Skip to Content

12.யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

யோகசக்தி வாழ்வில் பலிக்கும் முறைகள்

                                                  (சென்ற இதழின் தொடர்ச்சி....)   கர்மயோகி

35. ஆழத்தில் ஜீவன் விழைவது கிடைக்கும்.

ஆழத்தில் அனைத்தும் உள்ளன.

அங்குக் கேட்டுப் பெற ஒன்றில்லை.

கேட்டால், கேட்டது கேட்டபடி கிடைக்கும்.

நாம் ஆழத்திலில்லை.

எப்படி ஆழத்தை அடைவது?

ஒரு பெரிய நாய் துரத்தும்பொழுது ஓடுபவன் எதை நினைக்கிறான் - ஓடித் தப்பிக்கமட்டுமே அவனுக்கு நினைவுண்டு.

முதன்மந்திரி வலம் வரும்பொழுது உன்னைக் கண்டு, நின்று, அழைத்துப் போய் மந்திரி சபையில் சேர்க்க முடிவு செய்தால், வேறு எது நினைவு வரும்?

ஆபத்தும், ஆனந்தமும் ஆழத்திற்குப் போய் அனைத்தையும் மறந்து விடும்.

அன்னை ஆபத்தையும், ஆனந்தத்தையும் கடந்தவர்.

அப்படி அன்னையை நினைத்தால் உலகம் மறந்து, பரவசம் எய்தும் நேரம், ஆழத்தின் வாயில் திறக்கும்.

திறந்த வாயிலினுள் நுழைந்த மனிதன் திரும்பிப் பார்க்காமல் சென்றால் ஆழத்தின் வாயில் திறக்கும்; வாயிலைத் திறக்கலாம்.

நுழையவும் முடியும். திறந்த வாயிலே குரல் கொடுத்து அழைக்கும்.

மனிதன் திரும்பாமல் செல்வது மனத்தின் முடிவு.

வாயில் திறப்பது அருள்.

உள்ளே நுழைவது அருள்.

திரும்பிப் பார்க்காமல் நெறியாகச் செல்வது நம்பிக்கை, பக்தி, உறுதி.

உறுதியுடையவர்க்கு உயர்வு உறுதியாகக் கிடைக்கும்.

பெரிய விஷயத்தில் முயல்வது பெருநெறி.

எங்கு முயன்றாலும் பலன் ஒன்றே.

முடிந்த இடத்தில் முயன்றுபெறுவது வெற்றி.

பெற்ற வெற்றிப் பெரியதற்கு வழிசெய்யும்.

வாயிலைக் கடந்தபின் வாழ்வின் ருசி இழுக்கும்.

அருள் மேலே அழைக்கும்.

கீழே போக விரும்புபவனை அருள் தடுக்காது.

அருள் அதையும் செய்ய பூர்வஜென்மப் புண்ணியம் தேவை.

எப்பொழுதாவது நம்செயலை இறைவன் ஏற்றிருந்தால் அருள் அதையும் செய்யும்.

அந்த அருளும் அதை அனுதினம் செய்யாது.

மனிதன் இறைவன்.

இறைவன் பெற்ற சுதந்திரம் இவனுக்கும் உண்டு.

சுதந்திரத்தை இழக்கும் சுதந்திரத்தை மனிதன் நாடுவது அவன் பிரம்ம உரிமை.

அது குதர்க்கம்.

குதர்க்கம் தன்னையழித்துக்கொள்ளும் உரிமையை நாடினால், அதன் உரிமையைத் தடுக்க ஒரு சக்தியில்லை.

விகல்பமும், குதர்க்கமும் தவிர மற்ற அனைத்திற்கும் அருள் உண்டு.

அருள் ஆழத்திற்கு அழைத்துப் போகும்.

ஆழம் அனைத்துமுடையது; அருளும் உடையது.

அருள் கேட்காமல் செயல்படுவது.

36. நினைவைக் கடந்து செல்வது.

நினைவே மனிதன்.

நினைவு என்பது மனம்.

நினைவு நெஞ்சமாகவுமிருக்கும்.

நினைவு கண்டது, கேட்டது, அனுபவித்ததைப் பதித்திருக்கும்.

நாம் இதுவரை அனுபவித்தது இனி வரப்போவதில்லை.

