Skip to Content

11. யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

(சென்ற இதழின் தொடர்ச்சி....)


 

கர்மயோகி
 

922) காலத்தால் சமூகம் சாதிப்பதை, யோகம் ஆன்ம விழிப்பின் தன்னறிவால் சாதிக்கும். ஒரு சிறு அளவில் நாம் இதன் மூலம் காலத்தைக் கடக்கிறோம்.
 

யோகம் காலத்தைக் கடக்கும்.

  • வேகமான பிரயாணம் காலத்தைச் சுருக்கும்.

அதுவே இடத்தையும் சுருக்கும் எனக் கொள்ளலாம்.

  • நாம் ஹைதராபாத் போய், சம்மந்தியைச் சந்தித்து, நம் தொழில் அவரை முதலீடு செய்யக் கேட்க விருப்பப்பட்டால், எத்தனை முறை போவது, அவர் நம் கருத்தை ஏற்பாரா, ஏற்றால் எந்த அளவுக்கு முதலீடு செய்வார் என்பவை நடைமுறையில் பல மாதங்களாகும்பெருந்தொகை போட வேண்டுமானால், சிறு தொகையில் ஆரம்பித்து, அனுபவப்பட்டு, நம்பிக்கை ஏற்பட்டபின் செய்வார். அவை பல வருஷங்களாகும். அதுவும் பல விஷயங்களைப் பொருத்தது.

        மனம் அவ்விஷயத்தின் பாகங்களை எடுத்து, ஒவ்வொன்றையும் சம்மந்தி எப்படி நினைப்பார், அதற்கென்ன பதில் என யோசனை செய்தால், அப்பேச்செழும்பொழுது சம்மந்தி எதிர்ப்பில்லாமல் நம் கருத்துகளை ஏற்பதைக் காணலாம்.
 

மனம் கேள்வி எழுப்பி, பதில் தயார் செய்வதற்குப் பதிலாக எழும்
கேள்விகளைச் சமர்ப்பணம் செய்வது அதைவிடச் சிறந்ததுஇதுபோன்ற விஷயங்கள் எளிதில் சமர்ப்பணம் ஆகா. நாம் சமர்ப்பணம் செய்ய முயன்றால், மனம் சம்மந்தி எழுப்பாத கேள்விகளையும், எவரும் எழுப்பாத கேள்விகளையும் எழுப்பும்; அடங்காது.
 

மனம் அடங்கினால் பிறரிடமிருந்து எதிர்ப்பு எழாது.

இந்த எண்ணம் தோன்றியது முதல், ஹைதராபாத்திற்கு போக அவசரம் எழும்.

"சம்மந்தியைக் கேட்கப் போவதில்லை; அன்னையைக் கேட்கப்
போகிறேன்',

"ஹைதராபாத் போகவில்லை; உள்ளே அன்னையிடம் போகப் போகிறேன்' என்பது போல் எழுந்த 100 கேள்விகளுக்கும் உள்ளே போகும் பதிலை மனம் ஏற்று அடங்கினால், நாம் செய்யும் காரியத்திற்கு யோகத் தகுதி வரும்.

அது வந்த பின்னும் உள்ளே படபடப்பு ஓரளவிருக்கும்.

படபடப்பு போன பின்னும் அமைதி வாராது.

அமைதி வந்தால் நீடிக்காது.

"தொழிலில் முதலீடு' மனத்திலிருந்து,பாரமாக இல்லாமல் லேசாகும்
வரை காத்திருந்தால் சம்மந்தி வருவார்.

நாம் கேட்க வேண்டியதெல்லாம் அவரே சொல்வார்.

வேலை முடியும்.

பல ஆண்டு வேலை சில மணி நேரத்தில் முழுமையாக, இனிமையாகப்
பூரணம் பெறும்.

யோகம் இவ்வழி காலத்தைக் கடக்கிறது.

  • யோகம் காலத்தைக் கடப்பதைப் போல் இடத்தையும் கடக்கும்;

மனத்தையும் கடக்கும்;

கர்மத்தைக் கடக்கும்.

யோகம் என்பது பூவுலகைக் கடந்த மேலுலக வாழ்வு.

யோகம் பரிணாமத்தைக் கடப்பது என்பதால், காலம், இடம், மனம்,கர்மம் பரிணாமத்தின் பகுதிகள் என்பதால் யோகம் அனைத்தையும் கடக்கும்.
 

923) உடைமைகளை இழப்பதை மட்டும் மனிதன் கண்டு வருத்தப்படுவதில்லை. தன்னைப் பிடித்த துர்அதிர்ஷ்டங்கள் போனாலும் வருந்துவான். அடுத்த கட்டமடைந்த பின்னும், முன் கட்டத்தின் உணர்வுகளினின்று விடுதலை பெறாவிட்டால், முன் கட்டத் திறமைகள் போனால் வருத்தம் எழும்.

தரித்திரம் போனாலும் மனம் தத்தளிக்கும்.

