Skip to Content

10.அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

அமெரிக்காவின் முன்னேற்றத்திலிருந்து இந்தியர்களாகிய நாம் அறிந்துகொள்ள வேண்டியது

N. அசோகன்

இன்று உலக நாடுகளில் எந்நாடு முதன்மையாக விளங்குகிறது என்ற கேள்வியை இந்தியர்களிடமும், உலகத்திலுள்ள மற்ற நாட்டைச் சேர்ந்தவர்களிடமும் கேட்டால், அநேகமாக எல்லோரும் அந்நாடு அமெரிக்கா தான் என்று பதில் சொல்வார்கள். அப்பதில் உண்மையா என்று கேட்டால், அது உண்மைதான் என்று சொல்ல வேண்டும்.ஏனென்றால், பொருளாதார ரீதியாகவும், அரசியல் ரீதியாகவும்,இராணுவ ரீதியாகவும் அந்நாடுதான் தற்பொழுது முன்னணியில் உள்ளது.அந்நாட்டில் ஒரு தனி நபருடைய சராசரி ஆண்டு வருமானம் 41,400/-டாலர் (ரூ.18,63,000/-) (ரூ.1,55,250 per month) அளவில் உள்ளது.அதே சமயத்தில் இந்தியா, பாகிஸ்தான் போன்ற நாடுகளில் ஒரு தனி நபருடைய சராசரி ஆண்டு வருமானம் 600/- டாலர் அளவில் (ரூ.27,000/- per year; ரூ.2,250/- per month) தானுள்ளது. இவ்வளவு பெரிய வித்தியாசமிருக்கும் பொழுது, உலக அரங்கில் அமெரிக்கா முன்னணி நாடாகத் திகழ்வதில் எவ்வித ஆச்சர்யமுமில்லை. 1990க்கு முன்னால் சோவியத் யூனியன் அமெரிக்காவிற்கு நிகரான இராணுவ பலம் மற்றும் அரசியல் பலம் கொண்டு விளங்கியது. ஆனால், அங்கு கம்யூனிஸ ஆட்சிபோல் ஜனநாயகம் வந்தபொழுது பொருளாதார சீர்குலைவு ஏற்பட்டு சராசரி ஆண்டு வருமானம் வெறும் 3000/-டாலர் என்ற நிலைக்கு சரிந்துவிட்டதால் அமெரிக்காவின் பொருளாதாரப் பலத்திற்கு இன்று ரஷ்யா எவ்வகையிலும் நிகரில்லை என்றாகிவிட்டது. ஜெர்மனி, பிரான்ஸ், இங்கிலாந்து, ஜப்பான் போன்ற நாடுகள் எல்லாம் 30,000 டாலரிருந்து 37,000 டாலர் வரை சராசரி வருமானம் காட்டுகின்றன. பொருளாதாரத்தில் அமெரிக்காவிற்கு நெருக்கமாக வந்தாலும் அரசியல் மற்றும் இராணுவ பலமென்று பார்க்கும் பொழுது அமெரிக்காதான் முதன்மை நாடாக விளங்குகிறது.