இனி வரப்போவது இதுவரை நம் வாழ்விலில்லாதது.

அன்னை தரப்போவது இதுவரை அவனியிலில்லாதது.

நமக்கு வேண்டிய எதுவும் நினைவுக்குளில்லை.

அதனால் நினைவைக் கடந்து செல்லவேண்டும்.

காற்றைக் கையில் பிடிப்பது, மௌண்ட் ரோடில் போகும் போக்குவரத்தை நிறுத்துவது, பெய்யும் மழையைத் தடம் மாறி பெய்யச் சொல்வது, பிறர் நம்மைப் பற்றி நினைப்பதை நாம் நிர்ணயிப்பது, மழைக்கு முன் எழும் ஈசல் கூட்டத்தை கையால் தட்டி விலக்குவது போன்றவை நினைவைக் கடப்பது.

இது முடியாத ஒரு முறையானால், ஏன் அதைக் கூற வேண்டும்?

முடியாது என்பது உண்மை. அது முடியக்கூடிய முறையுண்டு என்பதும் உண்மை.

தானே எழும் நினைவு கட்டுப்படாது.

நாமே விரும்பி, கடந்ததை நினைவுகூர்ந்து, அதை நினைத்துப் பேசி, முறையிட்டு இரசிப்பதை நிறுத்த முடியும்; அது கட்டுப்படும்.

தியானத்தில் நினைவு நிற்கும்.

தியானத்தை மேற்கொண்டால், நினைவைக் கடந்து செல்ல முடியும்.

அன்னை நினைவு, நம் நினைவைக் கடந்தது.

ஏதோ ஒரு முறையால் நினைவைக் கடந்துவிட்டால் அன்று நடப்பவை புதியதாக இருக்கும்.

1) அன்று பிரச்சினைகளிருக்கா.

2) புதிய வாய்ப்புகள் வந்தபடியிருக்கும்.

இந்த அனுபவத்தைக் கண்டவர் நினைவைக் கடக்கும் பல கட்டங்களை அறியலாம். அவை,

.ஓடும் எண்ணங்கள்,

. நாமே எழுப்பும் எண்ணங்கள்,

. உறுத்தலான கருத்துகள்,

. குற்ற உணர்வின் குறைகள்,

. ஆழ்ந்த அபிப்பிராயங்கள்,

. வெறுப்பான விருப்புகள்,

. சுபாவத்திற்குரியவை,

. ஆழ்மனம் ஏற்ற அகன்ற கருத்துகள்.

இவற்றைக் கடந்து செல்லும் முறையொன்றே.

நிலைக்கேற்பத் தீவிரம், ஆழம் தேவை.

நம் எண்ணம் நிறைவேற, பூரணமாகிப் பொலிவு பெற, இம்முறை ஒரு பொன்னான வழி.

. இதை ஆரம்பிக்க முடியாது.

தீவிரமானவர்க்கே இது பலிக்கும்.

முதற்கட்டம் பலித்தால், முடிவுவரை பலிக்கும்.

முயற்சி இன்றியமையாதது.

ஒவ்வொரு கட்டத்திற்கும் உரிய முயற்சியைத் தவறாது மேற்கொள்ள வேண்டும்.

எளிமையாகத் தோன்றும், சிறப்பான முறையிது.

ஏன் இதற்குச் சிறப்புண்டு?

மனிதன் மனத்தாலானவன்; மனம் நினைவாலானது.

எனவே நினைவே மனித ஜீவனின் ஆன்மீக மையம்.

37. ஆழ்ந்த உறுத்தலை ஆராய்ச்சியால் கரைப்பது அல்லது எரிச்சல்படாமல் இருந்து அழிப்பது.

உறுத்தல் என்பது உள்ளபடி உறுத்தலில்லை. நாம் ஆழ்ந்து, விரும்பி எடுத்துக் கொள்ள வேண்டிய கருத்தாகும். அதை நாம் எதிர்ப்பதால் உறுத்தல் எழுகிறது.

உள்ளபடி உறுத்தலுக்கு உலகில் ஒரு விஷயமில்லை.

நம் குறையை ஒருவரிடம் கூறியபொழுது அந்த விஷயம் மனதில் உறுத்தலாக மாறுகிறது.

உறுத்தல் நம் இயலாமை.

