் அன்பராவார்.

. நம் அன்றாட வாழ்வில் இந்த அம்சம் திரைமறைவில், ஆழத்தில் மறைந்துள்ளது.

. நாம் முனைந்து பார்த்தால், கூர்ந்த பார்வைக்கு அது வெளிப்படும்.

. பிறர் செயலில் அதைக் காணமுடிவது அன்னையின் அம்சத்தை அதற்கும் அடுத்தகட்டத்தில் காண்பது.

. அன்னை 800 பூக்களுக்கு ஆன்மீகப் பெயரை வாசனை மூலம் அறிந்து எழுதியுள்ளார்.

. இந்த அம்சம் கண்ணில்பட்டால் மணம் தரும் குணம் புரியும்.

. குடும்ப வாழ்வு மலர, தாம்பத்யம் மணம் வீச இந்தப் பார்வை பயன்படும்.

. இந்த நிகழ்ச்சி கடுகளவு இல்லாத இடமில்லை. பார்ப்பவர் எவருமிலர்.

. சமையலில் கடுகைத் தாளிக்கும்பொழுது கடுகு அன்னையாகத் தெரிந்தது. அன்றையச் சமையலை அப்படி இரசித்தனர்.

. கடுகுபோல் சமையலில் உள்ளவை பல. அனைத்தும் அன்னையே.

. எந்தச் செயலிலும் ஏராளமான பகுதிகள் உள்ளன.

. அவை அனைத்தும் பகுதியின் அன்னை.

. அதன்பின் முழு அன்னையுண்டு.

. இந்த அன்னை சமையலுக்கு முழு அன்னை.

. அன்னையின் முழுமை சிருஷ்டியில் பிரம்மத்தின் முழுமை.

. அன்னை நம் பகுதிகளிலும், முழுமையிலும் உள்ளார்.

. நம் முழுமையின் அன்னை முழுமையான அன்னையுடன் உறவாடுவது முடிவான பரிணாம நிலை.

. எது புதிராக இருக்கிறதோ, அது புது அனுபவமாகும்.

. புதிர் புது அனுபவமாவது அன்னையின் அனந்தமான முழுமை.

அடாவடிக்காரன் சுபாவம் அடாவடி. சுபாவத்தைத் தாண்டி அவனுக்கு ஆத்மா உண்டு. ஆத்மாவுக்கு நியாயம் உண்டு. எதனாலும் பாதிக்கப்படாமல் செயல்படும் திறனும் உண்டு. அன்னைசக்தி ஆத்மசக்தி:

. அடாவடி, சுபாவம், ஆத்மா, நியாயம், செயல்படுவது, அன்னைசக்தி ஆகியவை என்ன?

. அடாவடி என்ற சொல் அடாத வழி, நியாயத்திற்கு அடுக்காத வழி என்று பொருள்படும்.

. ஒளியின் வழிக்கு எதிரான இருளின் வழியாகும் அது.

. இருளில் உள்ளவர் இருளின் வழியை நாடுவது அவர்கட்குப் பொருந்தும்.

. ஒளியின் வழிக்குரியவர் இருளின் வழியை விரும்பிச் செல்வது அடாவடி.

. சந்தர்ப்ப விசேஷத்தால் ஒருவர் அப்படிப் பேசுவதும், அதுவே சுபாவமாகப் பேசுவதும் ஒன்றாகாது.

. அடாவடிக்காரனைச் சமாளிக்கவேண்டிய நேரம் அன்பர் அன்னையை அழைத்தால் ஏமாற்றம் குறைந்து மனம் நிம்மதியடையும், பிரச்சினை தீராது. ஆழ்ந்து அன்னையை அழைத்தால் ஆழ்ந்த நிம்மதி ஏற்படும், தீராது. ஆத்மாவிலிருந்து அன்னையை அழைக்க முடியாதவர்,

அன்னை என்ன செய்வார்?