என்னுடைய சொற்பொழிவின் நோக்கமே எப்படி அமெரிக்கா இப்படியொரு பெரிய பணக்கார நாடாகத் தலையெடுத்துள்ளது என்பதை கண்டறிவதுதான். அமெரிக்காவின் சுபிட்சத்தைப் பற்றி தியான மையத்தில் பேசுவது எப்படிப் பொருந்தும் என்ற கேள்வி அன்பர்கள் மனதில் எழலாம். இச்சமயத்தில் மதர் சர்வீஸ் சொஸைட்டியின் செயல்பாடுகளைப் பற்றி இங்கே ஒரு விளக்கம் கொடுத்தால்தான் இச்சந்தேகத்தை நிவர்த்தி செய்ய முடியும். அன்னை ஸ்ரீ அரவிந்தருக்காக தியான மையங்கள் நடத்துவது மட்டும்தான் மதர் சர்வீஸ் சொஸைட்டியின் வேலை என்றில்லை. அன்னை ஸ்ரீ அரவிந்தருடைய ஆன்மீகக் கருத்துகளில் அங்கே ஆராய்ச்சியும் நடக்கிறது. அவ்வான்மீகக் கருத்துகளை இந்தியாவின் பொருளாதார வளர்ச்சிக்கும், உலகத்தின் பொருளாதார வளர்ச்சிக்கும் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது,உலகத்தில் போரில்லாமலும், மூன்றாம் உலகப் போரோ, அணு ஆயுத பிரயோகமோ நிகழாமலும், பயங்கரவாதம் வெளிப்படாமலும் எப்படிப் பூரண அமைதியையும், சமாதானத்தையும் கொண்டு வருவதுbusiness management  துறையில் அன்னை பகவானுடைய ஆன்மீகக் கருத்துகளை எப்படி apply செய்வது என்றெல்லாம் ஆராய்ச்சி நடக்கிறது.இவ்வாராய்ச்சியின் விளைவாக சமூகம் எப்படி வளர்கிறது,முன்னேற்றமும், பொருளாதார வளர்ச்சியும் எப்படி நடைபெறுகின்றன,இவற்றை நிர்ணயிப்பது எது என்ற வகையில் பல principles of development,அதாவது வளர்ச்சி விதிமுறைகளை மதர் சர்வீஸ் சொஸைட்டியில் கண்டுபிடித்துள்ளோம்.

பொருளாதார முன்னேற்றம் கண்டுள்ள எந்த நாடும் தெரிந்தோ, தெரியாமலோ இந்த வளர்ச்சி விதிமுறைகளைக் கடைபிடித்துத் தான் அம்முன்னேற்றத்தை அடைந்துள்ளது என்பது எங்களுடைய அனுமானமாகத் திகழ்கிறது. தெரியாமல் கடைபிடித்தாலே முன்னேற்றம் வருமென்றால், தெரிந்து கடைபிடித்தால் முன்னேற்றத்தை மேலும் விரைவு படுத்த முடியுமென்றாகிறது. ஆகவே இந்தியாவின் வளர்ச்சியை விரைவு படுத்த நாங்கள் கண்டறிந்த வளர்ச்சி விதிமுறைகளின்படி தீட்டப்பட்ட ஆக்கப்பூர்வமான திட்டங்கள் பலவற்றை இந்திய அரசாங்கத்திற்கு வழங்கியுள்ளோம். பசுமைப் புரட்சி நம் நாட்டில் வெற்றியடையக் காரணம் என்ன, கிராமப்புறங்களில் விவசாயிகள் வருமானத்தை உயர்த்த விவசாயத்தையும், தொழிலையும் எப்படி இணைக்கலாம், நாடு தொழில் மயமாவதை விரைவுபடுத்துவது எப்படி, தொழில் முனைவர்களை உருவாக்குவது எப்படி, புதிதாக வந்துள்ள கம்ப்யூட்டர் சாஃப்ட்வேர் புரோகிராமிங் மற்றும் இன்டர்நெட்டை வைத்துக் கொண்டு தொழில்,கல்வி, தொலைதொடர்பு மற்றும் ஆபீஸ் அட்மினிஸ்ட்ரேஷன் என்றெல்லாவற்றையும் எப்படி மேம்படுத்தலாம் என்று பல திட்டங்களைத் தீட்டி வழங்கி உள்ளோம்.