உலகில் நம் நிலைமை குறைவாக இருப்பதை நாமே உணரும் நிலை உறுத்தல்.

நமக்கு அவை பிடிக்கவில்லை, ஏற்கமுடியவில்லை என்பதால் அது உறுத்துகிறது.

நான் விரும்பிய பெண் வேறொருவனை விரும்புகிறாள் என்பது உறுத்தல்.

நம்குடும்ப இரகஸ்யம் எவருக்குத் தெரியுமோ, அவர் நினைவு உறுத்துகிறது.

நாலுபேர் எதிரில் மானம் போன நிகழ்ச்சி மனத்திற்கு உறுத்துகிறது.

குறை உறுத்துகிறது. குறையை விலக்கினால் உறுத்தலிருக்காது.

ஆராய்ச்சி பலன் தரும்.

அது குறையை விலக்கும்.

அது ஒரு குறையென்று, ஆயிரம் இடங்களில் தடை செய்கிறது.

குறையை அகற்றினால், ஆயிரம் விஷயம் தலைகீழே மாறும்.

அவசரப்பட்டுத் திருமணம் செய்து, நிதானமாக அனுபவிக்கிறான் என்பது சொல்.

இப்படி அவசரப்படுபவர், பணத்தை அவசரமாக நாணயமற்றவரிடம் கொடுப்பார்; வேலை செய்யாத டெக்னாலஜியை அவசரப்பட்டு வாங்குவார்; அவசரப்பட்டுத் தேவையில்லாத ஆப்பரேஷன் செய்வார்; அவசரமாகக் குறைந்த விலைக்கு மனையை விற்பார்.

ஆராய்ச்சி அவசரத்தை உணர்த்தும்.

அவசரமான சுபாவம் மாறாது.

அன்னையை ஏற்றால் அதுவும் மாறும்.

ஏற்கனவே அவசரப்பட்டுச் செய்த திருமணத்தில் புதிய நிலையெழுந்து சௌகரியம் எழும்;

நாணயமற்றவரிடம் கொடுத்த பணம் வரும்; டெக்னாலஜி வேறொரு காரணத்தால் வேலை செய்ய ஆரம்பிக்கும்; செய்த ஆப்பரேஷன் நல்ல பலன் தரும்; குறைந்த விலைக்குப் போன மனைமூலம் வேறு ஒரு ஆதாயம் வரும்.

அவசரம் போய் பொறுமை வரும்.

இது உலகில் நடக்காதது.

அன்னையிடம் மட்டும் நடக்கும்.

அன்னையிடம் நடக்காதது இல்லை.

அவசரமும் நிதானமாகும்.

அவசரம் நிதானமானபின் வாழ்வு உயரும்.

நாமிருந்த நிலையைவிட்டு நாம் நுழைய முடியாத உயர்வுக்கு வருவோம்.

அவசரத்தை ஆராய்ந்ததுபோல் ஆராய ஆயிரம் உள்ளது.

சிலவற்றை ஆராய்ந்தாலும் பெரும்பலன் கிடைக்கும்.

ஆராய்ச்சி தெளிவு தரும்.

தெளிவு தெம்பு தரும்.

நம் இலட்சியம்: வந்த வாய்ப்புகளெல்லாம் பலித்து, உள்ள பிரச்சினை எல்லாம் வாய்ப்பாக மாறி, நம் வாழ்வு அன்னை வாழ்வாக வேண்டும்.

அதன் அறிகுறியாக ஒரு பெரிய நல்லது நடக்கும்.

அப்படி நடந்தால் நாம் அதுவே முடிவு எனத் திளைப்போம்.

அதுவே ஆரம்பம் என்பது உண்மை.

ஆதாயத்தையும் அன்னைக்காகத் தேடுவது நல்லது.

அன்னையை அன்னைக்காகத் தேடும் மனநிலை, மனத்தைக் கடந்த உயர்ந்த நிலை.

உலகம் உயர்ந்ததாகக் கருதும் நிலையைக் கடந்த நிலை அன்னை நமக்களிப்பது.

அது பணத்தால், பதவியால், பிரபலத்தால் பெற முடியாதது.

பெறமுடியாததைப் பெறமுடியும் நிலை பெரிதன்றோ!

பெரியது உயர்ந்தது, உன்னதமானது.

