Skip to Content

10.யோக வாழ்க்கை விளக்கம் V

யோக வாழ்க்கை விளக்கம் V

                                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)   கர்மயோகி

895) இந்த ஞானத்தை ஜீவனில் உணர்வது, உணர்ந்து, உடலின் சொரணையையும் அழிப்பது, தார்மீக உணர்வை திருவுருமாற்றம் செய்வதாகும்.

சொரணை அழியும் திருவுருமாற்றம் அற்புதத்தைக் காட்டும்.

போட்டி, பொறாமை, சொரணை, "எதிரி", "மரியாதை" என்பது சாதாரண மனிதனுக்கு. இலட்சியவாதிக்கு இலட்சியம் பூர்த்தியாக வேண்டுமானால் போட்டி, பொறாமை, சொரணை, "எதிரி", "மரியாதை" ஆகியவை பறந்துவிடும். இலட்சியம் நிற்கும். ஆண்டவன் ஆணை என்றவுடன் தன்னுயிரும், மகன் உயிரும் அர்த்தமற்றவையாகிவிட்டன. மனைவியின் கற்புக்கும் சொரணையழிந்துவிட்டது. மோட்சம் இலட்சியம். அதன் எதிரே எல்லா இலட்சியங்களும், சொரணைகளும் அழிகின்றன. பரம்பரை எதிரிகள், பரம எதிரிகள் எலக்ஷனில் சேர்ந்து உறவாடுகின்றனர். பத்து வருஷமாக எவருடைய பேரைக் காதால் கேட்க முடியவில்லையோ, இன்று அவருக்குப் பதவி வந்துவிட்டால், பணம் வந்துவிட்டால், அவர் அழைப்பின்றி அவருடன் மனிதன் போய்ச் சேர்ந்துகொள்கிறான். சொரணை தடையாக இருப்பதில்லை. இது சரியா, நல்லதா என்பதைவிட மனிதனால் சொரணையைக் கடக்க முடியும் என்பது இந்நிகழ்ச்சி கூறுகிறது. ஆசைக்குச் சொரணை அழிவதுபோல் ஆண்டவன் மீதுள்ள பக்திக்குச் சொரணையழியும் என்பது தலைப்பு.

. ருசியற்ற பொருளைத் தொடர்ந்து சாப்பிட்டால், அதுவே ஒரு ருசியாக மாறும்.

. மண்ணாங்கட்டியைக் கணவனாக ஏற்றுக்கொண்டால் நாளடைவில் அவன்மீது பாசமும், பக்தியும் எழும் என்பது மனிதச் சுபாவம்.

.பூண்டு, வெங்காயம், முட்டை, மாமிசம் பேர் கேட்டாலே தாங்காது என்பவர் அவற்றைச் சாப்பிட ஆரம்பித்தால் அவை ருசிக்கும். அதில்லாமல் முடியாது என்ற நிலைக்கு ருசி வரும். சுட்ட அப்பளம், வற்றல் குழம்பை மனிதன் சாப்பிடமுடியாது. பெரிய விருந்தைப் பலநாள் சாப்பிட்டவர் வீட்டிற்கு வந்து வற்றல் குழம்பைச் சாப்பிட்டுவிட்டு இதுதான் நாக்கு கேட்கிறது என்றார். வறுமைக்குரிய உணவு பல தலைமுறை வறுமையால் பழக்கமாகி, ருசியாகவே மாறிவிட்டது; இது சுபாவம்.

. விஷம் அமிர்தமாவது திருவுருமாற்றம். விஷத்திற்கு ஆன்மாவுண்டு. அதுவும் வளரும். விஷத்தின் ஆன்மா வெளிவந்து வளர்ந்தால், விஷம் அமிர்தமாகும்.

நாற்றத்திற்கு ஆன்மாவுண்டு. அது வெளிவந்து வளர்ந்தால் அது மல்லிகை மணமாகும், இனிக்கும்.

. ஆசையால் மாறுவது மட்டமான சுபாவம்.

அவசியத்தால் மாறுவது மனிதச் சுபாவம்.

ஆன்மா வெளிவந்து மாறுவது திருவுருமாற்றம்.

எளிய செயலில் திருவுருமாற்றத்தைக் காணமுயன்றால் நாற்றம் மணமாகவும் மாறும்; கசப்பு இனிப்பாகும்; வலி ஆனந்தமாகும்; விஷம் அமிர்தமாகும்.

பூண்டும் வெங்காயமும் ருசிப்பதும், இனிப்பதும் அன்னை பக்தி அம்சமாக வெளிவந்து திருவுருமாறுவதாகும்.

மாமிசமும் காய்கறியும் ஒன்றே.

****

896) படபடப்பு சக்தியாவது, தீமை நல்லதை உயர்ந்த நல்லதாக்குவது, பிரிவினை பேரானந்த இனிமையை மீண்டும் கண்ட ஒற்றுமையால் காண்பது ஆகியவை நம் வாழ்விலும் உணர்விலும் காணும்வரை வெறும் சொற்களாகவே இருக்கும். உள்ளிருந்து ஆன்மா எழுந்து ஜடத்தை ஆட்சி செய்யும்வரை இதன் உண்மை புரியாது.