என ஏமாற்றத்துடன் பேசுவார். ஆத்மாவிலிருந்து அன்னையை அழைத்தால் அமைதி பேரமைதியாகும். அடாவடிக்காரனால் தீங்கு வாராது, திட்டமாட்டான், பிரச்சினை தீராது. அவன் நமக்குச் செய்யும் தீங்கு நாம் அன்னையை ஆத்மாவிலிருந்து அழைக்கும் வாய்ப்பு என்று தெளிவுபட்டால், உடனே அவனுடைய ஆத்ம நியாயம் செயல்படும், பிரச்சினை தீரும்.

. பிரம்மம் ஜீவனாகி, ஜீவன் ஜீவியமாகி, ஜீவியம் சக்தியாகி, சக்தி ரூபமாகிறது. ரூபம் சுயரூபமாவது மனிதன். ரூபத்திற்கு பாவம் உண்டு. பாவம் ரூபத்திற்குரியது. சுயரூபத்திற்குரியது சுயபாவம். நாம் சுபாவம் என்கிறோம். பிரம்மம் ஏற்படுத்தியது ஒரு ஜீவன். அது புருஷன். சத்புருஷன். பரமாத்மா எனப்படும். பரமாத்மா பல ஆயிரம் ஜீவாத்மாக்களாயிற்று. ஒவ்வொரு ஜீவாத்மாவும் பெறவேண்டிய அனுபவம் பிரம்மத்திலுள்ள வித்தான அனுபவம். அவை அனந்தம். ஒவ்வொரு ஜீவாத்மாவும் பெறவேண்டிய அனுபவத்தை அதன் சுபாவமாகக் காண்கிறோம்.

சுபாவம் அகத்திற்குரியது. புறத்திற்குரியது சந்தர்ப்பம். அது இந்தச் சுபாவத்தைத் தீண்டும் சந்தர்ப்பம்.

சுபாவமும், சந்தர்ப்பமும் சந்திப்பது செயல்.

. செயல் அனைவருக்கும் பலன் தருவது நியாயம்.

. அனைவருக்கும் பலன் தரும்படி சக்தி முழுமையாகி, செயலை நடத்தி, நியாயம் வழங்குவது அன்னைசக்தி.

. ஜீவியத்திலிருந்து சக்தி எழுமிடத்தில் பிறந்தவர் அன்னை என்பதால், ரூபம், பாவத்திற்கு முந்தையவர் அன்னைஎன்பதால், அன்னைசக்திக்கு அனைத்துச் சுபாவமும் கட்டுப்படும்.

. இது அன்னைசக்தி செயல்படும் வகை.

உணர்வால் செயல்படும்பொழுது, தாம் செயல்படுவது தவறு எனத் தெரியாது. அறிவுக்குத் தான் தெரியும். பிறருக்குத் தெரியும். பிறர் அதையே செய்யும் பொழுது நமக்கு நம் தவறு தெரியாது:

. உணர்வு என்றால் காதால், கண்ணால், உடலால், ருசியால், மணத்தால் உணர்வது. உணர்ச்சிக்குத் தொடவேண்டும். ஸ்பரிசம் பிடித்தால், நல்லது; பிடிக்காவிட்டால் கெட்டது.

. அறிவு உணர்ச்சியைக் கடந்ததை அறியும். நம் பார்வையிலில்லாத நிகழ்ச்சியைப் பற்றிக் கேட்டு அறியும்.

. நாம் 8 மணிவரை தூங்கினால் தூக்கம் இதமாக இருக்கும், பிடிக்கும். சரி என்று மனம் கூறும். நாம் எழுந்தபிறகு வேறொருவர் தூங்கினால், அது தவறு என்று மனம் கூறும். நாமும் பலமுறை எட்டு மணிவரை தூங்குகிறோம் என்பது உணர்ச்சியன்று, நினைவு. அறிவுக்குரிய நினைவு.

. அடுத்தவர் தூங்குவதைக் காண்பது அறிவன்று.