38. உயர்ந்த வலிமையை உயர்த்துவது.

பேச்சுத்திறன், நிர்வாகம், பொறுமை போன்றவை சிலருக்கு உயர்வாக அமையும்.

பொறுமை ஒருவருக்கு வலிமையாகவுள்ளது எனில் அதை உயர்த்துவது இம்முறை.

வலிமையாகவுள்ளது எனில் மற்றவர்களைவிட வமையாகவுள்ளது எனப் பொருள்.

எவருக்கும் பொறுமை 10%க்குக் குறைவாக உள்ள இடத்தில் ஒருவர் பொறுமை 20% இருந்தால் அவரைப் பொறுமையின் பொக்கிஷம் என்பர். ஆனால் பொறுமையின் தரத்தைக் கருதும்பொழுது இவர் பொறுமை 80% குறைவாகவுள்ளது. இந்த 80%1% உயர்த்துவது நடவாதக் காரியம். ஏனெனில் இந்தப் பொறுமையே நம் முழுமுயற்சியாலானது. 90 மார்க் வாங்கும் பையன் 93 வாங்க முயன்றால் அது 89 ஆவது அனுபவம். கலெக்டருடன் நெருங்கிய நண்பர் மேலும் நெருக்கத்தை உயர்த்த முயன்றால், ஒரு டெபுடி கலெக்டரிடம் அதிகத் தொடர்பு கொள்ள முயன்றால், அங்கு ஆபீஸுக்குள் உள்ள கட்சி வெளிவரும். கலெக்டர் வேண்டியவர் என்பதால் டெபுடி கலெக்டர் முகம் கொடுத்துப் பேசமாட்டார். பொறுமையை உயர்த்த முயன்றால், நேற்றுப் பொறுத்துக் கொண்டவைகளை இன்று பொறுக்க முடியாதுஎனக் காண்போம். இதற்கு வழியுண்டா?

90 மார்க் மனப்பாடம் செய்து வாங்கியிருந்தால், பாடத்தைப் புரிந்து கொள்ள முயன்றால், அடுத்தது 97 மார்க் வரும். கலெக்டரிடம் பழகுபவர் மேலும் சற்று அடக்கமாக இருக்க நினைத்தால், கலெக்டர் வேண்டியவர் என்ற பெருமையோடு பேசுவதைக் குறைத்தால், டெபுடி கலெக்டர் தாமே வந்து பழகுவார். பொறுமையைக் கட்டுப்பாட்டால் அதிகப்படுத்த முயலாமல், அறிவால் உயர்த்த முயன்றால் அது 80லிருந்து 90க்குப் போகும்.

. பழைய முறை பகுதி.

. புதிய முறை முழுமை.

. எதை உயர்த்த வேண்டுமோ அதற்குள்ள அடிப்படையை வலுவாக்குதல் முறை.

படிப்புக்கு அடிப்படை புத்திசாலித்தனம்; பழக்கத்திற்கு அடிப்படை அடக்கம்; பொறுமைக்கு அடிப்படை நிலைமையைப் புரிந்துகொள்வது. புத்திசாலித்தனத்திற்கும், அடக்கத்திற்கும், புரிவதற்கும் அடிப்படை மௌனம்.

மௌனம் உயர்ந்தால் அனைத்தும் உயரும்.

அதற்கு அடுத்தது ஜோதி.

அதையும் கடந்தது ஞானம்.

அதற்கடுத்தது தெய்வீகம்.

முடிவானது சத்தியஜீவியம்.

இவற்றை உயர்த்திப் பலன் பெறுவது யோகிக்குரியது.

நமக்குரியது வாழ்வு.

வாழ்வு சிறப்புப் பெற ஓர் அடி எடுத்துவைத்தால் போதும்.

அதுவே உள்ள வலிமையை ஒரு படி உயர்த்துவது.

ஒரு படியும் உயர்த்தலாம்; பல படிகளும் உயர்த்தலாம்.

நம்மால் முடிந்த அளவுக்கு உயர்வதே நம் கடமை.

அத்தனையும் மௌனத்திற்கு முந்தைய நிலைகள்.

மனம் உயர்வை நாடுவது உண்மையாக இருப்பதே அவசியம்.

மனம் அன்னையை நாடினால் உயர்வை நாடும்.

