Skip to Content

05.அன்பர் கடிதம்

அன்பர் கடிதம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாய!

கண் திறந்தது:

நான் நாற்பது வயது முதல் வெள்ளெழுத்துக் கண்ணாடி அணிகிறேன். கடந்த பத்து ஆண்டுகட்குமுன் ஒரு நாள் இரவு எழுந்து செல்லும்போது கதவில் மோதிக்கொண்டேன். மீண்டும் சுதாரித்துத் திரும்பியபோதும், ஒரு பக்கம் மோதிக்கொண்டேன். முதலில் தூக்கக்கலக்கம் என எண்ணினேன். கண்ணைக் கசக்கிக்கொண்டு உற்று நோக்குங்கால் வலக் கண் முற்றிலும் தெரியவில்லையெனக் காணலாயிற்று. விளக்கைப் பொருத்திப் பார்த்தாலும் அப்படியே இருந்தது. மிகுந்த பயம் ஏற்பட்டதால் இரண்டு முறை வயிற்றுப்போக்கும் ஏற்பட்டது. இரவில் மற்றவர்கள் தூக்கத்தைக் கெடுக்காமல் இருக்க வாய்மூடிக்கிடந்தேன். இரவுப் பொழுது மிகநீண்டதாகக் கழிந்தது. கண்ணும் சிவந்து காணப்பட்டது. காலையில் வழக்கமாகச் செல்லும் மருத்துவரை அணுகினேன். அவர் "Loss of Central vision'' என்றுகூறி கண் நிபுணருக்குப் பரிந்துரைத்தார். அவர் கடுமையான சோதனைக்குப்பின் மருந்திட்டு அனுப்பினார். இது தொடர்ந்தது. ஸ்ரீ அன்னையிடம் என் நிலைபற்றிக் கூறித் தங்களைக் காண எனக்குக் கண் வேண்டும் என வேண்டினேன். நாளடைவில் இருள் விலகிச் சிறிது சிறிதாகப் பார்வை மீண்டது. இடைப்பட்ட மூன்று மாத காலத்தில் 2/3அளவு பார்வை மீண்டு, அப்படியே நின்றுவிட்டது. மருத்துவரைக் கேட்டால், "உங்கள் அதிருஷ்டம் இவ்வளவு மீண்டது பெரிது. இரண்டு கண்களும் இணைந்து செயல்படும்போது, இழப்பு தெரியாது'' என்றார். மேலும், "செய்தித்தாள், இன்னபிற படிப்பதிலும் சிரமம் இல்லை என்பதால் கவலைப்படவேண்டாம். பிரச்சினை ஏதும் இருப்பின் மீண்டும் வரவும்'' என்று கூறினார். புதிய கண்ணாடியும் மாற்றிக் கொடுத்தார். இந்த நிலை பத்து ஆண்டுகள் மாற்றமின்றி, துன்பமின்றிக் கடந்தன.

கடந்த செப்டம்பர் மாதம் கண் பார்வை குறைவதுபோலவும், பிரகாசமான ஒளியில் பனி மூடி இருப்பதுபோன்ற நிலையில், 20-30 அடி தூரத்தில் வரக்கூடிய மிகப்பெரிய வாகனம் கூட தெரியாத நிலை ஏற்பட்டது. காலை 8.00 மணிக்கு முன்னும், மாலை 4.00 மணிக்குப் பின்னும் இருள் மூடிய இரவு நேரத்திலும் பார்வை கூர்மையாக இருந்தது. பகல் நடமாடுவதே (வீட்டுக்கு வெளியில்) பெரிய கஷ்டமாகிவிட்டது. எனவே கண்ணாடி மாற்றலாம் எனக் கடைக்குப் போனேன். கண் பரிசோதனையாளர், "இரண்டு கண்களிலும் புறை வளர்கிறது. புறையை அகற்றினால் மட்டுமே நல்ல பார்வை கிட்டும். கண்ணாடி மாற்றத்தினால் யாதொரு பயனும் இல்லை'' என்றார். ஆனால் "அவசரமில்லை; வசதிப்படி ஆறு மாதத்திற்குள் மருத்துவம் பார்க்கவும்'' என்றார். இடைப்பட்ட காலத்தில் சிற்சில சூழ்நிலையில் மருத்துவம் தள்ளிப்போனது. ஜனவரி 2007, 29ஆம் தேதி கண் (ரண) சிகிச்சையாளரை அணுகி 8.2.07 அன்றும், 15.2.07அன்றும் 'கேடராக்ட்' ரண சிகிச்சை மேற்கொண்டு 15.3.07 அன்று கண்ணாடியும் வழங்கப்பட்டு, இன்று சாதாரண நிலை அடைந்துள்ளேன். பார்க்கவும், படிக்கவும், எழுதவும் இயலுகிறது. மிகத்தெளிவான பார்வை கிட்டியுள்ளது. சிகிச்சைக்குப்பின் முதலாக இதை எழுதுகிறேன். இது சார்ந்த என் அனுபவத்தினை இயம்பிட விரும்புகிறேன் (In tra-Occular Foldable Lens பொருத்தப்பட்டுள்ளது).