  • "விருதுபட்டிக்குப் போன சனியனை வீட்டு வரைக்கும் வந்துவிட்டுப் போ' என்றான்.
  • எந்த மனிதனுக்கும் அவனால் தீர்க்க முடியாத பிரச்சினைகள் எழுவதில்லை - அன்னை.
  • நாமே சோகத்தைப் பிடித்துக்கொள்ளாவிட்டால், சோகம் நம்மை விட்டுப் போகும் - அன்னை.
  • ஒரு பிரச்சினை எழுந்தால், அதன் தீர்வு அதனுள் இருக்கும்.
  • அமெரிக்கர்கள் எதையும் முடியாது என விடமாட்டார்கள்.
  • கர்மம் நாம் ஏற்பதனால் நம் வாழ்வில் பலிக்கிறது.
  • விதியை மதியால் வெல்லலாம்.
  • இறைவனால் என்ன பெறலாம் என மனிதன் புரிந்துகொண்டால்,அரை நிமிஷம் பொறுக்கமாட்டான்.
  • அதிகாரம், சமூகம், கர்மம், தலைவிதி ஆகியவை நாம் ஏற்றுக் கொண்டால்தான் நம்மை ஆள முடியும்.
  • எதை மனிதன் ஆர்வமாகத் தேடுகிறானோ, அவன் அதை அடைவான். அவனே அதுவாக மாறுவான். கீதையின் சொல்லை மாற்றி, "இன்று நாமுள்ள நிலையை நாம் பல நாள் விரும்பி அழைத்துப் பெற்றுள்ளோம்'' எனவும் கூறலாம்.
  • அறியாமையை மனிதன் ரசிப்பதால், ஞானம் செயல்பட முடியவில்லை - பகவான் ஸ்ரீ அரவிந்தர்.
  • லியைப் பெண்ணாக மாற்றிய ரிஷியால் பெண்ணின் சுபாவத்தை மாற்ற முடியவில்லை - மூஷிகம் என்ற கதை.
  • வறுமை என்பது கெட்ட எண்ணம்.

உலக மரபில் இந்த ஞானம் எல்லா நாடுகளிலும் இருப்பதை நாம் காண்கிறோம்.

  • சர்க்கரை இனிப்பாக இருக்கிறது. பாகற்காய் கசக்கிறது. மனிதன் இனிக்கும் சர்க்கரையை நாடுவான், கசக்கும் பாகற்காயை விட்டு விலகுவான் என்று கூறினால் அது உண்மை.

நெடுநாள் பாகற்காயைச் சாப்பிட்ட பிறகு, பாகற்காய் ருசிக்கும். வாய் அதைத் தேடும். சர்க்கரையைவிட பாகற்காய் அவருக்கு விருப்பமாக இருக்கும்.
 

இதை பழகிய தோஷம் என நாம் கூறுகிறோம்.

  • விருந்து பல நாள் ரசித்துச் சாப்பிட்டவர்க்கு வீட்டிற்கு வந்து வத்தல் குழம்பும், சுட்ட அப்பளமும் சாப்பிடுவது ருசிக்கிறது. இதில் எதிர்மாறான பல உண்மைகள் உண்டு.

1.வத்தல் குழம்பின் ருசி எந்த விருந்திற்கும் வாராது.

2. இதுவும் பழகிய தோஷம்.

3.வத்தல் குழம்பு வறுமையின் சின்னம். அது ருசிப்பது வறுமை மீதுள்ள பாசம். அது ருசிக்கும்வரை அதிர்ஷ்டம் உள்ளே வாராது.

4. விருந்தில் உள்ள ருசி உயர்ந்த சாப்பாட்டின் ருசி. அதையும் கடந்து அதனுள் "ரஸா' உண்டு. விருந்திலும், வத்தல் குழம்பிலும் உள்ளது ஒரே "ரஸா'. அதை அனுபவிப்பது யோக அம்சம். அவருக்கு இரண்டும் ஒன்றே. விருந்தின் உயர்வும், வத்தல் குழம்பின் வறுமையும் தோற்றம். "ரஸா' இரண்டிலும் பிரம்மம். "ரஸா'வை அனுபவிப்பது பிரம்ம ஞானம், பிரம்ம ஸ்பர்சம்.

5. விருந்தை நாடாத மனம், வத்தல் குழம்பைப் பெருமையாக நினைக்காத மனம் யோக சமத்துவம் (equality) உள்ளது.

6. சமர்ப்பணம் செய்து சாப்பிடுபவர்க்கு அந்தச் சமத்துவம் "ரஸா'வைத் தெரிவிக்கும்.

7.சமர்ப்பணத்தால் வத்தல் குழம்பு விருந்தாவது திருவுருமாற்றம்.

8. எதையும் கேட்டுப் பெறும் மனமில்லாமல், தானே வருவதை ஏற்பது யோக நிலை.