ஆன்மீகத்தில் சிறிய முயற்சி வாழ்வில் பெரிய பலன் தரும்.

யோகசக்தியை நல்வாழ்வுக்குப் பயன்படுத்துவதே கொள்கை.

நேரடியாக மௌனத்தை நாடினால், நம் முயற்சியின்றி வலிமை உயரும்.

அன்னையை அதிகமாக நாடினால் மௌனமும், அதன் பகுதியான வலிமையும் தானே நம்மை நாடும்.

அன்னை நம்மை நாடும் மனநிலையை ஏற்பது நல்லது; அதைவிட உயர்ந்தது.

மனத்தைக் கடப்பதும் உயர்ந்த முறை.

முறைகள் பல; மூலம் ஒன்று.

மூலத்தை நாடுவது சிறப்பு.

அந்த மூலம் நாமேஎன அறிவது முறைகளைக் கடந்த சிறப்பு.

39. நடக்கும் என்பதால் நடத்திக் கொள்ளாதே.

பொதுவாக இதைச் சரியென நினைக்கத் தோன்றும்.

மாமியார் கேட்கவில்லை என்பதால் மருமகள் எந்தப் பொறுப்பையும் ஏற்காதது, அதிகாரி கண்டிக்கவில்லை என்பதால் ஆபீஸ் முடிய 1 மணி முன்னதாக வீட்டிற்குப் போவது, கடன் கொடுத்தவர் கேட்கவே இல்லை என்பதால் திருப்பிக் கொடுக்க வேண்டாம் என்பது நம் வாழ்வை அடுத்த தாழ்ந்த நிலைக்குக் கொண்டுவரும்.

தலைவனாக இருக்க வேண்டியவன் தொண்டனாக இருப்பான்.

நம்மைப் போன்ற அனைவரும் அதிகாரம் செய்யும்பொழுது நாம் அடங்க வேண்டியிருக்கும்.

நட்பில், உறவில் எவற்றையெல்லாம் செய்யக்கூடாதோ அவற்றை தவறாது முனைந்து ஆர்வமாகச் செய்து ஆர்ப்பாட்டம் செய்தவருக்கு அந்த period 'திசை' முடிந்த மறுநிமிடம் எந்தப் பாதகத்தை எவருக்கும் செய்யக் கூடாதோ அவற்றை அனைவரும் ஒரே சமயத்தில் இவருக்குச் செய்தனர். ஸ்தாபனத் தலைவரிடத்திலிருந்து தொண்டருக்கும் கீழே போனார். ½ ரூபாயை மிச்சம் பிடிப்பதால் அனாவசியமாக ஒருவர் 1 ½மைல் நடக்க வேண்டியிருந்தது. அதையும் ஒருவர் 6 மாதம் செய்தார். நெடுநாள் கழித்து நேரடியாகச் சம்பந்தமில்லாதவர்க்கு கார், டிரைவர், செலவு தேவையில்லாமல் வருஷக்கணக்காகக் கொடுக்க நேர்ந்தது.

இன்று நடத்திக்கொண்டால், எதிரான காரியம் நாளை தானே தன்னை நடத்திக் கொள்ளும். இது தவறாது.

. உயர்மட்டத்தில் பழகினால் நம்மை அடுத்த, அடுத்த கட்டத்திற்கு அனுப்பிக் கடைசியில் வாழ்வு வைத்துவிடும்.

அன்னையிடம் பலன் விரைவாக வரும். இதுவும் உடனே நடக்கும்.

. இது சரியான மனப்பான்மையில்லை. அதனால் மாறிக் கொள்வது சரி.

. 'எனக்கு நடக்குதே' என்பது அறிவுடைமையாகாது; அறியாமை ஆகும்.

. மாமனார் வீட்டு சௌகரியம், ஆபீஸ் விஷயம், கிளப் வாழ்வு, நண்பர் உதவி, உறவினர் பழக்கத்திற்கு இது நேரடியாகப் பாதகம் விளைவிக்கும்.

எவருக்கும் தெரியாமலில்லை. சௌகரியத்தை விடமுடிவதில்லை.

பிறர் பொருளைப் பெறுவது, சௌகரியத்தை அனுபவிப்பதைவிட பிறரை மட்டமாகப் பேசுவது மனிதன் இரசிப்பது.

