Skip to Content

14. லைப் டிவைன் - கருத்து

லைப் டிவைன் - கருத்து

மனிதனுடைய எண்ணம் பிரம்மத்தில் பூர்த்தியாகிறது. (P.689)

மனம் மூன்று பிரிவுகளாக உள்ளது. உடலும் மனம் உண்டு. அதை ஜட மனம் என்கிறார். அதன் மையம் மூளை. உணர்வுக்கு மனம் உண்டு. அதன் இருப்பிடம் நரம்பு மண்டலம். உணர்ச்சி, கிளர்ச்சியைக் கடந்த தூய்மையான மனம் உண்டு. அதையே மனம் எனக் குறிப்பிடுகிறோம். இவை மூன்றிற்கும் உச்சகட்ட இலட்சியம் உண்டு.

  1. ஜடமான மனம் முடிவாக எதையும் நம்புவதில்லை (agnosticism).
  2. உணர்வின் மனம் மாயையை இலட்சியமாகக் கொள்கிறது.
  3. மனம் - தூய்மையான மனம் - பிரம்மத்தை இலட்சியமாக நாடி அதில் பூர்த்தியாகிறது.

 உடலுக்குத் தொடு உணர்ச்சியுண்டு. அதற்குக் கண் தெரியாது, காது கேட்காது. மனத்தையும் ருசியையும் அறியும். தொடுவனவற்றை மட்டும் உடல் அறியும். தன்னால் தொட முடியாதவற்றை அதனால் ஏற்க முடியாது, நம்ப முடியாது. அதனால் உடலின் மனம் எதையும் நம்புவதில்லை (agnostic). பிராணன் என்பது உயிர் (vital). அதற்குப் பழக்கம் புரியும், பழகியவரை நம்பும். திருடனானாலும் பிரியமாகப் பழகினால் அவனை நம்பும். எவ்வளவுக்கெவ்வளவு பொய்யாக இருக்கிறதோ அவ்வளவுக்கவ்வளவு அது வசீகரமாக, ருசியாக, கவர்ச்சியாக இருக்கும். பொதுவாக, சமூகத்தில் அளவுகடந்து பிரபலமானவர்கள் தறுதலைகளாக, ஆபத்தானவர்களாக இருப்பார்கள். உணர்வின் மனம் இல்லாததைப் பிரியமாக நம்பும். அது மாயையை வழிபடக்கூடியது. தூய்மையான மனம் எண்ணத்திற்குரியது. அது நாடுவது கருத்து. நாட்டு மக்கள் அனைவரும் ஓட்டுப் போட வேண்டும் என்பதைத் தொட்டுப் பார்க்க முடியாது; ருசித்துப் பார்ப்பது எளிதன்று என்று புரியும்; புரிந்ததை ஏற்கும்; ஏற்றால் ஏற்றபடி நடக்கும். தேர்தலன்று எங்கிருந்தாலும் ஊருக்கு வந்து ஓட்டுப் போடவேண்டும் என முடிவு செய்யும். செய்த முடிவுபடி நடக்கும். இதுவே நம் மனத்தின் பகுதிகளில் உச்சகட்டமானது, உயர்ந்தது, உன்னதமானது. மனிதன் இலட்சியவாதி. அதனால் கருத்தை ஆராய்ந்து ஏற்கிறான். அப்படி ஒரு கருத்தை ஏற்றால், அதைவிட உயர்ந்த கருத்து எதிரே வந்தால், அதை ஆராய்வான். அது உயர்ந்ததானால் அதை ஏற்பான். அறிவாளி உயர்ந்த இலட்சியங்களை நாடிப் போகிறான். அறிவு முதிர்ந்தால் விவேகமாகிறது. விவேகம் கருத்தைக் கடந்ததுண்டாஎன ஆராய்ச்சி செய்யும். கருத்துஎன்பது மனிதன் ஏற்படுத்தியது (is a structure). அதற்கு ஒரு கட்டுப்கோப்புண்டு. கட்டுக்கோப்புக்குள் நடக்க கட்டுப்பாடுவேண்டும். மனிதன் தேடுவது இறைவன். இறைவன் சுதந்திரமானவன். உடலுக்குச் சுதந்திரம் எனில் மரணத்தினின்று விடுபடுதல், மரணமிலாப் பெருவாழ்வு, அமரத்துவம். உணர்ச்சி கறுப்பானது. பாசம் அதன் உச்சி. உணர்ச்சி தேடும் உன்னதம் ஒளி. மனமும் சுதந்திரம் தேடுகிறது. கட்டுப்பாட்டினின்று மனம் சுதந்திரம் விழைகிறது. அது கட்டுக்கோப்பற்ற (structurelessness) நிலை. அந்த நிலையையுடையது பிரம்மம். அங்கு எந்த ரூபமும், குணமும், கட்டுப்பாடும், கட்டுக்கோப்புமில்லை. அதனால் மனிதனுடைய எண்ணம் பிரம்மத்தில் பூர்த்தியாகிறது.

*****



book | by Dr. Radut