. அறிவால் புரிந்துகொண்டால், அவனும் நம் போலத் தூங்குகிறான் என நினைப்போம்.

. அவன் தூங்குவது எரிச்சல் தருவது உணர்வு.

. அவனைத் திட்டுகிறோம்.

. ஏனெனில், உணர்விலிருந்து செயல்படுகிறோம்.

. பிறர், "உனக்குப் புத்தியிருக்கா? நீயும் அப்படித்தானே தூங்குகிறாய்?" என்பது நாம் உணர்விலிருந்து செயல்படுகிறோம், அறிவிலிருந்து செயல்படவில்லை என்றாகிறது.

. உணர்வால் செயல்படுவது என்றால் புலன்களால் செயல்படுவது.

. அறிவால் செயல்படுவதுஎனில் மனத்தின் புத்தியால் செயல்படுவது என்பதாகும்.

. பஸ்ஸில் 15 பேர் இடித்துக்கொண்டு ஏறுவது உணர்ச்சி.

. 4 பேரானாலும் வரிசையாக நின்று ஏறுவது அறிவு.

. மனிதனுக்கு அறிவால் செயல்படும் நிலை முழுவதும் வரவில்லை.

. பிறர் விஷயத்தில் அறிவு வருகிறது.

. தன் விஷயத்தில் அறிவு செயல்படுவதில்லை.

. தன் விஷயத்திலும் முக்கியமான நேரம் அறிவு செயல்படாது.

. உணர்வால் எந்த நேரமும் பாதிக்கப்படாத அறிவே அறிவு.

. நாம் பேசும்பொழுது வாதம் எழுந்தால் அடிக்க எழுவதில்லை.

. அடிக்க எழுபவன் உடலால் செயல்படும் மனிதன்.

. உடலால் செயல்படுபவன் அடிக்க எழுவதுபோல் உணர்வால் செயல்படுபவனுக்கு உணர்ச்சி எழுகிறது.

. உணர்வால் பாதிக்கப்படாத அறிவு, அறிவு எனப்படும்.

அது பகுத்தறிவாகும்.

தான் பெற்ற பேறு முதலில் தெரியும். பிறகு அதை (take it for granted) வழக்கமாகக் கருதுவான். இன்று 3000 ரூபாய் பென்ஷனில் இருக்க வேண்டியவன் 75,000 ரூபாய் செலவு செய்வது மாறிய நிலை என மனம் உணராது. இது தான் பெற்ற அதிர்ஷ்டம் என அறியமாட்டான்:

. தான் பெற்றதை அறியாதது, தான் இழந்ததை அறியாதது மனிதச் சுபாவம்.

. பெற்றது, இழந்தது இரண்டும் கடந்தகாலத்திற்குரியன.

. வெறும் மனிதனும், ரிஷியும் நிகழ்காலத்திற்குரியவர். அவர்கள் இருவருக்கும் கடந்ததோ, வருவதோ நினைவிருக்காது.

. ரிஷி கண்டத்துள் அகண்டத்தைக் காண்பது நிகழ்காலத்தில் தன்னை இழப்பது.

. மனிதன் கடந்ததை மறந்து, வருவதைக் கருதாதிருப்பது உணர்வில் வாழ்வதாகும்.

. "இருப்பதைப் பேசு, இல்லாததை ஏன் பேசுகிறாய்"என்பது அவர்கள் பாஷை.

. நன்றியறிதல் என்பது கடந்ததை நினைப்பது.

. ரிஷிக்கு ஆன்மீக நன்றியறிதல் எழுந்தால், அவர் காலத்தின் மூன்றாம் நிலைக்கு வருவார்.

. வெறும் மனிதனுக்கு நன்றியறிதல் ஏற்பட்டால் உணர்விலிருந்து அவன் அறிவுக்கு வருவான்.

. கடந்ததை மறக்காமல் மனிதன் வெற்றிகரமாகச் செயல்படமுடியாது.