திருப்பி பதில் சொல்லத் திராணியில்லாதவரைப் பேச வாய் துடிக்கும்.

அவர்கட்கு அது திரும்பி வாராமலிருக்காது.

நெல்லால் அடித்தால், கல்லால் அடி விழும்.

எல்லோரையும் துச்சமாகப் பேசுபவர் ஒருவரை, அவர் கடைக்கு வருபவர் அனைவரும் - சிறியவர் உள்பட - 'முருகேசா' எனப் பெயரிட்டு அழைக்கும் நிலை 1930இல் ஏற்பட்டது; தடுக்க முடியவில்லை.

நடக்கும் என்பதால் நடத்திக்கொள்பவரை உலகம், வாழ்வு முடியும் என்பதால் அவமானப்படுத்துவர்.

ஆபீஸுக்கு வருபவர்களை நிற்கவைத்துப் பேசுவது அநாகரீகம்.

அவரை அவர் தகுதிக்கு மேற்பட்ட இடத்தில் உட்கார வைத்தனர்.

சந்தர்ப்பம் அந்த இடத்தையே எடுத்துவிட்டது.

எது சரியோ அதைச் செய்ய வேண்டும்; எது முடியுமோ அதை முடியும் என்பதால் செய்யக்கூடாது.

40. மனத்தை அடிமையிலிருந்து விடுதலை செய்.

(.ம்.) பணத்திற்கு அடிமையாகாதே.

மனிதன் அடிமையாவதில் சிறப்புப் பெற்றவன்.

மண், பெண், பொன் அவனை அடிமையாக்கும்.

தாசி மடியில் படுத்திருப்பவனுக்கு தாயார் நினைவு வாராது.

மண்ணிற்கு மகத்துவம் வந்துவிட்டால் மனம் கல்லாகும்.

பொன் பொலிவு பெற்றது. அது எதிரிலிருந்தும் எவரும் கண்ணில் படுவதில்லை.

அடிமைத்தனத்தை ஆவலாக ஏற்கும் மனநிலை அடிமைத்தனத்திற்கு வலிமை தருகிறது.

பணத்தை உற்பத்தி செய்தது மனம்.

மனம் உணர்ச்சியைவிட உயர்ந்த கருவி.

உழைத்துச் சம்பாதித்தது உடல்.

உணர்ச்சி தோற்றத்தில் மகிழ்ந்து உடலையும், மனத்தையும் மறந்து தன் நிலையிழந்து பணவசப்படும் பரவசம் அடிமை.

அடிமைக்கு அவன் நிலை பூரணம் தரும்.

அவனை அவனிடமிருந்து எளிதில் காப்பாற்ற முடியாது.

உணர்ச்சி மட்டும் ஒருவனை வழிநடத்துமானால், அவன் அடிமையாகக் கூடியவன்.

அவனுக்கு அறிவிருந்து தெளிவில்லாவிட்டால், அந்த அறிவு அடிமை நிலையில் உள்ள சௌகரியங்களை அவனுக்கு எடுத்து அறிவுறுத்தும்.

இவ்வழி உணர்ச்சி பணத்திற்கு அடிமையாகிறது;

மனம் உணர்ச்சிக்கு அடிமையாகி,

அடிமை நிலையை அசைக்க முடியாததாக்கும்.

இது பலர் நிலை.

இந்நிலையிலுள்ளவருக்குக் கதிமோட்சம், விடுதலையில்லை.

அவர்கள் அறிவின் துணைகொண்டு உணர்ச்சியின் பிடியிலிருந்து மீள வேண்டும்.

தத்துவமாகப் புரிந்து, நடைமுறையாகச் செயலில் வரும் வரை காத்திருக்க வேண்டும்.

புரிவது எளிது; புரியப் பிரியப்படுவது அரிது.

புரிந்தவுடன் நாம் பணத்திற்காக அலைவது குறையும்.

புரிந்ததை மனம் ஏற்றால் 40 முறை நாம் நாடிப்போன பணம் 4 முறையாவது நம்மை நாடிவரும்.

கடன் கொடுத்து மார்க்கட்டைப் பிடித்தது மாறி, டெபாசிட் கொடுத்து சரக்கு வாங்கும் நிலை எழும்.

இது திருவுருமாற்றம்.