இந்தியாவினுடைய பழம்பெரு ஆன்மீகம் மீண்டும் மலர்ச்சி பெற்று,இந்தியா உலகத்தின் குருவாகத் தலையெடுக்க வேண்டும் என்றால்,முதலில் இந்நாட்டின் வறுமை போக வேண்டும். வறுமை போய் சுபிட்சம் வர வேண்டும் என்று பகவானே குறிப்பிட்டுள்ளார். மக்களுடைய அடிப்படைத் தேவைகள் பூர்த்தியான பின்னர்தான் அவர்கள் ஆன்மீக விஷயங்களைக் கருத முன்வருவார்கள். வருமான பற்றாக்குறை என்ற பெரிய பிரச்சினை தீராமலிருக்கும் பொழுது, மக்களுடைய கவனம் முழுவதும் அதன்மேல்தானிருக்கும். வருமானத்தை உயர்த்திக் கொள்ள ஆன்மீகம் என்ன வழி சொல்கிறது என்று கேட்டு, அதற்காகத்தான் ஆன்மீகத்தை நாடுவார்களேயொழிய, வருமான பிரச்சினைகளிருக்கும் பொழுது ஆன்மீகத்தை ஆன்மீகத்திற்காக மக்கள் நாடுவது மிகக் குறைவு.

இக்காரணங்களால் தான் அன்னையின் அருள் நமக்குக் கொடுக்கக் கூடிய ஆன்மீகப் பரிசுகளான ஆன்மீக ஞானம், ஆன்மீக பலம், ஆன்மீக அமைதி, ஆன்மீக மகிழ்ச்சி, ஆன்மீக பரிசுத்தம் போன்றவற்றைவிட,அன்னையின் அருளால் நமக்குக் கிடைக்கக்கூடிய பொருளாதார உயர்வு, உடல்நல முன்னேற்றம், சமூக உயர்வு, வேலைவாய்ப்பு, திருமணம் கைக்கூடி வருதல் போன்ற லோகாயதமான விஷயங்களை, கர்மயோகி அவர்கள் அதிகம் வலியுறுத்தி எழுதுகிறார். ஏனென்றால் இப்படிப்பட்ட வாழ்க்கைத் தேவைகள் தாம் நம் மனதை தற்பொழுது ஆக்கிரமித்துக் கொண்டுள்ளன. இவைகள் பூர்த்தியான பின்னரே இவற்றைத் தாண்டிய ஆன்மீக விஷயங்களில் நாம் அக்கறை எடுத்துக் கொள்வோம்.

இக்கண்ணோட்டத்தின் காரணமாகத்தான் அன்னையின் அருளை அதிர்ஷ்டமாகப் பெறுவது எப்படி என்று விளக்கும் வகையில் அதிர்ஷ்டம் என்ற புத்தகத்தை கர்மயோகி அவர்கள் எழுதினார். அதைத் தொடர்ந்து 100,000 dollars என்ற பெயரிலும், 50 லட்சம் என்ற பெயரிலும், Honey, Let us Make Money என்ற பெயரிலும் prosperityஐ உயர்த்திக் கொள்ளும் வழிகளைப் பற்றிய மதர் சர்வீஸ் சொஸைட்டி வெளியீடுகள் அடுத்தடுத்து வந்தன.