ஜடத்தை ஆன்மா ஆட்சி செய்தால் படபடப்பு சக்தியாகும்.

செல்வாக்குள்ள குடும்பங்களில் அனைவரும் அனைத்து விஷயங்களிலும் கட்டுப்பட்டிருப்பார்கள். சொல்லைத் தட்டி நடப்பது அக்குடும்பம் அறியாது. அப்படி நடந்து, கண்டிக்க வேண்டிய அவசியம் எழாது. அக்குடும்பத் தலைவர் புறப்படும்பொழுது கார் ஸ்டார்ட் ஆகவில்லை எனில், அது அவருடைய கட்டுப்பாட்டிலில்லை. கெடுபிடியுள்ள இடத்தில் பயந்து டிரைவர் அதையும் கவனித்து முதலிலேயே சரியாக வைப்பதுண்டு. அதற்கு கெடுபிடி மிகக் கடுமையாக இருக்க வேண்டும். அங்கும் புறப்படும்பொழுது ஒரு போன்கால் வந்து புறப்படுவது தடையாவது அவர் கையிலுமில்லை; எவர் கையிலுமில்லை. அந்த வீட்டிலும், "தடை, கார் ஸ்டார்ட் ஆகவில்லை, போன்கால் வருகிறது என்பவை 5 வருஷமாக இல்லை. இப்பொழுது வருகிறது" என்று சொல்லக் கேட்கலாம். அப்படிப்பட்ட கன்ட்ரோல் ஜடம் கட்டுப்படுவதாகும். நாம் செய்யவேண்டிய கடமைகளை, ஜடத்திற்குரிய கடமைகளைச் செய்தால் ஜடம் கட்டுப்படும். புத்தகம், பக்கட், துணி, பெஞ்ச் போன்றவற்றை நன்றாகத் துடைப்பது, அடுக்கிவைப்பது, தூக்கிப் போடாமலிருப்பது, சத்தமாக "டமால்" என வைக்காதது, காரை தினமும் கழுவுவதை நன்றாகச் செய்வது, புத்தகத்தில் கிறுக்கி எழுதாமலிருப்பது போன்றவை ஜடத்திற்குரிய கவனம். கவனம் கணிசமானால் ஜடம் கட்டுப்படும், ஒத்துழைக்கும்; குறுக்கே வாராது. குறுக்கே வருகிறது எனில், "என்னை நீ சரியாகக் கவனிக்கவில்லை" என அப்பொருள் கூறுவதாகும். பொருள்களைக் கவனிக்கப் பொறுமை வேண்டும். பொருள்களில் ஆன்மா உண்டு என்ற அறிவு பொறுமை தரும். அப்பொறுமை, கவனம், ஜடத்தை ஆட்சிசெய்யும்; தடையை விலக்கும். அந்நிலையில் தடையால் எழும் படபடப்பு மாறி power சக்தியாகும்.

. ஞானம் - ஜடத்தில் ஆன்மாவுள்ளது - சக்தியெழ உதவும்.

. இந்த ஞானம் பெற பிற பொருள்களை அலட்சியம் செய்யக்கூடாது. பயன்படுத்தும் பொருள்களை பவித்ரமாகக் கருதவேண்டும்.

. பொருள்களைப் பவித்ரமாகக் கருதும் முன், பிறரைப் பவித்ரமாகக் கருத வேண்டும்.

. அதுவே பிறர் கண்ணோட்டம் எனப்படும்.

. செயலுக்கு முன் யோசனை பிறந்தால், அதாவது அறிவு செயல்பட்டால், ஆத்மா மேலெழ வாய்ப்புண்டு.

. அறிவு செயல்படவேண்டுமானால், உணர்ச்சி நம்மை மீறக்கூடாது.

. உணர்ச்சி கட்டுப்படுவது பண்பு.

. அது உயர்வது பக்குவம்.

தொடரும்.....

****
 

ஜீவிய மணி

அகந்தை அழிந்தால் அகண்டத்தின் அமைதி எழும்.

ஸ்ரீ அரவிந்த சுடர்

அறியாமை நஷ்டத்திற்கு வித்து. அதை வலியுறுத்துவது ஆபத்தை விளைவிக்கும்.

நாம் வலியுறுத்தும் அறியாமை.

ஸ்ரீ அரவிந்த சுடர்

விற்பனைக்குரிய பலரும் பயன்படுத்தும் ஒரு பொருளை, பிரம்மத்தை வெளிப்படுத்தும் பொருளாகக் கண்டுபிடிக்க முடியும். உலகம் அதை உடனே ஏற்கும். அன்னையை உலகுக்கு அளிக்கும் முறை அது.

அன்னைக்குரிய பிரம்மம்.


 



book | by Dr. Radut