. நடப்பதை நடத்துவதற்குப் போதுமான தெம்பு வரவேண்டுமானால், கடந்ததை நினைக்கக்கூடாது. அதனால் சக்தி விரயமாகும்.

. ரிஷி கடந்ததை நினைவு வைத்திருப்பதன்மூலம் காலத்துள் காலத்தைக் கடந்ததைச் செயல்படச் செய்து, மூன்றாம் நிலை காலத்திற்கு வருவார்.

. மனிதன் unconsciousஆக இருக்கிறான், conscious ஆக வேண்டும்.

 உள்ளதைக் காப்பாற்ற unconsciousஆக இருப்பது அவசியம்.

மனிதனுக்குத் தெம்பு குறைவு.

கையில் உள்ள வேலையைச் செய்யவே தெம்பு போதாது.

பழையதை நினைத்தால் உள்ள தெம்பு குறையும்.

தெம்பு குறைந்தால் வேலை கெடும்.

உள்ள வேலையை கெடாமல் முடிப்பதற்கு மனிதன் பெற்றதையும், இழந்ததையும் மறந்தால்தான் முடியும்.

. 75,000 ரூபாய் செலவாகும் வீட்டில் 5000 ரூபாய் குறைந்தால் கூச்சல் எழும். இது 3000 ரூபாய் இருக்கவேண்டிய இடமாயிற்றே எனத் தோன்றாது.

. 4000 கோடி டெப்பாசிட் இருந்த பாங்குகளில் 75,000 ரூபாய் நிலுவை இருப்பதும், 1200 ஆயிரம் கோடி டெப்பாசிட் இருப்பதும் பெரிய விஷயம் என்பது இன்று யாருக்கு நினைவிருக்கிறது? உணர்வு வாழும் வகையிது. This is vital life.

தானிழந்த வாய்ப்பை ஏற்றவன் கவர்னராக இருக்கும் பொழுது தாம் கல்லூரியில் ஆசிரியராக ஓய்வு பெற்றது பெரிய நஷ்டம் என்பது உணர முடிவதில்லை. இருப்பதே யதார்த்தம் என்பது மனிதன்:

. ஒரு விஷயம் நடப்பதற்குமுன் புரிவது கஷ்டம்.

. நடந்தபின் எவரும் சுலபமாகப் புரிந்துகொள்வர்.

. IAS பரீட்சைக்கு அந்த நாளில் ரூ.80/- கட்டணம். தகப்பனார் யார் என்று கேட்டால் ரோடு மேஸ்திரி என்று பதில் கூறவேண்டும் என்பதால் IAS பரீட்சை எழுத மறுத்தார். எழுதாதவர் மலை; எழுதியவர் மடு. மடு பின்னர் கவர்னரானார், ஜனாதிபதியாகவும் நியமிக்கவேண்டும் என்றனர். 1934, 1935, 1936இல் தரிசனம் செய்ததால் IAS வாய்ப்பு 1948இல் வந்ததுஎன இவர் அறியார். தரிசனத்தால் வந்தது என்றாலும் சொந்த பர்சனாலிட்டி சிறியதானதால் IAS வாய்ப்பு அதுவரை வரவில்லை. 1947இல் பரநலமான சேவையை எடுத்துக்கொண்டதால் வாய்ப்பு வந்தது. வாய்ப்பை உரியவர் ஏற்காவிட்டால், தகுதியுள்ளவர் அருகிருந்தால் அவருக்குப் போகும். இவருடைய சேவையைப் பாராட்டியவர் IAS வாய்ப்பைப் பெற்றுக் கவர்னரானார்.

"கல்லூரிப் பேராசிரியராக தாம் ஓய்வுபெற்றது நஷ்டம். தமக்கு வந்த வாய்ப்பை இழந்தோம். அதைப் பெற்றவர் நம்மை கவர்னராக இருக்கும் பொழுதும் பாராட்டுகிறார். அதனால் மேலும் உயர்கிறார்" என்பதை இழந்தவர் அறியவில்லை. இது நடந்தது எவ்விதம்?