இதே கண்ணோட்டத்தின்படி பார்க்கும்பொழுது அமெரிக்க நாடு எப்படி முன்னேறியுள்ளது, அந்நாட்டின் முன்னேற்றத்திலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன, எந்தெந்த வளர்ச்சி விதிமுறைகளை அவர்கள் கடைப்பிடித்து இம்முன்னேற்றத்தைக் கொண்டு வந்துள்ளார்கள் என்பதை எல்லாம் நாம் கண்டறிவது நம் நாட்டின் முன்னேற்றத்தை விரைவுபடுத்த உதவும் என்றாகிறது.அமெரிக்கா பொருளாதாரத்தில்தான் முன்னணியிலிருக்கிறது, மற்றஎந்தச் சிறப்பும் அங்கே இல்லை என்று நாம் புரிந்து கொண்டால் அது உண்மையாகாது. ஏனென்றால் பரிணாம வளர்ச்சியிலும், அதாவது evolutionary process என்பதிலும் அந்நாடுதான் முன்னணியிலுள்ளது. ஆன்மீகச் சிறப்புப் பொருந்திய பழம்பெரு நாடான நம் நாட்டைவிடப் பரிணாம வளர்ச்சிக்குக் கூட அமெரிக்கா தான் தலைமைதாங்குகிறது  என்ற விஷயம் அன்பர்களுக்கு அதிர்ச்சியாகவிருக்கலாம். அன்னையும்,பகவானும் இந்தியாவில் இருந்து கொண்டு தான் சத்தியஜீவியத்தை பூமிக்கு இறக்கிக் கொண்டு வந்து உலகத்தின் பரிணாம வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்கு வழி செய்தார்கள். அம்முயற்சி ஆன்மீக அளவில் அவர்கள் எடுத்த பெருமுயற்சி. சமூகத்தின் பரிணாம வளர்ச்சி என்பது பிஸிக்கல் லெவல் நடந்து கொண்டிருக்கிறது. அவ்வளர்ச்சிக்கு மிகவும் receptiveஆன சூழ்நிலை தற்பொழுது அமெரிக்காவில்தான் நிலவுகிறது.பரிணாம வளர்ச்சிக்கு உதவக்கூடிய சூழ்நிலை என்ன என்று தெரிந்து கொள்ள அன்பர்கள் ஆர்வமாக இருக்கலாம். பரிணாம வளர்ச்சி என்பது புதியது உருவாவது. அமெரிக்கர்கள் புதிய விஷயங்களை எப்பொழுதும் நாடிக் கொண்டிருக்கிறார்கள். Change, மாற்றம் என்பதுதான் அந்நாட்டின் உயிரோட்டமாக அமைந்துள்ளது. பழமை, பாரம்பரியம் என்பதை இந்தியா போன்ற நாடுகள் கெட்டியாகப் பிடித்துக் கொண்டிருப்பதைப் போல, change அல்லது மாற்றத்தை அமெரிக்கா கெட்டியாகப் பிடித்துக் கொண்டுள்ளது. இப்படிப் புதியதை நாடும் மனப்பான்மை பரிணாம வளர்ச்சிக்கு உரிய மனப்பான்மையாகும்.பரிணாம வளர்ச்சியின் இரண்டாவது அறிகுறி வரம்பில்லாத வளர்ச்சி ஆகும். வரம்பற்ற வளர்ச்சி infinity என்ற சக்தி அங்கே செயல்படுவதைக் காட்டுகிறது. அவர்களுடைய உற்பத்தித் திறன், வருமான வளர்ச்சி,அவர்கள் செய்யும் செலவு, அங்கு நிகழும் கண்டுபிடிப்புகள் என்றெல்லாமே வரம்பில்லாமல் பெருகிக் கொண்டு போகின்றன. ஒரு நாட்டில் தொட்டனவெல்லாம் வளர்கின்றன என்றால் அந்நாட்டில் நிச்சயம் evolutionary power செயல்பட்டுக் கொண்டிருக்கிறது என்றாகிறது. பரிணாம வளர்ச்சியின் மூன்றாவது அறிகுறி வளைந்து கொடுக்கும் தன்மையாகும்.பரிணாம வளர்ச்சி எத்திசையில் போகிறது என்று தெரிகிறதோ,அத்திசைக்கு நாமும் மாறிக் கொள்வது நமக்கு வளைந்து கொடுக்கும் தன்மையிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்கா மற்ற உலக நாடுகளுடன் அதிகம் தொடர்பு இல்லாமல் தனித்து, ஒதுங்கி வாழத்தான் விரும்பியது. முதலாம் உலகப் போர் மூண்டபொழுது, "இது ஐரோப்பிய நாடுகளுக்கிடையேயான போர்.இதற்கும், தனக்கும் சம்பந்தமில்லை'' என்று சொல்லி ,ஒதுங்கி  இருக்கவே விரும்பியது. ஆனால், ஜெர்மனிதான் அமெரிக்காவை வலுக்கட்டாயமாக முதலுலகப் போரில் ஈடுபட வைத்தது.

