Skip to Content

05.ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

ஆன்மீக மற்றும் மனோதத்துவ உண்மைகள்

(சென்ற இதழின் தொடர்ச்சி....)

N. அசோகன்

301. கிரியேடிவ்ஆன பாடம் கற்பிக்கும் முறைகள் குழந்தைகளிடமுள்ள அபார கற்கும் திறனை வெளிக்கொண்டு வருகின்றன. இது பரவியது என்றால் குழந்தை மேதாவிகள் நிறையபேர் உருவாகுவார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

302. இந்தப் புதிய கற்பிக்கும் முறைகளின் முக்கிய அம்சம் என்னவென்றால் பாடம் படிப்பதில் பிள்ளைகளுக்கு உள்ள ஆர்வத்தைத் தூண்டுவதாகும். ஆர்வத்தின் பேரில் படிக்கும்பொழுது வழக்கத்தைவிட அதிகமாகத் தெரிந்து கொள்கிறார்கள்.

303. ஞாபக சக்தி நமக்கு உதவியாக இருக்கிறது. ஆனால் அபார ஞாபக சக்தியை, அபார அறிவு என்று நாம் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது.

304. இந்தியக் கல்வி முறையில் இருக்கின்ற பெரிய குறைபாடென்பது மனப்பாடம் செய்வதற்குக் கொடுக்கின்ற முக்கியத்துவமாகும். மேற்கத்திய கல்வி முறையில் நம் சிந்தனை சக்தியைத் தூண்டும் அளவுக்குக் கற்பிக்கும் முறைகள் வேறுபடுகின்றன.

305. இந்தியப் பள்ளிகளில் ஆசிரியர்கள் அதிகாரத் தோரணையில் பாடம் புகட்டுகிறார்கள். மாணவர்கள் கேள்வி கேட்பது ஆசிரியர்களுக்குப் பிடிப்பதில்லை. ஆனால் நம்முடைய மாணவர்களுக்குச் சொந்த சிந்தனை சக்தி வளர வேண்டுமென்றால் பள்ளிகளில் அதிகாரச் சூழல் மாறி,சுதந்திரச் சூழல் வர வேண்டும்.

306. கல்வித் துறையில் எப்பொழுதும் முன்னேற்றம் போதும் என்று நாம் திருப்திப்பட்டுக்கொள்ள முடியாது. மேலும் மேலும் தெரிந்து கொள்வதற்குத் தொடர்ந்து வாய்ப்புகள் வந்தவண்ணம் இருக்கும்.

307. ஒரு காலத்தில் பள்ளிக்கூடம் நடத்துவது வருமானரீதியாகப் பார்த்தால் லாபமில்லாத வேலையாக கருதப்பட்டது. ஆனால் இப்பொழுது சூழல் மாறிவிட்டது. பள்ளிக்கூடம் நடத்தினால் நிறைய வருமானம் கிடைக்கும் என்று இப்பொழுது தெரிகிறது.

308. பள்ளிக் கட்டணமாக மாதம் ரூ.500/- ரூபாய் செலுத்துவதற்குப் பெற்றோர்கள் முன்வருவதைப் பார்த்தால், பிள்ளைகளின் படிப்பிற்கு அவர்கள் எவ்வளவு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள் என்பது தெரிகிறது.

309. பழங்காலத்தில் ஆசிரியத் தொழில் என்பது மரியாதைக்குரியதாக இருந்தாலும், வருமானரீதியாக திருப்தி இல்லாத தொழிலாக இருந்தது. இப்பொழுது ஆசிரியர் தொழிலுக்கே சம்பளம் கூடுகிறது என்பது கல்விக்கு மரியாதை உயருகிறதுஎன்பதை காட்டுகிறது.

310. பரம்பரையாகப் படிப்பில் ஊறிய வகுப்பைச் சேர்ந்தவர்கள் இப்பொழுதும் படிப்பில் முன்னணியில் இருக்கிறார்கள். இதனால் மற்ற வகுப்பைச் சேர்ந்தவர்கள் மனம் தளர வேண்டாம். தம்முடைய பாடம் கற்கும் திறனை அவர்களும் வேகமாக வளர்த்துக் கொண்டார்கள் என்றால், முதன்மை வகுப்பிற்கும் மற்ற வகுப்பிற்கும் தற்போது உள்ள வித்தியாசம் போய்விடும்.

311. கல்வியின் சாராம்சம் அறிவாகும். பட்டங்களும் சான்றிதழ்களும் சின்னங்களேயொழிய, அவையே அறிவாகாது. ஒருவருக்குப் பட்டம் இருப்பதால் மட்டும் அவருக்கு அறிவு இருப்பதாகச் சொல்ல முடியாது.ஒருவர் நல்ல ஆடை உடுத்தி இருக்கிறார் என்பதால் மட்டும் அவர் பணக்காரர் என்று நாம் சொல்ல முடியாது. ஆடை ஏமாற்றுவது போல பட்டமும் ஏமாற்றலாம்.