9. அந்நிலையில் தரித்திரமோ, அதிர்ஷ்டமோ வந்தாலும், போனாலும் மனம் தத்தளிக்காது; ஆர்ப்பாட்டம் செய்யாது. அமைதியான ஆனந்தம் அனுபவிக்கும்.

***

924) வீண் பெருமைக்குத் தீவிர உணர்வில்லை. பெற்ற வெற்றியைப் பொருளாகப் பெறுதலுக்குத் தீவிரமுண்டு. சாதனைக்குத் தீவிர நிறைவுண்டு.

தீவிரம் பெருமைக்கில்லை; சாதனைக்குண்டு.

பெருமை தோற்றம்; சாதனை உள்ளுறை விஷயம்.

Ascent to Truth , சத்யாரோகணம் என்பது அன்னை எழுதிய கதை. சத்தியம் என்ற இலட்சியத்தையடைய இரு சாதகர்கள், ஒரு சமூக ஊழியன், ஒரு இலட்சியவாதி, ஒரு பரோபகாரி போன்ற பலர் சேர்ந்து முயல்கிறார்கள். சத்தியம் என்பது ஒரு மலை. அன்னை இதை ஒரு வரைபடமாகவும் வரைந்துள்ளார். முதற்கட்டம் செங்குத்தான மலை. அனைவரும் பெரும்பாடுபட்டு அதை முடித்துவிட்டவுடன், இதுவே முடிவு என ஒருவர் - பரோபகாரி - நின்றுவிடுகிறார். அடுத்த கட்டம் மேலும் சிரமமானது. இலட்சியவாதி அதுவரை வருகிறார். ஒவ்வொருவரும் ஒவ்வொரு கட்டத்துடன் நின்று விடுகிறார்கள். சாதகர் இருவர் மட்டும் மலை உச்சியை அடைகின்றனர். அதற்கும் அடுத்த கட்டம் உண்டு என்று அவர்கள் அதுவரை அறியவில்லை. அது உச்சியில் இருந்து மலையடிவாரத்திற்குக் குதிப்பது. அதை நம்பிக்கையால் செய்ய வேண்டும். செய்தால் அருணகிரிநாதரைச் சிவன் ஏந்திப் பிடித்தது போல் ஆண்டவன் காப்பாற்றுவான். இது யோக சத்தியம். தவம், துறவறத்தைக் கடந்த நிலை. சத்தியம் என்ற கொடியைக் கொடிமரத்தில் உயர்த்துவது யோகம். உச்சிவரை உலகத்தைச் சார்ந்தவர் வருவதில்லை. அது சாதகர்க்கே உரியது. முடிவு அதையும் கடந்தது. உலக வாழ்வு சிறியதானாலும், அமைப்பு இரண்டுக்கும் ஒன்றே.

  • இம்முயற்சியை சத்தியம் X பொய்; ஒளி X இருள்; நன்மை X தீமை;
    எனப் பலவாறான முரண்பாடுகளாகப் பிரிக்கிறார்கள். அவற்றுள் ஒன்று தோற்றம் X உள்ளுறை விஷயம்; அல்லது, பெருமை X சாதனை.
  • வளர்ந்த மனிதன் படித்துப் பட்டம் பெற்று, வேலை செய்து, திருமணமாகி, குடும்பம் நடத்தி, இலட்சியமானவனாக வாழ்வை முடிப்பது மிகச் சிறு காரியமானாலும், பூரணமான சிறு சாதனை.
  • படிப்பில் பட்டத்தைக் கடந்து, படிப்பைத் தொடர்ந்தால் நோபல் பரிசு பெறும் அளவுக்கு உயரலாம்.
  • வேலை செய்வதில் திறமை வெளிப்பட்டால் பெரும் தொழில் அதிபராக வரலாம்.
  • திருமணமாகி, குடும்பம் இலட்சியமாக நடத்தினால் வள்ளுவர், வாசுகியாகலாம்.
  • மனிதன் எதிலும் முடிவு வரை உறுதியாக இலட்சியத்தைக் கடைப்பிடிப்பதில்லை.
  • படிப்பு, முதல் பட்டத்துடன் முடிகிறது; வேலை, வசதியில் முடிகிறது; திருமணம் பிள்ளைப்பேற்றில் முடிகிறது.

சாதனையை யோகத்தில் தேடுபவர் அரிது.

படிப்பில் தேடுபவர் பில்கேட்ஸ், நாராயண மூர்த்தி ஆகிறார்.

திருமணத்தில் இலட்சியத்தை எட்டலாம்.

எதிலும், எந்த இலட்சியத்தையும் தடுப்பது பெருமை.

பெருமை, ஆதாயம், பிரபலம், அந்தஸ்து பெரும்பாலானோர்க்கு முடிவான கட்டம்.

  • எந்தக் கட்டத்திலும் சிறப்பை விடுத்துப் பெரியதை நாடுவது சிறப்பு.

தொடரும்.....
 


 


 

ஜீவிய மணி
 

அறிவு எழுமுன் அறியாமை அரசு செலுத்தும்.
 


 


 


 


 



book | by Dr. Radut