இரண்டாம் உலகப் போர் மூண்டபொழுதும் ஒதுங்கி இருக்கவே விரும்பியது. ஆனால் ஜப்பான் வலுக்கட்டாயமாக மீண்டும் அமெரிக்காவைப் போருக்கு இழுத்தது. "உலகத்தில் ஜனநாயகத்திற்கும்,அடிப்படை மனித உரிமைகளுக்கும், மனித கலாச்சாரத்திற்குமே ஆபத்து வந்துவிட்டது; தான் உலகத்திற்குத் தலைமைதாங்கி தீயசக்திகளை முறியடித்து, உலகத்தைக் காப்பாற்றினால்தானுண்டு' என்று அமெரிக்கா-விற்குப் புரிந்ததுமே, தன்னுடைய தனிமை குணத்தை அறவே விட்டுவிட்டு,நேசநாடுகளான இங்கிலாந்து, பிரான்ஸ் மற்றும் சோவியத் யூனியனுடன் கைகோத்து, ஜெர்மனி, இத்தாமற்றும் ஜப்பான் ஆகிய மூன்று நாடுகளையும் முறியடித்து, தீயசக்திகளை அழித்து, உலகத்தில் மீண்டும் உண்மையும், கலாச்சாரமும், ஜனநாயகமும் தழைக்க வழி செய்தது.இப்படி உண்மைக்கு ஒத்துழைக்கும் வகையில் தன்னை அந்நாடு மாற்றிக் கொண்டது பரிணாம வளர்ச்சிக்கு உரிய மனப்பான்மை அந்நாட்டில் நிலவுகிறது என்பதைக் காட்டுகிறது. அன்று இரண்டாம் உலகப் போர் நிகழ்ந்த சமயத்தில் தானேற்ற உலகத்தின் தலைமைப் பொறுப்பை மேலும் சிறப்பாக நிறைவேற்ற அந்நாட்டிற்கு நிறைய வாய்ப்புகள் உள்ளன. இன்று உலகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என்பதைச் சரியாகப் புரிந்து கொண்டு, அதற்கேற்றாற்போல அமெரிக்கா தன்னை மாற்றிக் கொண்டால் இறைவனின் திருவுள்ளத்தைச் சிறப்பாக நிறைவேற்றும் பரிணாமக் கருவியாக அந்நாடு சிறப்பாகச் செயல்பட வாய்ப்புள்ளது.இன்று உலகம் உலகவொற்றுமை, உலகச் சமாதானம், போர் நிறுத்தம்,அணுவாயுதங்களை விடுதல், உலக வர்த்தகம், மாசுக் கட்டுப்பாடு (pollution control), சுற்றுப்புறச் சூழல் பராமரிப்பு என்ற திசையில் போய்க் கொண்டிருக்கிறது. உலக வர்த்தகம், மாசுக் கட்டுப்பாடு, சுற்றுப்புறச்  சூழல் பராமரிப்பு (environmental protection) என்ற விஷயங்களில் அமெரிக்காவின் ஒத்துழைப்பு உள்ளது. உலகவொற்றுமை, போர் நிறுத்தம், அணுவாயுதங்களைக் கைவிடுதல் என்றவிடங்களில் போதிய ஒத்துழைப்பு இல்லை. இவ்விடங்களிலும் மனம் மாறி, அந்நாடு பரிணாம சக்தியோடு ஒத்துழைத்தால், அந்நாட்டிற்குக் கிடைத்துள்ள உலகத்தின் தலைமை நீண்டநாட்களுக்கு நீடிக்கும்.

தொடரும்.....

 

****


 


 


 


 book | by Dr. Radut