. தரிசனம் வேலையில்லாதவருக்கு வேலை வாங்கிக் கொடுத்தது.

. வேலை வந்தபின் தரிசனம் மறந்துவிட்டது.

. பர்சனாலிட்டி இலட்சியமும், சிறிய புத்தியும் கலந்தது.

. இலட்சியம் செயல்பட்ட இடத்தில் உச்சாணிக்குப் பலன் உயர்ந்தது.

. தரிசனம் பெற்றபின் தரிசனம் மறந்ததுபோல் இலட்சியம் பலித்தபின், பலித்ததற்குக் காரணமாக இருந்தவரை சிறிய புத்தியால் முயன்று விலக்கியதால், வந்த வாய்ப்பு முயன்று விலகியது.

. 40 ஆண்டுகட்குப்பின் கவர்னர் அன்பரைப் பார்க்கப் பிரியப்பட்ட பொழுதும் அன்பரால் கவர்னரைப் போய் சந்திக்க முடியவில்லை.

. "தகப்பனார் செய்த வேலை IAS செலக்ஷனுக்குத் தடையாகும், தம் திறமைக்குப் பலனிருக்காது"என நம்பியதால், நம்பியது பலித்தது.

. எந்தச் செயலுக்கும் physical plane ஜடஉலகம் ஒரு காரணமாயிருக்கும்.

பணம் 80/- ரூபாய் கட்டவேண்டும். அது ஒரு மாதச் சம்பளம். பிற்காலத்தில் கவர்னராகும் வாய்ப்பை நிர்ணயிப்பது 1 மாதச் சம்பளத்தைக் கட்டணமாகச் செலுத்த மனம் வாராதது.

. எந்த வாய்ப்பையும் நடத்திவைக்கும் சந்தர்ப்பமும், தடுக்கும் சந்தர்ப்பமும் ஒருங்கே எழும்.

. தம் இலட்சியத்தைப் பூர்த்திசெய்தவருக்குரிய கடமை வாய்ப்பைப் பூர்த்திசெய்யும் சந்தர்ப்பம்.

. 1 மாதச் சம்பளம் கட்டணமாகச் செலுத்த மனம் வாராதது தடுக்கும் சந்தர்ப்பம்.

. இன்று நாம் செயல்படும்பொழுது வரும் பெரிய ஆன்மீக, சமூக வாய்ப்புகட்கு இதுபோன்ற இரு எதிரான சந்தர்ப்பங்கள் எழுவதைக் காணலாம்.

Our choice determines.

மலைபோல வந்தாலும் அதைத் தனக்குரிய அளவில் குறுக்கிக் கொள்வதை மனம் உணராது:

. "நாழி முகவாது நானாழி"என்பது மனிதனுக்குரிய சட்டம்.

. குறுக்குவது எப்படி?

. வருவதும், நடப்பதும் இரு செயல்கள்.

. அவை நம் வாழ்வில் சந்திக்கின்றன.

. வருவதனுடன் ஓர் சிறு நிகழ்ச்சியும், நடப்பதற்குரிய ஒரு சிறிய நிகழ்ச்சியும் சேர்ந்துவரும்.

. நாம் எந்த நிகழ்ச்சியைத் தேர்ந்தெடுக்கிறோமோ அது நடைபெறும்.

. அருளைத் தாங்கிவருபவருக்குரிய கடமை ஒருபுறம், இருளின் பிரதிநிதிக்குரிய பாசம் மறுபுறமிருந்தால், நாம் தேர்ந்தெடுப்பதுபோல் காரியம் முடியும்.

. பெருமையும், உண்மையும் எதிரெதிராக நிற்கும்.

. கொடுமை செய்யும் ஆசையும், கடமையைச் செய்யும் சந்தர்ப்பமும் இணைந்து நிற்கும்.

