Skip to Content

12.தினசரிச் செய்திகள்

தினசரிச் செய்திகள்

கர்மயோகி

1990 மே முதல் தினசரி ஒரு செய்தி எழுத ஆரம்பித்தேன். அது 2005 வரை தொடர்ந்தது. செய்திகள் 20,000 ஆனபின் எழுதுவதை நிறுத்திவிட்டேன். இவற்றுள் முதல் 2000 செய்திகளை "யோக வாழ்க்கை'என்ற தலைப்பில் வெளியிட்டோம். செய்திகள் ஆரம்பத்தில் ஆங்கிலத்திலும், பிறகு தமிழிலும் எழுதப்பட்டன. கடைசி 1000 செய்திகள் டைப் செய்யப்படவில்லை. சுமார் 15,000க்கு மேற்பட்ட ஆங்கிலச் செய்திகளுக்குப் பொருத்தமான தமிழ்ச் செய்திகளையும் உடன் எழுதியிருக்கிறேன். இவை நேரடியான தமிழ் மொழிபெயர்ப்பில்லை. அவற்றுள் 700 செய்திகள் நேரடியாக அன்னை, பகவான் எழுத்தினின்று எடுக்கப்பட்டவை. மற்றவை இரு வகையின. ஒன்று, பகவான் கூறிய தத்துவக் கருத்துகளை வாழ்க்கைக்குப் பொருத்தி எழுதியவை. மற்றது, பொதுவாக வாழ்வுக்குரிய சிறப்பை வெளிப்படுத்துவது. The Life Divineஇல் 1452 பாராக்கள் ஒவ்வொன்றும் ஒரு கருத்தைத் தாங்கி வருகிறது. அன்னை எழுதிய 18 வால்யூம்களிலும், Agenda அஜெண்டா 13 வால்யூம்களிலும் உள்ள கருத்துகளை வாழ்க்கைக்குப் பொருத்தி எழுதப்பட்டவை இச்செய்திகள். ஒவ்வொரு செய்தியும் ஓர் அனுபவத்தை அடிப்படையாகக் கொண்டது.

ஆரம்ப நாட்களில் பல்கலைக்கழக ஆசிரியர்கள் 5 பேர் அன்னையை ஏற்று வரத் தொடங்கினர். அவர்களுக்கு சர்வீஸ் ஆகும்பொழுது Vice-Chancellorபதவி தேடி வந்தது. இதை நான் அறிவேன். அவர்கள் அறியவில்லை; பாராமுகமாக இருந்தனர். அந்த நாட்களில் Vice-Chancellor பதவி கல்லூரி ஆசிரியர்கட்குக் கிடையாது; அரசியல் அனுபவம் பெற்றவர்க்கேயுண்டு. என் அபிப்பிராயத்தை நான் அந்த அன்பர்களிடம் சொல்லியிருந்தால், அவர்கள் என்னைக் கேலி செய்திருப்பார்கள். அதனால் என்னால் அதைக் கூற முடியவில்லை. அருள் நெருங்கி வரும் பொழுது சிலர் பாராமுகமாக இருப்பார்கள்; மற்றவர் பதட்டப்படுவர்; வேறு சிலருக்குக் கோபம் வரும்; சந்தேகப்படுவதும் உண்டு. வந்த வாய்ப்பு அவரருகிலிருந்த அடுத்தவர்க்குப் போனதை நான் கண்டேன். ஒருவர் கோபப்பட்டுத் திட்டினார். எவரைத் திட்டினாரோ, பதவி அவருக்குப் போய்விட்டது. அடிக்கடி அன்னை சாதகர்களிடம், "நீங்கள் நான் கூறியதை ஏற்கவில்லை. எப்படிச் சம்பந்தமில்லாதவர் என்னை ஏற்றுக்கொண்டார் எனப்பாருங்கள்'' எனக் கூறுவார். இக்கருத்தை,

திட்டு அதிர்ஷ்டத்திற்கு டிரான்ஸ்பர் ஆர்டர்

என ஒரு செய்தி எழுதினேன். இந்தச் செய்திகளனைத்தும் ஜனவரிக்குள் websiteஇல் -www.karmayogi.net -போட்டுவிடுவார்கள். சுமார் 10,000ஆங்கில, தமிழ்ச் செய்திகளை ஏற்கனவே போட்டாயிற்று. இவற்றை நூலாக வெளியிட 20 புத்தகங்கள் வெளியிட வேண்டும்; அதற்குப் பல ஆண்டுகள் ஆகும். அன்பர்கள் இவற்றைப் படிக்கும்பொழுது சில அவர்கள் அனுபவத்தைப் பிரதிபலிக்கும்; மற்றும் சில வாழ்வில் பயன்படும்; வேறு சில செய்திகள் நெஞ்சைத் தொடும். அவர்கள் e-mail மூலம் தங்கள் அனுபவத்தையும், அந்தச் செய்தியையும் எனக்கு, அவர்கள் பெயர்,விலாசமுடன் அனுப்பினால் மலர்ந்த ஜீவியத்தில் வெளியிட முடியும்.

இதில் நான் விரும்புவது ஒன்றுண்டு. ஓர் அன்பர் இந்தச் செய்திகள் அனைத்தையும் படித்தபின், அவர் மனத்தைத் தொடும் ஒரு செய்தியைக் குறித்து எனக்கு எழுதினால், எனக்கு அது பயன்படும். 20,000 செய்திகளில் ஒன்று ஒருவர் மனத்தைத் தொடுகிறது என்பது அன்பர் மனநிலையைக் காட்டுகிறது. அத்துடன், மேலும் நான் அறிபவை,

. அன்பருக்கும், பகவானுக்குமுள்ள உறவை அது விளக்கும்.

. செய்தி ஏன் அவர் மனத்தைத் தொட்டது என அது கூறுவதால்,அப்பாணியை அறிய உதவும்.

. அது தமிழ்ச் செய்தியானால், ஆழ்மனம் அன்னையை ஏற்கும் வகையை அறிய முடியும்.

. அன்பர் மனநிலையை நான் அதிகமாக அறியும் பாங்கு அது.


 

****


 


 



book | by Dr. Radut