'சர்வேந்திரியாணாம் நயனம் பிரதானம்' என்றும், 'கண்ணிற் சிறந்த உறுப்பில்லை' என்றும், வாழப் பயன்படும் 'எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்' என்றும், 'வாழும் எவ்வுயிர்க்கும் கண்கள் இன்றியமையாதன' என்றும், கண்டும், கேட்டும், படித்தும் அறிந்த காரணத்தாலும், கடந்த பத்து ஆண்டுகளாக 1 3/4 கண்ணுடன் எனக்கும் மற்றவர்கட்கும் துன்பம் இல்லாது வாழ்ந்தாலும், இப்போது இந்த இடர்பாட்டை எப்படி கடக்கப் போகிறோம் என்ற எண்ணம் அலைக்கழித்தது. 'அன்னை இருக்கிறார், அவரின் ஆசி எப்போதும் உண்டு' என்று திடமாக எண்ணினாலும், ஜன்மவாசனை காரணமாக பயமும் அவநம்பிக்கையும் நடக்கவொண்ணாத கற்பனைகளும் தூக்கத்தைப் போக்கடித்தன. அன்னையின் ஆசிகளை வேண்டினேன். ஸ்ரீ அன்னை அவர்களின் அருளை மட்டுமே நாடினேன். "தாங்கள் என்னுடனே இருக்க வேண்டும், எனக்கு மருத்துவமும் தாங்களே ஆற்றவேண்டும், இதுவரை காத்ததைப்போல என்றென்றும் என்னைக் காக்க வேண்டும். நான் தங்களை எப்போதும் காணவேண்டும்'' என வேண்டிக் கொண்டு, மருத்துவமனைக்குப் புறப்பட்டேன். சட்டைப்பையில் அன்னை பிரசாதம் இருந்தது. நிம்மதியும், தைரியமும் வந்தது. எங்கள் வண்டி மருத்துவமனை நோக்கி பயணப்படும்போது, பாதி வழி என்று சொல்லலாம், ஒரு வண்டி எங்களை முந்திச் சென்றது. அதன் பின்பக்கக் கண்ணாடியில் ஸ்ரீ அன்னை அவர்களின் இரு கண்கள் மட்டும் காணப்படும் பெரிய படம் ஒட்டப்பட்டிருந்தது. ஸ்ரீ அன்னை உடன் வருவதாகவும், மருத்துவமனைக்கு அழைத்துச் செல்வது போலவும், தமது கண்களினால் கண்காணிப்பதுபோலவும் காணப்பட்டது. அதேபோன்று நேற்று கண்ணாடி பெற்றுக்கொண்டு வீடு திரும்பும்போது ஒரு வண்டி எங்களுக்கு முன் ஸ்ரீ அன்னை ஸ்ரீ அரவிந்தர் சின்னங்களுடன் பயணித்தது அன்னை அருளை மீண்டும் உறுதிசெய்தது. திரும்பும் திசையில் எம்மோடு வந்து மறைந்தது.

மேலும் மருத்துவமனை இயக்குனர் முதல், கடைசி பணியாளர்வரை மிகுந்த அன்புடனும், கருணையுடனும் என்னைக் கவனித்தனர். சிரமம் ஏதும் காணாமல், கண்களும் குணமாகி வருகின்றன. பத்து ஆண்டுகட்கு முன் பழுதான கண்ணும் முன்பைவிட நன்றாகச் செயல்படுவதைக் காண முடிகிறது. சிறிய எழுத்துகள் (viz.newspaper) படிக்க மட்டுமே கண்ணாடி தேவைப்படுகிறது. மற்றவைகட்கு வெறும் கண்களே போதுமானதாக இருக்கின்றன. மருத்துவக் கட்டணமும் சிரமமின்றி நிர்வகிக்கப்பட்டது.

என் ஒருவனுக்கு நல்லது நடக்க, அன்னை பகவான் அருளோடு, அழைத்துச் செல்லும் வண்டி, அதை ஓட்டும் டிரைவர், வழியில் செல்லும் வாகனங்கள், போக்குவரத்தினை ஒழுங்குபடுத்தும் காவலர், மருத்துவர், அவரது எண்ணற்ற உதவியாளர்கள், மின்சாரம், மருத்துவக் கருவிகள் என்று பட்டியலிட்டுப் போற்றக்கூடிய அனைத்து சக்திகளும் உதவி செய்தன என்பது மிகையல்ல. இந்நிலையில் 'ஒன்றை நினையாது முன்வந்து நிற்பினும் நிற்கும் எனையாளும் ஈசன் செயல்' என்பதைத் திறந்த கண்ணால் பார்க்கிறேன். மேலும் இத்தனை சக்திகளின் உதவியால் வாழ்வு பெறும் நானும் என்னால் ஆனதை இச்சமூகத்திற்கு ஆற்றவேண்டும் என்ற உணர்வு மேலோங்குகிறது. முதற்படியாக என் கண்களைத் தானம் செய்ய முன்வருகிறேன்.


 

****

 

ஸ்ரீ அரவிந்த சுடர்


 

பொறுப்பற்றதாகத் தெரியும் அளவுக்கு பற்றற்றிருப்பது எதையும் ஆரம்பிக்க மறுக்கும் சர்வாரம்பப் பரித்தியாகியின் நிலை.

பற்றற்ற நிலை பொறுப்பற்றதாகத் தெரியும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

உடல், உணர்வு, மனம், ஆன்மா என்று நான்கு பகுதிகளாகப் பிரிந்து ஜீவன் செயல்படுவதாலும், அவற்றிற்குள் தொடர்பு முழுமையாக இல்லாததாலும், முழுமையான வாழ்வுக்கும், முழுஜீவனுக்கும் பிரச்சினைகளும் சிக்கல்களும் எழுகின்றன.

தொடர்பு குறைந்தால் சிக்கல் எழும்.


 


 


 



book | by Dr. Radut