. மனம் உணராதது, மனம் unconscious ஆக இருப்பதாகும்.

. மனம் intuition முனைந்து செயல்பட்டால் இரு சந்தர்ப்பங்கள் வரும்.

. மனம் ஆரம்பிக்காவிட்டால் அன்னை சக்தி செயல்படும்.

. வேலைக்காரி, தனக்கு ஒரு வாய்ப்புண்டு என்று தெரியாததால், அவள் மனம் செயல்படவில்லை. பெரியவனுக்குப் புது டிரஸ் வேண்டும், கோயம்புத்தூருக்குக் காரில் போகவேண்டும் என்று தோன்றுகிறது. எலிசபெத்திற்கு பெம்பர்லியில் டார்சி இல்லை என்பதால் போகத் தோன்றியது. வீட்டைப் பார்த்தபின் "நான் இதன் தலைவியாகி இருக்கலாம்" என்ற நினைவு எழுந்தது. அவளை நோக்கி அருள் வரும் பொழுது அருள் செயல்படும் சந்தர்ப்பத்தை அவள் மனம் நினைப்பதால், அருள் செயல்படுகிறது.

. மனம் ஏற்பட்டபின் சிருஷ்டியில் பரிணாமத்திற்குரிய சந்தர்ப்பங்கள் எழுந்தபடியிருக்கின்றன. அவை எவர் கண்ணிலும் படுவதில்லை.அதனால் அந்தச் சந்தர்ப்பங்கள் அழிந்துவிடுகின்றன. ஒரு சந்தர்ப்பத்திற்கு மனித ஒத்துழைப்பிருந்தால், அது பசுமைப்புரட்சி போல் பெரியதாக வளர்ந்து நாட்டின் போக்கையே மாற்றிவிடுகிறது. சர்ச்சில் பதவியிலில்லாதபொழுது மக்கள் சர்ச்சிலைப் பதவிக்குக் கொண்டுவர முயன்றதால், அது நடந்தது, போரை வெல்லமுடிந்தது.

. 1947 ஆகஸ்ட் 15இல் சுதந்திர நாள் குறிக்கப்பட்டது தெய்வ அருள். கட்டுப்பட்டிகட்கு அது நல்ல நாளில்லை. அதனால் 12 மணிக்கு சில நிமிஷம் முன்னால் பார்லிமெண்ட் கூட ஏற்பாடு செய்தார்கள். நேரு அவர்களைத் தடுக்கவில்லை. அதுவே அடுத்த மாதம் 1 கோடி பேரை அகதியாக்கியது.

. நம் வாழ்வில் அதுபோன்ற இரட்டைச் சந்தர்ப்பங்களை அன்றாடம் காணப் பயில்வது ஆன்மாவைக் காண்பது. சரியானதைத் தேர்ந்தெடுப்பது அன்னையை நாடுவது.

தொடரும்.....

 

*******

ஸ்ரீ அரவிந்த சுடர்

பிறப்பில் தாயைவிட்டுப் பிரிக்கும் இனம்போலவோ, செடியைப்போலவோ மனிதன் வளருவதில்லை. உணர்வால் குடும்பமும், வாழ்வால் சமூகமும், அதன் ஸ்தாபனங்களும் மனிதனுக்கு உயிரையும், உதவியையும் அளிக்கின்றன. ஏதோ ஒரு சமயம் ஒரு சமூகத்தினருக்கு அல்லது ஒரு ஊரிலிருப்பவருக்கு உலகிலில்லாத ஆதரவு வரும். தனி மனிதரோ, ஸ்தாபனமோ முன்வந்து உதவுவதுண்டு. தம்மை நாடி வருபவர்க்கு அன்னை இந்த விசேஷ ஸ்தாபனங்கள் போல் உதவுகிறார். தாமே அவர்களுடைய இஷ்டதேவதையாகி அன்பையும், ஆதரவையும் வழங்குகிறார்.


 


 



book | by Dr. Radut