பெண்ணென அலைந்தது போக, பல வரன் நம்மைத் தேடி வரும்.

சற்று மாறியவுடன் மனம் மீண்டும் பழைய நிலையை நாடும்.

போக்கைக் கண்டபின் மனம் மாறாமலிருப்பது உறுதி.

நிலை மாறினால் உலகம் உன்னை நோக்கி மாறும்.

அன்பருக்குள்ள அனைத்து அருளும் செயல்படத் தேவையான பல மனநிலைகளுள் இது முக்கியமான ஒன்று.

41. பிடி கொடுக்காமல் பேசுவதைத் தவிர்.

பிடி நம் கையில் இல்லாவிட்டால் வாழ்வு தெளிவுபடாது.

எந்த பேரத்திலும் இரு சாராரும் தங்கள் பிடியை விடாமல் பேசுவர்.

கர்மம் செயல்படும் வாழ்வுக்கு அது சட்டம்.

அருள் செயல்படும் உயர்ந்த வாழ்வுக்கு பிடியை நாமேவிட்டுக் கொடுப்பது சட்டம்.

பிடி என்றால் என்ன? வரையறைக்குட்பட்ட வாழ்வுக்குரியது பிடி.

பேச்சு எழுத்திலில்லாவிட்டால் பொய் சொல்ல வாய்ப்புண்டு.

அதனால் எழுத்து அவசியம்; அது பிடி.

அப்படிப்பட்ட பிடியை இரு முறை இரண்டு பேரிடம் விட்டுக்கொடுத்ததால் ½ பங்கு இலாபம் என்ற பேச்சு முழுச் சொத்தாகவும், 1/3 பங்கு லாபம் முழுச் சொத்தாகவும் மாறியது.

பிடியை விடாவிட்டால் உள்ளது கிடைக்கும்.

பிடியை வலிமையிலிருந்து பண்பாக விட்டுக்கொடுத்தால் உபரியாக வரும்.

கணவன் மனைவியிடையே இருவரும் பிடியைப் பாராட்டாவிட்டால் வாழ்வு மனம் நிறைந்த வளமாக இருக்கும்.

NTP (Nuclear Proliferation Treaty) அணுகுண்டு பரவுவதைத் தடுக்கும் ஒப்பந்தம்: அமெரிக்கா எவரும் அணுகுண்டு தயாரிக்கக் கூடாது எனக் கேட்கிறது. ஆனால் தான் மட்டும் அந்தச் சட்டத்திற்கு உட்படாது என்று கூறுகிறது. இது பிடியை விடாமல் செய்யும் பேரம்.

"அனைவரும் எல்லா அணுகுண்டுகளையும் அழித்துவிட்டு இனி அவற்றைத் தயாரிக்கமாட்டோம்'' என்று முடிவு செய்யக் கேட்பது அறிவுடைமை; பிடியை விடுவதன்று. பிடியை விடுவது என்றால், குருஷேவ் "ரஷ்யா அணுச்சோதனை செய்யாது'' என தானே செய்த முடிவு பிடியை விடுவது.

வட்டிக்கடைக்காரன் சொத்து வாங்கும்பொழுது விற்பவனை "எனக்கு இந்த விலைக்கு விற்கச் சம்மதிப்பதாக'' எழுதிக் கேட்பான். ஒப்பந்தம் இருவரும் பொறுப்பேற்கவில்லையெனில் செல்லாது. பணம் பேசுகிறது.

அது 'உன் பிடியை என்னிடம் கொடு' எனக் கேட்டது.

இன்று போய் நாளை வா என்பது பிடியை விடுவது.

பிள்ளை வீட்டார் எதுவும் கேட்காதது பிடியை விடுவது.

இதன் பலனை அனுபவிப்பவர் நன்றியை உணராமல் 'இப்பொழுதெல்லாம் எவரும் எதுவும் கேட்பதில்லை' என்பது பிரச்சினையை உற்பத்தி செய்வது.

பிடியை விடுவது சரி.

அதைப் பாராட்டுவது அவசியம்.

எவரிடமும் பிடியை விட்டுக்கொடுப்பவரிடம் எல்லோர் பிடியும் தானே வந்து சேரும்.

சமர்ப்பணம் என்பது நம் பிடியை விடுவதாகும்.

தொடரும்....

****


 



book | by Dr. Radut