312. பரிட்சையில் அதிக மார்க் வாங்குவதுஎன்பது புத்திக் கூர்மைக்கு அடையாளம் என்று சொல்ல முடியாது. கேள்விகள் ஞாபக சக்தியைப் பரிசோதிக்கும் வகையில் அமைந்திருந்தால் நிறைய மதிப்பெண் வாங்குவது என்பது நிறைய ஞாபக சக்தியைத்தான் காட்டுகிறது என்று அமையும்.

313. புதிய மற்றும் கிரியேடிவ்ஆன ஆராய்ச்சியை நாம் காண்பது அரிது.ஆராய்ச்சி நிறுவனங்கள் பெரும்பாலும் நிறைய தகவல்களைத்தான் சேகரிக்கின்றன. சிந்தனை என்பது தரத்தில் உயர்ந்தது. புலமை என்பது அளவை ஒட்டியது. ஒரு சிந்தனையாளர் புலமை உடையவராக இருக்கலாம். ஆனால் புலமை உடையவர் சிந்தனையாளராக அவசியம் இருப்பார் என்று சொல்ல முடியாது.

314. தத்துவ விசாரணையை நெடுங்காலமாக வாழ்க்கைக்கு உதவாத பயனற்ற வேலையாகக் கருதி வந்தார்கள். ஆனால் அண்மையில் காரல்மார்க்ஸ் போன்ற அறிஞர்கள் பொருளாதாரம், அரசியல், சமூகம் என்ற மூன்றையும் இணைத்து உருவாக்கி உள்ள கம்யூனிசக் கொள்கைகள் தத்துவ ஆராய்ச்சியை வாழ்க்கைக்கு மிகவும் சம்பந்தப்பட்டதாக மாற்றிவிட்டன.

315. கடந்த கால ஆன்மீகத்தில் சங்கரர் மற்றும் புத்தர் போன்ற மகான்கள் படைப்பை ஒரு மாயை என்று சொல்லி வாழ்க்கையை மிகவும் வறண்டதாக மாற்றினார்கள். ஆனால் ஸ்ரீ அரவிந்தர் வாழ்க்கையும், படைப்பும் இறைவனுடைய வெளிப்பாடுதான் என்று வலியுறுத்தி, வாழ்க்கைக்கு ஒரு புத்துணர்ச்சியை வழங்கியுள்ளார்.

316. பழங்காலத்தில் தத்துவம் மற்றும் இலக்கியத்தில் புலமை பெற்றவர்கள் மட்டுமே படித்தவர்களாக கருதப்பட்டனர். ஆனால் இப்பொழுது விஞ்ஞானம் மற்றும் பொருளாதாரம் கூட வளர்ந்துவிட்டதால், இத்துறையில் உள்ள விஞ்ஞானிகள்கூட அறிவாளிகளாக கருதப்படுகிறார்கள்.

317. விஞ்ஞானிகள் கண்டுபிடிக்கும் உண்மைகளை அடிப்படையாக வைத்துதான் கண்டுபிடிப்பாளர்கள் புதிய சாதனங்களை உருவாக்குகிறார்கள். இருந்தாலும் Maxwell மற்றும் Max Plankபோன்ற விஞ்ஞானிகளைவிட எடிசன் மற்றும் ரைட் சகோதரர்களைத் தான் மக்களுக்கு அதிகம் தெரிகிறது.

318. பணத்தைச் செலவு செய்யும் பொழுது அது குறைகிறது. ஆனால் அறிவை பகிர்ந்துகொள்ளும் பொழுது அது பெருகுகிறது. பணம் பொருளாக இருப்பதும், அறிவு மானசீகமாக இருப்பதுமே, இவை குறைவதற்கும் பெருகுவதற்கும் காரணம்.

319. உண்மையிலேயே கவித்துவம் பெற்ற கவிஞர்கள் எழுதும் கவிதைகள் தானாகவே கவிதை இலக்கணக் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகின்றன. கவிதை இலக்கணத்தைப் படித்துவிட்டு, பின்பு கவிதை எழுதுபவர்கள் சிறந்த கவிஞர்களாக வருவதில்லை.

320. படைப்புத் திறன் என்பது உள்ளெழுச்சி சம்பந்தபட்டது. மானிட அறிவைத் தாண்டிய உயர் நிலைகளிலிருந்து இந்த உள்ளெழுச்சி வருகிறது.

தொடரும்.....

******


 


 book | by Dr. Radut